இந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட்டு 75 ஆண்டுக் காலம் நிறைவடைந்துள்ளது. குடியரசு நாளைக் கருப்பு நாளாக அறிவித்தவர் பெரியார். அரசியலமைப்பு குறித்துத் தந்தை பெரியாரின் பார்வை என்ன?
1946இல் இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. 100-க்குப் 16 பேர் மட்டுமே அதாவது செல்வந்தர்களும், பார்ப்பனர்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை எவ்வாறு மக்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கும் என்ற கேள்வியைத் தந்தை பெரியார் எழுப்பினார். இந்திய தேசியத்தைப் பாதுகாக்க எழுதப்பட்ட சட்டமாகவே இந்திய அரசியல் சட்டத்தைப் பெரியார் கருதினார். பெரியாரைப் பொறுத்தவரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை என்றைக்குமே ஏற்றுக் கொண்டது இல்லை. பழமையைப் பாதுகாக்கும் சட்டம், வருணாசிரமத்தை, ஜாதியைப் பாதுகாக்கிற சட்டம் என்ற பார்வையே அவருக்கு இருந்தது. அதன் காரணமாகவே 1957-இல் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். அண்ணல் அம்பேத்கரே 1953-இல் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்று பேசியுள்ளார். பெரியாரின் இறுதிநாட்களில் கூட அரசியல் சட்டம் குறித்துத் தந்தை பெரியார் பேசும்போது, ”தில்லியில் இருந்து கொண்டு எங்களை ஆட்சி செய்ய நீ யார் ?” என்ற கேள்வியை எழுப்பினார்.
தந்தை பெரியாரின் எழுத்துகளைத் தொகுத்த வே. ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரியாரின் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆனைமுத்துவின் பங்களிப்பு என்ன?
ஆனைமுத்து அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே தீவிரமான பெரியார் தொண்டராக இருந்தார். 1957-இல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தினைப் பெரியார் நடத்தினார். ஆனைமுத்து திருச்சி பெரம்பலூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று அரசியல் சட்டத்தை எரித்தார். அதற்காக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே இதழ் வெளியீடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு பைண்டிங் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டன. அப்போது பல்வேறு நூல்களை பைண்டிங் செய்ததால் அவற்றைப் படிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்பு என்பது தேசிய இனங்களின் உரிமைக்கு எதிராக இருப்பது குறித்து ஆனைமுத்து அவர்களின் பார்வை என்ன? அவர் முன்வைத்த தீர்வுகள் என்ன?
இது குறித்து “இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஒரு மோசடி” என்கிற நூலில் ஆனைமுத்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். இந்தியா என்கிற கட்டமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதைக் கெட்டிப்படுத்தும் வேலையை அரசியலமைப்புச் சட்டம் செய்தது என்றார் ஆனைமுத்து. இந்தியா என்பது ஓர் ஒற்றை ஆட்சியாக, இந்தியாவின் மைய அரசு வலிமை கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆட்டுவிப்பதற்கான விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பாஜகவினர் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இதற்கு காஷ்மீரே சான்று. காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மேடைகளில் பேசியவர் ஆனைமுத்து மட்டுமே.
அதே போல கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. 1976-இல் நெருக்கடி நிலையின்போது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் இன்று நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளன. அதே போல, இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை இன்றுவரை நம்மால் மாற்ற முடியவில்லை. நமக்கு அந்த வலிமையும் இல்லை. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும் நாடாளுமன்றத்தில் இந்தி பேசுகிற மக்களைவிட நாம் குறைவுதான். இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதைக்கூட அரசியல் சட்டம் ஏற்கவில்லை. ”We, the people of India” என்று அரசியலமைப்பின் முகவுரை தொடங்குவதையே மோசடி என்றார் ஆனைமுத்து. நாங்களா அதை எழுதினோம் என்ற கேள்வியை எழுப்பினார்.
மொழிச் சமத்துவத்திற்கும் மாநிலங்களின் உரிமைக்கும் எதிரான அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் இன்று நீட் தேர்வு வரைக்கும் உள்ள பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளன. இவற்றை எதிர்கொள்ள பெரியாரிய இயக்கங்களின் செயல்திட்டம் என்னவாக இருக்க வேண்டும்?
இப்போது இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் போராடி நாம் வெற்றி கொள்ள முடியாது. இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆனைமுத்து அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்து பரப்புரை செய்தார். எனவே பெரியாரிய இயக்கங்கள் தமிழ்நாட்டைத் தாண்டிச் செயல்பட வேண்டும். அதற்காக அகில இந்திய கட்சியாக மாற வேண்டியதில்லை. நம்மைப் போல் ஒத்த கருத்துள்ளவர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். பஞ்சாப், நாகலாந்து ஆகியவற்றைச் சொல்லலாம். நாங்கள் இந்தியர்கள் இல்லை, தனித்தனி தேசிய இயக்கங்கள் என்று பேசுபவர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். பெரியாரின் கருத்துகளை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரியாரிய இயக்கங்களுக்கு உள்ளது.
- வாலாசா வல்லவன்
நேர்காணல் எடுத்தவர்: வெற்றிச்செல்வன்