'பஞ்சசீலக் கொள்கையினை தந்த இந்தியாவிலா?' என உலக அரங்கே ஆச்சர்யத்தோடு கவனிக்கும் வகையிலும், ஐநா மன்றமே விவாதப் பொருளாக எழுப்பியிருக்கும் வகையிலும் 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா-2019' இந்தியாவின் வடகிழக்கினை மிகப் பெரும் கலவர பூமியாக்கி இருக்கின்றது. தன்னிச்சையான மக்கள் திரள் போராட்டங்களை மாணவர்களும், சாமானியர்களும், இதனால் அதிக இடர்களைச் சந்திக்கும் இஸ்லாமிய சமூகமும் முன்னெடுத்து வருகின்றனர்.
2014, டிசம்பர் 31க்குள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் இவைகளிலிருந்து இந்தியாவிற்குள் அகதிகளாக வந்த இசுலாமியர்கள் அல்லாத இந்துக்கள், கிறித்தவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சீக்கியர்களுக்கு உடனடி இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என ஒர் அறிக்கை தான் நாட்டின் இத்துனை களேபரத்திற்கும் காரணம்.
இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. அதாவது மேற்கூறிய நாடுகளில் சிறுபான்மை சமுகம் கொடுமைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் அவர்களுக்கு விமோசனம் தரவே இந்த மசோதாவை அமல்படுத்திட முயல்வதாக பாஜக அரசால் பிதற்றப்படுகின்றது.
பல்லாண்டு காலமாக திபெத்திலிருந்து அரசியல் அகதிகளாக இங்கே இருக்கும் தலாய்லாமா உள்ளிட்ட புத்த மதத்தவர்களுக்கு ஏன் குடியுரிமையினைத் தரவில்லை? இது குறித்து பாஜக ஏன் கவலை கொள்ளவில்லை? ஒரு வேளை சீனாவின் அழுத்தம் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றனரா?
பவுத்தப் பேரினவாதத்தின் காரணமாக விரட்டப்பட்ட பர்மீய இந்துத் தமிழர்கள் குறித்தோ, கொடூரமாகக் கொல்லப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்தோ ஏன் இந்த மசோதா கவனம் செலுத்தவில்லை? அவர்களும் சிறுபான்மையினர் என்பதற்காகத்தான் கொல்லவும், விரட்டவும் படுகின்றனர்.
அதே பவுத்தப் பேரினவாதம் காரணமாக அழித்தொழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் உயிரை காத்துக் கொள்ள வேண்டி தப்பி தமிழகத்தில் அடைக்கலம் புகுந்திருக்கும் தமிழ் மக்களுக்கும் குடியுரிமை குறித்து ஏன் விவாதிக்கப்படவில்லை? அவர்களும் இந்துக்கள் தானே!
மத்திய பாஜக அரசு தன் இந்துத்துவ சனாதனப் போக்கைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன் இந்துராஷ்ரா கனவாகத்தான் இந்த மசோதாவினைக் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய யூதர்களை அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குடியமர்த்த 1950, ஜூலை 5-ல் இயற்றபட்ட "THE LAW OF RETURN' சட்டத்தைப் போல...
இந்திய அடிப்படைச் சட்டமான 14வது பிரிவின் படி இந்தியா மத/இன ரீதியான பாகுபாட்டினை கடைபிடிக்கக் கூடாது என்றிருக்கையில், அதனை மீறுகின்ற செயலாகவே 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா-2019' இருக்கின்றது. இந்தியா தன்னை ஒரு மதச்சாற்பற்ற நாடாகவே சுதந்திரம் பெற்ற நாள் முதல் இருந்ததை சுதந்திரத்திற்காக ஒரு அணு அளவும் பணியாற்றாத மதரீதியான பிளவு அரசியலின் மீதே நம்பிக்கையும், கலவரங்களின் மீதே முழுப் பற்றும் உடைய ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பாஜக செய்வது மிகவும் எதிர்ப்பிற்குறியது.
ஆரியத்தின் மீது பற்று கொண்ட பாஜக இதனைச் செய்வது ஒரு புறமிருக்கட்டும். திராவிடத்தின் மீதும், ஈழத்து மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாகவும், மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், பெரியாரின் வழியில் பணியாற்றுகின்றவர்கள் என பாவித்துக் கொள்ளும் அதிமுகவும் - பாமகவும் கூட்டணி தர்மம் என பாவலாக் காட்டி மசோதாவிற்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் எனப் புரியவில்லை!
ஒருவேளை இந்த மசோதா முன்னமே இயற்றபட்டிருக்குமேயானால் எம்ஜிஆர் அவர்களும் இந்தியாவில் சேராதவராகவே ஆகியிருப்பார். அவரும் இலங்கையின் கண்டியிலிருந்து அகதியாக வந்தவர்தானே!
இசுலாமியர்களுக்கும் - பர்மிய இந்துக்களுக்கும் - ஈழத் தமிழர்களுக்கும் 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா-2019' வாயிலாக வெளிப்படையாக துரோகமிழைத்து, 'கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் கொத்துக் கொத்தாக ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கபட்டனர்' என பாஜக - அதிமுக - பாமக கூறுமானால் அதை விடவும் ஒழிக்கவேண்டிய அரசியல் வேறெதுவும் இல்லை!
- நவாஸ்