கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தினுடைய ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்களைத் தான் சந்தித்தபோது இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசியதாகச் செய்தியாளர்களிடம் சொன்னார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் நிலவரங்களைப் பற்றிப் பேசியதாகக் கூறிய ரஜினிகாந்த் அவர்கள், என்ன பேசினார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற மறுத்துவிட்டார், செய்தியாளர்களிடம்.

 என்ன பேசி இருப்பார் என்கிற கேள்வி அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு. சரி, அரசியல் நிலவரங்களை இவர்கள் பேசினார்கள் என்று சொன்னால் என்ன பேசினார்கள்? rajini and governor raviபெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசினார்களா, இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறாரே அது தொடர்பாகப் பேசினார்களா, மக்களை வதைக்கும் மின்சார சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்களே அது குறித்துப் பேசினார்களா, ரபேல் விமானங்கள் எப்படி வாங்கப்பட்டன என்பது குறித்துப் பேசினார்களா, ரூபாய் 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, அதை மறந்தது குறித்துப் பேசினார்களா, 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்களே அது குறித்துப் பேசினார்களா?

அல்லது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை எதிர்கொள்ள முடியாமல், ஒரு வகையான தலை சுற்றும் அரசியலைப் பேசியிருப்பார்களா?

நான் அரசியல் பேசினேன் என்று சொல்வதும், எனக்கு அரசியலே வேண்டாம் என்று சொல்வது ஒரு புதிய வகையிலான அரசியல் போல இருக்கிறது.

அடுத்து, ஆளுநராக இருக்கக்கூடிய ஒருவர், ஆளுநர் மாளிகையில், அதுவும் இதுவரையும் அரசியலுக்குள் வராத ஒருவரிடம் அரசியல் பேசினார் என்றால் அது என்ன ஆளுநர் மாளிகையா அல்லது கட்சி அலுவலகமா?

 தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி பல்வேறு வகையில் அரசியலையும், சனாதன விமர்சனங்களையும் பொதுவெளியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் டில்லிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தார் ரஜினி. விரைவில் தமிழகம் வர இருக்கிறார் அமித் ஷா. இதற்கு இடையில் ஆளுநர் ரவியும், நடிகர் ரஜினிகாந்த்தும் ஆளுநர் மாளிகையில் சந்தித்து, செய்தியாளர்கள் மூலம் மக்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்கு அரசியல் பேசியிருக்கிறார்கள் என்றால் அந்த அரசியலுக்குப் பெயர் என்ன?

ஜீ... பூம் ... பா....!

- சிற்பி செல்வராஜ்