இந்தியாவின் ஆக்கிரமிப்புக் கொள்கையாலும் பாகிசுதானின் மதவெறிக் கொள்கையாலும் காசுமீர் மக்கள் சொல்லணா துயரத்தை அடைந்து கொண்டிருக்கின்றனர். காசுமீரில் டிரால் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்கான் வானி கடந்த 8ஆம் தேதியன்று (சூலை) காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து ‘காசுமீர் காசுமீரிகளுக்கே’ என்ற முழக்கம் மீண்டும் விண்ணதிர எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
காசுமீரத்தில் நடக்கின்ற பச்சைப் படுகொலைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் காசுமீரின் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காசுமீருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காசுமீர் இன்றைய நிலையில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவிடம் உள்ள காசுமீரை ‘ஜம்மு-காசுமீர்’ என்று இந்திய அரசு அழைத்துக் கொள்கிறது. பாகிசுதான் இப்பகுதியை இந்திய ஆக்கிரமிப்புக் காசுமீர்’ என்று அழைக்கிறது.
பாகிசுதான் தன் வசம் உள்ள பகுதியை ‘ஆசாத் காசுமீர்’ என்று அழைக்கிறது. இந்தியாவே அப்பகுதியை ‘பாகிசுதான் ஆக்கிரமிப்புக் காசுமீர்’ என்று அழைக்கிறது. இப்படி இரண்டு நாடுகளிடமும் காசுமீர் சிக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கிறது.
1947இல் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை இந்தியா, பாகிசுதான் என இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். அவற்றோடு 565 சமஸ்தானங்களும் இருந்தன.
1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு மூன்று சமஸ்தானங்கள் தவிர்த்து அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவோடு இணைந்துவிட்டன. அப்படி இணையாத மூன்று சமஸ்தானங்களில் ஒன்றுதான் காசுமீர்.
காசுமீரை அப்போது ஆண்டு கொண்டிருந்தவர் மன்னர் அரிசிங். காசுமீரில் 80 விழுக்காடு இசுலாமியர்களாக இருந்த போதிலும் 1846க்குப் பிறகு டோக்ரா வம்சத்தைச் சார்ந்த இந்துக்களே ஆட்சி புரிந்து வந்தனர். டோக்ரா மக்கள் அதிகம் வசித்து வந்த ஜம்முப் பகுதியில் இருந்துதான் மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். டோக்ரா மேட்டுக் குடியினர் எல்லா அரசாங்கப் பதவிகளையும் தாங்களே கையிலெடுத்துக் கொண்டனர்.
காசுமீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகள் அலுவலகப் பணிகள் அனைத்திலும் ஆக்கிரமித்திருந்தனர். பெரும்பாலான ஏழை இசுலாமியர்கள் கல்வி உரிமை கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்.
1942இல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருந்த வேளையில் 1946இல் டோக்ரா மன்னராட்சிக்கு எதிராக “காசுமீரை விட்டு வெளியேறு” என்று காசுமீரிகள் போராடிக் கொண்டிருந்தார்கள்.
காசுமீரிலிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி “அரிசிங்கின் மன்னராட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை அமைப்பதே தமது நோக்கம்” என்று அறிவித்தது.
இப்படியான நிலையில் தான் மக்களின் கருத்தை அறியாமல் காசுமீரை இந்தியாவோடு இணைத்துவிடுவதென அரிசிங் முடிவு செய்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் பெருமளவு இந்துக்களும், பாகிஸ்தானுக்குள் இசுலாமியர்கள் நுழைவதும் நடக்கத் தொடங்கின. இந்தப் பகுதிகளில் குரூரமான கொலைகளும், பாலியல் வன்முறைகளும், கொள்ளையும், சேதப்படுத்துதலும் நடைபெற்று வந்தன.
ஜம்மு காசுமீரிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டது. ஜம்முவில் இசுலாமியர்கள் தாக்கப்பட்டபோது அரிசிங் மன்னர் அதைத் தடுக்கத் தவறியதால் மன்னருக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கினர். ஏற்கனவே மன்னராட்சியை வீழ்த்துவதற்கான போராட்டமும் நடந்து கொண்டிருந்ததால் அரிசிங்குக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. இந்த கிளர்ச்சியை தமது இராணுவத்தைக் கொண்டு அரிசிங் அடக்க முற்பட்டார்.
இப்படியான சூழ்நிலையில் 1947 அக்டோபர் 24ஆம் நாளன்று பாகிசுதானிலுள்ள வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பழங்குடியினர் காசுமீரில் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஜம்மு-காசுமீருக்குள் ஆயுதங்களோடு நுழைந்தனர். மன்னர் படையோடு மோதினர்
- இப்படியான நிலைமையில் தன்னுடைய மன்னர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியாவோ “காசுமீரை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டால்” உதவுவதாகக் கூறியது. எனவே, வேறு வழியில்லாத அரிசிங் ‘1947 அக்டோபர் 26ஆம் நாளன்று இந்தியாவிடம் தற்காலிக இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்றில் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக’ ஒப்புக் கொண்டார்.
இந்திய அரசு ‘ஜம்மு-காசுமீரில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டவுடன் அம்மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வது’ என ஒப்புக் கொண்டது.
- இப்படியாகத்தான் பாகிசுதான் பழங்குடி மக்களை காசுமீரிலிருந்து வெளியேற்ற, மன்னருக்கு எதிராகப் போராடும் காசுமீரிகளை ஒடுக்கி அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட (?) இந்தியாவோடு தற்காலிகமாக காசுமீர் இணைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற 565 சமஸ்தானங்களில் மூன்றைத்தவிர அனைத்தும் இந்தியாவோடு இணைந்து கொண்டதை நாம் முன்பே பார்த்தோம். அவை எவையும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் இணைந்து கொண்டது. ஆனால் அரிசிங்கோ ‘காசுமீரை தற்காலிகமாக இணைப்பதாகவும், மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்புதான் நிலையான இணைப்பு ஏற்படுத்தப்படும்’ என்று நிபந்தனையுடன் இணைத்தார். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட இந்திய அரசாங்கம் இதுவரை அதை நடைமுறைப்படுத்தாமல் துரோகம் செய்து வருகிறது. அதன் காரணமாகத்தான் காசுமீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
காசுமீரும் இந்தியாவும்
காசுமீர் மன்னருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் இந்திய இராணுவம் காசுமீருக்குள் நுழைந்தது. அன்று நுழைந்த இராணுவம் இன்று வரை திரும்பவேயில்லை.
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்காக நுழைந்த இந்திய இராணுவம் தானே ஆக்கிரமிப்பாளனாக மாறிவிட்டதுதான் வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்.
தங்களிடம் ஒப்பந்தம் போட்ட அரிசிங்கிடம் மட்டும் இந்திய அரசு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்துவதாக சொல்லவில்லை, ஐ.நா.விடமும் போய் சொன்னது.
1947 டிசம்பர் 31ஆம் நாள் ஐ.நா. அவைக்கு இந்திய அரசாங்கம் எழுதிய கடிதத்தில் “படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்பு நிலை நிலை நாட்டப்பட்டவுடனே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் ª£கள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம், முடிவு செய்யப்படும்” என்ற தன் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது.
அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டவுடன் அங்கு ஒரு பொதுவாக்கெடுப்பு நடக்கும். அந்த வாக்கெடுப்பில் ‘காசுமீர் இந்தியாவுடன் இணைந்து கொள்வதா அல்லது பாகிசுதானுடன் இணைந்து கொள்வதா அல்லது சுதந்திர நாடாக பிரிந்து விடுவதா’ என்று வாக்கெடுக்கப்பட்டு மக்களின் கருத்து அறியப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதே. அதை இந்திய அரசாங்கம் குறிப்பாக நேரு பலமுறை மன்னரிடமும், பாகிசுதானிடமும், ஐ.நா.விடமும் உறுதியளித்திருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு 1947 அக்டோபர் 27ஆம் நாள் நேரு அனுப்பிய தந்தியில் “இந்த நெருக்கடியான நிலையில் காசுமீருக்கு உதவுவது எந்த வகையிலும் காசுமீரை இந்தியாவுடன் இணைக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தகராறுக்குட்பட்ட ஒரு நிலப்பகுதி அல்லது மாநிலத்தை இணைப்பது என்ற கேள்வி அம்மக்களின் விருப்பப்படிதான் முடிவு செய்யப்படவேண்டும் என்ற கருத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாக வெளியிட்டு வருகிறோம். அத்துடன் இக்கருத்தையே பின்பற்றி வருகிறோம்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் அக்டோபர் 31இல் அனுப்பிய தந்தியில் “காசுமீரில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பிறகு இணைப்பு குறித்து காஷ்மீர் மக்கள் முடிவு செய்வர் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இணைப்பு ஏற்கப்பட்டது. எந்த அரசுடன் (இந்தியா அல்லது பாகிசுதான்) இணைவது என்பது அவர்களைப் பொருத்தது” என்று குறிப்பிட்டார்.
1947 நவம்பர் 21 நாளிட்டு பாகிசுதான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட உடனேயே பொது வாக்கெடுப்பு வழியாகவோ அல்லது பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு வழியாகவோ ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இணைப்பு குறித்து காசுமீர் (அரசு) முடிவெடுக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று நேரு குறிப்பிடுகிறார்.
இதையே 1947 நவம்பர் 3ஆம் நாள் அகில இந்திய வானொலி மூலம் “காசுமீர் தலைவிதி இறுதியாக காசுமீர் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்துகிறோம். காசுமீர் மக்களுக்கும் உலகிற்கும் இந்த உறுதிமொழியை மட்டுமே நாங்கள் வழங்கவில்லை. இதிலிருந்து பின்வாங்க மாட்டோம். பின் வாங்க முடியாது என்றும் அறிவிக்கிறோம்” என இந்திய மக்களுக்கு நேரு அறிவித்தார்.
1948 மார்ச் 5ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் நேரு அவரது அறிக்கையில் “பொதுவாக்கெடுப்பிலோ அல்லது பிரதிநிதித்துவ வாக்கெடுப்பிலோ பிரகடனப்படுத்தப்படும் காசுமீர் மக்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படுவோம் என்பதை இணைப்பு நடந்த நேரத்தில் கூட ஒரு தலைப்பட்சமாக சிறப்பு முயற்சி எடுத்து நாங்கள் அறிவித்தோம். மேலும், காசுமீர் அரசு உடனே ஒரு மக்கள் அரசாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். நாங்கள் அப்போதும் இப்போதும் இந்த நிலைப்பாட்டையே பின்பற்றுகிறோம். எல்லா வகையிலும் பாதுகாப்புடன் கூடிய நியாயமான பொதுவாக்கெடுப்புக்கும் காசுமீர் மக்களின் விருப்பப்படியான முடிவுக்குக் கட்டுப்படவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
இதை ஐ.நா. வுக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டார். 1951 செப்டம்பர் 11 ஆம் நாளிட்ட கடிதத்தில் “இந்தியாவுடனான ஜம்மு-காசுமீர் அரசின் இணைப்பு தொடரப்படுவது குறித்த கேள்வி ஐ.நா. அவையின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான, நடுநிலையான பொதுவாக்கெடுப்பு என்ற ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஏற்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவது மட்டுமல்ல, அத்தகைய பொதுவாக்கெடுப்புக்குத் தேவையான சூழ்நிலையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உருவாக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளது” என்று எழுதினார்.
-இவ்வளவு வாக்குறுதிகளையும் கொடுத்த இந்திய அரசாங்கம் இதில் எதையாவது எள்ளளவும் நிறைவேற்றியுள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவையெல்லாம் ஐ.நா.விலும் முன்மொழிந்து தீர்மானமாகவும் இயற்றப்பட்டது.
1948 ஏப்ரல் 22ஆம் நாள் ஐ.நா.வில் “ஜம்மு-காசுமீர் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற பிரச்சினையை சுதந்திரமான பாகுபாடற்ற நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்புவது ஒரு நிறைவு தரும் விசயம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காசுமீரத்தில் எப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற வழிவகை குறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது 1949 சனவரி 5ஆம் தேதியன்று “இரு நாட்டுப் படைகளையும் பயன்படுத்திக் கொள்வது குறித்த அதிகாரம் நேரடி வாக்கெடுப்பைக் கண்காணிக்கும் தேர்தல் அதிகாரியிடத்தில் இருக்கும். ஆகவே நேரடி வாக்கெடுப்பை நடத்துவதில் கண்காணிப்பாளருக்கு உள்ளுர் நிர்வாகம் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும்” என்று தீர்மானம் கூறியது.
இப்படியாக வாக்கெடுப்பு நடத்துவது குறித்து மீண்டும் மீண்டும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன.
எந்த மன்றத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துவோம் என இந்திய அரசு உறுதியளித்திருந்ததோ அதே ஐ.நா. மன்றத்தில் 1964ஆம் ஆண்டு ஐ.நா. அவையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவின் பிரதிநிதி ஹரிம் சஜியா அவர்கள் “எந்தச் சூழ்நிலையிலும் காசுமீரில் வாக்கெடுப்பு நடத்த நாங்கள்
ஒப்புக் கொள்ள மாட்டோம் என்பதை எனது அரசாங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அறிவித்து காசுமீர் மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
இணைப்பிற்கு பின் இந்தியாவின் துரோகம் :
காசுமீர் தற்காலிகமாய இணைக்கப்பட்டவுடன் காசுமீருக்கென சிறப்புச் சட்டம் 370ஆவது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. அச்சட்டப்பிரிவின்படி காசுமீர் தன்னாட்சியின்படி இயங்கும். பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளியுறவு இந்த மூன்றில் மட்டும்தான் இந்திய அரசு தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்தும். காசுமீர் மாநிலம் தனக்கென ஒரு அரசியல் நிர்ணய அவையைத் தேர்ந்ªடுத்து தங்களுக்கென ஒரு அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இதனையொட்டி பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியாக நேருவும் அப்துல்லாவும் தில்லியில் 24.07.1952இல் ஒரு ஒப்பந்தத்தை (தில்லி ஒப்பந்தம்) உருவாக்கிக் கொண்டனர். அவ்வொப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவுக்கு இணக்கமாக ஜம்மு-காசுமீர் தனது அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜம்மு-காசுமீரை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதி ‘பிரதமர்’ என்று பொருள் தரும் வசீர்-இ-ஆசம் எனக் குறிப்பிடப்படுவார். காசுமீருக்கு என ஒரு தனி ‘ஜனாதிபதி’ தகுதியுள்ள நிர்வாகத்தலைவர் சதர்-இ-ரியாசத் எனக்குறிப்பிடப்படுவார். அவரை ஜம்மு காசுமீர் சட்டமன்றமே தேர்ந்தெடுக்கும்.
குடியரசுத்தலைவர் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் ஆளுநர்களை நியமிப்பதுபோல இம்மாநிலத்திற்கு நியமிக்க முடியாது. ஜம்மு-காசுமீர் சட்டமன்றமே ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும்.
குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுத்துத் தரும் 356ஆவது சட்டப்பிரிவு இம்மாநிலத்திற்குப் பொருந்தாது, காசுமீருக்கு என தனிக்கொடி உண்டு, இந்திய ஆட்சியாளர் பணி உள்ளிட்ட நடுவண் அரசு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டார்கள் என காசுமீருக்கென தனிச்சலுகை வழங்கி இந்திய அரசு காசுமீரைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றது.
இப்படியெல்லாம் தில்லி ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு இந்திய அரசு பெருந்த¬டையகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.
தனக்கென ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை ஷேக் அப்துல்லா தலைமையில் உருவாக்குவதற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாகவே ஷேக் அப்துலா சிறையிலடைக்கப்பட்டார். நேரு தனக்குச் சாதகமான பொம்மை அரசை நிறுவி இந்தியாவுக்குச் சாதகமாக அரசியல் சட்டம் இயற்றும்படி செய்தார்.
1956 நவம்பர் 17இல் ஜம்மு.காசுமீர் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. “ஜம்மு-காசுமீர் மாநிலம் இனி முதற்கொண்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும்” என அச்சட்டம் வரையறுத்தது.
‘பொதுவாக்கெடுப்பு காசுமீரில் நடத்தப்படும்’ என்று ஐ.நா.வில் சொல்லிக் கொண்டே இங்கு அதற்கு நேர்மாறாக “காசுமீர் இந்தியாவின் ஒரு மாநிலம்” என்று அறிவித்தது இந்தியா. இதைவிட இரட்டை நாக்கு யாருக்காவது இருக்க முடியுமா?
சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியை உடைத்து பக்சி குலாம் முகமது தலைமையில் இந்திய அரசுக்கு ஆதரவான இணைப்பு ஆதரவு தேசிய மாநாட்டுக் கட்சியை உருவாக்கும் சூழ்ச்சியில் இந்திய அரசு வெற்றி பெற்றது.
பக்சி கலாம் முகமதுவை காசுமீரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்க வைத்தது. அவரை ஆட்சிப்பொறுப்பில் வைத்துக்கொண்டே இந்திய அரசு காசுமீரின் சிறப்புத் தகுதிகளைக் குறைத்துக் கொண்டே வந்தது.
1958இல் குடியரசுத்தலைவரின் உத்தரவு மூலமாக இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்), இந்திய காவல்துறைப்பணி (ஐ.பி.எஸ்), ஏனைய நடுவண்துறைப்பணிகள் அனைத்து ஜம்மு-காசுமீருக்கு விரிவுபடுத்தப்பட்டன.
1964க்குப்பிறகு மேலும் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அரசுத்தலைவர் சதர்-இ-ரியாகத் என்று அழைக்கப்படாமல் ஆளுநர் என்று அழைக்கப்பட்டார். அவரை மாநில சட்டசபை தேர்ந்தெடுக்காது. மாறாக, குடியரசுத்தலைவர் அவரை நியமிப்பார் மாநில பிரதம மந்திரி இனிமேல் முதல்வர் என்றே அழைக்கப்படுவார். குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுத்துத் தரும் 356 சட்டப்பிரிவு இனிமேல் காசுமீருக்கும் பொருந்தும் - இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக காசுமீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் அனைத்தையும் இந்திய அரசு பறித்துவிட்டது.
காசுமீர் - இந்துத்துவம் - பா.ஜ.க.
காசுமீரில் பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்களாக இருந்தபோதிலும் டோக்ரா இந்து மன்னன் அரிசிங்கே ஆட்சி புரிந்து வந்தான்.
பெரும்பாலான அரசு அதிகாரிகளாக காசுமீரத்துப் பண்டிதர்களே இருந்து வந்தார்கள். எல்லா அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொண்ட பண்டிதர்கள் தங்களுக்கென 1930களின் தொடக்கத்தில் ‘காசுமீர் பண்டிதர்கள் மாநாட்டுக் கட்சி’ ஒன்றைத் தொடங்கினர். ஜம்முவில் ‘இந்து சபா’ என்கிற அமைப்பையும் தொடங்கி மன்னருக்கு ஆதரவாக இயங்கத் தொடங்கின. இதற்குப் பிறகுதான் இசுலாமியக் கட்சிகளே தோற்றம் பெற்றன.
பால்ராஜ் மதோக் என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் 1947-ல் ஜம்மு-பிரஜாபரிசத்தை தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு “சட்டப்பிரிவு 370க்கு எதிராகவும், நேரடி வாக்கெடுப்புக்கு எதிராகவும்” மிகவும் தீவிரமாகப் போராடத் தொடங்கியது.
பிரஜா பரிசத்தின் போராட்டத்தை இந்தியா முழுவதும் பரப்புரை செய்தவர் ஜனசங்கத்தின் தலைவரான சியாம் பிரசாத் முகர்ஜி. இந்த சியாம் பிரசாத் முகர்ஜி தலைமையில் ஜனசங்கம், இந்து மகாசபை, ராம்ராஜ் பரிசத், பிரஜா பரிசத் ஆகிய இந்துத்துவ அமைப்புகள் ஒன்று திரண்டு 1951க்குப் பிறகு மிகப் பெரும் கலவரங்களை காசுமீரில் உருவாக்கின.
“ஜம்மு-காசுமீரை இதர மாநிலங்களைப் போல் முழுமையாக இந்தியாவுடன் இணைத்துவிட வேண்டும். சிறப்புப் பிரிவான 370ஆவது பிரிவை திரும்பப் பெற வேண்டும், ‘ஏக் விதான், ஏக் நிஷான், ஏக் பிரதான்’, ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொடி” என்ற கோரிக்கைகளை முன் வைத்து கலவரங்களைத் தூண்டினர்.
1953 பிப்ரவரியில் ‘காசுமீர் சலோ’ காசுமீரை நோக்கிச் செல்லுங்கள்’ என்ற போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். இப்படி தொடர்ச்சியாக இந்துத்துவ வெறியர்களால் காசுமீரில் மதவெறி தூண்டிவிடப்பட்டது. அதன் எதிர்விளைவாக இசுலாமியர்கள் பண்டிதர்களைத் தாக்கத் தொடங்கினர். ஏழை இந்துக்களை அவர்கள் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
இப்படியாக இந்துத்துவ அமைப்புகள் செய்து வந்த வெறியாட்டத்தின் விளைவாக காசுமீரின் சிறப்புச் சட்டங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு இந்திய நீரோட்டத்தில் கலந்து போக வைக்கப்பட்டன. இந்துத்துவ அமைப்புகள் செய்து வந்த வேலையை 1984இல் ஜம்மு-காசுமீர் ஆளுநராக ஜக்மோகனை நியமித்து இந்திய அரசே நேரடியாகச் செய்யத் தொடங்கியது.
ஜக்மோகன் காசுமீரின் ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் முதல் வேளையாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வந்த அனைத்து இசுலாமியர்களையும் பணியிலிருந்து வெளியேற்றினார். இசுலாமியர்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டு அளவைப் பாதியாகக் குறைத்தார். காசுமீரில் கடுமையான இசுலாமிய மத ஒடுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து இசுலாமிய - இந்து மத வெறியை நிரந்தரமாக்கிவிட்டு வெளியேறினார். அவர் ஆளுநராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் காசுமீரில் ஆயுதந்தாங்கிய பேராளிக்குழுக்கள் உருவாகின. அதற்கு முன்பாக காசுமீரில் மக்கள் ஜனநாயகம் வழிப்பட்ட போராட்டங்களையே நடத்தி வந்தனர்.
1990களில் பா.ச.க.வின். ஆதரவோடு ஆட்சியிலிருந்த சனதா தளம் பா.ச.க.வின் அழுத்தத்தால் மீண்டும் ஜக்மோகனை ஆளுநராக நியமித்தது. தான் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இராணுவத்தைக் கொண்டு மக்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யத் தொடங்கினார். இராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச்சட்டத்தை பிறப்பித்தார். இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இந்துத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக காசுமீரை ஆக்கிரமித்து இன்று பா.ச.க. ஆதரவோடு மக்கள் ஜனநாயகக்கட்சி ஆட்சியிலிருக்கிறது. இங்கு தனித்துதான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. திட்டமிட்டு மதக்கலவரங்களை காசுமீரில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற கொஞ்சநாளில் அக்கட்சியின் அமைச்சரே காசுமீருக்கான 370ஆவது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளா£ர். மேலும் காசுமீரில் பண்டிட்டுகளுக்கென (பார்ப்பனர்கள்) தனிக்குடியிருப்புகள் அமைத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில்தான் பண்டிதர்களைத் தனிமைப்படுத்தி பாதுகாப்பது சனநாயக விரோதமானது என்று கருத்து கூறிய புர்கான் வணி திட்டமிட்டு கடந்த மாதம் 8ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ‘தீவிரவாதி’ என்று மோடி அரசாங்கம் சொன்னாலும் புர்கான் வாணியின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமலேயே மக்கள் குவிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு காசுமீர் பண்டிட்டுகளின் மீள் குடியேற்றத்துக்காக காசுமீரில் தனிநகரம் உருவாக்க நிலம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைக் கண்டித்து காசுமீர் மக்கள் கொதித்தெழுந்தனர். அப்போது அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறி மக்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்தவர்தான் இன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி என்று அரசாங்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் வானி.
அமர்நாத் யாத்திரை நடைபெறும் காலகட்டத்தில் இப்படியான பச்சைப்படுகொலை செய்வதன் மூலம் காசுமீர் மக்களை வெறுப்பேற்றி இந்துக்களுக்கு எதிராக அவர்களைக் களமிறக்க வைப்பது, இதன் மூலம் காசுமீரிகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பது என்கிற திட்டத்தை மனதில் வைத்தே புர்கான் வானி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புர்கான் வானியின் படுகொலையைத் தொடர்ந்து காசுமீரின் காவல்துறை, இந்திய இராணுவத்திற்கெதிரான போராட்டங்களில் மக்கள் ஈடுபடத் தொடங்கினர். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய இராணுவம் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நாள் வரை ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பெல்லட் என்னும் துப்பாக்கியைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது சுடுவதால் நூற்றுக்கணக்கான உலோக உருளைகள் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. சாவை விட கொடுமையான வேதனையை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
காசுமீர் போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்
காசுமீரில் நடைபெறுகிற போராட்டம் இசுலாமியர்களின் போராட்டமல்ல, மாறாக அது காசுமீரிகளின் போராட்டம்.
காசுமீரிகள் என்றைக்குமே தங்களை இசுலாமியர்களாக எண்ணிக் கொண்டு காசுமீர் விடுதலையைப் பேசியதில்லை. காசுமீரிகளாக இருந்து கொண்டேதான் காசுமீர் விடுதலையைப் பேசி வருகிறார்கள்.
1932இல் தொடங்கப்பட்ட ஜம்மு-காசுமீர் முசுலீம் மாநாட்டுக் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய சேக் அப்துல்லா “காசுமீர் இயக்கம் என்பது ஒரு வகுப்புவாத இயக்கமல்ல, மாறாக அனைத்துப் பிரிவு மக்களும் தங்கள் மனக்குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு பொதுத்தளமாகும் என நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம். நமது தேச மக்களான இந்துச் சகோதரர்களுக்கும் சீக்கிய சகோதரர்களுக்கும் உதவி செய்ய நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கிறோம். நாம் நட்புறவோடு வாழ முடியவில்லை என்றால் நம்மால் எந்த முன்னேற்றத்தையும் அடைய இயலாது” என தெளிவுபட முன் வைத்தார்.
1939இல் அக்கட்சி ‘தேசிய மாநாட்டுக் கட்சியாக’ உருவெடுத்து இசுலாமிய அடையாளங்களை தவிர்த்தது.
1946இல் அரச வம்சத்திற்கு எதிராக “காசுமீரை விட்டு வெளியேறு” என்ற இயக்கத்தை தொடங்கியது. மன்னராட்சியை வீழ்த்திவிட்டு மக்களால் ‘சுதந்திர காசுமீர்’ அமைப்பதை நோக்கமாக பிரகடனப்படுத்தியது.
1947 அக்டோபர் மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சேக் அப்துல்லா “அனைத்து சமூகங்களின் கூட்டு ஆட்சியே காசுமீரில் நடைபெறும் அனைத்து அதிகாரங்களும் காசுமீரின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதேத முதல் கோரிக்கையாகும்” என்று பேசினார். மேலும் ‘இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பதை சனநாயகக் காசுமீரின் மக்கள் பிரதிநிதகளே முடிவு செய்வர்’ என்று பேசினார்.
இசுலாமியர்கள் முடிவு செய்வார்கள் என்று சேக் அப்துல்லா பேசவில்லை ‘காசுமீரிகள்’ முடிவு செய்வார்கள் என்றுதான் பேசினார். ஆனால் இந்திய அரசோ அவர்களை இசுலாமியர்களாகப் பார்க்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிடம் உள்ள மக்களிடம் அவர்களை இசுலாமியர்களாகப் பார்க்கத் தூண்டுகிறது. காசுமீர் இந்தியாவின் சொத்து போலவும், இந்தச் சொத்தை இசுலாமியர்களும், பாகிஸ்தானும் ஆக்கிரமிக்க முயல்வது போலவும் ஒரு இந்துத்துவ உளவியலை உருவாக்குகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை நாம் உறுதியாகச் சொல்வோம். அது காசுமீரிகளின் விடுதலைப்போராட்டம் என்று.
இந்தியா என்பதே தேசிய இனங்களின் சிறைக்கூடாரம். அதனால்தான் தேசிய இனங்களின் விடுதலையை அது கடுமையாக ஒடுக்குகிறது. காசுமீரில் மட்டும் 7 இலட்சம் இராணுவத்தினரை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் ஜம்மு-காசுமீர் கலகப்பகுதி சட்டம் என்ற இரண்டு சட்டங்களை வைத்துக் கொண்டு இராணுவ ஆட்சியை இந்திய அரசு நடத்தி வருகிறது.
இந்தச் சட்டங்கள் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயலைச் செய்யும் எந்த நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கும், சட்டத்தை மீறும் நபரை அல்லது சட்டத்தை மீறலாம் என்று சந்தேகப்படும் நபரை இராணுவம் சுட்டுக் கொல்ல, யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற பிடியாணை இல்லாமல் கைது செய்ய, யாருடைய வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனை செய்ய இராணுவத்திற்கும் அனுமதியளிக்கிறது.
இந்த இரண்டு சட்டங்களையும் கையில் வைத்துக் கொண்டு இந்திய இராணுவம் - காசுமீர் காவல்துறையும் வெறியாட்டம் போடுகின்றன.
ஆள்கடத்தல், சாலையோரக் கடைகள் தொடங்கி அத்தனை நிறுவனங்களிடமும் மிரட்டிப் பணம் பறித்தல், கொலை செய்தல், வன்புணர்ச்சி செய்தல் என அத்தனை கிரிமினல் வேலைகளையும் இராணுவமும் காவல்துறையும் செய்து வருகின்றன.
போலி மோதலில் போராளிகளை படுகொலை செய்பவர்களுக்கு பரிசுத்தொகையாக இந்திய அரசு பல இலட்ச ரூபாய்களை அள்ளிக் கொடுத்து கொலைகளை ஊக்குவிக்கிறது. இப்படித்தான் வடகிழக்கு மாநிலங்களில் போராடும் போராளிகளையும் இந்த அரசு நயவஞ்சகமாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பச்சைப்படுகொலை செய்து வருகிறது.
இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு கொள்கைக்கு காசுமீர் பனிமலையை இந்திய அரசு எரித்துக் கொண்டிருக்கிறது.
காசுமீர் விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு எக்காரணம் கொண்டும் ஆதரிக்காது. மேலும் மேலும் ஒடுக்கவே செய்யும். ஏனெனில் காசுமீர் விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கிப் பயணித்தால் அது இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் அது உத்வேகத்தை அளிக்கும்.
இரண்டாவதாக காசுமீரில் சுற்றுலாத்துறை உள்ளிட்டு தொழில்துறை மூலமாக இந்திய அரசும், இந்தியத்தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகின்றனர்.
மூன்றாவது அமர்நாத் கோவில் உள்ளிட்ட கோவில்கள் மூலமாக இந்துப்பண்பாடு இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது. எனவே காசுமீரத்தை இந்தியா இழக்க விரும்பாது. அதனால் மேலும் மேலும் ஒடுக்கவே செய்யும்.
காசுமீர் காசுமீரிகளுக்கே என்று முழங்கும் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகறார்களோ அப்படித்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று நாம் முழங்கும் போதும் ஒடுக்கப்படுவோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி அதை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்.
எனவே, ஒடுக்கப்படும் காசுமீர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை. இந்திய அரசால் ஒடுக்கப்படும் அனைத்து தேசியஇனங்களும் தங்களுக்குள் கைகோர்த்துக் கொண்டு இந்திய அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும். காசுமீர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெருங்கடமை.
இந்திய அரசே! காசுமீரில் பொது வாக்கெடுப்பு நடத்து, இராணுவச் சட்டங்களையும்,இராணுவத்தையும் திரும்பப்பெறு, என்று முழங்குவோம். காசுமீர் மக்களுக்கு துணை நிற்போம்.
- க.இரா.தமிழரசன்