குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற ஒரு விழாவில், பேசிய பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார்.

அரசியலும், மதமும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் அவர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசியலுக்கு மதம் தேவை, பாஜக நேர்மையாகச் செயல்பட்டு எது நல்லதோ அதையே நாட்டுக்குச் செய்கிறது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அரசியல் வேறு, மதம் வேறு என்பதை அவர் மறந்துவிட்டார்.

இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பற்ற நாடாக இந்தியாவைக் கருதுகிறது.

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் அரசியலில் மதம் கலக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் மதத்தை விட்டு விலகவில்லை. மதத்தை அது வலிந்து திணிக்கவும் இல்லை.

பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள் இருந்த நிலையிலும் முழு இந்தியாவும் மதத்தால் பிளவுபடவில்லை.

ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர மதத்தை கையில் எடுத்தது. மதக் கலவரங்களைத் தூண்டியது. மதமாச்சரியங்களை மக்கள் மத்தியில் விதைத்தது. விளைவு அமைதியற்ற நாடாக இன்று இந்தியா இருக்கிறது. காரணம் மதம், குறிப்பாக இந்து மதம்.

அண்மையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இன்று நாடே போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

எதைப் பற்றியும் கவலைப்படாத பாஜக அரசு, ‘தேசியக் குடிமக்கள் பதிவேடு’ என்ற திட்டத்தை அடுத்த நடவடிக்கையாக கையில் எடுத்துள்ளது.

இவை இரண்டும் இந்திய மக்களை, குறிப்பாக பார்ப்பனர் அல்லாத மதம் சாராத அல்லது மதம் சார்ந்த அனைத்து மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குகிறது.

இந்தியாவின் அனைத்து மக்களிடையே, தாங்கள் அகதிகளாக்கப் படுவோம் என்ற அச்சம் மேலோங்கத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பேட்டில் விழாக்கள் என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கி, தீபாவளி, பொங்கல், குடியரசு நாள், சுதந்திர நாள், காந்தி பிறந்த நாள், இந்து பண்டிகைகள், சமண, பவுத்த, சீக்கிய, கிறித்துவ மத விழாக்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால், இந்தப் பட்டியலில் இசுலாமியர்களின் எந்த ஒரு விழாவும் தவறியும் இடம்பெறவில்லை. இன்று இசுலாமியர்கள், நாளை ஏனைய சமயங்களுக்கும் இது விரிவுபடாது என்பதற்கு என்ன நிச்சயம்?

அரசியலில் மதம் கலந்தால், அல்லது இணைந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இந்தச் சான்றுகள் போதும். மக்கள் பாஜக அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Pin It