நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. முதல்கட்ட தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, ராமர் கோயில் குறித்தோ இசுலாமியர்கள் குறித்தோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரையை தொடங்கிய நாளில் இருந்தே மத வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, “நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தையும், சொத்துக்களையும் ஊடுருவல்காரர்களுக்கு, அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மங்கள சூத்திரத்தைக் கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்” என்றும், “இறந்த பிறகும் ஒருவருக்கு வரி விதிக்க காங்கிரஸ் கட்சியிடம் திட்டம் உள்ளது” என்றும் பேசினார்.

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் பேசும்போது, “ராமர் கோயில் நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் கூட பங்குகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார். நவாப்களின் அட்டூழியங்கள் குறித்து ராகுல் காந்தி பேசாமல் அமைதி காப்பதாகக் கூறினார். இதுவரை இருந்த எந்த பிரதமர்களும் இப்படி நேரடியாக இசுலாமியர்களைத் தரக்குறைவாகத் தாக்கிப் பேசியதே இல்லை. மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறி துணிச்சலாகப் பேசிய மோடி மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தும் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தை காணவில்லை என்று ஆட்கொணர்வு மனு தொடுக்கும் நிலையில் பரிதாபமாகவும், பாரபட்சமாகவும் இருக்கிறது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.

இத்தகைய வெறுப்புப் பேச்சு மோடியோடு மட்டும் நின்றுவிடவில்லை. மோடியின் பேச்சை வழிமொழிந்து பாஜகவைச் சேர்ந்த பலரும் இசுலாமிய வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் தனிநபர் சட்டமாக ஷரியத்தை பின்வாசல் வழியாக கொண்டு வரும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதை காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்திருப்பதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறுகிறார். ஆயுதப் படைகளிலும் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார் என்றும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப் போகிறார் என்றும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மற்ற கட்சிகளின் மீது பாஜகவினர் கொடுக்கும் புகார்களுக்கு மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆம் ஆத்மி மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் உருவாக்கிய தேர்தல் பாடல்கள் குறித்து பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் திருத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். அந்த பாடல்களில் இருந்த ‘ஜெய் பவானி’ மற்றும் ‘இந்து’ என்ற வார்த்தைகள் மதத்தைக் குறிப்பிடுவதாக நீக்கச் சொன்னது தேர்தல் ஆணையம். அப்படியானால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராமன் மற்றும் அனுமான் பெயரில் ஓட்டு கேட்பதையும் தடை செய்ய வேண்டுமென்று உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ் அவதூறான கருத்துகள் தெரிவித்ததாகக் கூறி 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற சந்திரசேகர ராவின் கேள்விக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பு என பல்வேறு கட்சிகள் பாஜகவின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகப் புகார் அளித்தபோதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பாஜகவின் அடியாள் போல செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கடும் விமர்சனங்கள் வரத் தொடங்கியதை அடுத்து, மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதை பிரதமர் மோடிக்கோ அல்லது அவரின் அலுவலகத்திற்கோ அனுப்பாமல் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அனுப்பியது. அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் ராகுல் காந்திக்கும் எதிராக நோட்டீஸ் அனுப்பி தனது விசுவாசத்தை அதிலும் நிரூபித்தது தேர்தல் ஆணையம். இத்தகைய விசுவாசத்தை எதிர்பார்த்துதான், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்கிற குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு ஒன்றிய அமைச்சரை மோடி அரசு இணைத்ததா என்ற கேள்வி இதில் எழாமல் இல்லை.

தேர்தல் பரப்புரையிலேயே சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமாக தரம் தாழ்ந்து பேசும் மோடி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்மக்களின் பாதுகாப்பு என்ன ஆவது என்பதை பேரச்சத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலை இராசேந்திரன்

Pin It