natesan 400அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர்.

திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

மருத்துவச் சேவை

ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவராகிச் சென்னை திருவல்லிக்கேணியில் தனது மருத்துவச்  சேவையைத் தொடங்கினார். சாதி மத வித்தியாசமின்றியும், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றியும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்முகத்துடன் சேவை புரிந்து வந்தார். எல்லா மக்களும் டாக்டரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகழும் செல்வமும் பெற்றார். மக்கள் மனதில் நின்றார். தான் படித்துச் சேமித்து வைத்திருந்த நூல்கள் அனைத்தை யும் சென்னை மாநகராட்சிக்குப் பரிசாகக் கொடுத்தார். அவை ரிப்பன் மாளிகையில் பல நாள்கள் இருந்தன.

டாக்டர் ஆல்பர்ட் சுவிட்சர் ஆப்பிரிக்காவில் அந்நியர் ஆதிக்கத்தால் படிப்பிலும் சுகாதாரத்திலும் பிற்போக் கடைந்த அந்நாட்டு மக்களுக்குப் பல்லாண்டுகளாக மருத்துவப் பணிபுரிந்தார். அதேபோன்று டாக்டர் நடேசனாரும் மருத்துவத் தொண்டு செய்து வந்தார்.

சென்னை மாநகர அவையில் சேவை

இவர் மாநகர உறுப்பினராகி, முக்கிய மாக சுகாதாரம், கல்வி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக இடை விடாது உழைத்தார்.

சென்னை மாநகர அவையில் 25 ஆண்டுகளாக உறுப்பினராயிருந்து சென்னை மக்களுக்குத் தொண் டாற்றி வந்துள்ளார். அவருடைய வட்டத்தினர் மட்டு மல்லாமல், மற்ற வட்டத்தினரின் குறைகளையும் நிவர்த்தி செய்து வந்துள் ளார். பள்ளிக் கூடங்களிலும், மருத்துவ மனைகளிலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், டாக்டர் நடேசனாரிடம் கூறிவிட் டால் உடனடியாக அவை நிறைவேற்றப்பட்டுவிடும். நகர மக்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டு பணியாற்றிவந்த ஒரு சிலரில் முதன்மையானவராக டாக்டர் நடேசன் விளங்கி வந்துள்ளார்.

இவர் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது நகரில் குவியும் குப்பைக் கூளங்களை நகர எல்லைக்கப்பால் புறநகரப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியின் அருகில் கொட்டிவிடலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது டாக்டர் நடேசன், “குப்பைகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கருகில் கொட்டினால், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நரகமாகும்; குப்பைகளி லிருந்து எழும் துர்நாற்றத்தால் மேலும் அம்மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய்கண்டு துன்புறுவர்; சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படும்; எனவே, குப்பை களை மக்கள் வாழ்விடங்களைத் தவிர்த்து வேறு மாற்று இடங்களில் கொட்டுதல் வேண்டும்” என்று தீர்மானத்தை எதிர்த்து வாதிட்டு, ஏழை மக்களின் சுகாதாரக் காவலராக விளங்கினார். அவர் நகராட்சி மன்றத்தின் பொது நலக் கமிட்டித் (Standing Committee for Health) தலைவராகவும் இருந்து பல சீர்திருத்தங்களையும் செய்துள்ளார்.

பல மருத்துவ மாநாடுகளில் அவர் பங்குகொண் டார். 1927இல் கிழக்கு ஆசிய மருத்துவ சம்மேளனம் கல்கத்தாவில் நடைபெற்றது. அதில் இவர் சென்னை நகராட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றுக் கூறிய கருத் துகள் போற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திராவிடர் சங்கம்

டாக்டர் நடேசன், பிராமணரல்லாத மக்கள் சமூக அரசியல் பொருளாதார நிலைகளில் மிக மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார். இந்த அவல நிலையைப் போக்கிட சங்கம் ஒன்றினை உருவாக்கிட உறுதி கொண்டார்.

அந்நாளில் அரசுப் பணிகளில் பெரும்பாலும் பிராமணச் சமுதாய மக்களே இடம்பெற்று ஆதிக்கம் பெற்றிருந் தனர். அவர்களின்கீழ்ப் பணிபுரிந்த பிராமணரல்லாத ஊழியர்களைத் தரக்குறைவாகவும், இழிவாகவும் நடத்தினர். அந்த ஊழியர்கள் தங்கள் குறைகளை வெளியிடவும், உரிமைகளைப் பெற்றிடவும் வழிவகை காணிடவும் அமைப்பொன்று தேவை என்று உணர்ந்து, பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து. 1912இல், “சென்னை ஐக்கிய சங்கம்” (Madras United League) என்ற அமைப்பினைத் தொடங்கினர். பொதுநல ஆர்வலர் டாக்டர் நடேசன் இச்சங்கத்தின் செயலாளராக இருந்து, இச்சங்கத்தினை வலிவும் பொலிவும் பெற்றிட வளர்த்தெடுத்தார். இச்சங்கத்தின் கூட்டங்கள் திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடைபெற்று வந்தன.

இச்சங்கத்தின் முதலாவது சமூகப்பணி, முதியோர் கல்வியாகும். இரவு நேரங்களில் நடந்த இவ்வகுப்புக்களில் அரசு அலுவலர்களே ஆசிரியர் களாக அமைந்து பாடங்களை நடத்தினர்.

இச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா 1913இல் டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது சங்கத்தின் பெயர் “திராவிடர் சங்கம்” (Dravidian Association) என மாற்றப்பட்டது.

திராவிடர் சங்கம், டாக்டர் நடேசன் தலைமையில் சிறப்புற நடைபெற்று வந்தது. திராவிடர் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் ஆண்டுதோறும் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பிராமணரல்லாத மாணவர் களுக்கு வரவேற்பும் விருந்தும் அளித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.

திராவிடர் சங்கத்தின் முதல் ஆண்டு விழா திரு வல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப் பள்ளியில், 1914இல் நடைபெற்றது. பிராமணரல்லாத பட்டதாரி மாணாக்கருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நீதிபதி சி. கிருஷ்ணன் (Chief Judge of Small Cause Courts) தலைமையேற்று, சிந்தனையைத் தூண்டும் அறிவுரை வழங்கினார். டாக்டர் டி.எம். நாயர் கலந்து கொண்டு ஆற்றிய உரை திராவிட மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டியது. அவரது உரையின் முடிவில், திராவிட இளைஞர்களை நோக்கி, “விழி! எழு! இன்றேல் என்றென்றும் வீழ்ந்து படுவாய்!” (Arise, Aware or be for ever fallen) என எழுச்சி உரையாற்றினார்.

வாரந்தோறும் டாக்டர் நடேசனாரின் தோட்டத்தில் திராவிடர் சங்கத்தின் சார்பில், பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும் நடைபெற்று வந்தன.

திராவிடர் சங்கத்தில் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலு, திராவிட லெனின் டாக்டர் டி.எம். நாயர், வெள்ளுடை வேந்தர் தியாகராயர், திரு.வி.க. போன்ற பெருந்தகை கள் பங்கேற்று, சுயமரியாதை உணர்வு எழும்படி உரையாற்றியுள்ளனர். பொதுவாக திராவிடர் சங்கம், திராவிட மக்களின் தலைமைப் பாதுகாவல் இடமாகத் திகழ்ந்தது.

திராவிடர் சங்கத்தின் சார்பில், 1915இல், டாக்டர் நடேசனாரின் நிதி உதவியுடன “திராவிடப் பெரு மக்கள்” (Dravidian Worthies), “பிராமணரல்லா தார் கடிதங்கள்” (Non-Brahmin Letters) என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

“திராவிடர் இல்லம்”

திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் கள் கல்லூரியில் படிக்க சென்னைக்கு வரும் பொழுது அவர்கள் தங்கிப் படிப்பதற்கும் உணவு உண்ணு தற்கும் விடுதிகள் இன்றி அல்லலுற்றனர். பிராமணர் விடுதிகளில் இவர்களை அனுமதிப்பதில்லை. திராவிட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட டாக்டர் நடேசன், இரவீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதத் தைப்போல், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார். வசதியுள்ள மாணவர்கள் பணம் கட்டியும், வசதியில்லாதவர் பணம் கட்டாமலும் தங்கிப் படிக்கலாம். உணவு விடுதியோடு மாணவர்களுக்கான நூலகமும் அங்கே அமைந்திருந்தது. இங்கே தங்கிப் படித்த ஆர்.கே. சண்முகம், பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும், எஸ். சுப்பிர மணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ. நாராயண சாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந் தராகவும் உயர்வு பெற்றார்கள்.

“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பிராமண அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசன், பிராமணர் அல்லாத மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்வினைப் பெற்றிடத் தனி அரசியல் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து வந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆதித் திராவிடர் நலனில் டாக்டர் சி. நடேசனாரை விடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் எவரும் இலர். மகாத்மா காந்தியின் “ஹரிஜன் இயக்கம்” தொடங்கு வதற்கு முன்பே, டாக்டர் சி. நடேசன், ஆதித் திராவிடர் நலனில் மிக்க அக்கறை கொண்டிருந்தார்.

இத்திராவிடர் சங்கத்தின் வியத்தகு பணியால் கவரப்பட்டவர்கள் முதுபெருந்தலைவர்களான வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரும், பெரியாரால் திராவிட லெனின் எனப் புகழப்பட்ட டாக்டர் டி.எம். நாயரும் ஆவர். அவர்கள், இத்திராவிடர் சங்கத்தைவிட வலி மையும் ஆற்றலும் மிக்க நாடு தழுவிய இயக்கத்தின் தேவையை உணர்ந்தனர்.

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் முதலில் காங்கிரஸ் பேரியக் கத்தில் இருந்து அரசியலில் தொண்டுபுரிந்து வந்த நிலையில், 1915 செப்டம்பர் 25இல், அன்னிபெசண்ட் அம்மையார் “ஹோம் ரூல்” (Home Rule) இயக்கத் தைத் தோற்றுவித்தார். அன்னிபெசண்ட், ‘சுயஆட்சி’ என்ற போர்வையில் ஸ்மார்த்த பிராமணர்களின் ஆதரவைப் பெற்றார்; நால்வருணக் கொள்கையை ஆதரித்தார்; சமஸ்கிருத வளர்ச்சி, இந்துமதப் பரப்புரை ஆகியவற்றை முன்னின்று நடத்திவரலாயினார்.

காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பிராமணர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர். பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் நன்கு உணர்ந்திருந்தனர். தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரசு அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகி யிருந்தனர். இந்நிலையில் பிராமணர் அல்லாதாரின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால், அவ்வியக்கத்தையும் திராவிடர் நலன் கருதி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பிராமணரல் லாத தலைவர்கள் இருந்தனர்.

இருபெரும் தலைவர்களின் பிணக்கு

ஆனால் இந்த இருபெரும் தலைவர்களும் சென்னை நகர சபை உறுப்பினராக இருந்தகாலை - 1913-களில் நடைபெற்ற சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஒருவரோடொருவர் பேசிக் கொள்வது கூட இல்லை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளம் பாசிபடர்ந்து பாழடைந்து கிடந்தது. கொசுப் பெருக்கத்தால் நோய் பரவ வாய்ப்பாய் அமைந் திருந்தது.

சென்னை மாநகராட்சியின் உறுப்பினராய் இருந்த டாக்டர் டி.எம். நாயர், “நகர மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு, பார்த்தசாரதி கோயில் குளத்தை மண்கொட்டி மூடிவிட்டு, அங்கே பூங்காவை நிறுவிட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

“தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்து செப்பனிடு வதை விட்டுவிட்டு, அதை மூடுவதா?” என்று சர். பிட்டி. தியாகராயர் வெகுண்டெழுந்து, நாயரின் தீர்மானத் தைத் தோற்கடித்தார். இதனால் இருவரிடையே காழ்ப்புணர்வு ஏற்பட்டு நட்பில் தொய்வு ஏற்பட்டது.

சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமலிருந்த டாக்டர் டி.எம். நாயரையும், சர். பிட்டி. தியாகராயரையும் ஒன்றி ணைய வைத்தவர் டாக்டர் சி. நடேசன் அவர்களே ஆவார்.

பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளையும், கோப தாபங்களையும் அடக்கி ஆளக்கூடிய பெருமக்களாக டாக்டர் டி.எம். நாயரும், சர். பிட்டி. தியாகராயரும் விளங்கினார்கள். தங்களுக்குள் மாறு பட்ட கருத்துக்கள் இருந்தாலும், பிராமணரல்லாத மக் களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்றும் கொள்கையின் பொருட்டு வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.

“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” தோற்றம்

இவ்விரு பெரும் பிராமணரல்லாத தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சென்னை விக்டோரியா பொது அரங்கில், சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசன், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர்.

இக்கட்சியின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற நாளிதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன.

இந்திய அரசின் 1919ஆம் ஆண்டைய வகுப்புரி மைச் சட்டப்படி, 1920 நவம்பர் 20இல், சென்னை மாகாணப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இரட்டை யாட்சி (Diarchy) முறையை எதிர்த்து காங்கிரஸ் தேர்த லில் பங்கேற்கவில்லை. ஹோம் ரூல் இயக்கத்திற்கும், நீதிக்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப் பற்றியது. நீதிக்கட்சியின் முதலாவது அமைச்சரவை 1920 டிசம்பர் 17இல் பதவியேற்றது.

சென்னை சட்டமன்றத்தில் டாக்டர் சி. நடேசன்

டாக்டர் நடேசன், 1920, 1923, 1926, 1931 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவையில் திராவிட சமுதாயத்தவர்களுக்காகக் குரல் கொடுத்துப் பல தீர்மானங்களை நிறைவேற்றித் திராவிட சமு தாயம் முன்னேறிட வழிவகை செய்தார்.

இந்தியாவிலேயே சென்னையில்தான் முதன் முதலில் தொழிற்சங்கம் தோன்றியது. தொழிற்சங்கம் தொடங்குவதற்கு டாக்டர் நடேசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விற்கு உறுதுணையாக இருந்தார்.

1921 சூன் திங்கள் பக்கிங்காம் கர்நாடிக் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழி லாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுக் கலவரம் மூண்டது. ஆதித் திராவிடத் தொழிலாளர்களுக்கும், மற்ற தொழிலாளர்களுக்கும், மனக்கசப்பு ஏற்பட்டுக் கொடிய கலவரம் நடந்தது; துப்பாக்கிச் சூடும் நடை பெற்றது. உயிரிழப்பும் ஏற்பட்டது. ‘புளியந்தோப்புக் கலவரம்’ என்று இதை வரலாறு குறிப்பிடுகிறது. அங்கே, உயிருக்கு அஞ்சாது நடேசனாரும், தியாக ராயரும், முதல்வர் பனகல் அரசரும் சம்பவ இடத் திற்கே நேரில் சென்று தொழிலாளர்களிடையே சமரசம் பேசினர், தொழிலாளர்களின் நலனையும் பாது காத்தனர்.

சென்னை சட்டமன்றத்தில் டாக்டர் நடேசன், “பிராமணரல்லாதாருக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய விகிதாசார அளவுக்கு அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வரையில் அரசுப் பணி களுக்கு பிராமணரல்லாதாரை மட்டுமே தேர்வு செய்திடல் வேண்டும்” என்று, 1921 ஆகஸ்டு 5இல் தீர்மானம் கொண்டுவந்தார். இதன் விளை வாக, 16-9-1921இல் எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையின் அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்க வேண்டும் என்ற ஆணை, பெரும் எதிர்ப்புக்கிடையே பிறப் பிக்கப்பட்டது. ஆனால் அரசு உயர் அலுவலர்கள் இவ்வாணையை நடைமுறைப்படுத்தாமல் புறக் கணித்தனர்.

அரசு அலுவலகங்களில் ஏற்படும் காலி இடங் களில் இலாக்கா தலைமையின் ஆணைப்படி, அலுவலர் இடங்களை நிரப்பி வந்தனர். அதனால் பிராமணரல் லாதார் வாய்ப்புகள் பறிபோயின. இந்நிலையைப் போக்கிட ‘அரசுப் பணியாளர் தேர்வுக்குழு’ (Staff Selection Board) ஏற்படுத்தவும், பதவி உயர்வுகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார், டாக்டர் நடேசன்.

சென்னை மாகாண அரசின் தலைமைச் செய லகத்தில், பிராமணரல்லாதார் மிகச் சொற்ப எண்ணிக் கையில் பணியாற்றி வந்தனர். பிராமணர்களே உயர் அதிகாரிகளாக மிகுந்திருந்தனர். இருவகுப்பாருக்கும் இடையே சமநிலை ஏற்படும்வரை 3 ஆண்டுகளுக்கு பிராமணரல்லாத சமூகத்திலிருந்தே உயர் அலுவலர் களையும் எழுத்தர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை ஓ. தணிகாசலம் முன்மொழிய, நடேசன் வழிமொழிந் தார். இத்தீர்மானம் மிகுந்த கண்டனத்திற்குப் பின் நிறைவேறியது. அதன் காரணமாகவே தலைமைச் செயலகத்தில் பிராமணரல்லாதார் நுழையவும் செல் வாக்குப் பெறவும் முடிந்தது.

சென்னைப் பல்கலைக்கழக செனட் (Senate = பேரவை) உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கச் சட்டம் இயற்றத் துணை நின்றார். இப்புதிய அரசியலில், “சொத்து, படிப்பு, வரி செலுத்தும் தகுதியுடையவர் கட்கே வாக்குரிமை என்று கூறியவர்களுக்கு - ஏழை மக்கள் வரி கொடுக்காமல் இருக்கலாம்; ஆனால் அவர் கள் உழைப்பில் விளைந்த செல்வத்தைக் கொண்டு தான் செல்வர்கள் வரி செலுத்துகிறார்கள். ஆகவே, முன்னேறிய நாட்டில் வாக்குரிமை யாவர்க்கும் பிறப் புரிமையாகும்” என்று எடுத்துக்காட்டி ஏழை எளிய மக்களுக்காக வாதாடினார்.

அவர் சட்டமன்றத்தில், கலந்துகொண்டு பேசாத பொருள் என்று எதுவும் இருந்ததில்லை. அவர் சிறப்பாக, கல்வி, பொதுநலம், நீர்ப்பாசனம், நிர்வாகம் ஆகிய வைகளைப் பற்றிய விவாதத்தில் முக்கியப் பங்கெடுத் துக் கொண்டார். நீர்ப்பாசன விவாதங்களில் பங்கேற்ற அவரது உரைகளை சர். சீனிவாச ஐயங்கார் மெச்சி யுள்ளார்.

சுகாதார விஷயங்களில் அவர் சிறந்த கருத்து களைக் கூறுவார்; கூட்டுறவு விஷயங்களில் மக்கள் நலத்துக்காக வாதாடினார். கட்டாய ஆரம்பக் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டார். சென்னை வாடகைக் குடித்தனக்காரர் பாதுகாப்புச் சட்டத்தை (City TenantsProtection Bill) வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

இந்து அறநிலையங்களில் உள்ள உபரி நிதியை மக்கள் நல்வாழ்வு கருதி பொதுநலக் காரியங்களுக்குச் செலவிட வகை செய்யும் “இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா”, 6.12.1922இல் நிறைவேற்றப்பட, நடேசனார் அதை ஆதரித்து வாதாடினார். கடும் எதிர்ப்புக்கிடையே அம்மசோதா நிiவேறியபோதிலும் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும், 1923 ஏப்ரல் மாதத்தில், பனகல் அரசர் முதலாவது அமைச்சராக மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்கள்.

டாக்டர் நடேசனார் எல்லோரிடமும் நட்பு பாராட்டி னார்; அன்புடனும் பண்புடனும் நடந்துகொண்டார்; கொள்கையில் உறுதியாக இருந்தாலும், நண்பர் களுக்கு விட்டுக்கொடுக்கும் மனம் உள்ளவர்.

அவர் சென்னை மாநகராட்சித் தலைவர் பதவிக்கு 3 முறை போட்டியிட விரும்பினார். இருமுறை சர். ஏ. இராமசாமி முதலியாருக்கும், மூன்றாம் முறை எம்.ஏ. முத்தையா செட்டியாருக்கும் விட்டுக்கொடுத்தார்.

தகுதியும் திறமையும் கல்வியும் செயல்திறனும் இருந்தும், கடைசி வரையில், கட்சி அவருக்கு உரிய இடத்தைத் தரவில்லை. உதவித் தலைவர் இடத்தைத் தான் தந்தார்கள். அமைச்சர் பதவிக்கும் அவர் ஆசைப் படவில்லை. ஒருமுறை தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்று எதிரணியில் வீற்றிருந்த போதிலும் நீதிக்கட்சியின் கொள்கைகளைக் கைவிடவில்லை. அதுதான் அவரது நேர்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக்கொள் ளாத டாக்டர் நடேசனார், தமது ஒரே மகன் கிருட்டிண சாமி பி.ஏ. ஆனர்ஸ் அவர்களை இளமையில், பறிகொடுத்துவிட்டார். அதனால் மனமுடைந்து உடல் மெலிந்து துக்கமடைந்தார். எனினும், பொது காரியங் களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தவறியவர் அல்லர், அவர்.

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அம் மாமனிதர் 18.2.1937 அன்று இம்மண்ணுலகை நீத்தார்.

அவர் நினைவாக திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் அருகில், நடேசன் சாலையும், தியாகராயர் நகரில் டாக்டர் நடேசன் பூங்காவும் உள்ளன.

அவரது தங்கை திருமதி. சின்னம்மாளின் மகள் வழிப் பெயரன் டாக்டர் சி.யு. வேல்முருகன் சென் னையில் புகழ்மிக்க நரம்பியல் மருத்துவராக உள்ளார்.

டாக்டர் நடேசனார் மறைவு குறித்து, தந்தை பெரி யாரின் உளமார்ந்த இரங்கல் அறிக்கையைப் படித்தால், டாக்டர் நடேசனாரின் எளிமையும் தொண்டும் எளிதில் விளங்கும். பெரியாரின் இரங்கல்:

“டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ்மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலு மிருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும், வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றி பெறமாட்டான் என்கிற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல்  போனதில் நமக்குச் சிறிதும் ஆச்சரிய மில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டி ருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.

நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடு வோமாக!”

(18.2.1937, டாக்டர் சி. நடேசன் அவர்கள் மறைந்த நாள்)

- மரு.க.சோமாஸ்கந்தன், எம்.டி.

Pin It