​மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும் என்று நினைத்துவிட்டால் அவர்கள் ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளைக் கைகளாலேயே திருப்புவார்கள் என்றார் பிடல் காஸ்ட்ரோ. அது இதுதான் தமிழ்நாட்டில் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும், எமர்ஜன்சியை எதிர்த்தும் போராட வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு காலம் தந்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்புதான் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுவதும். நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று முதலில் செய்தி வந்தது, பிறகு அமைதியாக மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம் என்கிறது உச்ச நீதிமன்றம். நீதிமன்றங்கள் அரச மரத்தடி சொம்புகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள்.

Ban Neet

இப்பொழுது என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் கிடக்கிறது? போராட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். ஆயுதத்தோட ஆப் டவுசர் போட்டு ஊர்வலம் போலாமா என்று கேட்டால் விடையில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வந்த காரணத்தாலேயே நாம் போராட வேண்டியது கட்டாயம் ஆகிறது. எமர்ஜன்சியை நீதிமன்றங்கள் கூட செயல்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உச்சி’குடுமி’மன்றங்களால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருநாளும் நீதி கிடைக்காது என்று சொன்னவர் பெரியார். ‘பிரிவினைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன’ என்றார் பேரறிஞர் அண்ணா. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் குரல் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

கூடங்குளம் அணுஉலை 1 2 3 4 5, ஸ்டெரிலைட், நியூட்ரினோ, கெய்ல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது. ஆனால் உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்தது. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை அமைக்க சொல்லியும் முடியாது என்று கூறினாரகள். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சவாலாக சொல்லவில்லையா? கர்நாடகாவுக்கு காவிரில தண்ணி திறந்துவிடச் சொல்லியும் திறந்து விடாமல் இருந்தது அவமதிக்கும் செயல் இல்லையா? ஹரியானாவில் ஒரு அக்கியூஸ்ட்க்காக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கலவரம் செய்தது அவமதிக்கும் செயல் இல்லையா?

​மார்க்கண்டேய கட்ஜீ ஒரு முறை “மக்களே! எதற்கெடுத்தாலும் நீங்கள் நீதிமன்றத்தை நம்பி வந்து ஏமாந்து போக வேண்டாம், உங்கள் உரிமைகளை தக்கவைத்துக் கொள்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்” என்று பகிரங்கமாக அறிவித்தார். சுகந்திரம் என்பதே உன்னைப் பார்த்து உனக்கு பிடிக்காததை பேசுவது தானே.!

நீதிபதிகள் தங்கள் முதுகை திரும்பி பார்ப்பதே கிடையாது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வார்கள். பதவியுர்வுகளையும் தாங்களே போட்டுக்கொள்வார்கள். தங்கள் மீதான குறைபாடுகள், புகார்களை தாங்களே விசாரித்துக் கொள்வார்கள். இவைபற்றி வேறுயாரும் தலையிடவோ பேசவோ கூடாது என்கிறார்கள். ​இதுதான் இந்திய நீதித்துறை. இது மன்னராட்சியை விட மிக மோசமானதில்லையா?​

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்காண்டு சிறையும் நூறு கூடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை வழங்கினார் தலைமை நீதிபதி தத்து. இருபது ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் இருநூறு ரூபாயை டெபாசிட் செய்துவிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து ஆலையை மூடுவதற்கு தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தமிழக மக்கள் போராடிய போது அந்த எதிர்ப்பையும் மீறி அணு உலையை தமிழகத்தின் மீது திணித்தது. கெயில் வழக்கில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஆதரவாகஉத்தரவிட்டது. யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். தமிழக விவசாயிகள் போராடி நிவாரணம் கேட்டால் நிர்வாணமாக ஓடவிட்டு அடிக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பைமீறி மலமள்ள மனிதரை ஈடுபடுத்தும் அரசுகளை உச்ச நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது?

அகில இந்திய வானொலியில் தமிழ் மொழி செய்தி ஒளிபரப்பு சேவை நிறுத்தம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம். சமஸ்கிருதம் தேவமொழி. மற்ற மொழிகள் நீச மொழி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நிராகரித்தார்கள். கேட்டால் புனிதம் கெட்டுப்போகும் என்றார்கள். அரசியல் சட்டங்களைவிட ஆகம விதிகளுக்குத்தான் இந்த நாட்டில் அதிகாரம் என்றார்கள். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளரும் என்று தீர்ப்பெழுதும் நீதிபதியிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்? வாய்ப்பாடு தெரியாதவன் கணக்கு வாத்தியார் ஆனது போலத்தான் இவர்களும் தீர்ப்புகளும்.

​ஒரு மைனர் பெண் வல்லுனர்வுக்கு உட்படுத்தபடுகிறாள், ஆனால் குற்றம் புரிந்தவனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காரணம் அவள், கர்ப்பமாக இருந்து, குழந்தை பிறந்து இருக்கிறது, அவளுக்கு தாய் தந்தை இல்லை, அவள் ஒரு அனாதை. எனவே சமாதானமாக போகவேண்டும். இப்படி ஒரு வரலாற்று சிரப்பு மிக்க தீர்ப்பை(?) வழங்கியர்வர்கள்தான் இந்த நீதிமான்கள்.

காண்டாமிருக தோள் கொண்டவர்களுக்கு எந்த ஊசி வைத்து குத்தினாலும் வலிக்காது. இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவையாவும் ஆரிய - திராவிட இனப்போராட்டம் என்றார் பெரியார். நீட் என்னும் கருப்பு சட்டத்தை உடைப்போம். புழுவாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் போராடியதே வாழும். சமரசம் வீழும்.

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It