குடும்பம்

தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கருணாநிதி பதவி வழங்குவார் என்று வைகோ குற்றம் சாற்றுகின்றார். மூன்று முறை, 18 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வைகோவைத் தி.மு.கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியதே, வைகோ என்ன கலைஞர் குடும்ப உறுப்பினரா?

கொள்கை

seeman 340மற்ற கூட்டணிகளுக்கெல்லாம் கொள்கை இல்லை. மக்கள் நலக் கூட்டணிதான் குறைந்த பட்ச செயல் திட்டத்தோடு கூட்டணி அமைத்துள்ளது என்று ஒரு கருத்து பரப்பப்படுகின்றது. உண்மைதான். தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் இங்கு தொகுதி உடபாடுதான் கொண்டுள்ளன. கொள்கை வழிப்பட்ட கூட்டணி என்று கூறமுடியாது. போகட்டும். கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே ஈழச் சிக்கல், கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியனவற்றில் உள்ள பொதுவான கொள்கை என்ன? முல்லைப் பெரியாறு சிக்கலில், வைகோவும், ஜி. ராமகிருஷ்ணனும் இனி இணைந்து நின்று போராடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

முற்போக்கு

தலைமை அனுமதித்தால்,  மேற்கு வங்கத்தில், காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருப்பதாக, மேற்கு வாங்க இடது சாரிகளின் சார்பாக பிமன் போஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி  பிற்போக்கு, மேற்கு வங்கத்தில் மட்டும் முற்போக்கா தோழர்களே?

அடேயப்பா...!

கடலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓர் அரிய  செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் (?!?), சென்னை கணினிக்காகவும், மதுரை பழம் பண்பாட்டிற்காகவும், கோவை தொழில் வளர்ச்சிக்காகவும், திருச்சி நிர்வாகத்திற்காகவும், கன்னியாகுமரி தொல்லியல் நோக்கிலும் தலைநகரங்கள் ஆக்கப்படுமாம்.  அடேயப்பா.. அவர்கள் ஆட்சியில், .நாடு வளர்கிறதோ இல்லையோ, தலைநகரங்கள் வளர்ந்துவிடும் போலிருக்கிறது!

===

சீமான்: நான் ஆட்சிக்கு வந்தால் சிங்களர்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது.

“நீங்க போடுற சத்தத்துல எங்களாலயே இங்க தூங்க முடியலையே!”

கூட்டணி

ஜி.கே.வாசன்:  வெற்றி பெறும் கட்சியோடுதான் நாங்கள் கூட்டணி.

“கொஞ்சம் பொறுத்தீகன்னா, தேர்தல் முடிஞ்சிடும். குழப்பம் இல்லாம முடிவு எடுக்கலாம்.”

Pin It