‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பார்கள். இவ்விரு பொன்மொழிகள் பொய்த்துப் போகவில்லை. இதனை மெய்ப்பித்துக் காட்டி வருகிறார் தி.மு.க.வின் செயல் தலைவர் தளபதி அவர்கள்.

ஒரு தலைவரைத் தந்தையாய்க் கொண்டிருந்தாலும், தன் தந்தையைத் தலைவராகவே பார்த்து வரும் தலைவர் இவர். எனவேதான் தந்தைக்கு இருக்கும் அந்தப் போர்க்குணம், வேகம், விவேகம் அத்தனையும் பெற்றுச் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் ஒரு யுகப் புரட்சிக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்திருக்கிறார்.

மதுரை அலங்காநல்லூரில் - கண்ணகி நீதி கேட்ட மண்ணில் “சல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி” அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திய அடுத்த நாள் 4.1.2017 அன்று செயல் தலைவராகப் பொறுப்பேற்றார்.

செயல் தலைவர் ஆனவுடன் தான் எழுதிய முதல் கடிதத்தில், கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே! உங்களில் ஒருவனாக இக்கடிதத்தை எழுதுகிறேன் “புதிய தமிழ்நாட்டை படைத்திடுவோம் வாரீர்! வாரீர்!” என்று எழுதத் தொடங்கி, பின்பு “அன்பின் அடையாளம் போதும்; அடிமை நிலை வேண்டாம்“ என்ற கடிதத்தின் மூலம் திராவிட இயக்கத்தின் சுடர் ஒளி என்பதைப் பறைசாற்றும் விதமாக கழகத் தோழர்கள் யாரும் தன் காலில் விழக்கூடாது என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார். பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதியதன் மூலம், தி.மு.கழகம் தமிழர் பண்பாடு, நாகரிகம், ஆகியவற்றைப் பாதுகாக்கப் போராடிய இயக்கத்தின் அடிச்சுவட்டில் வந்தவர் தளபதி என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

“இந்தியா டுடே” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு இலவசமும், - வளர்ச்சித் திட்டங்களும் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டினார். ஓர் அரசுக்கு ‘கார்ப்பொரேட்’ என்பதும் தேவை சாதாரண மனிதனும் தேவை. இரண்டும் நாட்டின் இரு கண்கள் என்றால் ‘வளர்ச்சி’ என்பதை நெற்றிக் கண்ணாகவே நான் பார்க்கிறேன் என்று கூறி தனது பொருளாதாரப் பார்வையை நாட்டிற்குப் பறைசாற்றினார் செயல் தலைவர் தளபதி அவர்கள்.

செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல், காலை, மாலை, நாள் தவறாது கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகிறார். தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் வருகைப் பதிவேட்டை ஒருநாள் திடீரென்று ஆய்வு செய்த அந்த மாலைப் பொழுதில், தலைவர் கலைஞரை என் கண் முன்னால் கண்டேன்.

ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவூரில் நடைபெற்றது. முதல் முறையாகக் கழகச் செயல் தலைவராகச் சென்று கலந்து கொண்டது மட்டுமல்லாமல், தனது பேரக் குழந்தைகளுடன் சென்று மக்களுடன் கொண்டாடினார். ஒரு தலைவர் வீட்டுக் குழந்தைகள், கிராமத்தில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டுமென்ற சமத்துவபுரம் கண்ட கலைஞரின் மகன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தி.மு.க. வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் மும்முனைப் போராட்டம். இதில் ஒரு போராட்டம்தான் டால்மியாபுரம் இரயில் நிலையத்திற்குக் கல்லக்குடி என்று பெயர் மாற்ற தலைவர் கலைஞர் தலைமையில் இரயில் மறியல் போராட்டம். இந்த இயக்கத்தின் நான்காம் தலைமுறையான தளபதி அவர்கள் செயல் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் முதல் இரயில் மறியல் போராட்டம் 20.1.2017 அன்று சென்னை, மாம்பலம் இரயில் நிலையத்தில் வெற்றிகரமாக அவர் தலைமையில் நடந்தது. இது இயக்கத்தின் வரலாற்றை விரிவு படுத்துவதாக அமைந்தது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ் மொழி காக்க வெகுண்டு எழுந்த இளைஞர் கூட்டத்தின் வித்துக்கள் 16.1.2017 முதல் 23.1.2017 வரை நடைபெற்ற இன்றைய இளைஞர்கள். மாணவர்கள் போராட்டத்தின் மத்தியில் 16.1.2017 அன்று செயல் தலைவர் தளபதி அவர்கள் நேரில் சென்று ‘கலங்காதீர்கள்... நானிருக்கிறேன். இதோ உங்களுக்காக நான் தமிழ்நாடு காவல்துறை தலைவரைச் சந்தித்து மாணவர்களின் போராட்டத்திற்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அளித்து விட்டுத்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்’ என்று சொன்னபோது அண்ணாவின் அடிச்சுவட்டில் வந்த தலைவர் கலைஞரின் மகன் என்பதை பொறுப்பேற்ற சில தினங்களிலேயே மீண்டும் மீண்டும் பறைசாற்றியுள்ளார்.

சல்லிக்கட்டு குறித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக 23.1.2017 அன்று மாலை 5.00 மணிக்கு தாக்கல் செய்தபோது ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அச்சட்டத்தை வரவேற்று சில ஆக்கப்பூர்வமான திருத்தங்களுக்கான யோசனையைத் தெரிவித்து சட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது தளபதியின் அரசியல் பண்பாடு.

அன்று இரவே தமிழகப் பொறுப்பு ஆளுநர் மாண்புமிகு வித்யா சாகர் ராவ் அவர்களைச் சந்தித்து அமைதியாக, அறவழியில் போராட்டம் நடத்திவந்த இளைஞர்களை, மாணவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்றதை விசாரிக்க பணியில் இருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததன் மூலம் இளைய தலைமுறையின் இணையில்லாத தலைவர் ஆனார்.

செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பின் கலந்து கொள்ளும் முதல் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கோவை மாநகரில் நடைபெற்றது. அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, இந்த இயக்கத்தின் வீர மறவர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டு செல்லும் தலைவராக உயர்கிறார்.

4.1.2017 அன்று செயல் தலைவராகப் பொறுப்பேற்ற தளபதி அவர்களிடம் ஒரு மாதத்தில்தான் எத்தனை வேகம்!

இயக்கத்திற்கு இவர் செயல் புதிதன்று... ஆனால் பொறுப்பு புதியது. பொறுப்பின் பெயருக்கேற்றவாறே விரைந்து செயல்படும் செயல் தலைவர் தமிழக அரசியலின் நாயகர்.

- இ.பரந்தாமன், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர்

Pin It