கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

 

(மானுடம் இன்று அடைந்திருக்கும் சிந்தனை, தொழில்நுட்ப வளர்ச்சியானது ஆண்களால் மட்டும் சாதிக்கப்பட்டதல்ல. சரிபாதியான பெண்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு. அறிவுத்துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் ‘ஹைபேஷா’வின் வாழ்க்கை)

ஹைபேஷா - தத்துவ வானில் மின்னும் தாரகை

வரலாறு நெடுகிலும் வீராங்கனைகளாக, கவிஞர்களாக, கலை வித்தகர்களாக, சேவை செய்பவர்களாக, அழகிகளாக வாழ்ந்த பல பெண்களை நம்மால் காணமுடியும். ஆனால், பல்துறை அறிவோடு தத்துவம் என்னும் அறிவாயுதத்தோடு வாழ்ந்து வரலாற்றில் என்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் தாரகைகள் வெகு சிலரே.

அப்படியிருக்கையில், 'தான் வாழ்ந்த காலத்தில் தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தனது சமகால அறிஞர்கள் அனைவரையும்விட தலைசிறந்தவராக இருந்தார் ஹைபேஷா' என்ற 'பெண்' என்று 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் சாக்ரடீஸ் ஸ்கோலாஸ்டிகஸ் குறிப்பிடுவதைக் காணும்போது வியப்படையாமல் இருக்க முடியாது.

பண்டைய எகிப்து நாட்டின் புகழ்பெற்ற நகரமான அலெக்ஸாண்ட்ரியாவின் கிரேக்க தத்துவப் பள்ளியின் தலைவர்; தான் வாழ்ந்த காலத்தின் தலைசிறந்த கணித அறிஞர்; கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தின் கடைசி வாரிசு; வானியல் அறிஞர்; பாய்ம பொருள்களின் (fluids) ஒப்பீட்டு அடர்த்தியை கண்டறியும் 'ஹைட்ரோமீட்டர்’ மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அறிய உதவும் ‘ஆஸ்ட்ரோலாப்’ ஆகிய கருவிகளை கண்டுபிடித்த விஞ்ஞானி; யூக்ளிட், டாலமி, டையோஃபாந்தஸ், அப்போலோனியஸ் ஆகிய கணித மேதைகளின் நூல்களை ஆராய்ந்து, சீர்த்திருத்தி விளக்க உரைகள் எழுதி உலகறிய செய்தவர்; பல தத்துவ, அறிவியல், கணித நூல்களை எழுதி தானே ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என பல சிறப்புகளுக்குரியவரான ஹைபேஷாக்கு இணையான பெண்கள் வரலாறில் எவருமிலர்.

'ஹைபேஷா (Hypatia)’ பிறந்த ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் கி.பி.350க்கும் கி.பி.370க்கும் இடையில் என்பது உறுதி. தத்துவ அறிஞரான தனது தந்தை தியோனால் கல்வியூட்டப்பட்டு, பின்னர் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கல்விகற்று அலெக்ஸாண்டிரியா திரும்பினார் ஹைபேஷா. ‘மியூஸியம்’ என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் நூலகம் இணைந்த கல்விச்சாலையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் தத்துவத்தைக் கற்பித்தும் கணிதவியல் ஆராய்ச்சிகளை செய்தும் வந்தார் ஹைபேஷா. அவரது அறிவாற்றலைக் கேள்வியுற்று, அவரிடம் பயில்வதற்காக உலகெங்கிலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர் மாணவர்கள்.

புதுமைப் பெண்ணான ஹைபேஷா, அன்றைய பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையை அணிபவரல்ல. மாறாக அன்றைய அறிஞர்கள், ஆசிரியர்கள் அணியும் ஆடைகளையே அணிந்தார். ஆண் தேரோட்டித் துணையின்றி தன்னுடையத் தேரை தனியாக ஓட்டிக்கொண்டு நகரெங்கும் வலம் வருவார். மேலும் அன்றைய அலெக்ஸாண்டிரியா நகரின் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக மக்களால் மதிக்கப்பட்டார்.

தத்துவ ஆய்வோடு கணிதவியலில் அவர் ஆற்றியப் பங்கு அளவிடற்கரியது. புரியாத வகையில் இருந்த யூக்ளிட் எழுதிய ‘எலிமெண்ட்ஸ்’, டாலமியின் ’அல்மாஜெஸ்ட்’ போன்ற பண்டைய கணித நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, எளிமைப்படுத்தி விரிவுரைகள் எழுதினார். ஐரோப்பிய வரலாறின் இருண்ட காலத்தில் மறைந்த ஹைபேஷாவின் கணித நூல்கள் 8ஆம் நூற்றாண்டில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஹைபேஷா இறந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப்பின் லத்தீன் மொழியில் வெளியானது. இந்த நூல்களே பிற்காலத்தில் நியூட்டன், லீப்னிட்ஸ், டெக்கார்டே போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படியாக இருந்தன. ஹைபேஷா உலகைவிட்டு மறைந்து 15 நூற்றாண்டுகள் ஆனபின்னும் நவீன அறிவியலுக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் சம உரிமை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும்போது, மேலே சொல்லப்பட்ட அவ்வளவு சிறப்புகளுடன் 4ஆம் நூற்றண்டில் ஒரு பெண் வாழ்ந்தால் ஆணாதிக்க சமூகம் அவளை விட்டுவைத்திருக்குமா? அல்லது மதபீடங்கள் தான் சும்மா இருந்திருக்குமா?

வரலாறிலே கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பது கொந்தளிப்பு மிகுந்ததாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட ரோமானிய பேரரசில் மத குருக்களின் செல்வாக்கு அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்திருந்தது. பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டு மத நம்பிக்கையே எங்கும் பரப்பப்பட்டது, பெண்களின் நிலை தாழ்ந்தது. கிறிஸ்தவரல்லாத வேற்று மதத்தினரும் அறிஞர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர்,அவர்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. எதிர்ப்பவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

எனினும் அப்போது எகிப்தின் ஆளுநராக இருந்தவர் ஒரிஸ்டஸ் என்னும் கிறிஸ்தவரல்லாதவர், ஹைபேஷாவின் நண்பராக இருந்தார். கி.பி.412ல் பிஷப் ஸைரில் என்பவன் அலெக்ஸாண்டிரியாவின் தலைமை கிறிஸ்தவ மதகுருவாக நியமிக்கப்பட்டான். அறிவாராய்ச்சியும், தத்துவமும், மத சகிப்புத்தன்மையும் மிகுந்திருந்த அந்த நகரை மதவெறியில் மூழ்கடிக்க ஆரம்பித்தான் அவன். ஸைரிலின் சதியால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரிஸ்டஸ் கிறிஸ்தவ துறவிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அப்படியும் ஸைரில்லின் வெறி அடங்கவில்லை. ஹைபேஷா என்னும் பெண் அங்கு செல்வாக்கோடு வலம் வருவது மதவாதிகளுக்கு பிடிக்கவில்லை.

கி.பி.415ல் அலெக்ஸாண்டிரியா நகரில் தனது வழக்கமானப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஹைபேஷாவின் தேர் வழிமறிக்கப்பட்டது. பீட்டர் என்னும் மதகுருவின் தலைமையில் வந்த கிறிஸ்தவ மதவெறிக்கூட்டம் ஹைபேஷ்யாவை கீழே இழுத்துப் போட்டது. வீதிகளில் தரதரவென அவரை இழுத்துச் சென்றனர். சீசேரியம் என்னும் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் கொண்டுச்சென்று ஹைபேஷாவின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினர். ஹைபேஷா கதற கதற சிப்பிகளாலும் ஓடுகளாலும் அவரது உடலைக்கீறி சதையைப் பிய்த்தெறிந்தனர். குற்றுயிராக கிடந்த ஹைபேஷாவின் கைகால்கள் துண்டிக்கப்பட்டு சினாரன் என்னும் இடத்தில் வைத்து எரிக்கப்பட்டது.

மதவெறியின் கொலைவெறிக்கு பலியானார் ஹைபேஷா. அப்போது வைக்கப்பட்ட தீ ஹைபேஷாவின் உடலுக்கு மட்டுமல்ல அறிவுக்கும்தான். ஆம், ஹைபேஷாவின் மறைவுக்குப்பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சூழ்ந்த இருள் விலகுவதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஈவு இரக்கமற்ற மதவெறியர்களால் ஹைபேஷாவின் உடலைத்தான் அழிக்க முடிந்தது. ஆனால், அவரின் புகழ் அறிவுலகம் உள்ளவரை வாழும்.

- பிரபு 

Pin It

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிஸிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிஸிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிஸிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிஸிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.

பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர்

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.

நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோஸைம்’ எனப் பெயரிட்டார்.

காளானிலிருந்து பெனிஸிலின்

1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோஸைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிஸிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிஸிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிஸிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

- பேராசிரியர் கே.ராஜு

நன்றி: தீக்கதிர் 

Pin It

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.

Pin It

ஜூல்ஸ் டாசின், அமெரிக்காவின் ஹாலிவுட் இயக்குநர், திரைக் கதையாசிரியர், நடிகர் என்று பன்முக ஆளுமைகள் கொண்டவர். ஐரோப்பாவில் தனி முத்திரை பதித்த திரைக் கலைஞராவார்.

Dassinஅமெரிக்காவின் துரைத்தனத்தை விமரிசித்தும், வர்க்க வேறுபாடுகளை சமூக நிலையிலிருந்து முன்வைத்தும் அவரின் படங்கள் துணிச்சலோடு பேசின. புதுமை எண்ணமும், உழைக்கும் மக்களின்மீது காதலும் கொண்டிருந்த டாசினுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு பெருகியது. சினிமா ரசிகர்கள் டாசினின் படங்களை விரும்பிப் பார்த்தனர். வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, சமூக விமரிசனமாக விரிந்த டாசினின் படங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரின் உறக்கத்தைக் கலைத்தன.

ஜூல்ஸ் டாசின் 1930 களிலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகியிருந்தார். அமெரிக்க சினிமாவில் அவரின் வர்க்க சாய்மானம் கொண்ட படங்களால் டாசின்மீது அமெரிக்க ஆட்சியாளர்கள் வெறுப்புற்றனர். கருப்புப் பட்டியலில் அவரின் பெயர் இடம் பிடித்தது. அந்தச் சமயத்தில்தான் அவரின் புரூட் ஃபோர்ஸ் (1947), தி நேக்கட் சிட்டி (1948), தீவ்ஸ் ஹைவே (1949) முதலான படங்கள் வெளி வந்திருந்தன. இவற்றுள் முதலாவது படம் அமெரிக்கச் சிறை குறித்த விமரிசனமாக இருந்தது. இரண்டாவது படமோ நியூயார்க் நகரின் செல்வாக்குமிக்க காவல்துறை வலைப்பின்னல் குறித்த கதை. அது அந்த நாளிலேயே ஒளிப்பதிவுக்காகவும் படத் தொகுப்புக்காகவும் அகாடமி விருதுகளை வென்றது. கலிபோர்னியாவின் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை வழிமறித்துக் கொள்ளையடிக்கும் கிரிமினல்கள் குறித்துப் பேசியது மூன்றாவது படம். இந்தப்படங்கள் வந்த போதுதான் டாசின்மீது அமெரிக்க ஆட்சியாளர்களின் கழுகுக் கண்களின் பார்வை விழுந்தது.

1950 ல் அவரின் நைட் அண்ட் த சிட்டி படம் வெளிவந்த சில நாட்களிலேயே அவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அது லண்டனில் எடுக்கப்பட்ட படம். சூதுவாதற்ற மல்யுத்தக் கலைஞரையும், ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் இரவு விடுதி உரிமையாளரையும் பற்றிய கதை இது. சில விமரிசகர்கள் இந்தப் படத்தை டாசினின் மிகச்சிறந்த படைப்பு என்கின்றனர்.

மனக்கிலேசமும், கையறுநிலையும் உண்டாக்கும் அச்சமூட்டும் சிதைவு களும் கொண்ட குறுகிய வழிப் பாதை போன்று லண்டன் மாநகர் காட்சியளிப்பதாக டாசின் இப்படத்தில் சொல்லியிருக்கிறார் என்று மைக்கேல் ஸ்ராகோ 2000 ஆண்டில் இணையதளமொன்றில் எழுதினார். ஆழ்மனக் கனவு நிலையையும், யதார்த்தத்தை நுட்பமாக டாசின் கலந்து தந்திருக்கின்றார் என்றார் அவர்.

தயாரிப்பாளர் டாரில் எப். ஜான்யூக் இந்தப் படத்திற்காக டாசினை ஒப்பந்தம் செய்த அதே நேரத்தில் அவர் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்காணிக்கும் கமிட்டியின் முன் ஆஜராக நேர்ந்தது. சக இயக்குநர்கள் எட்வர்ட் டிமிட்ரிக் மற்றும் பிராங்க் டட்டில் ஆகியோர் அவருக்குச் சான்றளித்தனர். 1993 களில் டாசினின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பதிவு குறித்து நினைவு கூர்ந்தனர். டாசினின் சினிமாத் தொழிலை மூழ்கடிக்கச் செய்ய இதுவே போதுமானதாக இருந்தது.

1953 ல் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார். பிரான்ஸ் தேசம் வந்து சோர்ந்தார். அங்கே அவருக்கு மொழி ஒரு பெருந்தடையாக இருந்தது. அங்கே ஐந்து வருடம் வேலையின்றித் திரிந்தார். பண நெருக்கடி மிகுந்தபோது அவர் ரிஃபிஃபி எனும் குறைந்த செலவுப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அது ஒரு நகைக்கடைக் கொள்ளை குறித்த படம். அதில் இசையோ, வசனங்களோ கிடையாது. நகைகள் கொள்ளையடிக்கப்படும் காட்சிமட்டும் அரைமணி நேரம் ஓடும். பார்வையாளர்கள் சலிப்பின்றி அதனைக் காணும் வண்ணம் விறுவிறுப்பாகப் படமாக்கியிருந்தார் டாசின்.

அந்தப்படத்தில் டாசினும் ஒரு இத்தாலிய பாதுகாப்பு நிபுணராக நடித்திருந் தார். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட டாசின்மீது ஐரோப்பாவின் பார்வை விழ இந்தப்படம் பெரிதும் காரணமானது. 1955 ல் நடந்த கேன்ஸ் பட விழாவில் இந்தப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதினை டாசின் வென்றார்.

டாசினின் இன்னொரு திருப்புமுனைப் படம் நெவர் ஆன் சன்டே. உழைக்கும் வர்க்கத்திலிருந்து கடும் வறுமை காரணமாக விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்ணைப்பற்றிய கதை இது. இதில் டாசின் அமெரிக்காவின் படிப்பாளி வர்க்கத்தினுடைய பிரதிநிதி பாத்திரத்தில் நடித்தார்.

அவர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பிற தேசத்தவர்மீது திணிப்பது குறித்து உபதேசிப்பவராகத் திறம்பட நடித்தார். நகைச்சுவை இழையோடும் இந்தப் பாத்திரப்படைப்பின் மூலம் இந்தப்படமே ஒரு நகைச்சுவைப்படமாக வெற்றி பவனி வந்தது.

இதன் எழுத்துக் காட்சிப்பாடல் வீடுகள்தோறும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மீண்டும் மீண்டும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த மெலினா மெர்க்யூரியை டாசின் தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார். இஸ்தான்புல்லின்டோப்காப்பி அரண்மனையிலிருந்து வைரத்தைக் கொள்ளையடிக்கிற டோப்காப்பி அவரின் அடுத்த படம். அதிலும் மெர்க்யூரிதான் கதாநாயகி. பிற்காலத்தில் தன் மனைவி மெர்க்யூரியுடன் இணைந்தே பல படங்களை எடுத்தார். 1957 ல் வெளிவந்த ஹீ மஸ்ட் டை, 1959 ல் வெளிவந்த லா லெக்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1968 ல் அப் டைட் அவர் மெர்க் யூரி துணையில்லாமல் பண்ணிய படம்.

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் டாசினுக்கு விதிக்கப்பட்ட தடை அமெரிக்காவில் திரும்பப் பெறப்பட்டது. டாசின் உடனே உற்சாகமானார். தனக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதும் அமெரிக்காவில் அவர் எடுத்த முதல் படம் தி இன்பார்மர். அண்டை வீட்டு ஏழைக் கருப்பினத்தவர் பற்றிய படம் இது. அவர் அமெரிக்கா செல்வதற்கு ஓராண்டுக்கு முன் எடுத்த இசை - நகைச்சுவைப் படமான இலியா டார்லிங் மெர்க்யூரிக்கு டோனி விருதினைப் பெற்றுத் தந்தது.

மெர்க்யூரி தீவிர பாசிச எதிர்ப்பு மனோபாவம் மிக்கவர். 1967ல் கிரீசின் வலது சாரி அரசு அவர் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டார் எனச்சொல்லி அவரின் கிரீஸ் குடியுரிமையை ரத்து செய்தது. 1970ல் ஆட்சிமன்றக்குழுவைத் தூக்கி யெறிய நடந்த சதிக்கு உடந்தையாக இருந்தார் என டாசின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மீண்டும் ஒரு நாடுகடத்தல் தண்டனை. 1974ல் கிரீசில் ஜன நாயகக் காற்று வீசத் தொடங்கியபோது, நாடு கடத்தப்பட்டு பெரும்பகுதி நாட்களைப் பாரிசில் கழித்துவந்த டாசின் தம்பதி மீண்டும் கிரீசின் குடிமக்களாயினர். அங்கு சோசலிஸ்ட் கட்சியின் ஆட்சி ஏற்பட்டபோது மெர்க்யூரி கலாச்சாரத் துறை அமைச்சரானார். கலையால் இணைந்தவர்கள் கலையையும் ஏகாதிபத்திய- பாசிச எதிர்ப்புணர்வுகளையும் வளர்த்துக் கொண்டனர் டாசின் தம்பதியினர். 1994 ல் மெர்க்யூரி காலமானார்.

1911 ல் அமெரிக்காவின் மிடில் டவுனில் ரஷ்யாவிலிருந்து அங்கு புலம் பெயர்ந்து குடியேறியிருந்த சாமுவல் டாசினுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜூல்ஸ் டாசின். அவரின் தந்தை ஒருநாவிதர். பள்ளிப்படிப்பைக்கூட சரியாகக் கடக்கமுடியாத டாசின் கலை ஆர்வத்தால் புகழ்மிக்க ஆல்பிரட் ஹிட்ச்காக் முதலான இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார். கடந்த 2008 மார்ச் 31 அன்று தனது 96 வது வயதில் மரணம் அவரைத் தழுவும் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு எனும் நெருப்பு விடாப்பிடியாக அவர் உள்ளத்தில் எரிந்துகொண்டேயிருந்தது.

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்

நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!

பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...

அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...

ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...

அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...

நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்.

Pin It