நாடாளுமன்றத்தில் திசம்பர் 9ஆம் நாள் அவசர அவசரமாக அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு இந்தச் சட்ட மசோதா வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது. பிறகு அது மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப் பட்டது.

2014 திசம்பர் 31-க்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைக் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் கிருத்துவர்கள் ஆகிய ஆறு பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவின் அண்டை நாடுகள் என்பதாலும், அவை  மத அடிப்படையிலான அரசுகள் என்ப தாலும், அங்குள்ள இந்த ஆறு பிரிவினரும் பெரும்பான்மை மதமான இசுலாம் மதத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் என்பதாலும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என இந்திய அரசின் சார்பாக விளக்கம் தரப்பட்டது.

விடை தெரியாத சந்தேகங்கள்

அரசின் அறிவிப்புக் குறித்துப் பல்வேறு ஐயங்கள்  எழுகின்றன. இந்தியாவைச் சுற்றி எட்டு அண்டை நாடுகள் இருக்கும் பொழுது, மூன்று நாடுகள் மட்டும் ஏன் எடுத்துக் கொள்ளப்பட்டன? குறிப்பாக  நேபாளம், பூடான், மியன்மார் போன்ற அண்டை நாடுகளை வேண்டுமென்றே  தவிர்த்தது ஏன்? இந்தியாவுடன் அதிகத் தொடர்பில்லாத ஆப்கானிஸ்தானத்தை இணைத்துக் கொண்ட பொழுது, இந்தியாவுடன் மிக நெருக்கமான இலங்கையைத் தவிர்த்தது ஏன்? ஈழத் தமிழர்களை மென்மேலும் நசுக்க வேண்டும் என்பதாலா?

மேலே குறிப்பிடப்பட்ட ஆறுபிரிவினரைத் தவிர, வேறு பலரும் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனரே? எடுத்துக்காட்டாக சீனாவில் திபெத்திய பவுத்தர்கள், உய்குர் இசுலாமியர்கள், பாகிஸ்தானில் அஹமதியர்கள், ஷியா முசுலீம்கள், பலூச்சுகள் போன்றோரும், ஆப்கானிஸ்தானில் ஹசாரா பிரிவினரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனரே? அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் என்ன தயக்கம்? அதே போல் உலகிலேயே மிகக் கொடுமையான மதஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் மியான்மர் ரோஹிங் கியாக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை? மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த கிருத்துவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் பொழுது, இந்தியாவின் அண்டை நாடான பூடான் கிருத்துவர்களுக்கு அச் சலுகை ஏன் நீட்டிக்கப்படவில்லை?

மத ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்தியக்குடியுரிமை என்றால்,  ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்து, ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மதத்தைத் திணிக்கும் இந்து மதத்தைச் சார்ந்த இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை தரத் தயக்கம் காட்டுவது ஏன்? தமிழர்கள் என்றாலே தனிமைப்படுத்தும் ஒரு தலைப்பட்சமான அணுகு முறைதான் இதற்குக் காரணமா?

அது என்ன "மதஒடுக்குமுறை" எனும் அளவுகோல்? அரசியல் ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றால் பாதிக்கப்படுவர்களைக் கணக்கில் கொள்ளவில்லையே? அது ஏன்? அவர்கள் மீது மனிதநேயம் இல்லையா?

மத அடிப்படையில் மட்டும் குடியுரிமை  அரசியல் சட்டம் 14ஆம் பிரிவுக்கு எதிரானது அல்லவா?

குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாகக் கொள்ளும் அணுகுமுறை உலகில் எந்த நாட்டிலும் இல்லையே? இங்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை?

இவற்றைப் போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுப்பப்பட்டாலும், இந்திய அரசிடமிருந்து ஏற்கத்தக்க விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை.

மதத்தால் முசுலீம்களையும், இனத்தால் தமிழர்களையும் கருவறுக்கும் இரகசியச் சதியா?  எனும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது திட்டமிட்டு இசுலாமியர்களையும், 30 ஆண்டு களாக அகதிகளாக அல்லலுறும் ஈழத் தமிழர்களையும்  தனிமைப்படுத்திப் பழி வாங்கும் நடவடிக்கைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியா இதுவரை பேணி வந்த "மதச்சார்பின்மை" எனும் விழுமியத்திற்கு இது முற்றிலும் முரணான நிலைப்பாடாகும்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு / தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்றால் என்ன? மக்கள் தொகைப் பதிவேடு என்பது வழக்கமாக எடுக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் விவரம் (சென்சஸ்) மட்டும் குறித்ததன்று. அவரது பெற்றோர் - மூதாதையர் ஆகியோரது பிறந்த நாள், பிறந்த இடம் போன்ற வற்றையும் இது கோருகிறது.

அதைத் தொடர்ந்து வரும் தேசியக் குடிமக்கள் பதிவேடு

ஒருவர் இந்தியக் குடிமகன் தானா என்பதைத் தீர்மானிக்க அவரது பெற்றோர் மற்றும் மூதாதையரின் பிறந்த நாள் சான்றிதழ் போன்றவற்றைக் கோருகிறது. இது எவ்வளவு பெரிய பேராபத்து?

ஆனால் இந்தியா முழுவதும் இவை நடைமுறைப்படுத் தப்படும் என நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடப் பிரகடனப்படுத்தி உள்ளார்.

அசாமில் நடைபெற்றது என்ன?

அசாமில் குடிமக்கள் பதிவேடு ஏற்படுத்திய பாதிப்புகளைப் பெரும்பாலோர் அறிவார்கள். அசாமில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி  இந்தியக்குடியுரிமை இல்லாத " அந்நியர்கள் "  என 19 இலட்சம் பேர் கண்டறியப் பட்டுள்ளனர். இதில் 7 இலட்சம் பேர்தான் இசுலாமியர், மீதியுள்ள 12 இலட்சம் பேர் இந்துக்கள் எனும் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.  இப்பொழுது கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கி விட முடியும். ஆனால் எஞ்சியுள்ள ஏழு இலட்சம் முசுலீம்கள் தடுப்பு (வதை) முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்றால், அது எத்தனை நாளைக்கு? அதற்கு எவ்வளவு கோடி ரூபாய் ஆண்டுதோறும் செலவாகும்? இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும் இந்த நெருக்கடியான வேளையில், இதெல்லாம் சாத்தியமா? மேலும் முன்னாள் குடியரசுத் தலைவராகிய பக்ருதீன் அகமது அவர்களின் உறவினர்கள், கார்கில் போரில் வீரச்சமர் புரிந்து அரசின் பாராட்டைப் பெற்றவர்கள் போன்ற பலரும் குடியுரிமை இழந்த அந்நியர்களாக அசாமில் இப்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு வாடி நிற்கின்றனர். இதுவெல்லாம் முறையா என்ற கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கெல்லாம் மோடி அரசிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

குடியுரிமைப் பதிவேடு அனைத்து மக்களுக்கும் பேராபத்தை உண்டாக்கும்.

நமது பெற்றோர்களின் பிறப்புச் சான்று, பிறப்பிடம் ஆகியவை  குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் பொது மக்களிடம் கேட்கப் படும். நம்மில் பெரும்பாலானோரிடம் இதற்கான ஆவணங்கள் இருப்பது கடினம். அதிலும் வீடற்ற ஏழை எளிய மக்களிடம்  இப்படிப்பட்ட ஆவணச் சான்றுகள் எங்கே இருக்கும்? ஆவணங்கள் இல்லை என்றால், குடிமக்கள் இல்லை என முத்திரை குத்தப் பட்டு, தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படும் பேராபத்து உள்ளது.

பிரதமர் மோடி அவர்களின் பொய்ப் பிரச்சாரம்

இந்தியாவில் தனது ஆட்சியின் கீழ் தடுப்பு முகாம்கள் ஏதும் இல்லை என்று தில்லியில் அண்மையில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள்  மிகப்பெரிய பொய்யைக் கட்டவிழ்த்து விட்டார்.ஆனால், சர்வதேச மன்னிப்புச் சபை  எனும் மனித உரிமை அமைப்பு, தனது 2018 நவம்பர் அறிக்கையில் அசாமில் தடுப்பு மையங்கள் இருப்பதை உறுதி செய்து விட்டது. மேலும் கர்நாடகா போன்ற இடங்களில் இப்படிப்பட்ட தடுப்பு மையங்கள் இருக்கும் படங்களையே ஊடகங்கள் வெளியிட்டு அம்பலப்படுத்தியதையும் அனைவரும் அறிவார்கள்.

பாரதிய சனதாக் கட்சி அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளால் எத்தகைய அச்சமூட்டும் விளைவுகள் உண்டாகும்?

இன்றைய இந்துத்துவ அரசு கொண்டு வந்துள்ள / கொண்டு வரவுள்ள இத்தகைய மக்கள் விரோதத்  திரிசூலச் சட்டங்கள் அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை. திட்டவட்டமாக இசுலாமி யர்களையும், தமிழர்களையும் தனிமைப்படுத்தக் கூடியது. மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள ஏழை-எளிய மக்களை நாடாற்றவர்களாக மாற்றக் கூடியது. பலரை வதை முகாமிற்குள் அடைத்துக் சித்திரவதை செய்யக்கூடியது. தவிரவும் இந்தியாவின் மதச்சார்பின்மை-வேற்றுமையில் ஒற்றுமை போன்ற உயரிய கோட்பாடுகளைத் தகர்க்கக் கூடியது.

இந்தியா முழுவதும் பரவும் போராட்டத் தீ!

ஆர்எஸ்எஸ் அரசின்இக்கொடிய சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் - இளைஞர்கள் - அறிஞர்கள் - திரைக்கலைஞர்கள் - எழுத்தாளர்கள் - பெண்கள் - அதிகாரிகள் - முன்னாள் நீதிபதிகள் - மூத்த வழக்குரைஞர்கள் - இயக்கங்கள் - அரசியல் கட்சிகள் எனப் பல தரப்பினரும் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடுகின்றனர்.

வெங்கட்ராமன்இராமகிருஷ்ணன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும், புக்கர் பரிசு பெற்ற ஆங்கிலமொழி எழுத்தாளர் அருந்ததி ராய், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி ஹஷ்மந்தர் போன்ற ஆளுமை களும், மோடி அரசின் இத்தகைய சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். இந்தியா மட்டுமல்ல, உலகளாவிய எதிர்ப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள், நோபல் பரிசு பெறும் எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கும் கிங்ஸ் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இலண்டனில் இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடி, இச்சட்டத்திற்கு எதிராகப் போராடுகின்றனர். வியன்னாவிலும், தெற்காசிய நாடுகளின் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஐக்கியநாடு களின் மனித உரிமை அமைப்பு, சட்டம் பாகுபாட்டை உண் டாக்கக் கூடியது எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல் அமெரிக்கச் சிந்தனையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகளின் கடும் எதிர்ப்பு

இந்தியாவிலுள்ள 12 மாநில அரசுகள் மோடி அரசின் இத்தகைய  மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன. பாரதிய சனதாக் கட்சியின் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளே குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சட்டத்தைத் தவிர்க்குமாறு கேரள சட்டசபையிலும், பஞ்சாப் சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மேலும் இச்சட்டத்தை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதுதவிரவும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தனியாரால் தொடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், 25ம் மேற்பட்டோர், பல்வேறு அரசுகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமைச் சட்டம் பற்றிய திசை திருப்பும் பொய்ப் பிரச்சாரம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லை என மிகப் பெரிய பொய்ப் பரப்புரையை இந்துத்துவ வெறியர்கள் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள். மேலும் இவற்றுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிரச்சாரமும் தொடர்கிறது? சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை குடியுரிமைச் சட்டம் (1955) மற்றும் 2003 விதிகளுடன் தொடர்பு கொண்டனவாக உள்ளன என்பது கருதத்தக்கது. இதைத் திட்டமிட்டு மறைக்கின்றனர்.

மேலும் 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட என்பிஆர் குறித்த அரசின் அதிகாரப் பூர்வமான அறிக்கை அரசு இணையத் தளங்களிலிருந்து திடீரெனக் காணாமல் போயுள்ளன. இதை இந்திய அரசு மறைக்க வேண்டிய காரணம் என்ன?

குடியுரிமை குறித்து மூன்று வகையான மக்கள் விரோத நடவடிக்கைகளை இப்பொழுது எடுக்க வேண்டிய பின்னணி என்ன?

இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் வேற்று மையில் ஒற்றுமை எனும் உயரிய கோட்பாட்டை உருத்தெரியாமல் அழித்து, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றி அமைத்து விட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய சனதாக் கட்சியின் ஒரே இலட்சியமாக இருக்கிறது. அதற்குச்  சாதகமாகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

தவிரவும், இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது எனப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். வேலை வாய்ப்பு இன்மை, மக்களிடம் பணப்புழக்கமின்மை, பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை, கறுப்புப் பணம் அதிகரிப்பு , கோடிக்கணக்கில் வாராக்கடன் போன்ற சிக்கல்களால் இந்தியா விழி பிதுங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்களிடம் எழும் அதிருப்தி மற்றும் கோபத்தைத் திசை திருப்புவதற்காக, மோடி அவர்களின் இந்துத்துவ அரசு இத்தகைய வேலைத் திட்டத்தைச்  முன்வைத்து உள்ளது. எனவே இத்தகைய திரிபுவாதப் போக்குக் கண்டு ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நேரமிது. ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி இது.

சங்பரிவாரின் நடவடிக்கைகள், அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களின் பிரச்சனை மட்டுமல்ல அல்லது முசுலீம்களுடைய பிரச்சனை மட்டுமல்ல அல்லது ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களின் பிரச்சனை ஆகும். குடிமக்கள் பதிவு செய்து கொள்ளும் முறை வந்தால், நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோர் - பாட்டன் - முப்பாட்டன் கால ஆவணங்களைக் காட்டித்தான், நாங்கள் எல்லோரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், நம்மை எல்லாம் இந்த நாட்டுக் ‘குடிமக்கள் இல்லை’ என்று சொல்லி, நமது குடியுரிமையைப் பறித்து விடுவார்கள். எனவே இந்த ஆபத்து முசுலீம்களுக்கு மட்டும் தான் என, நாம் சும்மா இருந்து விடக்கூடாது.

நம் எல்லோருக்குமே இந்த ஆபத்து வரப் போகிறது. இந்துத்துவ அரசியலுக்கு இடம் கொடுக்காத மாநிலம் என்பதால், ஏற்கெனவே தமிழ்நாட்டின் மீது மோடி அரசுக்கு ஓர் ஒவ்வாமையும், எரிச்சலும் இருக்கிறது. தொண்டையில் சிக்கிய முள்ளாகத்தான் தமிழகத்தைத் தில்லி சுல்தான்கள் கருதுகின்றனர். ஒரு பக்கம் தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை இருப்பது போல் பாவனை செய்து கொண்டே, இன்னொரு பக்கம்  தமிழினத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கான நடவடிக்கைகளைக், கமுக்காகச் செய்து வருகின்றனர். எனவே நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய பேராபத்தை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

"தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல் படுத்துவதிலிருந்து ஓர் அங்குலம் கூடப் பின் வாங்கப் போவதில்லை" என, அமித்ஷா கொக்கரிக்கிறார். "எனது அரசின் முடிவு 1000 மடங்கு சரியானது" என முழங்கு கிறார் மோடி.  இந்தத் தருணத்தில் தந்தை பெரியார் அவர்களின் வழிகாட்டுதலை நினைவுகூருவது பொருத்த மாக இருக்கும். மக்கள் திரள் போராட்டத்தின் மூலம், அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற முடியும் என நமக்கு மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் பெரியார். எனவே அவரது வழியைப் பின்பற்றி மக்கள் திரள் போராட்டங்களைத் தொடர்ந்து தொய்வுறாமல் முன்னெடுத்தால், மாற்றங் களை நிகழ்த்த முடியும்.

Pin It