தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியம் என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களைச் சுமந்து நிற்கும் உயர் கோபுரமாக விளங்குகிறது. அந்த இலக்கிய மரபில் ஆண்பாற் புலவர்களைப் போல, பெண்பாற் புலவர்களும் தங்களின் படைப்பாற்றலையும் கல்விப் புலத்தையும் வெளிப்படுத்தி நின்றனர். ஆண்பாற் புலவர்களின் பாடல்கள் கிடைத்த அல்லது தொகுத்த அளவில் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் இல்லையென்றாலும் பெண்களின் சிற்சில பாடல்களும் காணக் கிடைக்கின்றன. அந்தவகையில், பெண்பாற் புலவர்களின் பாடல்கள் அக்காலக்கட்டத் தமிழ்ச் சமூகத்தின் செயற்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பாடியுள்ளனர்.

பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை இன்னது என்பதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. எனினும், பொதுவாக முப்பது பெண்பாற் புலவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அந்த முப்பதில் முதல் வரிசைப் புலவர்களில் போற்றப்படுகின்றவர் பொன்முடியார். அவர்தம் பாடல்களில் காணலாகும் தமிழ்ச் சமூகத்தின் போக்குகளையும் ஆணாதிக்கச் சிந்தனைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்ப முனைகிறது.

பொன்முடியார்

பொன்முடியார் என்னும் புலவர் ஆணா, பெண்ணா என்பதிலும் சில குழப்ப நிலைகள் இன்னும் நீடிக்கின்றன. ஏனென்றால், அவரின் பாடல்கள் உணர்த்தும் கருத்துநிலைகளே அதற்குக் காரணமாகின்றன. அதாவது, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பெண்களை இழிவாகவோ, புறந்தள்ளக்கூடிய வகையிலோ பாடல்களைப் பாடியுள்ளார். இல்லையென்றால், ஆணாக இருக்கும் ஒருவரால் பெண் உணர்வுகளைப் பதிவு செய்ததாக இருக்குமோ என்ற ஐயம் உள்ளது. சங்கப் பனுவலான புறநானூற்றில் பொன்முடியார் 299, 312, 310 எண்களைக் கொண்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றைத் தவிர வேறெதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை.

எது எப்படியாயினும் இன்று கண் முன் சான்றாக நிற்பது அவர்தம் பாடலடிகளே. இதனைக் கொண்டே மேற்கூறிய கருதுகோள் நகர்கிறது. பாடல்களுக்கு உரையாசிரியர்கள் தருகின்ற விளக்கங்கங்களைத் தாண்டி இன்றைய சிந்தனைப் போக்கோடு அவற்றையும் இணைத்துக் காணலாம்.

கலம் தொடா மகளிர்!

தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் ‘மாதவிடாய்’ என்னும் செயற்பாடு குறித்து முதலில் பதிவு செய்த புலவராகப் பொன்முடியாரும் சங்கப் பாடலாகப் புறநானூற்றின் பாடல் எண் – 299 தான் இருக்கும் ஒரே சான்றாகும். இப்பாடல் குறித்து ஏற்கனவே தனியொரு கட்டுரையாக விரித்து எழுதியுள்ளேன். வாய்ப்பிருப்போர் அதனையும் இணைத்து நோக்குக. (இணைப்பு: புறநானூற்றுக் ‘கலந்தொடா மகளிர்’ புரிதலும் புரியாமையும்).

இந்தப் பாடலானது நொச்சித் திணையில் குதிரை மறம் என்னும் துறையில் அமைந்துள்ளது. ‘மதிலை முற்றுகையிட்ட பகையரசனை மதிலுக்குரியோர் நொச்சிப் பூவையோ அல்லது மாலையையோ சூடித் தன் மதிலைக் காத்தல்’ என்னும் நிகழ்வாகும். அதேபோன்று, குதிரை மறம் என்பது ‘வேற்படைக் கொண்டு செய்யும் போரில் குதிரையின் திறத்தினைக் கூறவதாகும்’. இந்தச் சூழலில் அமைந்த பாடலானது பெண்களின் அகச்செயற்பாடான மாதவிடாய் நிகழ்வினை ஆண்களின் புறச்செயல்களுக்கு ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. இதில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் முருகன் கோவிலினுள் நுழையாமல் எப்படி ஒதுங்கி நிற்கின்றனரோ அதேபோன்று, பகையரசனின் குதிரைகள் விலகி நிற்கின்றன என்று உரை விளக்குகிறனர். அப்பாடல் பின்வருமாறு;

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,

கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_

நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,

அணங்குஉடை முருகன் கோட்டத்துக்

கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.                (புறம். – 299)

இப்பாடலில் சமயச் சார்புத் தன்மையுடன் உரை அணுகப்பட்டுள்ளதும் என்பது வெளிப்படை. அதேநேரத்தில், ‘கலந்தொடா மகளிர்’ என்று பெண்களைச் சுட்டிக்காட்டி, ஆண் மையச் சிந்தனையையும் அதிகாரத்தையும் நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது. அப்படி இல்லையென்றால் வேறு ஏதாவது ஆண்களின் புறச் செய்கைகளைப் பட்டியலிட்டு / ஒப்புமைப்படுத்திக் கூறி இருக்கலாம் அல்லவா? அவ்வாறு கூறாமல் விட்டு பெண்களின் இயற்கைசார் நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளதன் அரசியல் நோக்கத்தினை அறிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, முன்னர் கூறியது போல பொன்முடியார் பெண்ணாக இருந்தால், அக்காலக்கட்ட சமுதாயம் பெண்ணை வைத்தே பெண்களை அடிமைபடுத்தியும் ஒடுக்கியும் வந்துள்ளது என்பதும் திண்ணம்.

என்தலைக் கடனே

இதற்கு அடுத்தப் பாடலிலும் பெண்ணின் அறிவார்ந்த செயற்பாடுகளைச் சுட்டாமல் பென்ணின் உடலரசியல் குறித்தே பேசப்படுவதன் நோக்கத்தினை உய்த்துணரலாம். ஆணாதிக்கச் சிந்தனை மரபில் பெண் கருவுற்று குழந்தைப் பெற்றெடுக்கும் கருவியாகவே சித்தரிக்கப்பட்டுள்ள அவலத்தைக் காணமுடிகிறது. பெண் இச்சமூகத்தில் சக உயிரி என்பதனை மறந்த ஆணாதிக்கச் சமூகம், பெண்களை உயிர் உற்பத்தி அல்லது மறு உற்பத்தி செய்யும் நிலைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததை எடுத்துக்காட்ட பின்வரும் பாடல் தக்கச் சான்றாக உள்ளது. அப்பாடல்,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.                    (புறம். – 312)

இப்பாடலில், ‘தந்தை, கொல்லன், வேந்தன், காளை’ என்ற நான்கு நிலைகளில் ஆண்களை உயர்த்திப் பேசும் பெண்பாற் புலவராகக் கருதப்படும் பொன்முடியார் முதலடியில் பெண்ணின் தலைமைச் சான்ற கடமையாக ‘நல்ல’ ஆண் மக்களைப் பெற்றெடுத்துக் கொடுத்தல் என்பதாகக் கூறுகிறார். இது ஆண் அதிகாரம் மிகுந்தும் பெண்ணை நுகர்வு பண்டமாகக் கருதிய மனநிலையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மேற்கண்ட பாடலானது வாகைத் திணையில், மூதின் முல்லை என்னும் துறையில் அமைந்த பாடலாகும். அதாவது, ‘வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும்’ என்கிறனர். மூதின் முல்லை என்பதும் ‘மறவர்க்கு மட்டுமின்றி அந்த மறக்குடியில் வந்த மடப்பத்தினையுடைய மகளிர்க்கும் மறம் உண்டு என மிகுத்துக் கூறுவது’ ஆகும். பெண்ணின் வீரத்தை எடுத்துடுரைக்கும் துறை என்கிற நிலையிலும் காணும்போது இங்கு பெண்ணின் வீரம் என்பது நல்ல ஆண் மக்களைப் பெற்றெடுத்தலே வீரமாகக் கருதப்படும் சூழல் இருந்ததைக் காணலாம். இச்சூழலில் பாடப்பட்டுள்ள பாடலில் ஆண்களை மேட்டிமைத் தனத்தோடும் பெண்களை இழிபடுத்தும் செயற்பாடாகவும் குறித்துள்ளது. ‘கடனே, கடனே’ என்று விளித்து அக்காலத்திய தமிழ்ச் சமூகத்தின் நிலையைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டி நகர்ந்துள்ளார்.

களிறுஅட்டு

கீழ்க்காணும் பாடலானது தும்பை என்னும் திணையிலும் நூழிலாட்டு என்னும் துறையிலும் அமைந்த பாடலாக அமைந்துள்ளது. ‘இருபெரும் வேந்தர்களும் ஒருநாள் குறித்து பொதுவிடத்தில் போர் செய்தல்’ தும்பைத் திணையாகும். அதேபோல், ‘பல படைவீரர்கள் பின்வாங்குமாறு ஒருவன் (வீரன்) வாட்போர் புரியும் நிலையினை நூழில் அல்லது நூழிலாட்டு’ என்று கூறுவர். இத்தன்மையில் அமைந்த பாடலானது பின்வருமாறு,

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

செறாஅது ஒச்சிய சிறுகோல் அஞ்சியொடு

உயவொடு வருந்தும் மன்னே! இனியே

புகர்நிறம் கொண்ட களிறுஅட்டு ஆனான்,

முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே

உண்ணிலன் என்னும், புண் ஒன்று அம்பு

மான் உளை அன்ன குடுமித்

தோல்மிசைக் கிடந்த புல் அணலோனே.                          (புறம். – 310)

அதாவது, பெண் என்பவள் பல நாட்கள் தன்னிலை துறந்து பெற்றெடுக்கும் ஆண் குழந்தைக்குத் தந்தையான ஆண் சொந்தம் கொண்டாடும் போக்கு, பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. என்னதான் நவீனக் காலக்கட்ட வளர்ச்சியில் இன்று மக்கள் இருந்தாலும் ஆண் குழந்தைக்குக் கொடுக்கப்படும் சமூக மதிப்பு, முக்கியத்துவம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுதில்லை. எனினும் கல்வி பரவலாக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காலமாற்றத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் இருந்தே வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

            மேற்கண்ட பாடலானது தந்தையின் (ஆணின்) அறிவும் வீரமும் மகனுக்கும் உண்டு என்பதனைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. அதாவது அதியமான் என்றழைக்கப்படுகின்ற நெடுமான் அஞ்சியின் முற்காலச் செயற்பாடுகளை விதந்தும் அவனது மகன் பொகுட்கு எழினியின் தற்கால நிலைமையினை / வீரத்தினை எடுத்துரைப்பதாகவும் அமைகிறது. இங்கு ஆணின் குணம், வீரம், பண்பு போன்ற கூறுகள் ஆண் மக்களுக்கே உரியது என்றும் பெண் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்னும் செயற்பாட்டுக்குரியவள் என்கிற கட்டமைப்பு மேன்மேலும் உறுதிப்படுகிறது.

            பெண்ணானவள் உயிர் உற்பத்தி (கருவுறுதல்) என்னும் நிகழ்வு காலத்திலே தான் தனக்கான நிலையினை இழந்து, பிறரின் உதவியைத் தேடுகிறாள். தாய்வழிச் சமூகக் கட்டமைப்புத் தகர்ந்து தந்தை வழிக் கட்டமைப்பு அழுத்தமாக நிலைபெறும் இடமும் இதுவே. பெண் விளிம்பு நிலைக்கும் (இரண்டாம் நிலைக்கும்) ஆண் மைய அதிகார நிலைக்கும் (முதல் நிலைக்கும்) உரியவனாகின்றான். இக்கட்டமைப்பினைப் பொன்முடியார் பாடல்களிலும் உறுதி செய்ய முடிகிறது. ஆணே அனைத்திற்கும் முதன்மையானவன் என்கிற சூழலினை ஆணாதிக்கச் சமூகம் திட்டமிட்டே கட்டமைத்தது எனலாம்.

நிறைவாக

பொன்முடியார் பாடல்களானது பெண்ணைத் தாழ்வுப்படுத்தியும் அல்லது இரண்டாம் நிலைக்குத் தள்ளியும் ஆணை முதன்மைப்படுத்தும் போக்கினை அவர்தம் எழுத்துகளின் வழி காணமுடிகிறது. ‘கலந்தொடா மகளிர்’, ‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’ என்று பெண்ணைக் குறிப்பிட்டும் ஆண்களை உயர்த்திக் குறிப்பிடும் நிலையையும் காணலாம். ‘தண்ணடை மன்னர்’ என்றும் ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;’ ‘களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்றும் ‘புகர்நிறம் கொண்ட களிறுஅட்டு ஆனான்; முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே’ எனவாறு ஆண் மையச் சிந்தனைப் போக்குகளையும் அதிகாரத்தின் போக்குகளையும் தன்மைகளையும் எடுத்துரைக்கின்றார்.

            ஒருவேளை, தக்கத் தரவுகள் கிடைக்கப்பெறும் நேரத்தில் பொன்முடியார் ஆணாக இருக்கையில், இச்சிந்தனையானது ஆணின் பார்வையாகக் கொள்ளப்பெறும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், இன்றுவரை இது பொன்முடியார் என்கிற பெண்பாற் புலவரின் பாடலாகவே மிளிர்கிறது. அக்காலத்தில் பெண்களின் அறிவார்ந்த / வீரம் செறிந்த நிலைகளைப் பெருவாரியாகக் குறிப்பிடாததைக் காணும்போதும், ‘ஆணுக்குக் கட்டுப்பட்டவள் பெண்’ என்கிற ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கு அக்காலக்கட்ட சமுதாயத்தில் வேரூன்றி இருந்ததைப் பொன்முடியார் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

சான்றுகள்

  1. அ.மா. பரிமணம், புறநானூறு - 2, (மூலமும் உரையும்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
  2. முனைவர் ஜெ. மதிவேந்தன், “புறநானூற்றுக் ‘கலந்தொடா மகளிர்’ புரிதலும் புரியாமையும்”, ஆய்வுக் கட்டுரை. ஜனவரி - 2022.

முனைவர் ஜெ.மதிவேந்தன்

கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி,

செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்

Pin It