காங்கிரஸ் என்னும் பதத்திற்கு கூட்டம் என்பது பொருள். நமது நாட்டில் இது அரசியல் சம்பந்தமான கூட்டமென்பதற்கே குறிக்கப்படுகிறது. அரசியல் என்பதற்கு பொருள் அரசாட்சி, ராஜரீக முறை என்று இருந்தாலும் அது அரசாங்கத்துடன் ராஜரீக முறை விஷயமாய் செய்யும் கிளர்ச்சி என்பதற்கே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும் நமது நாட்டு வார்த்தையும் தத்துவமும் அல்ல. அது மேல் நாடுகளில் பாமர மக்களின் பேரில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற விஷயமாய் ஏற்படும் கிளர்ச்சிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதே அல்லாமல், இங்கே சொல்லிக் கொள்ளப்படுகிற சுயராஜ்யம், சுதந்திரம் என்கிற போலி வார்த்தைகளுக்கும் அதன் தத்துவத்திற்கும் ஏற்பட்டதல்ல. மேல் நாடுகளில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கு சரியான பொருளே ஒரு தேசம் அனேகமாய் அரசன் என்பவனால் ஆளப்படாமல், அந்தந்த நாட்டு மக்களாலேயே நிர்வகிக்கப்படுவது.

mr radha and periyarநமது நாட்டில் முதல் முதல் அதாவது காங்கிரஸ் ஆரம்பித்த காலத்தில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கே இன்ன பொருள் என்று கூட தெரியாததுமாய், நினைக்காததுமாய் படித்தவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு சிலர், பாமர மக்களின் மேல் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற கொள்கையைக் கொண்ட அரசியலையே குறியாக வைத்து மேல் நாட்டு முறைப்படி காங்கிரஸ் என்பதாக ஒரு கூட்டம் கூட்டி அரசாங்கத்தின் தயவை எதிர்பார்த்து அரசாங்கத்தார் செலுத்தும் ஆதிக்கத்தில் தங்களுக்கும் ஏதாவது ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று கெஞ்சி வந்தார்கள். அரசாங்கத்தாரும் இது தங்களது ஆதிக்கம் இன்னமும் பலப்படுவதற்கு புதிதாக மேல் கொண்டு தங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது, அதாவது யார் பேரில் தங்கள் ஆதிக் கத்தை செலுத்தி யாருடைய செல்வத்தை கொள்ளை கொண்டு வாழ வேண்டுமோ அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களே தங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்தால் தாங்களும் அவ்வாதிக்கத்திற்கும் அக்கொள்ளைக்கும் உளவாக இருந்து உதவி செய்வதாய் சொல்லுவது எவ்வளவோ அனுகூலம் என்பதாகக் கருதி, அவர்களும் இந்த மாதிரி காங்கிரசையும், அரசியல் கிளர்ச்சியையும் மதித்தது போல் நடித்து தங்கள் ஆதிக்கத்திலும் தங்களது அனுபவத்திலும் கொள்ளையிலும் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் தங்களுக்கு மேலும் மேலும் பலமும் ஆதரவும் உண்டாக்கிக் கொள்ள பாமர மக்களின் மேல் புதிய ஆதிக்கங்களையும் புதிய அநுபவங்களையும் ஏற்படுத்தி அதில் ஒரு பங்கு இவர்களுக்கும் கொடுத்து வந்தார்கள்.

சிறியதாய் இருந்த இக்கூட்டம் நாளுக்கு நாள் பெருக நமது நாட்டு படித்த மக்களின் கூட்டம் என்பதும் இம்மாதிரி நமது பாமர மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவது என்கிற பேரால் அரசாங்கத்திற்கு உள் உளவாயிருந்து வாழ்வதே தங்களது வாழ்க்கைக்கு உரிய சாதனமென்றும், அதைத் தவிர வேறு பிழைக்கும் வழி இல்லை என்றும் தீர்மானித்துக் கொண்டபடியால் இக்கூட்டம் நாளுக்கு நாள் வலுக்கவும் ஒருவருக்கு ஒருவர் காங்கிரஸ், சுயராஜ்யம், உரிமை, தேசியம், சர்க்காரோடு சண்டை என்கிற போலி வார்த்தைகளின் பெயர்களால் போட்டி ஏற்பட்டு, அது பலமான போட்டியாகவும் செல்வாக்கு பெற்ற போட்டியாகவுமே மாறி அப்போட்டிக்கு தயாராவதே மக்களின் படிப்பு என்றும் ஏற்பட்டு, பிழைப்பு வேண்டிய மக்கள் இப்போட்டியில் ஈடுபடக் கருதி படிப்பு என்பதன் மூலமாய் தயாராவதே நோக்கமாய் போய் விட்டது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு திருப்தி அளிக்க வேண்டியதற்கு எவ்வளவு தூரம் நமது மக்களை ஏமாற்ற தேசத்தைக் காட்டிக் கொடுத்தும், மக்களுக்குத் துரோகம் செய்தும் அரசாங்கத்திற்கு திருப்தி அளிக்கவேண்டுமோ, அவ்வளவு தூரம் துரோகம் செய்யவும் அதற்காக ஏமாற்றவும் போட்டி போட வேண்டி வந்து விட்டது. அதன் பயனால் நமது நாடு நாளுக்கு நாள் அன்னிய ஆதிக்கத் தன்மையும், செல்வம் கொள்ளை போகும் தன்மையும் பலப்பட்டு வருவதோடு, தேசத்திற்கும் மக்களுக்கும் காங்கிரஸ் இல்லாத காலத்தில் இல்லாததான பல இடைஞ்சல்களும், இன்னல்களும் ஏற்பட்டு வருகிறது.

உதாரணமாக காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்கு இருந்த வரிகளை விட இப்போது ஒன்றுக்கு நான்கு பங்கு வரிகளும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்குள் இருந்த மதுபான அளவை விட ஒன்றுக்கு பதினாறு பங்கு மதுவருந்துவதும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்குள் இருந்த விவகாரங்களை விட ஒன்றுக்கு 2 பங்கும் விவகாரங்களும் கோர்ட்டுகளும் வளர்வதும் , காங்கிரஸ் இல்லாத காலத்தில் இல்லாத அடக்குமுறைகள் எல்லாம் ஒன்றுக்கு 10 ஆக ஏற்படுத்தவும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் இருந்த சுதந்திரங்கள் எல்லாம் பறிபோய்க் கொண்டிருப்பதும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்குள் இருந்த ஒற்றுமையும், நாணயமும், ஒழுக்கங்களும் அடியோடு மறைந்து அதற்கு விரோதமாக விரோதங்களும், நாணயக் குறைவுகளும், ஒழுக்கக் கேடுகளும் வளர்ந்து வருவதும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் இருந்த யோக்கியதைக்கும், யோக்கியர்களுக்கும், பணக்காரருக்கும், சாதுக்களுக்கும், பார்ப்பனரல்லாத மக்களுக்கும் இருந்து வந்த மதிப்பெல்லாம் போய், அயோக்கியத்தனத்திற்கும், அயோக்கியர்களுக்கும், சுயநலக்காரருக்கும், துரோகிகளுக்கும், வஞ்சகர்களுக்கும், சூக்ஷிக்காரர்களுக்கும் மதிப்பு ஏற்படவுமாய் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது.

தேசத்திற்கும், மக்களுக்கும் இவ்வளவு துரோகமும், கொடுமையும் செய்ததற்கு ஆதாரமான காங்கிரஸ் அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் நமது படித்த கூட்டத்தார்கள் செய்து வந்ததற்கு நமது அரசாங்கத்தார் அவர்களுக்குக் கொடுத்து வந்த கூலிதான் இப்போது பெரும்பான்மையாய் நமது பார்ப்பனர்கள் அனுபவிக்கும் உத்தியோகம், ஆதிக்கம், போகம், போக்கியங்கள் முதலியதுகளே அல்லாமல் மற்றபடி வேறுவிதமாய் இவர்களுக்கு கிடைக்க எந்த விதத்திலும் மார்க்கமில்லை என்பது சரித்திரப்பூர்வமாயும் அனுபவப்பூர்வமாயும் யாவரும் அறிந்ததேதான். இதில் ஒன்றும் ரகசியமும் இல்லை. அரசியல் என்பது இக் கொள்கைகளைக் கொண்டதுதானே அல்லாமல் வேறில்லை என்பதற்கு ஆதாரமாக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொல்லி இருப்பது என்னவென்றால் “அரசியல் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும், அயோக்கியர்கள் தங்களுக்கு வேறு எந்த அயோக்கியத்தனமான வழிகளிலும் பிழைக்க மார்க்கமில்லை என்று கண்டு தங்களது பிழைப்புக்கு கடைசி அயோக்கியத்தனமான பிழைப்பு மார்க்கம் அதாவது இனி இதைத் தவிர வேறு மார்க்கத்தில் பிழைக்க முடியாது என்பதாகக் கருதி ஏற்படுத்திக் கொண்டதான பிழைப்புக்குத்தான் அரசியல், அரசியல் கிளர்ச்சி, என்று சொல்லுவது” என்பதாக சொல்லியிருக்கிறார்.

நாம் முன் சொல்லி வந்தவைகளுக்கும் மேல் நாட்டு அறிஞர் சொல்லியிருப்பதற்கும் தற்கால அரசியல் வாழ்வுகளையும் கிளர்ச்சிகளையும் கவனித்து வருகிற அறிவாளிகளுக்கு நாம் ஆதாரங்கள் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. பாமர மக்களுக்கு தெரிய வேண்டுமானால், நாம் சுருக்கமாக ஒரே வழியைச் சொல்லிவிடுகிறோம். அதாவது காங்கிரஸ் ஏற்பட்ட நாள் முதல் நாளது வரையில் அரசியல் கிளர்ச்சியில் கலந்து இருக்கிற தேசபக்தர்கள், தேசாபிமானிகள், அரசியல் சுதந்தரக்காரர்கள் என்கிற நபர்களை தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, முற்கால நிலை, தற்கால நிலை ஆகியவைகளைப் பற்றி குறிப்பு எடுத்து மிகப் பெரும்பான்மையாயிருக்கிறவர்களின் யோக்கியதையை கவனித்தால் வெகு சுலபத்தில் விளங்கிவிடும்.

அதோடு அரசியல் கக்ஷிகளை எடுத்து அதன் கொள்கைகள், முற்கால கொள்கைகள், தற்கால கொள்கைகள், அதன் தலைவர்கள், பின்பற்றுவோர்கள், பிரசாரகர்கள், தொண்டர்கள் என்பவைகளையும் கவனித்து குறித்து வைத்து அதில் பெரும்பாகம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் உடனே விளங்கிவிடும். அதிலும் சரியானபடி விளங்கவில்லை என்றால் பிரத்தியக்ஷப் பிரமாணமாகத் தெரியவேண்டுமானால் சுயராஜ்யக் கக்ஷி என்னும் ஒரு கக்ஷியின் தத்துவத்தையும், அதன் கொள்கைகளையும், தேசத்திற்கு ஏற்பட்ட நன்மைகளையும், தேச மக்களின் ஒற்றுமையையும், ஒழுக்கங்களையும் ஒழித்து வயிறு வளர்க்க அடிக்கடி மாறி மாறி எடுத்துவந்த அவதாரங்களையும், அதன் தலைவர்கள் முதல் வாலர்களையும் அதன் அபிமானிகளையும் அதற்காதரவளித்தவர்களையும் அவர்களின் யோக்கியதையையும் அறிந்து வைத்துப் பார்க்கிறவர்களுக்கு வெகு சுலபத்தில் விளங்கும். அதிலும் முழுதும் விளங்காதவர்களுக்கு சென்னை சட்டசபையில் தேசத்தின் பேரால் “கௌஹத்தி காங்கிரசின் கட்டளையை நிறைவேற்றி வைத்த” சுயராஜ்யக் கக்ஷி பான்மையையும் அதன் நடவடிக்கைகளையும் அவர்கள் சொல்லும் பதிலையும் பார்த்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் விளங்காமல் போகாது. யாரோ ஒருவர் இருவரின் நிலைமையை இதற்கு மாறுபட ஏற்பட்டாலும் அதனாலேயே இதன் முடிவு மாறுபட்டுவிடாது.

(குடி அரசு - தலையங்கம் - 03. 04. 1927) 

Pin It