கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாடு, நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராசன், தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் பேசும் போது முதலமைச்சர் பற்றியும், அவர் குடும்பத்தினர் பற்றியும், ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திப் பேசியிருக்கிறார் என்பதாகச் சில காணொளிகள் வெளியிடப்பட்டு, அது குறித்துப் பல்வேறு விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

அவை பொய்யாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், ஆளும் கட்சிக்குள் ஒரு சிக்கலை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்றும் அடுத்தடுத்த காணொளிகள் வெளிவந்துள்ளன. செயற்கை அறிவு (artificial intelligence) என்பதன் மூலம் இப்படிப் பொய்யை உண்மை போல் காட்ட முடியும் என்பதை நிதி அமைச்சரும் விளக்கியிருக்கிறார்.

ptr palanivel thiagarajan 329தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி டி ஆர் அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்பதும், அமைச்சரவைக்குப் பெரும் துணையாக இருப்பவர் என்பதும் உலகறிந்த செய்தி! எனவே அவர் மீது அவதூறுகள் பரப்புவதன் மூலம் அமைச்சரவைக்கும், ஆளும் கட்சிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட முடியுமா என்று “சில்லறை வியாபாரிகள்” சிலர் எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த முயற்சி பயனற்றுப் போய்விட்டது!

இது ஒரு புறம் இருக்க, நமக்குக் கவலை தருகிற இன்னொரு செய்தி இதற்குள் ஒளிந்திருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருத்தியல், சித்தாந்தம் இவைகளை விட்டு விலகி, ஒட்டுக் கேட்பது, அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது, அவதூறுகளை அள்ளி வீசுவது என்று அரசியல் சரியத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் பெரும் கவலைக்குரிய செய்தி!

எதிர்க்கட்சியின் மீதுதான் என்று இல்லை, தங்கள் கட்சிக்குள்ளும் பாஜக இந்த ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது! அதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் கே.டி .ராகவன். அவர் என்ன செய்தார், அப்படிச் செய்தது சரியா என்பன போன்ற வினாக்கள் ஒரு புறம் இருக்க, அதில் என்ன அரசியல் இருக்கிறது என்ற கேள்வியே முதன்மையானது! கே. டி. ராகவன் தவறாக நடந்து கொண்டிருந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் சென்று இருக்க வேண்டும். அது ஒரு கிரிமினல் வழக்கே தவிர அரசியல் விவாதம் அன்று!

என் போன்றவர்களின் இளமைக் காலத்தில், அரசியல் அரங்குகளில், சித்தாந்த விவாதங்கள் தான் முதன்மையாக இருந்தன. திராவிட- தமிழ்த் தேசியமா, இந்திய தேசியமா, சர்வதேசியமா போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டு, அவை தொடர்பான விளக்கங்கள் பொது மேடைகளில் வழங்கப்பட்ட காலம் அது!

இப்போதும் நிதி அமைச்சர் பேசியதில், என்னென்ன தகவல் பிழைகள் இருக்கின்றன, இந்த சித்தாந்தம் தவறானது என்பன போன்ற விவாதங்கள் எழுப்பப்பட்டு .இருக்குமானால், விடை சொல்ல வேண்டிய கடமை அமைச்சருக்கும், அரசுக்கும் கட்டாயம் இருந்திருக்கும். ஆனால் தனிமனித அவதூறுகளே அரசியலாக இன்று மாற்றப்படுகின்றன!

இதுபோன்று மலிவான, அநாகரிகமான, அருவெறுக்கத்தக்க அவதூறுகளை முன்னெடுக்கும் சிலர், அரசியல் விமர்சகர்கள் என்னும் பெயரில் வலம் வருவது நாட்டுக்கு அவமானம். இதுபோன்ற “துப்பறியும் புலிகளால்” இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை!

இது போன்ற அவதூறுகளில் குளிர்காய்வதை விட்டு விட்டு, அரசியல் விமர்சனங்களை முன்னெடுப்பதும், இதுபோன்ற அநாகரிகப் போக்குகளைப் புறந்தள்ளுவதும் இன்றையத் தேவை என்பதை மக்களிடம் உணர்த்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சியினருக்கும் இருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்

Pin It