கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அண்மையில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் பேசும்போது பிரதமர் மோடி "இந்தியா புத்தரைத் தந்துள்ளது. யுத்தத்தை அல்ல" என்று பேசியிருக்கிறார், மகிழ்ச்சி.

புத்தர் மனிதத்தை, மனித உறவுகளை மதித்தவர். யுத்தத்தை அவர் ஏற்கவில்லை, வெறுத்தார். ஏன்? யுத்தம் என்பது 'வன்முறை'.

ஆஸ்திரியாவுக்குச் சென்று புத்தரைப் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் வன்முறை ஏன் தெரியவில்லை?

மனிதத்தைப் பேசிய கல்புர்கி, கெளரி லங்கேஸ், 'தபோல்கர், ஸ்டேன் ஃபாதர் போன்றோர் உயிர்கள் வன்முறையால் பறிக்கப் பட்டனவே! இவற்றின் பின்னணியில் இருந்தது என்ன?

இது வன்முறை இல்லையா?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், மீன்கள் - வலைகளைப் பறிப்பதும், அழிப்பதும் அவர்களின் படகுகளைப் பறித்துவிட்டுச் சிறையில் அடைப்பதும் வன்முறை இல்லையா? ஆனால் மோடி அமைதி காத்துக் கொண்டு இருக்கிறார்.

அண்மையில் கர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியின் பா.ஜ.க நாடாளுமன்ற தலித் உறுப்பினர் ரமேஷ் ஜிகாஜினாகி, மோடி அமைச்சரவையில் ஒரு தலித்துக்குக் கூட கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்.

புத்தர் ஒடுக்கப்பட்ட உபாலி என்பவரை தலைமைத் துறவியாக ஆக்கினார். சுனந்தா என்ற தெருக்கூட்டும் பெண்ணை பவுத்தத்தில் சமத்துவம் கொடுத்துத் துறவியாக்கினார்.

புத்தர் பெயரைச் சொல்வதில் பெருமை இல்லை. அவரைப் போல நடக்க வேண்டும், அவரின் சொல்வழியாவது செயல்பட வேண்டும். இனியாவது பிரதமர் மோடி அப்படிச் செயல்படுவாரா?

புத்தர் புரட்சிவாதி, மதவாதியல்ல! போகிற போக்கில் பேசுவதற்கு!

கருஞ்சட்டைத் தமிழர்