"இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இந்தியாவைப் பாதுகாக்க முடியாது. முத்தலாக், 370 , NRC, குடியுரிமைச் சட்டம், என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகவே உங்கள் ஆட்சி உள்ளது.  இஸ்லாமியர்களுக்கு உங்களைப் பார்த்து பயம் கிடையாது. ஆனால் நீங்கள் ஏன் இஸ்லாமியர்களைப் பார்த்து இப்படி பயப்படுகின்றீர்கள்?" என்று கபில் சிபில் கேட்டது, அமித்ஷா கோஷ்டிகளின் உண்மை முகத்தைக் கிழித்தெறிந்தது.

hindutwa and muslimsஇவங்களுடைய மதச்சார்பின்மையைக் காட்டுவதற்காக - கிறித்தவப் பாதிரியார் குடும்பத்தை உயிரோடு கொளுத்திய இந்த கும்பல் - கிறித்தவ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்குறாங்களாம். என்னே ஒரு நியாயம், நேர்மை?

கொண்டைய மறைக்கத் தெரியாத மங்குனிகள்.

"எந்த அகதிகளுக்கும் இந்தியாவில் இடமில்லை" என்று உங்களின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுங்கள்.

இல்லை "எல்லோரையும் அரவணைக்கிறோம்" என்று கூறி, அரவணைத்து விட்டு, 'கறி சாப்பிடாதே கத்தரிக்காய் சாப்பிடாதே' என்று அடித்துக் கொன்று நாட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுங்கள்.

நாட்டுமிராண்டித்தனம் என்பது பிழையல்ல, மங்குனி இந்துத்வாக்கள் மூலம் தமிழுக்குக் கிடைத்த புதிய சொல்.

மிருகங்களாக வாழ்வது காட்டுமிராண்டித்தனம். மனிதர்களின் போர்வையில் மிருகங்களாக இருப்பதுதான் நாட்டுமிராண்டித்தனம். இதனை மாட்டுமிராண்டித்தனம் என்றும் அழைக்கலாம்

இப்படி ஏதாவது ஒன்றாக இருந்துவிட்டுப் போங்கள். அதனை விட்டுவிட்டு, நாங்கள் அகதிகளை அரவணைக்கிறோம்; ஆனால் அகதிகளாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் அரவணைக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டு, இன்னமும் நாங்கள் மதச்சார்ப்பற்றவர்கள் என்று போலியாக பிதற்றிக் கொள்ளாதீர்கள்.

"ஆர்ட்டிக்கிள் 14: சட்டத்தின் முன் சமத்துவம். எந்தவொரு நபருக்கும் சட்டத்தின் முன் சமத்துவம் அல்லது இந்தியாவின் எல்லைக்குள் உள்ள சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுக்காது.

ஆர்ட்டிக்கிள் 15: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பது.

(1) மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் அடிப்படையில் மட்டுமே எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டாது.

(2) மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் எந்தவொரு இயலாமை, பொறுப்பு, கட்டுப்பாடு அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க மாட்டார்"

இந்திய அரசியலமைப்பின் படி இவற்றை மீறியவர்கள் தேசத் துரோகிகள். இப்பொழுது இந்த தேசம் காக்க வந்தவர்கள் இயற்றிய சட்டங்களைப் பாருங்கள்.

"பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை கிடையாது.

மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் குடியுரிமை கிடையாது.

இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள் இந்துக்கள் கிடையாது, இந்தியக் குடியுரிமையும் கிடையாது"

இதுதான், இந்த மதச்சார்பற்ற இந்தியாவின் தூணை உடைத்து, இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டம்.

சிறுபான்மையினரின் வாயினுள் விஷத்தை வைத்து வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு "சிறுபான்மையினர்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் பாதுகாக்கிறோம்" என்கிறார்கள்.

ஆம்... அவர்கள் நிச்சயமாக நமது பிணத்தைப் பாதுகாக்கப் போகின்றார்கள். நாம் எதற்காக பயப்பட வேண்டும்?

ஆம் சிறுபான்மையினர்கள் பயப்பட வேண்டாம். உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம். எரிக்கவா... புதைக்கவா?

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சமயம் இது. ஆம் இது இந்துத்துவ நாடுதான்; உங்களால் என்ன செய்ய முடியும் என்று திமிராக அறிவித்திருக்கிறது பாஜக.

பாஜகவின் சார்பில், அதிமுக தைரியமாக முன் வந்து , நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரிகள்தான் என்று நேரிடையாக வெளிப்படுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது.

"என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.

அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன."

என்கிற புதிய மாதவியின் மொழிபெயர்ப்புக் கவிதையை, அதிமுகவின் இன்றைய நிலையோடு பரிதாபமாய் ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

இனியும் அதிமுக பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லக்கைகளை விரட்டி விட வேண்டிய தருணம் இது.

அதிமுக விடம் சீட்டுப் பிச்சை கேட்டு நிற்கும் இஸ்லாமியக் கட்சிகளும் இந்த துரோகத்தின் காரணிகள்தான்.

இனியும் தனித்தனியாக போராடிக் கொண்டிருந்தால் இந்த கட்டமைப்புகளை, அரசியல் ஒழுக்கங்களை, அரசியல் அமைப்பின் சாசனங்களை, நமக்கான இந்தியாவை, இவர்கள் படிப்படியாக ஒழித்துவிட்டு, இந்தியாவை துண்டு துண்டாக்கி விடுவார்கள் இந்த இந்துத்வ சக்திகள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்ல, இது இனவெறி.
இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல, இது மத வெறி.

நாங்கள் மதச்சார்பற்றவர்கள்தான் என்று நீங்கள் சொல்ல வேண்டுமென கிறித்தவர்களை சேர்த்துக் கொண்டார்கள் ஒப்புக்கு சப்பாணியாக.

"பீடி சுற்றியோ
பிரியாணி கி்ண்டியோ
பிழைத்துக் கொள்கிறோம்
ஆனால்
இந்தியா
மதசார்பற்ற நாடென்று மட்டும்
பிதற்றாதீர்கள்"

என்ற ப செல்வகுமாரின் கவிதையைத்தான் மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டியதிருக்கிறது

மனிதத் தோலின் வலி தாங்கும் அளவு மீறிவிட்டால் ஒன்று கதறி அழக்கூடும். இல்லை உதறி எழக்கூடும். தங்களது நிலம், கலாச்சாரம், உரிமை பறிபோகக் கூடும் என்று வலி உணர்ந்து, வடக்கே எழுந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்கள் கடைசியாக உள்ள கோவணத்தையாவது பாதுகாத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே தேவைகளை அழுதே அடைந்து கொண்டிருக்க முடியாது.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மாடு மேய்த்துக் கொண்டு, கைபர் கணவாய் வழியாக, இந்தியாவுக்கு வந்தேறியவர்களிடமிருந்து, நாம் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஆரம்பிப்போம்.

- ரசிகவ் ஞானியார்

Pin It