uriyadi 600

அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்...

வெந்து தணிந்தது காடு....வெந்து தணிந்தது காடு.....வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!....தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!.....தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

வெட்டி அடிக்குது மின்னல்....கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது...
கொட்டி இடிக்குது மேகம்....கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.....
சட்ட் சட சட்ட் சட டட்டா.....சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;....தாளம்கொட்டி கணைக்குது வானம்,

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.....தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்....

இப்படித்தான் தொடங்குகிறது...படம். ஒரு தீரா கோபத்தின் மொத்த சுவடுகளும்.. மிக வேகமாக... மிக நுட்பமாக.. என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்... என்று மீண்டும் மீண்டும்....சத்தமாக.... மாங்கா அடி அடித்து... மத்தள அடி அடித்து....மண்டையடி அடித்து உறியடித்து கூறுகிறது... இந்த உறியடி.

யார் இந்த இளைஞன்....!

ஒவ்வொரு கால கட்டத்திலும்.. ஒரு தாங்கொணா கோபம் இப்படி சிதறி வெடித்து ஒரு நேர்கோட்டில் வெளி வந்து எரியத் துவங்கும். அது பாரதி முதல்...சகாயம் தொடர்ந்து மூடர் கூடம் நவீன் வரை. ஏதாவது ஒரு துறையில்... மிகப் பெரிய தேவையென...சட்ட் சட சட்ட் சட டட்டா சட்ட் சட சட்ட் சட டட்டா என்று எங்கிருந்தோ வந்து குதிக்கும். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர்... நாயகன்...தயாரிப்பாளர்.... விஜய் குமார். முதலில் பலத்த கை தட்டல்கள். இவருக்கு தட்டவில்லை என்றால் பின் எவருக்கும் தட்டி பிரயோஜனம் இல்லை.

எத்தனை நாள் யாகமோ... படத்தில் போட்டு பொளந்து தள்ளுகிறார்.... கூட வரும் நண்பர் கூட்டம்... கண்டிப்பாக தெளிவான் ஆட்கள்தான். சிறு சிறு பிரச்சினைகளில் சிக்கி....அது அத்தனை பெரிய வலையில் கொண்டு போய் தள்ளுகிறது. அந்த வலையை சரியான திட்டமிடுதலில் அறுத்தெரிந்து கொண்டு....விஷ மீன்களை அழித்து விட்டு...கடலே இல்லை என சாட்சியங்களை மாத்தி விட்டு... கிளம்பும் போது... இது வேற சினிமாடா என மீண்டும் பார்க்க தோன்றுகிறது... அதுவும் இறுதிக் காட்சியில் அரங்கேறும்.... வினையும் எதிர்வினையும்... சம்பவ மிரட்டல்.

'இவன் யாரென்று தெரிகிறதா' என்ற பாடலுக்கு முந்தைய கணத்தில் கமலின் விஸ்வரூபத்தை நாம் கண்டோம். அதற்கு சற்றும் குறைவில்லாத காட்சி இந்தப் படத்திலும் உண்டு.....

"பசங்க இவுங்கதான்.. அடிச்சு பிரிச்சு மேய திட்டம் தீட்டப் பட்டு விட்டது... இரண்டு இரண்டு பேராக மறைத்து வைத்த ஆயுதங்களுடன்...வெகு சாதாரணமாக தாபாவில் சாப்பிட வருவது போல வருகிறது அடியாள் கூட்டம். திட்டத்தை முன்னமே அறிந்து கொண்ட கதை நாயகர்கள் கூட்டம்.. தயாராக அமைதியாக ஆங்காகே அமர்ந்திருக்கிறார்கள் அவர்களுக்கான ஆயுதங்களுடன். முதல் அடியை வாங்கி விட்டு ரத்தத்தைப் பார்த்து பின் கிளர்ந்து எழுந்து திருப்பி அடிக்கும் காலத்தை மெல்ல நகர்த்தி விட்டு... வந்தவர்கள்தான் அடியாள் கூட்டமென என தெரிந்த மறுகணம்.. அவர்களை போட்டு மாங்கா அடி அடிக்கும் இடத்தில் இசையும்...விசையும் கை கோர்த்து நம்மை இன்னும் கொஞ்சம் கண்கள் திறக்க வைக்கிறது காட்சி. இசையும் விஜய் குமாரே என்பதில்...கூடுதல் கவனம்.... கூடுதல்... பலம்.

திரைக்கதையில்....பிசகு கொஞ்சமும் இல்லை... அசராமல்.. மெல்ல நகர்ந்தாலும்... மனதின் தீரா காயத்தின் வெளிப்பாடு கொலை வரை கொண்டு செல்லும் என்று கூறிய களத்தில் அரசியல் விளையாடுகிறது. தனிமனித வளர்ச்சிக்காக ஒரு ஊரே சாதி என்ற பெயரில் காவு வாங்க படுவது தொடங்கி.... அதை எங்கிருந்தோ வந்த மாணவ கூட்டம்....ஒன்றுமில்லாமல் செய்து விடுவதும்... எதிர்பாரா திருப்பம். எல்லா வழிகளையும் நீங்களே அடைத்திருந்தால் ஜன்னலை உடைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.... என்பதை கொஞ்சம் காரமாக கூறுகிறது இயக்கத்தின் நேர்த்தி. நியாயமான கோபத்தில்...தேவை ஏற்பட்டால்.... 'பண்ணப் பழகடா பச்சக் கொலைகள்' என்று கூறிய பாரதிதாசனின் வரிகள்... மிகச் சரியாக பொருத்தப் படுகின்றன.

விஜய் குமாரின் நடிப்பு.. மிரட்டல்... காதல் பகுதி ஒன்றில் அவரின்.. கண்கள் விளையாடும் இடத்தில்.... காதல் சொட்டும்..கனிரசம்...ரசவாதம் திரையில்.

அதற்கு பின்பாட்டு.... நம்ம அந்தோணி தாசின் கிறங்கடிக்கும் கிராமிய பாட்டு...

"சொக்க வெச்ச பச்ச கிளி சுத்த விட்டு பார்த்ததென்ன.. 
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப் பட்டு போனதென்ன..
மானே மானே.. உறவென நினைச்சேனே... நானே நானே உசிருக்குள் ஒளிச்சேனே...."

கணக் கச்சிதம்... ஆடத் தோன்றுகிறது..... அவளோடு கூடத் தோன்றுகிறது. அந்த பாடல் பின்னணியில் ஒலிக்க....காட்சியில் அந்த நான்கு நிமிடங்களுக்கு நமக்கு காட்டுவது காட்சிக் கவிதை. அதனை அழகு... விஜய்யின்... உடல் மொழி.. பாவனை.. கண் பேசும்.... புரிதல்... ஐ லவ் யூ என்று சொல்வதற்கு பதிலாக 'லப்பர் இருக்கா' என்று கேட்டு விட்டு அதையே கடைசியில் அவள் ஓகே சொல்வதற்கான குறியீடாகவும் வைத்திருப்பதில்.....விஜய் குமார் சிக்சர் அடிக்கிறார். ஒரு நல்ல இயக்குனர்..நடிகர்... மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். இறுதிக் காட்சியில்.. கத்தியோடு ஓடி வந்து நிற்கையில்... கண்களின் தீர்க்கம்...உடல் மொழியின் நுட்பம்... எடுத்த முடிவை நிறைவேற்று போகும் பொறுமை.. பின்னணியில் ஒலிக்கும் 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' பாடல் என காலத்தின் போராட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக தான் காண முடிகிறது.

ஒவ்வொரு கதா பாத்திரமும்... சொல்லி அடிக்கிறது.. வில்லனாக வருபவர்.. கடைசியில் 'என்னை மன்னிச்சிடு' என்று தன் போக்கை மாற்றி விட்டு... உயிர் பயத்தில் செய்யும் கொலை... அப்பப்பா மனித மனதில் இன்னும் ஆட்கொண்டிருக்கும் மிருகத்தின் வாலில் சொட்டிக் கொண்டே இருக்கும்.. தான் தான்....தான் என்று சுயத்தின் குரூரம்...பரிணாமத்தின் எதிர்வினை என்றே அச்சம் விதைக்கிறது. மைம் கோபியின் பாத்திரம் வழியாமல்.. நிறைந்து கொண்டே இருக்கிறது. இணை தயாரிப்பாளர் நலன் குமாரசாமி. வாழ்த்துக்கள் கூறலாம். நல்லவை முட்டி மோதி வெளி வந்தே தீரும்.

"எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே.. ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அது வரை பொறு மனமே..." என்ற வைரமுத்துவின் வரிகள்... இங்கே மாணவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள்... குடிக்கான காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆனாலும் கதை அதைக் கொண்டே நகருவதால்... அதை கடந்து தான் போக வேண்டி இருக்கிறது... சரி..முதலில் குடிக்கான ஆலையை நீங்கள் மூடுங்கள்.. பிறகு நாங்கள் குடிப்பதை குழி தோண்டி மூடுகிறோம் என்று அவர்கள் சத்தமாகவே சொல்வது போல உணர்கிறேன்...

அந்த சின்ன நண்பனாக வரும் பையன் அசத்துகிறான். சாதி என்னெல்லாம் செய்யும்... எப்படியெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளும்..என்று எளிமையாக வசனத்தின் மூலமாகவே சொல்லி விடுவதில்... நிஜம் உரைக்கிறது. பூதத்தைப் போல தோண்ட தோண்ட கிணறு நிறைந்து கொண்டே இருக்கும் மிகச் சிறிய வட்டம் போட்டு அதற்குள் இருக்கும்....அத்தனை குரூரங்களையும் நெற்றியில் அடித்தாற்போல சொல்லி செல்கிறது கதை. கொலை செய்யும் லாவகம்....அதற்கு அவர்கள் பயன்படுத்தும் நபர்கள்...அவர்களின் ஆயுதம் நமக்கு தெரிந்திடாத...நாம் அறிந்திடாத இன்னொரு உலகத்தை போகிற போக்கில் கத்தி வீசி சொல்லி போகிறது திரைக்கதை.

"அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்...
வெந்து தணிந்தது காடு....வெந்து தணிந்தது காடு.....வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

இப்படித்தான் முடிகிறது.... படம்...

எந்த மாதிரி உலகில் நாம் இருக்கிறோம் என்ற படபடப்பு அடங்க வெகு நேரமாகிறது... ஆனாலும்...அதன் பிறகு நமக்கு ஓர் எச்சரிக்கை உணர்வு வருகிறது... அது ஒவ்வொரு கால கட்டத்திலும்.....ஒரு தீரா கோபத்தை மெல்ல மெல்ல சேர்த்து வைக்கிறது... பின் ஒரு நாளில் அது பறையடித்து உறியடித்து உண்மையை வெடிக்கிறது.

*கதை நாயகனின் பெயர் இந்த படத்தில் லெனின் விஜய்.

- கவிஜி