‘ஒரே நாடு’ என்ற காவி வண்ணத்தை அடிக்கத் தொடங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருக்கும் மத்திய பாஜக அரசு.

வலிமை மிக்க தந்தை பெரியாரின் தமிழக மண்ணில் கால் ஊன்ற முடியாமல் புறக்கடை வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது காவி.

2015-ஆம் ஆண்டு நடந்த தபால் துறைகளுக்கான தேர்வில் பீகார், அரியானா உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த, தமிழ் தெரியாத மாணவர்கள் ‘தமிழில்’ அதிகமான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இப்பொழுது கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தபால் துறைத் தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலேயே வினாத்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சுற்றறிக்கையின் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத முடியாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்தச் சூது நிறைந்த திட்டங்கள் வடமாநில மாணவர்களை, தொழிலாளர்களை தமிழகத்தில் இறக்குமதி செய்ய வழிவகுக்கிறது.

அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய பாஜக அரசு 80 விழுக்காடும் வடமாநிலத்தவர்களுக்கே கொடுக்க வழிவகை செய்து கொண்டிருக்கிறது. 

தற்போது இன்னொரு பிரச்சினையும் தமிழகத்தில் உருவெடுத்துள்ளது. 

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ரசீதில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. 

 நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ‘மைல்’ கற்களில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே பெரும்பாலான இடங்களில் இடம் பெற்றுள்ளது. 

தமிழகப் பாடத்திட்டத்தில் இந்தியைப் பயிற்று மொழியாகக் கொண்டுவர வலியுறுத்திய மத்திய அரசு தமிழக எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கியிருக்கிறது, தற்காலிகமாக.

அண்மையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கிய புதிய பேருந்துகளில், தமிழே இல்லாத இந்தியும், ஆங்கிலமும் இடம்பெற்ற ‘ஸ்டிக்கர்கள்’ ஒட்டப்பட்டிருந்தன.

மத்திய அரசின் இந்த ஒருதலைப்பாடான ஒரே இந்தியா திட்டத்திற்கு, தமிழக அரசும் வாய்மூடித் தாளம் போடுவதும், பாஜகவுக்குத் துணை நிற்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Pin It