மாணவன் செகதீசுவரனும் அவன் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதற்கு நீட் தேர்வே காரணம் என அனைவரும் அறிவோம். மாணவி அனிதா தொடங்கி 23 பேர் இதுவரை நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து இறந்திருக்கின்றனர்.

பெரும்பான்மை மக்கள் நீட் தேர்வே கூடாது என்கிறோம். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்றால்கூடக் கல்வி உரிமையைப் பறித்து வைத்திருக்கிற இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குக் கல்வி உரிமையை மீட்கப் போராடியாக வேண்டும் என அனைவரும் உணர்கிறோம்

வெறும் சட்டப் போராட்டங்களால் மட்டுமே நீட் டை நிறுத்திவிட முடியாது. மக்கள் போராட்டங்களின் வழியாகவே நீட் டை மட்டுமின்றி இந்திய(தேசிய)க் கல்விக் கொள்கையையும் மறுத்திட முடியும். தமிழ்நாட்டிற்கெனத் தனித்த கல்வி கொள்கையை உருவாக்கிட முடியும். இந்நிலையில் தமிழே கல்வி மொழி, தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை ஆகிய இரண்டுமே இன்றைய அளவில் அடிப்படைத் தேவைக்குரியவையாக உள்ளன.govt school girlsதமிழ் வழிக் கல்வியே முதலில் அடிப்படைத் தேவையுடையது. தமிழ்நாடு அரசு அதைச் செய்து விட்டால் அதன்பிறகு தமிழ்நாட்டுக் கல்வி உரிமைக்குப் போராடலாம் என்பதாகக் கருத்து கொண்டிருக்கின்றனர் சிலர்.

தமிழ் வழிக் கல்வியைத் தமிழ்நாட்டரசு முழுமையாக நடைமுறைப்படுத்திடவில்லை. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ்நாட்டரசே தொடங்கியிருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே எதிர்ப்புணர்வாக உருவெடுத்திருக்கிறது.

புலி வாலைப் பிடித்த கதையாய் இந்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் எங்கெங்கு இழுத்துச் செல்கின்றனவோ அந்தந்த இழுப்புகளுக்குத் தகுந்தவாறு தமிழ்நாட்டின் கல்வி நிலைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிற்குள் சிபிஎஸ்இ கல்விக்கூடங்கள், கேந்திரிய வித்யாலயா, பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் என இந்திய அரசின் பன்னாட்டு நிறுவனங்களின் அரசுகளின் தொடர்புடைய கல்விக்கூடங்கள் புற்றீசல்களாய்ப் பெருகிக் கொண்டுள்ளன.

இந்திய அரசுத்துறை வேலைகளில் மட்டுமன்றி, தரவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனத் தொழிலகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் ஆங்கிலமே அலுவல் மொழியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவம் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் கல்வி முழுக்க ஆங்கில மொழி வழியிலேயேதான் நடத்தப்படுகின்றன.

நுழைவுத் தேர்வுகளும் போட்டித் தேர்வுகளும் குடிமைப்பணி தேர்வுகளும் (தாய் மொழியில் எழுதுகிற வாய்ப்பு அண்மைக்காலங்களில் அமைக்கப்பட்டு இருப்பினும்) ஆங்கில வழி எழுதுவதிலேயே பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்நிலையில் சிபிஎஸ்இ யில், கேந்திரிய வித்யாலயாவில், பன்னாட்டு நிறுவனங்களில் கல்வி பெறுகிற மாணவர்களுக்கு இணையாகத் தங்களை வளர்த்துக் கொள்ளுகிற நோக்கத்தில் ஆங்கில வழிக் கல்வியும் பயில வேண்டும் என்கிற ஆர்வம் எளிய மக்களுக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

இந்தச் சூழலில், சிபிஎஸ்சி உள்ளிட்ட பிற அரசுகளின் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகிற பொழுது அவை தமிழ் வழியில் மட்டுமே நடத்தப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டுப் பாட நிறுவனங்கள் அமைக்கிற கல்வித் திட்டங்களோடு தொடர்புடைய நிலையிலேயே அவை இயங்குதல் வேண்டும் என்றும் வலுவாகவும் ஆணித்தரமாகவும் வரையறுத்துச் சொல்லுகிற அதிகாரப் போக்கைத் தமிழ்நாட்டு அரசில் ஆட்சியர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதற்குக் காரணம் (1) தமிழ்நாட்டுக் கல்வி உரிமை முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு அரசுக்குரியதாக இல்லை என்பதும், (2) தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பேற்கிறவர்கள் கல்வி உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் அதிகார உரிமைகளுக்காக, வலுவாக முன்னின்று போராடக் கூடியவர்களாக இல்லை என்பதும் ஆகும்.

இந்நிலையில், கல்வித்துறையும்கூடப் பெரும்பான்மை அளவில் இந்திய அரசின் கட்டுக்குள் சென்றுகொண்டிருப்பதும், உயர்கல்வித்துறைகள் பெருமளவில் அதன் அதிகாரத்திற்கு உள்ளடங்கிப் போயிருப்பதும், பல்கலைக்கழக நல்கை(மானிய)க் குழு என்கிற அளவில் பல்கலைக்கழகங்களின் முழு அதிகாரங்களையும் தங்கள் கட்டுக்குள் இந்திய அரசு பறித்துக் கொண்டிருப்பதையும், நூலகத்துறை உள்ளிட்டுக் கல்வித் தொடர்புடைய அனைத்து துறைகளையும் இந்திய அரசு படிப்படியாகப் பறித்துக் கொண்டு வருவதையும் எளிய செய்திகளாக விட்டுவிட முடியாது.

கல்வி நிலையிலும் தமிழ்நாடு அரசு தன் அதிகாரத்தைப் படிப்படியாக இந்திய அரசிடம் இழந்து வரும் நிலையில் இந்திய அரசு அதிகாரமே மேலோங்கி வருகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்டுப் பண்பாட்டு நிலையில் சமசுக்கிருதம் உயர் மொழியாக, இன்னும் சொன்னால் கடவுளின் மொழியாகப் பரப்பப்பட்டு அதற்கென்று இந்திய அரசு, பல ஆயிரம் கோடி உருபாக்களைச் செலவு செய்து வருவதை அறிவோம் . அதுபோல் கல்வித்துறையில் இந்தி மொழியையே அனைத்து நிலைகளிலும் கொண்டு வருவதற்கான வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மொழி மட்டுமன்றிப் பாடத்திட்டங்கள் அனைத்தும் இந்திய அதிகார வகுப்பிற்குட்பட்ட குமுக அரசியல் பொருளியல் தன்மையிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒரே நாடு, ஒரே அரசு என்கிற வகையில் ஒரே மொழி, ஒரே பாடத்திட்டம் என இந்தியா முழுவதும் ஒரே அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வருகிற வகையிலேயே தேசியக் கல்விக் கொள்கை என இந்திய அதிகார வகுப்பிற்குச் சார்பான கல்விக் கொள்கையையே இந்திய அரசு திணிக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வரலாற்றை மொழியை பண்பாட்டை அரசியலை பொருளியலைக் கொண்டிருக்கும்போது அதற்குத் தகவான வாழ்வியல் அமைப்புகளுக்குரிய கல்வியையே அவரவர்கள் தாய் மொழியிலேயே ஏற்க முடியுமே அல்லாமல் இந்திய அளவில் பொதுவான ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி அதை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வந்து விட இயலாது. அப்படிச் செய்வது ஆதிக்க வகுப்பான பார்ப்பனிய அதிகார வகுப்பின் தேவைக்குரிய மொழி அரசியல் பண்பாட்டு பொருளியல் நலனுக்கானதாகவே அமையும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதுவும் இப்போது திடுமென பாசிச பாஷக அரசு தாய் மொழிக் கல்வி குறித்துப் பேசுகிறது. தாய்மொழியிலேயே கல்வியைக் கொண்டு வருவதாகச் சொல்லுகிறது.

அப்படிச் சொல்லுகிற பாஷக தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா, பன்னாட்டுக் கல்வி நிலையங்கள், ஐஐடி உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தரப்படும் என்பதை அறிவிக்கிறதா? அறிவிக்க முடியுமா?

ஆக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக அனைத்து மொழிகளும் ஆட்சி மொழி என்று கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் பேசி ஏமாற்றியதைப் போல், இன்றைக்கு பாஷக அரசு அனைவரும் அவரவர் தாய்மொழி வழியாகவே கல்வி பயிலலாம் என்று சொல்லி ஏமாற்றுகிறது.

தொடக்கக்கல்வியை, பள்ளிக் கல்வியைத், தாய்மொழி வழியாக சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, பன்னாட்டுக் கல்விக்கூடங்களில் நடைமுறைக்குக் கொண்டு வருவதை ஏற்காத பாஷக அரசு மருத்துவம் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் கல்வியைத் தாய் மொழியில் தர இருப்பதாகக் கூறுவது பச்சையான ஏமாற்று .

தாய் மொழியில் கல்வி தந்து கொண்டிருக்கிற அந்தந்த மாநில அரசுகளின் கல்வி உரிமைகளைப் பறித்துக் கொண்டு இந்திய அளவில் அனைவருக்கும் பொதுவான ஒரே கல்வியைத் தரப்போவதாகச் சொல்வதும் முழுமையான ஏமாற்றே.

ஆக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் கல்வி நிலையில் இரண்டு முதன்மை கடமைகள் இருக்கின்றன.

ஒன்று அந்தந்த மாநில மொழிகளிலேயே கல்வியைத் தருவது. மற்றது அந்தந்த மாநில அதிகாரத்திற்குட்பட்ட கல்வி உரிமையை அமைத்துக் கொள்வது.

இந்த வகையிலேயே தமிழ் வழிக் கல்வி எந்த அளவு முதன்மையானதோ அந்த அளவு தமிழ்நாட்டிற்கே கல்வி அதிகார உரிமை என்பதும் தமிழ்நாட்டிற்கு முதன்மையானது.

தமிழ்நாட்டிற்கே கல்வி அதிகார உரிமை என்பதை முன்னெடுக்காமல் தமிழ் மொழி வழிக் கல்வியை மட்டுமே நிலைநாட்டி விட முடியாது.

அதேபோல் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முனையாமல், தமிழ்நாட்டிற்கே கல்வி அதிகார உரிமை எனப் போராடியும் பயனில்லை.

எனவே இந்த இரண்டு நிலைகளையும் கல்வி அளவில் கவனம் செலுத்துகிற அனைவரும் வலிமையாக முன்னெடுத்தாக வேண்டும் என்பதே நாம் முன் வைக்கிற செய்தி.

- பொழிலன்

Pin It