இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் அடைந்த 53 நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் என்று அழைக்கப்படுகிறது. இக்காமன்வெல்த்தின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதன் உறுப்பு நாடு ஒன்றில் கூடி உலக அளவிலான அரசியல் நிலைமைகளை விவாதித்து முடிவுகள் எடுப்பது நடைமுறை.

இந்த அடிப்படையில், 2009 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு டிரினிடாட் அன்ட் டொபாகோத் தீவில் கூடியது. பின்னர், அடுத்த மாநாட்டை எங்கே நடத்துவது என்ற கேள்வி எழுந்த போது,  2011 ஆம் ஆண்டின் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்று அந்நாடு கேட்டது. உடனே இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கார்டன் பிரவுன் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கனடா, நியுசிலாந்து பிரதமர்களும் அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

rajapakseஇதற்குக் காரணம், விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாக உலகுக்குச் சொல்லிக் கொண்டு, ஈழத்தில் வாழும் அப்பாவிப் பொதுமக்களைக் குருவிகளைச் சுட்டுக் கொல்வது போல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசியும், ஏவுகணைகள் வீசியும், பீரங்கித் தாக்குதல்கள் மூலமாகவும் இலட்சக் கணக்காக கொன்று குவித்தது இலங்கைச் சிங்கள இனவாத அரசு.

போர் முடிவுற்ற பின்னரும் கூட, ஆடு மாடுகளைவிடக் கேவலமாக முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது ஈழ மக்களை. அங்கு உணவு இல்லை, சுகாதார வசதி இல்லை, மாற்றுடை கூட இல்லாமல் வாடிக்கிடந்த அந்த மக்கள் மீது நடந்தது கொடுமையான மனித உரிமை மீறல்கள்.

இதன் காரணமாக இலங்கை அரசு, குறிப்பாக அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரின் தம்பி கோத்தபய ராஜபக்சே, தளபதி சரத் பொன்சேகா போர்க் குற்றவாளிகளாக உலகின் முன் நிறுத்தப்பட்டார்கள். இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தால் இலங்கையின் மீது கொண்டு வரப்பட்ட கண்டணத் தீர்மானம் சீனாவின் பெரு முயற்சியால், இந்தியா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட சில நாடுகளின் துணையால் தோல்வியைத் தழுவின.

இருந்தும் கூட, தன் மீதுள்ள போர்க்குற்ற அவப் பெயரை உலக அளவில் சரிசெய்யும் முகமாக, காமன்வெல்த் மாநாட்டை 2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்திட முனைந்த ராஜபக்சே, இதற்காக இந்தியா உட்பட 45 நாடுகளின் ஆதரவைப் பெற்றார். அப்படி இருந்தும்கூட டிரினிடாட் மாநாட்டில், அடுத்துவரும் 2011 ஆம் ஆண்டு மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று முதல் எதிர்ப்புக் குரலை இங்கிலாந்து கொடுக்க, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகள் இங்கிலாந்தை ஆதரித்தன.

இன்னும் ஒருபடி மேலே சென்ற இங்கிலாந்து, 2011 ஆம் ஆண்டின் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற எதிர்ப்போடு நிற்காமல், அந்த மாநாட்டை இலங்கையை விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவில் நடத்த வலியுறுத்தி இருக் கிறது, இலங்கைக்கு ஒரு நிபந்தனை விதித்தது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் கூடும் முன்னர், உரிய காலத்துக்குள், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று இலங்கை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே இலங்கையில் மாநாடு, இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த்.

இந்த நிபந்தனையாலும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாமல் பறிபோய், ஆஸ்திரேலியாவில் நடக்கும் என இங்கிலாந்து வலியுறுத்தியதால் இலங்கை உலக அளவில் தரம் தாழ்ந்துவிட்டது. ராஜபக்சே உலக அரங்கில் தலை கவிழ்ந்து இதயமற்ற மனிதனாக காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார்.

இங்கே ஒரு செய்தியை மறந்து விடக்கூடாது. இலங்கை எப்பொழுதுமே நேர்மையுடன் நடந்துகொண்டது இ ல்லை. அதன் தலைவர்களும் இரட்டை வேடமிடும் நாடகதாரிகள் என்பதை  அவர்களின் கடந்த கால அணுகுமுறைகள் எடுத்துக்காட்டுகின்றன. சான்றாக ஒன்றைப் பார்ப்போம்.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தை அடுத்து உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் அன்றைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா. அந்தச் சந்திப்பின் போது அவருக்கு வந்த ஒரு தொலைபேசியை அடுத்து, அவர் செய்தியாளர்களிடம் சொல்கிறார், Indian PM was online என்று.

இதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ஜெயவர்தனா ‡ இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசி பற்றிய அறிக்கை ஒன்றை இலங்கை அதிபரின் அலரி மாளிகை வெளியிட் டது. அதன் விபரம் வருமாறு :

இந்திராகாந்தி : இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் எமக்கு ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்விகேட்டுத் துளைத்து எடுக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

ஜே.ஆர்: எனக்கும் மிகக் கவலையாகத் தான் மேடம் இருக்கிறது. வன்முறை களை அடக்க நானும் அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்திராகாந்தி : அதை நாங்கள் சந்தே கிக்கவில்லை. அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு மற்றும் அத்தியா வசியப் பொருள்கள் அனுப்பி உதவ முடியுமா என்று யோசிக்கிறேன்.

ஜே.ஆர். : உங்கள் அன்புக்கு நன்றி மேடம். அவசியம் என்றால் தெரிவிக்கிறேன்.

இந்திராகாந்தி : நரசிம்மராவை இன்றிரவு அனுப்பட்டுமா ?

ஜே.ஆர். : அவரை வரவேற்கிறேன்.

இந்த அலரி மாளிகை அறிக்கையின் உரையாடலைப் பார்க்கும்போது, ஜெயவர்தன இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு ஒத்து வருவது போலவும், இந்தியாவுக்கு அணுசரணையாக இருப்பது போலவும் தோற்றம் தருகிறது.

ஆனால் செய்தியாளர்களிடம் ஜெயவர்தனா பேசும்போது அந்நிய உதவிகளைக் கோரினீர்களா என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, ஆம், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்தான்.... என்று ஜே.ஆர் பதில் அளித்து இருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க யு.பி.ஐ செய்தியாளர் ஸ்டுவர்ட் ஸ்லெவின், ஜெ.ஆர் வெளிநாட்டில் இராணுவ உதவிகள் கோரியிருக்கிறார் என்ற செய்தியை வெளிப்படுத்தினார். அதனால் அச்செய்தியாளர் ஆகஸ்ட் 28, 1983 இல் இலங்கைகயை விட்டு வெளியேற்றப் பட்டார்.

வெளிநாட்டிடம் இராணுவ உதவிகளை ஜே.ஆர் கோரினார் என்ற செய்தியுடன், ஜே.ஆர் உதவி கேட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளைக் குறிப்பிட்டதை ஒப்பிட்டு அமெரிக்க செய்தியாளர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தியுடன் இணை த்துப்  பார்த்தால், ஜெயவர்தனே, இந்திராகாந்தி யிடம் ஒத்துப்போவது போலக் காட்டிக் கொண்டு, இந்தியா அல்லாத பிற நாடுகளிடம் குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடமும் ஆயுத உதவிகளைக் கோரி இரட்டை நாடகம் ஆடியிருப்பது தெரியவரும். இப்படி இரட்டை வேடம் போடுவது சிங்கள இலங்கையின் கபடத்தனம்.

இத்தகைய கபட நாடகத்தை இப் பொழுது ராஜபக்சேவும்கூட ஏதோ ஒரு வகையில் செய்ய வாய்ப்பு உள்ளது.

அதாவது 2011 ஆம் ஆண்டின் காமன் வெல்த் மாநாடு ஆஸ்திரேலியாவில் நடக்காமல், இலங்கையில் நடக்க வேண்டும் என்றால், இங்கிலாந்தின் நிபந்தனைப்படி, இலங்கை மனித உரிமைகளை மீறவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.

அதற்கான தில்லு முல்லு முயற்சிகளை ராஜபக்சே தன் கைக்கூலிகளான கருணா, டக்ளஸ் தேவானந்தா மூலமாகப் புலம்பெயர் வாழ் தமிழர்களிடம் எடுக்கக்கூடும். தனக்கு அணுசரணையாக உள்ள நாடுகள் மூலமாகவும், இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கவில்லை என்று சான்றிதழ் வாங்க முயற்சிக்கும் !

ஆனாலும் ராஜபக்சேவால் உலகறிந்த இனப்படுகொலையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது . இதைச் செய்த இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து பிரதமர்களை வரலாறு மறக்காது. ராஜபக்சேவை மன்னிக்காது.

- தேரவாதன்

Pin It