மூவண்ணக் கொடியை ஒரே வண்ணக் கொடியாக, காவிக் கொடியாக மாற்ற முயற்சி செய்வதைப் போலவே ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் முப்படைகளையும் காவிப் படையாக மாற்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

bipin rawatஇராணுவத் தலைவராகப் பதவியில் இருக்கும் போதே, ஜெனரல் பிபின் ராவத், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் பற்றியும், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சீண்டும் வகையிலும் அரசியல் பேசி இருக்கிறார். இவர் இராணுவக் கட்டுப்பாட்டை மீறி அரசியல் பேசியிருப்பது இது முதல் முறை அன்று. இதுவரை பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவை அனைத்தும் காவிக் கொள்கையோடு ஒத்துப் போகக் கூடியன.

மற்ற நாடுகளிலெல்லாம் இராணுவத் தலைவர் இராணுவக் கட்டுப்பாட்டை மீறி அரசியல் பேசினால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் அல்லது குறைந்தபட்சம் எச்சரிக்கை விடுக்கும். ஆனால் இங்கு அவருக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது. அவருக்கு மிக உயர்ந்த பதவியான, அதிகாரங்கள் கோபுரம் போல் குவிந்து கிடக்கும் முப்படைகளுக்கும் தலைவர் பதவியைப் பாஜக அரசு அவருக்காகவே உருவாக்கி வழங்கியிருக்கிறது. இது போன்ற நியமனங்களில் எந்தவொரு விதியையும் பா.ஜ.க பின்பற்றுவதில்லை.

காவிச் சிந்தனை உடையவர்களைக் காவலுக்கு வைப்பது என்பது நமக்கு நாமே தேடிக் கொள்ளும் பேராபத்தாகும். ஒரு இராணுவத் தலைவராக இருக்கும்போதே எல்லையைத் தாண்டி பேசும் இவர், முப்படைகளுக்கும் தலைவராக இருக்கும்போது எல்லை தாண்டிச் செயல்பட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? கடமை தவறாமல் நடப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது உண்டு. ஆனால் கடமை தவற வேண்டும், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவரைத் தேடிப் பிடித்து மிகப் பெரிய பதவியை பாஜக அரசு வழங்கியிருக்கிறது.

அசாமில் பேசும்போது “Lebensraum” என்னும் வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழில் சொல்ல வேண்டுமானால், நாட்டின் வாழ்நிலத் தேவை, தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு. அதாவது ஹிட்லரின் நாசிப் படையின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை தான் இந்த “Lebensraum”. அதிக நிலப் பரப்பு, மக்கள் தொகை, உணவு உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களுக்காக ஹிட்லர் கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்றி அகண்ட ஜெர்மானிய இராஜ்ஜியத்தை உருவாக்க நினைத்தார். இது தான் “Lebensraum” என்னும் கொள்கை. இந்த வார்த்தையைத் தான் அசாமில் பிபின் இராவத் பயன்படுத்தினார். ஹிட்லரின் நாசிப் படைக்கும் இந்துத்துவாவின் காவிப் படைக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை.

இராணுவம் என்பது மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இப்படி எல்லை மீறிப் பேசுபவர்களை ஊக்குவித்து முப்படைகளுக்கும் தலைவர் பொறுப்பையும் கொடுப்பது என்பது எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இராணுவத்திற்கும் அரசுக்கும் இடையேயான அதிகார மோதல்களை உருவாக்கும். தற்போது பாஜக, ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை மதிக்

காமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவது போலவே, இராணுவத்திற்கும் அரசிற்கும் இடையிலான மோதல்கள் வெடித்துக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சர்வாதிகார ஆட்சியை நோக்கித் திரும்பும் ஆபத்தும் இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட பேராபத்தை பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

காவிச் சிந்தனை உடையவர்களை எல்லாத் துறைகளிலும் உள்நுழைப்பது போலவே தற்போது பாதுகாப்புத் துறையிலும் நுழைத்திருக்கிறது பா.ஜ.க. நாடு முழுதும் இராணுவத்தையும் துணை இராணுவத்தையும் குவிக்கவும் இவர்கள் திட்டம் வைத்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவக் கொள்கைளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் NPR-NCR போன்ற திட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அப்போது எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இது முன்னேற்பாடாகவே தெரிகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படும் ஆபத்தான நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது.

முப்படைகளுக்கும் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பிபின் ராவத் பாதுகாப்புத் துறையை, பார்ப்பனர்களைப் பாதுகாக்கும் துறையாகவே செயல்பட வைப்பார் என்பதை நாம் உணர வேண்டும். முப்படையின் சீருடைகளும் கூட காவி உடையாக மாற்றப்படலாம். அண்டை நாடுகள் அமைதியாக இருந்தாலும் வழக்கம் போல் ஏதாவது பேசி உள்நாட்டுப் பிரச்சனைகளைத் திசை திருப்பும் பணி சிறப்பாக நடைபெறும்.

இன்னொரு நாசிப் படையை இங்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

- மா.உதயகுமார்