எப்படி வருகிறது இந்தத் துணிச்சல்?

ஏன் தமிழ்நாட்டில் பொதுவெளிகளும், மேடைகளும் இவ்வளவு அநாகரிகமான சொற்களைத் தாங்கி நிற்கின்றன?

குழப்பமாகவும் வேதனையாகவும் தான் இருக்கிறது. அண்மையில், பா.ம.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் பொது மக்களிடம் பேசியுள்ள சில சொற்களின் அடிப்படையில்தான் இந்தக் கேள்விகள் எழுகின்றன.

pmk arul mlaஓமலூர் அருகில் உள்ள ஒரு கோயில் தொடர்பாக, இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக அங்கே போன அருள், அதனை மேலும் பெரிய சிக்கலாக்கி விட்டுத் திரும்பி இருக்கிறார்.

அந்த இரண்டு குழுக்களில் ஒரு குழுவில், முழுவதும் பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். அதனைக் கண்டு, தேவையற்றுக் கோபப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் அவர்களைப் பார்த்து, "எங்க உங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம்" என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வியில் பிழை இல்லை. ஆனால், அடுத்து அவர்களைப் பார்த்து, "ஏன் உங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம் பொட்டைங்களா?" என்று கேட்கிறார்.

அந்தக் காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இப்படியெல்லாம் கூடவா பொது வெளியில் பேசுவார்கள்? அது என்ன பொட்டைகள் என்ற சொல் ....! எதற்காக அந்த இடத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

"ஆம்பளைங்க எல்லாம் வீட்ல சமைச்சுக்கிட்டும் துவைச்சுக்கிட்டும் இருக்காங்களா? ஒரு முக்கியமான முடிவு எடுக்கிற இடத்துல ஆம்பளைங்க வேண்டாமா?" என்றெல்லாம் அவர் கேட்கிறார்.

அத்தனை கேள்விகளும் அபத்தமாகவும், அநாகரிகமாகவும், அத்துமீறலாகவும் உள்ளன. ஆண்கள் வீட்டில் சமைக்கவும், துவைக்கவும் கூடாதா? அல்லது எந்த ஒரு முக்கியமான முடிவையும் பெண்கள் எடுக்கக் கூடாதா? எந்தக் காலத்தில், எந்த நூற்றாண்டில் வாழ்கிறார் சட்டமன்ற உறுப்பினர் அருள் என்று நமக்குத் தெரியவில்லை!

இன்றைக்கு அது அங்கு ஒரு பெரிய சிக்கலாக ஆகியிருக்கிறது. நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்படி ஒரு புதிய பிரச்சனை தேவையற்று உருவாக்கப்பட்டிருக்கிறது!

பொதுவெளியில் பெண்களை இப்படி அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை! பாலினச் சமத்துவம் என்னும் கோரிக்கை வலுப்பெற்று வரும் இன்றைய உலகில், மீண்டும் பெண்களை அடிமைகளாக ஆக்க முயற்சி செய்யும் இந்த அநாகரிகப் போக்குகள் தடுக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும்!

சட்டமன்ற உறுப்பினர் அருள் பொதுவெளியில் மன்னிப்பு கோருவவதுதான் குறைந்தபட்ச நாகரிகம்!

அவர் அப்படிச் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அதனை அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமை வலியுறுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்!

- சுப.வீரபாண்டியன்