நாம் நிறையப் பயணம் செய்கிறோம். அதிலும் என் போன்றோர் அடிக்கடி பயணம் செய்பவர்கள். ஆனாலும் சில பயணங்கள்தாம் மறக்கமுடியாத மனம்கொள் பயணங்கள் ஆகின்றன. அண்மையில் செங்கோட்டை யிலிருந்து மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்த போது...எத்தனை வகையான மனிதர்கள், எத்தனை வகையான அனுபவங்கள் !

06.12.2009 இரவு, செங்கோட்டையில் கலைஞர் தமிழ்ச் சங்கம் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழாவில் உரையாற்றிவிட்டு, மறுநாள் காலை 7 மணியளவில் அங்கிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டேன்.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ரசாக், “பாசஞ்சர் டிரெயின் ரொம்பக் கூட்டமா இருக்கும். நான் என் காரை அனுப்புறேன்” என்று அன்பு காட்டியபோது, நன்றி கூறி மறுத்து விட்டுத் தொடர் வண்டி நிலையம் வந்து சேர்ந்தேன். இளங்காலை நேரம், இதமான காற்று, வண்டியில் கூட்டமும் மிகுதியாய் இல்லை. தென்காசியில்தான் நிறையப் பேர் ஏறுவார்கள் என்று கூறினர்.

மும்பையில் வாழும் புதிய மாதவி எழுதியுள்ள, ‘மின்சார வண்டிகள்’ சிறுகதைத் தொகுப்பு நூலை எடுத்தேன். மதுரை போவதற்குள் படித்து முடித்து விடலாம் என்பது திட்டம்.

நாம் ஊடகங்களின் நூற்றாண்டில் வாழ்கிறோம். கலைஞர் தொலைக்காட்சியும், விஜய் தொலைக்காட்சியும் அந்த வண்டியில் பயணம் செய்த பலருக்கு என்னை அடையாளம் காட்டின. எனவே என்னுடைய படிக்கும் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. பலரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு என்னிடம் உரையாடினர். அவர்கள் காட்டிய அன்பு, இணையற்றதாக இருந்தது.

குமுளிக்குப் பயணமாகிக் கொணடிருக்கும் தமிழ் ஆசிரியை உள்ளிட்ட ஓர் இஸ்லாமியக் குடும்பம், டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு நடுத்தர வயதுக்காரர், அவர் மனைவி, மகன் பாலாஜி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரோட்டாக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி, அவருடைய மகள் ரேவதி, தொழுநோய் ஆய்வாளர் நாதன், தென்காசிக்கு அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியின் மனைவி, ஒவ்வொரு ஊரிலும் ஐந்து, பத்துப் பேராக வண்டியில் ஏறிய மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள், லேடி டோக் கல்லூரி மாணவியர், சங்கரன் கோவில் அருகில் கல்லூரி ஒன்றில் பணியாற்றும் விலங்கியல்துறை பேராசிரியர் ‡ இப்படிப் பல் வகையான மனிதர்களுடன் ஏறத்தாழ 3 1/2 மணிநேரப் பயணம். கேள்வி‡ பதில், விவாதங்கள், உரையாடல்கள், சேர்ந்து படம் எடுத்துக் கொள்வது என்று நேரம் போனதே தெரியாமல் அந்தப் பயணம் இனிமையாய் இருந்தது. அந்தப் பயணத்தில்....

தொழுநோய் ஆய்வாளர் நாதன், மருத்து வத்துறை பற்றி நிறையச் செய்திகள் சொன் னார். கலைஞர் உயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்குப் பெரிய வரவேற்பு உள்ளது என்றார். இன்னொரு சுவையான செய்தியையும் கூறினார்.

ஒருமுறை, மேலாண்மறைநாடு என்னும் சிற்றூருக்குத் தொழுநோய் பற்றிய ஆய்வுக்காகச் சில அலுவலர்கள் சென்றுள்ளனர். ஒரு வீட்டுத் திண்ணையில், சட்டை, துண்டு எதுவு மில்லாமல், ஒருவர் அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

“ வீட்ல வேற யாருமில்லையா ? ” என்று கேட்டுள்ளனர். “ ஏன், என்னைப் பாத்தா ஆளா தெரியலையா? ” என்று அவர் திருப்பிக் கேட்டி ருக்கிறார். சுருக்கென்ற பதிலில் மெளனமான இவர்கள், பிறகு வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பன போன்ற வினாக்களை எல்லாம் கேட்டுக் குறித்துள்ளனர். பேச்சின் இடையில் தான் அவர் வேறு யாருமில்லை, எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி என்று தெரிந்திருக்கிறது. எழுத்தாளரின் எளிமை பற்றி நாதன் வியந்து சொல்லிக் கொண்டிருந் தார்.

திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்பவர். என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றித் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார். அவர் என்னைப் பார்க்க ராஜபாளையம் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்பதாகத் தொலைபேசியில் சொன் னார். அந்த ஊர் வந்ததும் கதவோரம் வந்து நின்றேன். நான் எழுதிய ‘ அது ஒரு பொடா காலம் ’ நூலை, ஒரு கையில் உயர்த்திப் பிடித்த படி ஓடி வந்தார் ஒரு பெரியவர். அவர்தான் சந்திரசேகர். ஒரு இளைஞரை எதிர்பார்த்து நின்ற நான் பெரியவரைப் பார்த்ததும் வியப்படைந்தேன். இரண்டு நிமிடங்கள் மட்டுமே வண்டி அங்கு நிற்க, அதற்குள் அந்நூலில் என்னிடம் கையயாப்பம் பெற்றுக் கொண்டு, சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு தாளையும், திருவில்லிபுத்தூர்ச் சிறப்புகளில் ஒன்றான பால்கோவாவையும் என்னிடம் கொடுத்தார். அதிகம் பேச முடியவில்லை. ஆனாலும் அவர் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது.

லேடி டோக் கல்லூரி மாணவியர், அவர்கள் கல்லூரிக்கு உரையாற்ற வரவேண்டும் என்று என்னை அழைத்தனர். பிறகு சட்டக்கல்லூரி மாணவர்கள் சூழ்ந்துகொண்டு  உரையாட லைத் தொடங்கினர். தாங்கள் அனைவரும் செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்துள்ளதாக அறிமுகம் செய்து கொண்டனர். “நாங்கள் எடுத்திருக்கும் முடிவு சரியானது தானா? ” என்று ஒரு மாணவர் கேட்டார். ‘ தெளிந்தான் கண் ஐயுறவு ஏன்’  என்று எண்ணிய நான், “ சிந்தித்துத்தானே முடிவு  எடுத்திருப்பீர்கள், பிறகு என்ன சந்தேகம்” என்றேன். “இல்லை, உங்களையயல்லாம் விட ஈழத்திற்காக இன்று அவர்தான் முனைப்பாக நின்று வேலை செய்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம். அவரைப் பற்றி உங்கள் கருத்தென்ன ” என்று கேட்டனர். “என் அன்புக்குரிய தம்பிகளில் அவரும் ஒருவர். போர்க் குணம் உடையவர். ஈழத்தின் மீது மாறாத பற்றுடையவர். பகுத்தறிவாளர் ” என்று கூறினேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

“தேர்தலில் நிற்கப் போவதாக அவர் எடுத்துள்ள முடிவு சரியா? ” என்றனர். அடுத்த இயக்கத்தைப் பற்றி நான் மிகுதியாய்ப் பேசுவது நாகரிகமாக இருக்காதே என்ற தயக்கம் இருந்தது. எனினும் மாணவர்களுக் காகச் சில செய்திகளைச் சொன்னேன். “ தேர்தல் விளையாட்டு என்பது வேறு மாதிரியானது. ஒரு வகையில் ஆபத்தானது. ஆழம் அறிந்து காலை விடுவதுதான் சரியாக இருக்கும் ” என்றேன்.

இன்னொரு தம்பி, “ஐயா, நான் பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாக இருந்தவன். இப்போது சீமானுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறேன். ஆனால், நாம் தமிழர் இணையத்தளத்தில் பெரியார் படத்தைக் கூட எடுத்துவிட்டார்கள் என்பதில் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது” என்றார். அதில் எனக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல், “ அந்தப் போக்குப் பற்றி நீங்கள்தான் சீமானிடம் பேச வேண்டும் ” என்றேன்.

பெங்களூர் குணாவோடு இருந்த முக்கியமான சிலர் இப்போது சீமானுடன் சேர்ந்துள்ளனர். அவர்களுடைய அடிப்படை நோக்கம் பெரியார் எதிர்ப்பும், திராவிட இயக்க எதிர்ப்பும்தான். அவர்கள்தான் இப்போது இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதை என்னால் உணர முடிந்தது.1940 களில், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., தமிழை முன்வைத்துத் திராவிட இயக்கத்தை எதிர்த்தார். 90 களில், தலித் மக்களை ஒன்று திரட்டி, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது ஈழ ஆதரவைக் காட்டித் ‘ திராவிடப் பெரியார் ’ என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

என்ன செய்வது... தமிழ் இன உணர்வு, தலித் மக்களின் விடுதலை, ஈழ ஆதரவு ஆகிய அனைத்துமே பெரியாரியச் சிந்தனைகளிலிருந்தே ஊற்றெடுத்தவை என்பதால், இவர்களின் முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.

திராவிட இயக்கத்தை வீழ்த்தும் முயற்சிகள்  இம்மண்ணில் என்றைக்கும் வெற்றி பெறாது.

மதுரைத் தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கியதும், தெரு வரையில் என்னோடு வந்து என்னை வழி அனுப்பி வைத்தனர் அந்தச் சட்டக் கல்லூரி மாணவர்கள். பயணத்தில் புதிய மாதவியின் புத்தகத்தைப் படிக்க முடியாமல் போனாலும், பல்வேறு வகைப்பட்ட மக்களிடம் இருந்து படித்துக் கொண்டேன் ஏராளமாய் !

- சுப.வீரபாண்டியன்

 

Pin It