புதிய குரல் அமைப்பின் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய காணொலியின் ஒரு பகுதியைச் சமுக வலைதளங்களில் பரப்பி அவருக்கு எதிரான அவதூறைச் செய்து கொண்டு இருக்கிறது பார்ப்பனக் கூட்டம்.
அப்படி என்ன பேசினார் தோழர் ஓவியா?
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, அவ்வாறு மாற்றி விட்டால் நமது இழிநிலை மாறி விடுமா? பார்ப்பனர்களின் தாசி மகன்கள் என்று இழிவுபடுத்தி எழுதி வைத்துள்ள சாத்திரங்கள், புராணங்கள் மாறி விடுமா? என்ற கேள்வியை அரங்கில் இருந்த பார்வையாளர்களின் முன்பாக வைக்கிறார் தோழர் ஓவியா. இதனைச் சுட்டிக் காட்டி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை ஓவியா இழிவுபடுத்திப் பேசி விட்டார் என்ற அவதூறை சுமந்த் ராமன், நாராயணன் திருப்பதி ஆகியோர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் தொடங்கினர். தமிழக மக்கள் முன்னேற்றத் தலைவர் ஜான் பாண்டியன் தோழர் ஓவியாவைக் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பேசும் திராவிட இயக்கம், அம்மக்களை இழிவுபடுத்துமா? வெறும் பெயர் மாற்றம் என்பது உங்களைச் சாதி இழிவிலிருந்து மீட்டு விடாது என்பதைத்தானே தந்தை பெரியார் அந்தந்த சாதிச் சங்க மாநாடுகளிலேயே சென்று பேசினார். அந்தக் கருத்தைத்தான் தோழர் ஓவியாவும் பேசியுள்ளார். உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியம் குறித்த பரப்புரையைச் செய்து உண்மை நிலையை அவர்களுக்கு உணர்த்த வேண்டியவர்கள் இவ்வாறு அவதூறு செய்யலாமா?
ஆனால் இதை ஒரு சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுத் திரிப்பது எவ்வளவு அறிவு நாணயமற்ற செயல். பார்ப்பனியம் நேரடியாக இயங்காமல் பல நேரங்களில் தனது ஏவலாட்களின் மூலம் இயங்கும் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் வேண்டுமா?
தமிழினத்தைத் தலைநிமிர வைக்கும் தந்தை பெரியாரின் கருத்துகளைத் தமிழரிடம் கொண்டு சேர்ப்பதும், பெரியாரின் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் தோழர்களுக்கு அரணாக நின்று அவர்களது கருத்துரிமைக்குக் குரல் கொடுப்பதும் பெரியாரிய இயக்கங்களின் இன்றைய தலையாய கடமை.
- கருஞ்சட்டைத் தமிழர்