பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏன் தோட்ட வேலைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து தொழிலாளர்களைக் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு சென்றார்கள் அல்லது அடிமைகளைப் போல கூட்டிச் சென்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் அக்காலப்பகுதியில் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகள் பற்றி நாம் சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

srilankan_tea_estateஇந்தியத் துணைக் கண்டத்திலிருந்து கிடைத்த பெரும் இலாபம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது கட்டுப்பாட்டை அங்கே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மிக முக்கிய காரணமாக இருந்தது. உலகெங்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்த காலப் பகுதியது.

1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ காலத்துக்கு முடிவுகட்டி உலகெங்கும் இருந்த அதிகார மையங்களுக்குப் பெருங் கிலியை உருவாக்கியது. வறிய பிரெஞ்சு மக்களும் சான் குளோட்டுகளும் (sans culottes) சம உரிமைகளைக் கோரி பிரெஞ்சு அரசை ஒரு உலுப்பு உலுப்பினர். பிரான்சில் வெடித்த புரட்சி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழிருந்த கரீபியன் நாடுகளிலும் எதிரொலித்தது. மார்ட்டினிக், கோடலூப், டொபாகோ ஆகிய நாடுகளில் அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட ஆப்பிரிக்கர்களும் கலப்பினத்தவர்களும் கிளர்ச்சிகளில் இறங்கினர். விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் (Liberty,Fraternity,Equality) என்ற பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்களாற் கவரப்பட்ட அடிமைத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1791ல் சென்.டொமினிக்கில் அடிமைகளின் புரட்சி வெடித்தது.

இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த நினைத்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், பிரான்சிடமிருந்து கரீபியனைக் கைப்பற்றப் பிரான்சுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆனால் ‘அடிமைகள் இராணுவம்’ அவர்களுக்கு மாபெரும் தோல்வியை ஏற்படுத்தியது. இதே தருணத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. புகழ்பெற்ற ‘மனிதரின் உரிமை’ (Rights of Man) எழுதிய தோமஸ் பெயினின் கருத்துக்களாலும் பிரெஞ்சுப் புரட்சியாலும் ஊக்குவிக்கப்பட்ட பிரித்தானியத் தொழிலாளர்களும் பிரெஞ்சின் புரட்சிகர வழியைப் பின்பற்ற முன்வந்தனர். 1795ல் இங்கிலந்தில் நடந்த மூன்று பெரும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் 150 000க்கும் மேற்பட்ட பிரித்தானியத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ‘நமக்கு மன்னரும் வேண்டாம் யுத்தமும் வேண்டாம்’ என்று அவர்கள் முழங்கினர். யுத்தத்திலும் பாரிய இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது இருப்பைக் காப்பாற்ற இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வந்த இலாபத்தை நோக்கித் தம் மேலதிக கவனத்தைத் திருப்பினர். இதே தருணம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பலத்தைக் குறைக்கவும், உள்நாட்டிலும் காலனித்துவ நாடுகளிலும் பெருகிய அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் அடிமைத்தன முறையை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.  
 
பிரித்தானிய ஆட்சியின்கீழ் அடிமை முறையைத் தடைசெய்யும் சட்டமான அடிமை வியாபாரச் சட்டம் 1807இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1808ல் அமுலுக்கு வந்தது. இருப்பினும் அடிமை வியாபாரமும் அடிமைகளை வைத்து வேலை வாங்குவதும் 1833இல் தான் முழுமையாகத் தடை செய்யப்பட்டன. பிரித்தானியக் கட்டுபாட்டில் இருந்த காலனிகளில் நிகழ்ந்த அடிமைத் தொழிலாளர்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்களித்தன. இதுவரையும் அடிமைகளை வைத்து இலவச உழைப்பின் மூலம் அமோக இலாபமீட்டிய கிழக்கிந்தியக் கம்பனி போன்ற காலனியாதிக்க சக்திகளுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1833ல் அடிமைகளை வைத்திருந்த முதலாளிகளுக்கு 20 மில்லியன் பவுன்சுகள் நஷ்டஈடாக வழங்கப்பட்டும் அவர்கள் திருப்திப்ப‌டவில்லை. அவர்கள் தமது நடைமுறையை வேகமாக மாற்ற வேண்டியேற்பட்ட காரணத்தால் வேறு வழிகளில் மிகவும் விலைகுறைந்த தொழிலாளர்களைத் தேடினர். இந்தியாவில் நிலவி வந்த அடிமைமுறைக்கு நிகரான சாதிய முறையும் வறுமையும் பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு வாகான சந்தர்ப்பத்தை வழங்கியது.

இந்தியாவில் வாழ்ந்த வறிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருந்தோட்ட வேலைகளுக்காக – முக்கியமாகத் தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக - உலகெங்கும் கடத்தப்பட்டனர். இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தமிழ் பேசும் ஒடுக்கப்பட்ட சாதியினர் சிங்களம் பேசும் கண்டிய மக்களின் நடுவில் குடியேற்றப்பட்டனர். வடக்கு, கிழக்கில் ஏற்கனவே வசித்து வந்த ஏனைய தமிழ்பேசும் மக்களுடன் எந்த உறவும் ஏற்படாத வண்ணம் இத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த இது உதவியது.

கண்டியில் சிங்களவர்களுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிற்கும் இடையே முறுகல் நிலையிருந்ததால் தொழிலாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்த ஆங்கிலேயர்களுக்கு, அவர்கள் மத்தியில் தமிழ்பேசும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவது சுலபமானதாகியது. அதே சமயம் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த ஒடுக்கும் சாதித் தமிழர்கள், அவர்களால் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ள மறுத்தனர். எல்லா வகையிலும் தனிமைப்பட்ட இந்தத் தொழிலாளர்கள் தமது சொந்த இடங்களுக்குத் தப்பவும் வழியின்றி இலங்கைத் தீவின் நடுவில் ஆங்கிலேயரின் கைகளினால் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதன் பலனாக இலங்கைத் தேயிலை வியாபாரம் அமோகமாக வளர்ந்தது.

 1818ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய கவர்னர் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களைக் கொண்டு வந்திருந்தார். இருப்பினும் முதன்முதலாகப் பெருந்தொகைத் தொழிலாளர்கள் 1823லேயே கொண்டுவரப்பட்டனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் வறிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை வேலை வாங்க ஒடுக்கும் சாதியை சேர்ந்தவர்கள் 'கங்காணி' பதவி வழங்கப்பட்டு, சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டார்கள். இத்தொழிலாளர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சாதியப்படி வரிசை முறையில் வடிவமைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதியினர் மிகமிகக் கேவலமான முறையில் வாழப் பணிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அடிமைத்தனமாக வேலைகள் வாங்கப்பட்டன.

சலுகைகள் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள்

பண்டங்களை எடுத்துச் செல்வதை இலகுபடுத்தவும் ஏற்றுமதியின் செலவைக் குறைத்து இலாபத்தைக் கூட்டும் நோக்குடனும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் புகையிரதப் போக்குவரத்து முதலான பல்வேறு அபிவிருத்திகளைச் செய்தனர். பல நாடுகள் உள்ளடங்கிய 'சூரியன் அஸ்தமிக்காத' இராச்சியத்தைத் தமது கட்டுபாட்டில் வைத்திருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து காப்பாற்ற குறிப்பிட்ட உள்ளுர் அதிகாரச் சக்திகளில் தங்கியிருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஆங்கிலம் பேசும், வசதிகள் பெற்ற ஒரு வர்க்கம் வளர்வதற்கு இது உதவியது. ஆங்கிலேயர் தமது நிர்வாகத்தைக் கவனிக்க, இந்த வர்க்கத்தினரை உபயோகித்தமையால் காலனித்துவ சுரண்டலின் ஒரு பகுதி இவர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.

 இவர்கள் வளங்களைத் தாமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் குறிப்பிடத்தக்க பலம் வாய்ந்த வர்க்கமாக வளரத் தொடங்கினர். தமது செல்வம் பெருக அவர்கள் மேலதிக உரிமைகளைக் கோரினர். பல காலனித்துவ நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு இது சிக்கலைத் தோற்றுவித்தது. தற்போது கெயிட்டி என்றழைக்கப்படும் சென்.டொமினிக்கில் சீனி உற்பத்தியின் பின்னணியில் வளர்ச்சியடைந்த Mullattoes என்றழைக்கப்பட்ட கலப்பினத்தவர்கள் தாம் வெள்ளையர்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்று தொடங்கிய போராட்டம் காலனியத்துக்கு எதிரான மாபெரும் புரட்சிக்கு வித்திட்டது. பிரெஞ்சுப் புரட்சியால் உந்தப்பட்டு அவர்கள் சம உரிமை கோரி பிரெஞ்சுச் சட்டமைப்புச் சபைக்கு (Constituent assembly) கோரிக்கை விட்டதும், பிரெஞ்சுப் புரட்சி தற்காலிகமாக அடிமைத்தனத்தை இல்லாதொழித்தமையும் நாமறிந்ததே. ஏனைய காலனிகளும் சென். டொமினிக் வழி செல்லாதிருக்க ஆட்சியாளர்கள் ஆவனை செய்து வந்தனர்.

srilankan_tea_estate1சென்.டொமினிக் புரட்சி போலன்றி இந்தியா, இலங்கை வாழ் பிரபுக்கள் மிகக் குறைந்தளவு சீர்திருத்தங்களையே கோரி நின்றனர். தேயிலை வியாபாரம் உருவாக்கியிருந்த வசதியான இலங்கைச் செல்வந்தர்களும் சலுகைகளையும் சீர்திருத்தங்களையும் கோரினர். தமது வசதி காரணமாக ஏனைய மக்களின் மத்தியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த, உயர் அந்தஸ்துக்காகப் போராடிய இவர்கள் ஆங்கிலேயர்கள் எல்லோரையும் போல் தம்மையும் தரக்குறைவாக நடத்தியதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனைய வறிய மக்களைவிட தமக்குத் தனிச்சலுகைகள் வேண்டும் என்று கோரினர்.

இதன் அடிப்படையில், 1885இல் இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இராணிக்குத் தமது விசுவாசத்தை உறுதி செய்துகொண்ட இவ்வமைப்பு ஒரு 'இந்துக் கட்சியாகவே' ஆதிக்க சக்திகளின் கட்சியாகவே உருவாக்கப்பட்டது. 1919ல் உருவாக்கப்பட்ட இலங்கை காங்கிரசும் இதைப் போலவே ஆதிக்க சாதி, ஆதிக்க வர்க்கத்தினரின் சலுகைகள் கோருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து 'சுதந்திரம்' பெறுவது பற்றிய எந்தப் பேச்சு மூச்சும் அத்தருணம் இவர்களிடம் இருக்கவில்லை.

கிறித்தவ மதப்பிரச்சாரத்துக்கு எதிரான சுதேசி மதங்களின் கிளர்ச்சி

 சுதேசிச் செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலேயரின் பிள்ளைகள் படிக்கும் நல்ல பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்பினர். மிக வசதியான பாடசாலைகளுக்குள் நுழைய முடியாவிட்டாலும் இவர்களால் தமது பிள்ளைகளைக் கிறித்தவப் பாடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தது. கிறித்தவ பாதிரிகளால் மதப்பிரச்சாரத்தையும் நோக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இப்பாடசாலைகளில் இவர்கள் கிறித்தவக் கல்வி கற்றனர். சிலர் பாதிரிமார்களின்  வீடுகளில் அல்லது அவர்களால் மிகவும் இறுகிய கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட விடுதிகளில் தங்கிப் படிப்பைத் தொடர நேரிட்டது.

படிப்பு முடிந்து வீடு திரும்பியதும் அவர்கள் தமது சொந்த மதத்தைக் கண்டுபிடித்தனர். அதே இறுக்கமான, பலசமயங்களில் கொடூரமான கிறித்தவ பாணியில் இவர்கள் தமது மதத்தைப் பின்பற்றத் தொடங்கியதும் பிரச்சாரிக்கத் தொடங்கியதும் இவர்களைக் கிறித்தவப் பாதிரிமார்களுக்கெதிராக நிறுத்தியது. நிறவேறுபாட்டைக் காட்டித் தாழ்வாக நடத்தப்பட்ட நிலையை எதிர்க்கும் முகமாக இவர்கள் தேடிய சொந்த மத அடையாளம் -அவர்களிடம் இருந்த கிறித்தவ மத எதிர்ப்பு – அவர்களை ஒட்டுமொத்தமாகக் காலனியாதிக்கத்துக்கு எதிராக மாற்றியது.

இந்தியாவில் சிறி அரபிந்தோ, தயானந்த சரஸ்வதி போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்துத்துவ மறுமலர்ச்சி இயக்கம் கிறித்தவ மதப்பிரச்சாரங்களை எதிர்த்த நிகழ்வாகவே தொடங்கி, பின் காலனியாதிக்கத்துக்கு எதிராக மாறியது. பல சமயங்களில் இவர்கள் கிறித்தவ மதப்பிரச்சாரிகள் உபயோகித்த அதே வன்முறை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததை அவதானிக்கலாம். லண்டனில் இருக்கும் சென்.போல் பாடசாலையில் கல்வி கற்ற சிறி அரபிந்தோ சிறப்புச் சித்தியடைந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கிங்ஸ் காலேஜில் கல்வி பயின்றவர். அவரது பின்நாளைய காலனியெதிர்ப்பு நடவடிக்கைகள் அப்படியே கிறித்தவப் பிரச்சார நடவடிக்கைகளை ஒத்ததாக இருப்பதை அவதானிக்க முடியும். பின்பு வன்முறையைத் தூண்டிய இந்திய சுதந்திரக் கோரிக்கையை வைத்த இந்திய தேசியக் குழுவுக்கு இவர் தலைமை தாங்கியது ஆச்சரியமான விடயமல்ல.

 இலங்கையில் புத்தமதம் சார்ந்த 'மறுமலர்ச்சி' இயக்கத்தை அநகாரிக தர்மபாலவும், இந்துத்துவ தேசியத்தை ஆறுமுக நாவலரும் முன்னின்று வளர்த்தனர். அரபிந்தோவைப் போலவே இவர்களும் மிகவும் கட்டுப்பாடான கிறித்தவப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதத்தலைவர்கள் வழிநடத்திய வன்முறைக் கலவரங்கள்

ஆங்கிலேய மொழி பேசிய சுதேசிச் செல்வந்தர்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியாத முறையில், அவர்கள் கனவிலும் சாதித்திருக்க முடியாத வகையில் மதம்சார் தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் ஆதரவை மத அடிப்படையில் வென்றெடுக்கக் கூடியதாகவிருந்தது. பெருங் பொதுகூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. தாமாகப் பெரும்பான்மை மக்களின் செல்வாக்கைப் பெறமுடியாத செல்வந்தர்கள் சந்தர்ப்பத்தைப் பாவித்து மதம்சார் இயக்கத்தின் பின்னால் தம்மையும் இணைத்து ஆதரவைப் பெற முயன்றனர். இருப்பினும், அவர்கள் எதிர்பாராத விதத்தில் வேகமாக வளர்ந்த மத இயக்கத்திற்கு, இவர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவில்லை. இந்த மத எழுச்சிகள் பெரும்பாலும் ஆதிக்க மதம் சார்ந்த எழுச்சிகளாகவே இருந்தமையையும் இங்கு குறிப்பிடவேண்டும். இந்த ஆதிக்க மதத் தலைவர்கள் கிறித்தவ மதத்தவர்களை மட்டுமின்றி ஏனைய சிறுபான்மை மதத்தினரையும் கடுமையாகத் தாக்கினர்.

19ஆம் நூற்றாண்டில் இலங்கை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்களும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுமே. உதாரணமாக, 1880களில் கொழும்பு புறக்கோட்டை (பெட்டா) வர்த்தகம் 86 நாட்டுக்கோட்டைச் செட்டிகளினதும் 64 முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களினதும் கையிலிருந்தது. ஒரு சில வர்த்தகர்கள் மட்டுமே சிங்கள புத்த பின்னணியிலிருந்து வந்திருந்தனர். இதே பெட்டாவில் தளபாடக் கடை வைத்திருந்த சிங்கள பௌத்த வியாபாரியின் மகனான  அநகாரிக தர்மபால முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பலமாகத் தூண்டிவிட்டார். 1915ல் அவர் எழுதிய குறிப்பு ஒன்று இந்தப் பிரச்சாரம் எவ்வளவு கேவலமான முறையில் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

 "முஸ்லிம்கள் வேற்றூரார். யூதர்களைப்போல் 'ஷைலோக்'கிய முறைகளால் செல்வம் சேர்க்கிறார்கள். கடந்த 2358 ஆண்டுகளாக இந்த நாட்டின் மைந்தர்களான சிங்களவர்கள் வேற்று நாட்டவர்களிடம் இருந்து தமது நாட்டைக் காக்கக் கடுமையாகப் போராடி அவர்கள் இரத்தம் ஆறாக ஓடியுள்ளது. ஆனால் ஆங்கிலேயர் சிங்களவர்களை நாடோடிகள் போல் நடத்துகிறார்கள். இந்த வேற்று நாட்டு இந்திய முகமதியர் சிலோனுக்கு வந்து வியாபார அனுபவமற்ற சிங்களக் கிராமங்களைக் கண்டதும் தம் செல்வம் நிரப்ப அதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த நாட்டின் மைந்தர்களான சிங்களவர்கள் எதுவும் அற்றவர்களாக்கப்படுகிறார்கள்."

மேற்கண்டது போன்ற இனவாதப் பிரச்சாரங்களை அநகாரிக தர்மபால தெற்கெங்கும் செய்தார். 2358 ஆண்டுகள் என்று தாம் ஏதோ விஞ்ஞான பூர்வமாகக் கணித்தது போல் மக்களுக்குப் பல புலுடாக்களை விட்டுத் தம்மைப் புத்திசாலிகளாக் காட்டிக்கொள்ள முயன்றனர். ஆங்கிலேயர் முதன்முதலில் ஏற்படுத்திய கண்டிய ஒப்பந்தத்தின் நூற்றாண்டு நினைவு ஆண்டான 1915ல் காலனியாதிக்கத்திற்கு எதிரான உணர்வு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. பௌத்த மத அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமத்து வறிய மக்கள் மத்தியில் மத உணர்வு தேசிய உணர்வாக மாறிக்கொண்டிருந்த தருணமது. மேற்கண்டது போன்ற பிரச்சார நடவடிக்கைகள் முத்திப்போய் இதே ஆண்டு மே மாதம் முஸ்லிம்களின் மேலான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 35 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 198 பேர் படுகாயம் அடைந்தனர். 86 மசூதிகளும் 17 கிறித்தவ ஆலயங்களும் உடைக்கப்பட்டன. 4000க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன.

ஏற்கனவே இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் தமது அதிகாரத்துக்கு எதிராகத் திரும்பிருப்பதை அறிந்திருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். அவர்கள அநகாரிக தர்மபாலவின் சகோதரர் உட்படப் பலரைக் கைது செய்தனர்.

தாக்கப்பட்ட முஸ்லிம்களில் ஏராளமானவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தமை கவனிக்கப்பட வேண்டியது. 'தென்னிந்திய முகமதியர்' என்று குறிப்பிட்டு அநகாரிக தர்மபால தொடர்ந்து தாக்கி வந்தது தமிழ் பேசும் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்த்தே. ஆனால், இலங்கைத் தமிழ் இந்துமத ஆதிக்க வர்க்கத்தினர் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுக்கெதிரான தாக்குதலை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. மாறாக, அவர்கள் அநகாரிக தர்மபால கோஷ்டியைக் காப்பாற்ற ஓடோடிச் சென்றனர். பெயர்பெற்ற வலதுசாரித் தமிழ்ச் செல்வந்தரான பொன்னம்பலம் இராமநாதன் பல கூட்டங்களில் பங்காற்றி பிரித்தானியர் கலவரத்தை அடக்கியமுறையை வன்மையாக கண்டித்தார். இங்கிலாந்து வரை பிரச்சனையை எடுத்துச் செல்லும்படி அவரது அநகாரிக தர்மபால ஆதரவு பிரச்சாரமும் செயல்களும் முடுக்கிவிடப்பட்டன.

பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகச் சிங்கள் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்ட இராமநாதன் அதே தருணம் முஸ்லிம் மக்களைப் புறந்தள்ளி ஏதிலிகளாக்கினார். இதே பாணியில் பின்பு அவர் ஆதிக்க சக்திகளுடன் கூடி மலையகத் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான தாக்குதலுக்கு ஆதரவு வழங்கினார்.

தமிழ் இந்துத்துவ ஆதிக்க மனப்பாங்கை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் நல்லூர் நாவலர் என்றழைக்கப்பட்ட ஆறுமுகம் பிள்ளையாவார். "பறை, பள்ளர், பெண்கள் ஆகியோர் அடிவாங்கப் பிறந்தவர்கள்" என்றும், -இதுபோன்ற பல காட்டுமிராண்டித்தனமான கதைகளை எழுதிய இந்த பிள்ளைவாளை அறிஞராக நாவன்மை கொண்டவராகக்  கொண்டாடியது இந்துத்துவ அதிகார வர்க்கம். ஒடுக்கபட்ட சாதியினரும் பெண்களும் பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பைச் செய்தவர் ஆறுமுகம் பிள்ளை. இவர் வடக்கில் ஒடுக்கப்படும் சாதிகளுக்கு எதிரான கோரக் கலவரங்களைத் தூண்டிவிட்டவர்.

(தொடரும்)

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It