அண்மையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட யானைகள் புத்துணர்வு முகாமைத் தொடங்கி வைக்கச் சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
அப்படிச் செல்லும்போது, வழியில் இருந்த ஒரு சிறுகோயிலை வணங்குவதற்காக நின்றது அமைச்சர் குழாம். அப்பொழுது அவர் செருப்பு கழற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
உடனே அங்கு வாழ்ந்த, மண்ணுக்குரிய மக்களைச் சேர்ந்த ஓர் இளம் சிறுவனை அதிகாரத்தோடு அழைத்து தன் காலின் செருப்பைக் கழற்றச் சொல்லியிருக்கிறார்.
சொல்லியவர் அமைச்சர், உடன் இருப்பவர்கள் ஆட்சித் தலைவர், அதிகாரிகள். என்ன செய்வான் அந்தச் சிறுவன்?
இயல்பாகவே பயந்த குணம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் குழந்தையான அந்தச் சிறுவன், அமைச்சரின் கால் செருப்பைக் குனிந்து கழற்றி இருக்கிறான்.
அப்பொழுது உடன் இருந்த ஆட்சித் தலைவர் அதிகாரிகள் உட்பட அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய, அதை ஒரு சாதி வன்மம் என்ற கோணத்தில் யாரும் தடுக்க முன்வரவில்லை.
இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவத்தொடங்கிக் கண்டனங்கள் வலுவாக எழத் தொடங்கின.
உடனே அமைச்சர் சீனிவாசன் இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் தந்தார்.
அதாவது அருகில் நிற்பவர்கள் எல்லாம் கட்சிக்காரர்கள், பெரியவர்கள், அதிகாரிகள். அதனால் அந்தச் சிறுவனை அழைத்து என் காலின் ‘பூட்ஸை’ கழற்றச் சொன்னேன் என்று.
அருகில் நிற்பவர்கள் கட்சிக்காரர்கள், பெரியவர்கள், அதிகாரிகள் என்பதனால் அவர்களுக்கான மரியாதை கொடுத்தார் என்பது சரி.
ஆனால், ‘மலைச்சாதி’யைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்குரிய மரியாதை கூட வேண்டாம், குறைந்த பட்சம் அவனிடம் அன்பையாவது காட்டியிருக்க வேண்டாமா?
தொடர்ந்து அமைச்சர் சொல்லும்போது, அந்தச் சிறுவனை தன் பேரனைப்போலப் பார்த்ததாக வேறு சொல்கிறார். அப்படியானால் பேரப்பிள்ளைகளை எல்லாம் அவர் செருப்பு கழற்றச் சொல்லுவாரா? அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கும் இதே நிலைதானா?
இங்கு சாதியம் கண்முன்னே வருகிறது. அய்யர், அய்யங்கார் வீட்டுச் சிறுவர்களையும் நாம் மதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை தன் பேரன் என்று, தன் செருப்பை கழற்றச் சொல்வாரா அமைச்சர் சீனிவாசான்.
அமைச்சரின் இந்தச் செயல் சாதியம், ஆதிக்கத்தின் உச்சம். அனைவரும் சமம் என்ற இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாக நடந்து கொண்ட அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுப்பும் குரல் எழுப்பினர். அதற்கு அஞ்சி அமைச்சர் இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.