perarivalan 382

எழுவர் விடுதலை என்பது எப்போதும் எட்டாக்கனிதானா என்ற ஏக்கம் பொதிந்த கேள்வி பலருக்கும் இருக்கிறது. தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் வரும்போதும், சுதந்திர நாள், குடியரசு நாளின்போதும் மட்டும் பரபரப்பான விவாதப்பொருளாக இருந்துவிட்டு, பிறகு மீண்டும் பேசாப்பொருளாக முடங்கிவிடுகிற அவலம் தொடர்கிறது. இப்போதும்கூட குடியரசு நாளை ஒட்டியே இந்தக் கட்டுரையும் எழுதப்படுகிறது.

கூடுதல் செய்தி என்னவென்றால், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரில் இருவர் தொடர்ந்த வழக்கை 2017 சனவரி மூன்றாம் வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, “14 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள 180 பேரை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுவிக்க இருக்கிறது தமிழக அரசு. அந்தப் பட்டியலில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் பெயர்கள் உள்ளனவா என்று பார்த்துவிட்டுச் சொல்கிறோம்” என்று அரசு வழக்கறிஞர்கள் சொல்லவே, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், எழுவர் விடுதலை எப்போதோ நடந்தேறியிருக்கவேண்டிய நிகழ்வு. அதற்கான பெருவாய்ப்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த 2014 ஆம் ஆண்டிலேயே கிடைத்தது. அப்போது ஜெயலலிதாவின் முன்னால் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவைப் பயன்படுத்துவது. இது நேர்மறையான, அதிகாரமோதலுக்கு வழிவகுக்காத வழி. மற்றொன்று, இந்தியக் குற்றவியல் சட்டம் 432 ஆம் பிரிவைப் பயன்படுத்துவது. இது சரியான வழி என்பதைத் தாண்டி, சிக்கல் ஏற்பட்டால் மாநில அரசு தப்பித்துக்கொள்ள ஏதுவான திட்டிவாசல் வழி.

முதல் வாய்ப்பைத்தான் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அவர் இரண்டாம் வாய்ப்பைத் தேர்வுசெய்தார். அதையே மத்திய அரசுக்குக் கடிதமாகவும் எழுதினார். சிக்கல் என்னவென்றால், ராஜீவ் கொலை வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒன்று. இந்திய குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, இதுபோன்ற வழக்குகளில் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிப்பதுதான் கலந்தாலோசனை என்பது தமிழக அரசின் பார்வை. ஆனால் மத்திய அரசிடம் கலந்துபேசி, சம்மதம் பெறுவதுதான் கலந்தாலோசனை என்பது மத்திய அரசின் பார்வை. பலரும் பயந்ததுபோலவே மத்திய - மாநில அரசுகளிடையே அதிகாரப்போட்டி உருவானது. யாருக்கு அதிகாரம், யார் பெரியவர் என்ற போட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உருவானது. அப்படியொரு போட்டி உருவானதற்கு இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது. அது முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் இடம்பெற்ற சில வரிகள்:

‘சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவு குறித்து மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தமது கருத்தைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏழுபேரும் விடுவிக்கப்படுவார்கள்.”

உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, எங்களுடைய சம்மதம் இல்லாமல் ஏழுபேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று சொல்லிவிட்டது. மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவே, ஏழுபேரின் விடுதலைக்குப் பெருந்தடை ஏற்பட்டது. இது நடந்தது 2014ல். அதன்பிறகு 2014ல் மக்களவைத் தேர்தல், 2016ல் சட்டமன்றத் தேர்தல் எல்லாம் முடிந்துவிட்டது. எழுவர் விடுதலைக்காக மத்திய அரசுடன் மோதிய முதல்வர் ஜெயலலிதா அகால மரணமடைந்து, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் தற்போது எழுவர் விடுதலை பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது.

நன்னடைத்தை காரணமாகவோ அல்லது ஆயுள் தண்டனையான பதினான்கு ஆண்டுகளைக் கடந்தோ சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கும் நடைமுறை கடந்த திமுக ஆட்சிக்காலம் வரைக்கும் பின்பற்றப்பட்டது. ஆனால் 2011ல் ஜெயலலிதா ஆட்சியில் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. என்றாலும், புதிய முதல்வர், புதிய பொதுச்செயலாளர் வந்திருக்கும் நிலையில், 180 பேரை விடுவிக்க முடிவுசெய்திருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை.

அதேசமயம், தண்டனைக் காலத்தைத் தாண்டி பல ஆண்டுகள் சிறையிலிருக்கும் இரண்டு பேரை மட்டும் தேர்வுசெய்து விடுதலை செய்யாமல், ஏழு பேரையுமே விடுதலை செய்வதுதான் நல்லதொரு நடைமுறையாக இருக்கும். இதற்கான முன்மாதிரிகளும் இருக்கவே செய்கின்றன. இன்னும் சொல்லப்போனால், மத்தியில் ஆளும் மோடி அரசுக்குப் பிடித்தமான முன்னுதாரணமே இருக்கிறது.

சுதந்தர இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு என்று காந்தி படுகொலையைத்தான் சொல்லவேண்டும். உலகமே உற்றுநோக்கிய காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவுக்கும் நாராயண ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது. நாதுராமும் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டனர். கோபால் கோட்சே சிறையிலடைக்கப்பட்டார்.

தீர்ப்பின்படி 14 ஆண்டுகள் சிறையில் இருந்த கோபால் கோட்சே, தன்னை விடுவிக்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்துவிட்டது உச்சநீதிமன்றம். இது நடந்தது 1961 ஆம் ஆண்டில். அதன் பொருள் என்னவென்றால், ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்கு மட்டுமானது அல்ல, ஆயுள் முழுக்கவும் என்பதுதான். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள்கூட நிறைவடையவில்லை, திடீரென ஒருநாள் கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார். ஆக, ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது அல்ல. அப்படித்தானே!

இது எப்படிச் சாத்தியமானது?

சட்டத்தில் விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருக்கின்றன. அவற்றை நேர்த்தியாகவும் நியாயமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் வல்லமை மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் வசந்தராவ் நாயக்குக்கு இருந்தது. கோபால் கோட்சேவின் விடுதலை சாத்தியமானது.

இப்போதும்கூட ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. சரியான முறையில் அணுகினால், எழுவர் விடுதலை தொட்டுவிடும் தூரத்தில்தான். என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர் ஓ.பி.எஸ்? 

Pin It