தமிழகத்தின் திசையெங்கும் “ஸ்டாலின் தொடரட்டும்!தமிழ்நாடு வெல்லட்டும் !” என்ற முழக்கம் விண்ணதிரத் தொடங்கிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் வீற்றிருந்த அதே பீடத்தில் இருந்து திமுகழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்திருக்கும் போர்ப்பறை எதிரிகளின் நெஞ்சில் இடியென இறங்கியிருக்கிறது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக முடுக்கி விட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 20.01.2026 அன்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கான நான்கு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானங்கள் வெறும் அறிவிப்புகள் மட்டுமல்லாது, கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் மிகச்சரியான தேர்தல் வியூகங்களாகப் பார்க்கப்படுகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவில் வரும் வெற்றி தோல்வி முடிவல்ல. அது ஆரிய மாயைக்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான பண்பாட்டுப் போர்! இந்தப் போரில் வென்று தீர, தலைவர் வகுத்துத் தந்திருக்கும் 'வெற்றி வியூகங்கள் ' இதோ:
தாய்மார்களின் பேரலை, இல்லம் தோறும் எரியும் திராவிடச் சுடர்!
பெண்மையை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுத்தது திராவிட இயக்கம். இன்று, நம் வீட்டுப் பெண்களின் பையில் 'உரிமைத் தொகை'யாகவும், அவர்கள் செல்லும் பேருந்தில் 'விடியல் பயண'மாகவும் நிறைந்திருப்பது தலைவர் ஸ்டாலினின் அன்பும் அக்கரையும். திமுக அரசின் மிக முக்கியமான பலமாகப் பார்க்கப்படுவது மகளிர் நலத்திட்டங்கள். இதனை வாக்குகளாக மாற்றும் நோக்கில் பிப்ரவரி 1 முதல், கழக மகளிரணித் தோழர்கள் வாக்குச்சாவடிக்குப் பத்துபேர் வீடு வீடாகச் சென்று, நம் கழக அரசு மகளிர் மேம்பாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கலையெல்லாம் எடுத்துக்கூறி "நம் வீடு ஒளிர்வது உதயசூரியனால் " என்று உணர்வோடு சொல்வார்கள். இது வெறும் வாக்கு சேகரிப்பு அல்ல. நன்றியுணர்வு கொண்ட உள்ளங்களின் அணிவகுப்பு!
“தமிழ்நாடு தலைகுனியாது": தன்மானப் போரின் தாரக மந்திரம்!
டெல்லியின் ஆதிக்கப் பசிக்குத் தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் தாரை வார்த்துக் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியே 'தமிழ்நாடு தலைகுனியாது' எனும் பரப்புரை முழக்கம். பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் தெருமுனைகள் எங்கும் கழகத்தின் போர்வாள்களாகத் திகழ்கின்ற தலைமைக் கழகப் பேச்சாளர்கள் முழங்கப் போகிறார்கள். நம் மாநிலத்தின் கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமையைக் காக்க, தந்தை பெரியாரின் பேரன்களும், பேரறிஞர் அண்ணாவின் தம்பிகளும், கலைஞரின் உடன்பிறப்புகளும், தளபதியின் படைவீரர்களும் களமாடப் போகிறார்கள். அஞ்சாத நெஞ்சத்தோடு தலைவர் இட்டிருக்கும் கட்டளை இது.
பாசறைப் பயிற்சி, வெற்றியைச் செதுக்கும் வித்தை!
தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA), தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் (BLC) ஆகியோரின் பணி மிக முக்கியமானது. எனவே, தேர்தல் களத்தின் அச்சாணியாய் விளங்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (BLA) அளிக்கப்படும் பயிற்சி, ஒரு படையெடுப்பிற்கான ஒத்திகை! கழகத்தின் கடைசித் தொண்டன் வரை தலைவரின் வியூகத்தைச் சுமந்து செல்லும் போர் வீரனாக மாற்றும் பட்டறை. களத்தில் விழிப்போடு நின்று, கள்ளத்தனம் செய்பவர்களின் கனவுகளைத் தகர்த்தெறியும் வித்தை அங்குதான் பயிற்றுவிக்கப்படும்.
திருச்சியில் திருப்புமுனை மாநாடு, சரித்திரத்தின் அடுத்த அத்தியாயம்!
மார்ச் 8... திருச்சி மாநகரில் அலைகடலெனத் திரளப்போகும் அந்தக் காட்சி, 2026 இன் முடிவை இப்போதே எழுதிவிடும்! 'தீரர்கள் கோட்டம்' திருச்சியில் , “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் எழும்போது, டெல்லி வரை அதன் அதிர்வு எட்டும். அந்த மாநாடு, எதிரிகளின் அஸ்திவாரத்தை ஆட்டும் ஒரு பூகம்பமாக இருக்கும்.
தலைவரின் வியூகம், ஒரு சரித்திர நாயகனின் சங்கநாதம்!
இந்தத் தீர்மானங்கள் மூலம் திமுக தனது தேர்தல் பாதையைத் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டங்களை விளக்குவது, பயிற்சி அளிப்பது, பரப்புரை செய்வது மற்றும் பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என ஒரு முறைப்படுத்தப்பட்ட தேர்தல் வியூகத்தை (Structured Election Strategy) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுத்துள்ளார். 2026 இல் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கத் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதே இக்கூட்டத்தின் ஒட்டுமொத்த சாரமாகும்.
எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் அஞ்சாமை, திட்டமிட்டுச் செயலாற்றும் தீர்க்கதரிசனம் இவைதான் நம் தலைவரின் பலம். அவர் வெறும் தேர்தலுக்காக வியூகம் வகுக்கவில்லை. தமிழகத்தின் அடுத்த நூறு ஆண்டு கால அமைதிக்காக அஸ்திவாரம் போடுகிறார்.
உடன்பிறப்புகளே! தோள் தட்டி எழுவோம்! தலைவர் காட்டிய வழியில் அணிவகுப்போம்! எதிர்ப்புகள் பொடிப் பொடியாகும்! 2026 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும்!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!
- நெல்லை பாபு