கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியக் குடியாட்சியின் உதவித் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் உள்ள பள்ளி வாசலைத் திறந்து வைத்தது பற்றியும், அக்கூட்டத்தில் முஸ்லீம்களைப் பற்றிப் பேசுகையில் இந்தியாவை முன்பு ஆண்ட பரம்பரையினர் என்று வெகுவாகப் புகழ்ந்து பேசியது குறித்து ‘இந்து’ தினசரியில் கடந்த 10.05.65 அன்று சென்னையிலிருந்து திரு. சங்கர் என். மைத்திரா என்பவர் கண்டனம் தெரிவித்து ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதியில் எழுதியுள்ளார்.

மதச்சார்பற்ற முறையில் நடைபெறும் அரசாங்கம் என்று கூறிக்கொள்ளப்படும் அரசாங்கத்தின் உதவித் தலைவர் இப்படிக் கலந்து கொள்வது அதன் மதச்சார்பற்ற தன்மைக்கும், பெருமைக்கும் களங்கம் என்று அவர் துணிந்து அதில் தெரிவித்திருந்தார்.

உண்மையைச் சொன்னால் யாருக்கும் உடம்பெரிச்சல்தானே வரும்? அக்கடிதத்தைக் கண்டு வெகுண்டு திருச்சியில் இருந்து ஒரு முஸ்லீம் அன்பர் அதே தினசரியில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதியில் பதிலளிப்பது போன்று உபஜனாதிபதியின் செய்கைக்கு சப்பைக்கட்டு கட்டி எழுதியிருக்கிறார். மத உணர்ச்சி காரணமாக ஒரு முஸ்லீமுக்கு மற்றொரு முஸ்லீம் வக்காலத்து வாங்குவது ஒன்றும் அதிசயம் இல்லை என்றாலும், அப்பதிலில் அவர் கூறியுள்ள சில தகவல்கள், உபஜனாதிபதி கலந்து கொண்டதற்கு ஆதரவாக அவர் தேடியுள்ள சாட்சியங்கள். மொத்தத்தில் இன்றைய ஆட்சிக்கு மதச்சார்பற்ற ஆட்சி என்பது அய்வருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம் என்று திரெளபதியின் கற்பின் பெருமையை விளக்குவது போன்ற செயலேயாகும்.

மதச்சார்பற்ற அரசாங்கம் என்றால் மதமே அற்ற அரசு என்று தவறாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லை. எல்லா மதத்தினருக்கும் சம வாய்ப்புத் தந்து போற்றும் அரசேயாகும் என்ற கோணல் வாதத்தைக் கூறி தப்பித்துக் கொள்ளவே ஜனாதிபதி பார்ப்பனரிலிருந்து சாதாரண புரோகிதப் பார்ப்பனர் வரை கூறுகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் (பக்கம் 1124-இல்) ‘செக்யுலர்’ என்பதற்கு அர்த்தமே, இவ்வுலகம் சம்பந்தமான, உலகியல் புனிதம் என்று எதையும் கருதா, மடங்கள் சம்பந்தமற்ற (not monastic) என்றுதான் உள்ளதே ஒழிய, எல்லா மதங்களுக்கும் ஒத்த உரிமை தரும்’ என்ற பொருளைக் கூறவே கிடையாது.

என்றாலும் ஆட்சியின் உச்சத்தில் அக்கிரகாரப் பூணூல்கள் இருப்பதால் தங்கள் இஷ்டம் போல் மோட்சம், நரகம் வியாக்கியானம் போல, இதற்கும் தங்களுக்கேற்ற விளக்கத்தைத் தருகின்றனர்.

திருச்சி முஸ்லீம் அன்பர் எழுதியுள்ள கடிதத்தில் காலஞ்சென்ற ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களே முன்னின்று, சோமநாதபுரம் கோயிலை புனிதப் புனருத்தாரணம் செய்யவில்லையா? அதைக்கூட டாக்டர் முன்ஷி போன்றவர்கள் பாராட்டவில்லையா? அது தவிரவும், பல கோயில்களில் கும்பாபிஷேகம் (மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்று) நடைபெறுவதில் ராஜ்ய கவர்னர், பெருந்தலைகள், மந்திரிகள் இவர்கள் எல்லாம் கலந்து கொள்ளவில்லையா? இதன்மூலம் மதச்சார்பற்ற தன்மைக்கு இழுக்கு ஏற்படவில்லையே? என்றெல்லாம் இன்றைய இந்துமத – பார்ப்பன அடிமைகளின் போக்கை சாக்காகக் காட்டி அதில் மறைந்து கொள்ள முயற்சித்துள்ளார்…….

ஒட்டு மொத்தத்தில் மதச்சார்பற்ற அரசாங்கம் என்பது பேச்சளவில்தான் எழுத்தளவில் எங்கும் கிடையாது. அரசியல் சட்டத்தில் Secular என்ற வார்த்தையே எங்கும் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது*. அரசியல் சட்டம் எழுதிய பார்ப்பனர்கள் அப்போதே அதில் சர்வ ஜாக்கிரதையோடு இருந்தனர் என்பது இதன்மூலம் தெரியுமே.

ஆனால் நடைமுறையில் மதப் பிரசார இலாகாவாக அரசாங்க இயந்திரம் நுனி முதல் அடி வரை மாறி வருவது மிகவும் வெட்கக்கேடான ஒன்றாகும்.

(விடுதலை தலையங்கம் 18.05.1965)

* Secular என்ற வார்த்தை அரசியல் சட்டத்தின் முகவுரையில் 1972ஆண்டு சேர்க்கப்பட்டது.