கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அன்னை மணியம்மையாருக்குப் பிறகு ஒரு கடவுள் மறுப்பு இயக்கத்தை, நம் காலத்தில் தலைமையேற்று நடத்திச் செல்பவர் தோழர் ஓவியா! சாதி மறுப்பையும், பாலினச் சமத்துவத்தையும், தங்கள் நோக்கமெனக் கொண்டு, புதிய குரல் என்னும் ஓர் அமைப்பை அவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.அவர் மீது பொய்யான, போலியான ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரல்களுக்குப் பின்னால், பார்ப்பனர்கள் சிலர் ஒளிந்து இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது!

oviya 370தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை அவர் இழிவு படுத்தி விட்டதாகக் கூறுகின்றனர். பெரியாரியச் சிந்தனைகளில் ஊறி வளர்ந்திருக்கும் அவரோ, அவர் சார்ந்திருக்கும் அமைப்போ, உழைக்கும் மக்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற சிந்தனையைக் கூட ஏற்க மாட்டார்கள்! சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக நின்று, சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அழுத்தமான எண்ணம் என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!

தோழர் ஓவியா போன்றவர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ, யாரோடு சேர்ந்து நின்று போராட வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதிராக அவரை நிறுத்தும் திட்டமிட்ட சூழ்ச்சி இது!

எதிரிகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக அவர் கைது செய்யப்படுவார் என்றால், அது கண்டு அஞ்சி, தன் கைபேசியை அணைத்துவிட்டு ஓடி ஒளியும் இயல்புடையவர் இல்லை ஓவியா! மாறாக, நண்பர்களுக்கு எதிராக அவரைக் கொண்டு வந்து நிறுத்தும் சூழ்ச்சியை நாம் முறியடித்தே தீர வேண்டும்!

தோழர் ஓவியாவுக்கு எதிராகக் காவிகள் தங்கள் வலிமையைக் காட்ட விரும்பினால், கரும்படை அவருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும்!

அவருடைய எண்ணத்தையும், சொற்களையும் தவறாகப் புரிந்து கொண்டு, சிலர் இப்படி எதிர்க் குரல் எழுப்புகிறார்கள் என்றால், அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டியது நம் கடமை! அதே நேரம், இது ஒரு சூழ்ச்சியின் வலைப்பின்னல் என்றால், அந்த வலையை அறுத்து எறிவது நம் உரிமை!

இதனைப் போலவே, பாடகர் இசைவாணிக்கு எதிராகவும் மிரட்டல்களும் எழுந்துள்ளன!

ஐ ஆம் சாரி ஐயப்பா / நான் உள்ளே வந்தால் என்னப்பா? என்னும் பாடல் வரிகள் இன்று ஒலிக்காத நாளில்லை. இசைவாணி பாடிய போது கேட்டிராதவர்கள் கூட, இன்றைக்கு அந்தப் பாடலை கேட்கின்றனர், ரசிக்கின்றனர். அதனைப் பல லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை, அப்பாடலை எதிர்ப்பவர்களையே சாரும் என்று சொல்லலாம் !

அந்தப் பாட்டில் என்ன குறை கண்டார்கள் என்று தெரியவில்லை. அது ஐயப்பனுக்கு எதிரான பாடல் இல்லை. ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் ஏன் வரக்கூடாது என்று கேட்கும் பாடல்! அப்படிக் கேட்பது பெண்களின் உரிமை மட்டும் இல்லை, ஜனநாயக நம்பிக்கை உடைய அனைவரின் கடமையும் ஆகும்!

எனவே தோழர் ஓவியா, பாடகர் இசைவாணியின் பக்கம் நிற்போம்! கருத்துரிமையைக் காப்போம்!!

- சுப.வீரபாண்டியன்