2018 இல் ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அரசியலமைப்பு உறுப்பு 19 (a) இன் கீழ் செல்லாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று பரபரப்புத் தீர்ப்பு அளித்துள்ளது. கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என 2017இல் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் தேர்தல் பத்திரத் திட்டம்.

ஆளும் ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதியாக ரூபாய் 5,272 கோடிகளைப் பெற்றுள்ளதாகத் தகவல் பெறப்பட்டுள்ளது. தேர்தலில் 1விழுக்காட்டுக்குக் குறையாமல் வாக்குகள் பெற்ற எல்லாக் கட்சிகளும் பெறலாம் என அறிவிக்கப் பட்டாலும் மொத்தம் இந்த 6 ஆண்டுகளில் பா.ஜ.க மட்டும் 57 விழுக்காடு பணம் பெற்றுள்ளது. நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் சேர்ந்து பெற்ற தொகையை விட அதிகமாகப் பெற்றது மட்டுமல்ல. எங்கிருந்து எவ்வளவு பெறப்பட்டது என அறிவிக்க வேண்டாம் என்பதற்காகக் கம்பெனிச் சட்டம், தகவலறியும் உரிமைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றையும் திருத்திக் கொண்டது. அவை அனைத்துமே செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கிய நிறுவனங்கள் கைம்மாறாக எதையாவது பெறுவதற்காகவே அவ்வளவு பெரிய நிதியை வழங்கி இருக்கும் என்பதால், அதை மறைப்பது தகவல் அறியும் சட்டத்தின் நோக்கமான பங்கேற்பு சனநாயகத்தையும் வீழ்த்தக் கூடிய செயல் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். மேலும் கருப்புப் பணத்தை இந்தத் திட்டத்தின் மூலம் எப்படி ஒழிக்கப் போகிறார்கள் என்பதற்கும் ஒன்றிய அரசிடம் இருந்து சரியான பதில் இல்லை என உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இதுவரை பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப் படவேண்டும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி இனி தேர்தல் பத்திரங்கள் வழங்கக் கூடாது எனவும், அடுத்து எல்லா பணத்தையும் கட்சிகள் நிறுவனங்களுக்குத் திரும்ப ஒப்படைக்க வேண்டி இருக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மார்ச் 6 இக்குள் எல்லா விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அவை மார்ச் 13 அன்று தேர்தல் ஆணையத்தின் அலுவல் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. பா.ஜ.க. கட்சியின் ஒரு வருவாய் ஊற்று அடைபட்டதில் மகிழ்ச்சி. இன்னும் ‘பி.எம்.கேர்’ நிதி உள்ளிட்ட ஊற்றுகளும் இப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். வெல்லட்டும் சனநாயகம்.

- சாரதாதேவி

Pin It