முழுப் பொய்யைக் காட்டிலும், அரைகுறை உண்மை ஆபத்தானது. அதே போல, எது குறித்தும் பேசாமல் இருப்பதை விட, அரைகுறையாகவும். பொத்தாம் பொதுவாகவும் பேசுவது ஆபத்தானது.

rajini 369அதனைத்தான் நடிகர்  ரஜினிகாந்த் இப்போது செய்திருக்கிறார். 

குடியுரிமைச் சட்டத் திருத்தம், இஸ்லாமிய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இழைத்திருக்கும் அநீதியை எதிர்த்து நாடே  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஆதரித்துப் போராட்டத்தில் இறங்கவில்லை என்றாலும் குற்றமில்லை. பேசாமலாவது இருந்திருக்க வேண்டும். ஆனால் ரஜினி அறிவுரை சொல்கிறார். வன்முறை எதற்கும் தீர்வாகாதாம். இப்போது நடக்கும் வன்முறை வேதனை தருகிறதாம்!

இப்படித்தான், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும் பேசினார். வன்முறை கூடாது என்றார்.

எது வன்முறை என்பதை ரஜினி சொல்வாரா?

ஊர்வலம் நடத்தியது வன்முறை, அந்த மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்முறை இல்லை! அநீதியான ஒரு சட்டத்தை எதிர்த்து அறவழியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது வன்முறை, ஆனால் அவர்களை அடித்துத் துவைத்து அரசு நடத்திய வெறியாட்டம் வன்முறை இல்லை!

உழைப்பிற்குரிய ஊதியம் பெறாத ஒரு தொழிலாளி தெருவில் இறங்கிப் போராடும் வேளையில், ஒரு கல்லை எடுத்து வீசுவது மட்டுமே வன்முறை இல்லை. அவனுக்கு உரிய ஊதியம் கொடுக்காத செயலும்  வன்முறைதான்.

நேற்று கர்நாடகத்தில் வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குஹா, நியாயம் கேட்டுத் தெருவுக்கு வந்தார். ஆள் இல்லை, ஆயுதங்கள் இல்லை. ஒரே ஒரு அட்டை மட்டுமே அவர் கையில் இருந்தது. அவரை எப்படிக் காவல்துறை இழுத்துக் கொண்டு போனது என்பதைக் காணொளியில் கண்டோம். அவர் என்ன வன்முறைப் போராட்டத்திலா ஈடுபட்டார்?

உண்மையைச் சொன்னால் இரண்டு விதங்களில் அரசுதான் வன்முறையில் இறங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கே எதிரான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலமும், அதனை எதிர்ப்போர் மீது காவல்துறையை ஏவி விடுவதன் மூலமும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கருத்துகள் பரவாமல் இருக்க மாநிலங்கள் சிலவற்றில் இணையத்தளத் தொடர்பையும் துண்டித்துள்ளது. இவை அனைத்தும்தான் வன்முறை. இவற்றை அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும்.

இதனைக் கண்டிக்கத் துணிவில்லாமல், மக்களைப் பார்த்து வன்முறை கூடாது என்று உபதேசிக்கும் மகாத்மா அவர்களே, நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நீங்கள் யார், உங்களுடைய முகம் யாருடையது. நீங்கள் யாருக்காக அரசியலுக்கு வருகின்றீர்கள் என்பதை வெளிப்படுத்தியது ஒரு விதத்தில் நல்லதுதான்! நன்றி ரஜினி!!

- சுப.வீரபாண்டியன்

Pin It