2019 - 2020 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதைப் பார்க்கும்போது அலங்காரமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையாகத்தான் தெரிகிறதே ஒழிய, மக்களுக்குப் பயன் தரக்கூடியதாக இல்லை.

குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சரக்குப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, தங்கம் மீதான வரிவிதிப்பு ஆகியவை மக்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வும், சரக்குப் போக்குவரத்துக் கட்டண உயர்வும் பொருள்களின் விலைவாசி உயர்வுக்குக் காரணமாகி, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மிகச்சாமானிய மக்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க இந்நிதி அறிக்கை வழி வகை செய்கிறது.

50 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சியில் இரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

சாதாரண மக்கள், நீண்ட தொலைவுப் பயணத்திற்குப் பேருந்துகளைவிட இரயில்களையே பெரிதும் சார்ந்திருக்கிறார்கள்.

இரயில்வேயை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்து, தனியார்மயமாக்கி, அவர்களை வாழவைத்துள்ளனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற அறிவிப்புகள், இந்நிதிநிலை அறிக்கையைக் கானல்நீர் ஆக்கிவிடுகின்றன.

 பத்திரிகைத் துறை, ஜனநாயகத்தின் ஒரு தூண் என்று சொல்வார்கள்.

ஆனால், பத்திரிகை அச்சடிக்கத் தேவையான ‘நியூஸ் பிரிண்ட்’ தாள் இறக்குமதிக்கு 10 சதவீதம் சுங்கவரி விதிப்பதாக அறிக்கை சொல்கிறது.

இது பத்திரிகைகளின் குரல்வளையை நெறித்து அதன் கருத்துச் சுதந்திரத்தைத் தகர்த்தெறியும் வகையில் இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதுடன், இப்போழுது ஒரே வகையான மின்சாரம், நாடு முழுவதும் கொடுக்க வழிவகை செய்வதாக நிதிநிலை அறிக்கை சொல்வதைப் பார்த்தால் மறைமுகமாக, இப்போதிருந்தே ராமராஜ்ஜியத்திற்கு வழிகோலுவதாகத் தெரிகிறது.

நிதிநிலை அறிக்கை வாசிப்பின்போது, நிர்மலா சீதாராமன், புலவர் பிசிராந்தையாரின் புறநானூற்றை மேற்கோள் காட்டி, வயலில் விளையும் பயிரை அளவறிந்து கவளமாகக் கொடுத்தால் அது பலநாள்களுக்கு வரும் என்றும், மாறாக, யானையைக் கழனிக்குள் விட்டால் அது ஒட்டுமொத்தப் பயிர்களையும் நாசம் செய்துவிடும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கை, யானை கழனிக்குள் மேய்ந்து பயிர்களுக்குப் பெரும் சேதத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

Pin It