jeeva 350படைப்பு எல்லாம் கடவுளுடையது என்றால் தாழ்ந்த சாதிக்காரர்கள் ஏன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றவர் ஜீவா. கோயிலை உருவாக்கியவன் மனிதன் கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான் அது உண்மையான கடவுளென்றால் மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்குமா என்றவர் ஜீவா.

உலகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சூரியன் உயர்ந்த சாதியினருக்கு ஒரு சூரியனா உதிக்கிறது என்றவர் ஜீவா. வர்ணாசிரம தர்மத்தை காந்தியடிகள் தூக்கிப் பிடிக்கிறார் என்பதற்காக காந்தியத்தைவிட்டு வெளியேறியவர்.

கடவுளை நம்பியவன் மதத்தைப் பின்பற்றுகிறான் மதம் மனுதர்மத்தைப் பின்பற்றுகிறது என்றவர் ஜீவா. பாரதி ஜீவாவுடைய பள்ளித் தோழனாக இருந்தாலும் இருவரும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வாழ்க்கையில் சுயஒழுக்கம் தான் ஒருவரின் உயர்வு தாழ்வை நிர்ணயிக்க வேண்டுமே தவிர பிறந்த குலம், சாதி அல்ல என்றவர் ஜீவா. தனித்தமிழ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தன் பெயரை உயிர்இன்பன் என மாற்றிக் கொண்டவர் ஜீவா.

சொரிமுத்து என்ற குலதெய்வப் பெயரும் மூக்காண்டி என்று பெற்றோர் வைத்த பெயரும் நிலைக்கவில்லை தோழர் ஜீவானந்தம் என்ற பெயரே நிலைத்தது.

புத்தக வாசிப்பு தான் ஜீவானந்தத்தை மானுடனாக மாற்றியது. காங்கிரஸ் வெள்ளையரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தது. சுயமரியாதை இயக்கம் பிராமண எதிர்ப்பையே முன்னிறுத்தியது. இரண்டு பேரியக்கமும் சமதர்மத்தை சமூகத்தில் நிலைநாட்ட முயற்சி எடுக்கவில்லை.

சுதந்திரத்துக்கு பின்னும் வர்ணாசிரம தர்மத்தை நாடு கடைப்பிடிக்க வேண்டும் என்ற காந்தியின் வாதத்தை எதிர்த்தவர் ஜீவா. தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து கடைசி வரை தொழிலாளர் உரிமைக்காக பாடுபட்டு உயிர் நீத்தவர் ஜீவா. மேற்கு தாம்பரத்திலுள்ள கஸ்தூரிபாய் நகரிலுள்ள புறம்போக்கு நிலத்தில் மண்சுவர் கூட இல்லாத கூரை வீட்டில் கடைசிவரை வாழ்ந்தார்.

பெரியாருக்கு அறிமுகமாகும் முன்பே சமூகப் போராளியாக தீப்பந்தமாக எரிந்துக் கொண்டிருந்தவர் ஜீவா. பெரியார் திராவிடக் கொள்கைகளை தமிழ்நாடெங்கும் பரப்ப ஜீவாவை துணையாக்கிக் கொண்டார். ஜீவாவை யாரும் செதுக்கவில்லை சுயம்புவாக தோன்றியதால் தான் கடைசிவரை உரிமைக்காக அவரால் போராட முடிந்தது.

கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று உயர் சாதிக்காரர்கள் சொன்ன போது அங்கு போராட்டம் வெடித்தது இந்தியா முழுவதும் அந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது வைக்கம் போரில் பெரியாருடன் மாணவராக இருந்த ஜீவாவும் கலந்து கொண்டார்.

பிறந்த குலமும், சாதியும் எப்படி உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் வாழ்க்கையில் சுயஒழுக்கமும் மனிதனின் செயல்பாடுகளும் தானே அவரவர் உயர்வு தாழ்வை நிர்ணயிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது என்றால் கடவுள் வெளியேறட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்லட்டும் என்று அறைகூவல் விடுத்தவர்தான் ஜீவா.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜோசப்பூதலிங்கம் என்பவரை கைப்பிடித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர் ஜீவா. அவமானங்களுகம் எதிர்ப்புகளும் போராளிகளை ஒன்றும் செய்துவிடமுடியாது என மெய்ப்பித்துக் காட்டியவர் ஜீவா.

ஜீவா காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் கீதையில் குணத்தையும் செய்யும் தர்மத்தையும் பொருத்து மனிதர்களை நான்கு வர்ணமாக பிராமணன், சத்ரியன், வைசிகன், சூத்திரன் என்று பிரிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதே வேளையில் பிராமணன் நெறி தவறிப் போவானேயானால் அவன் வைசிகன் தானே. அதே வேளையில் வைசிகன் நன்னெறியைப் பின்பற்றுவானேயானால் அவன் பிராமணன் தானே என்ற கேள்விக்கு கடிதம் மூலம் காந்தியடிகள் இப்படி பதிலளித்தார்.

பிராமணன் தவறிழைத்தால் அவன் கெட்ட பிராமணன், வைசிகன் நன்னெறியில் நின்றால் அவன் நல்ல வைசிகன் என்றார். இந்தப்பதில் தான் ஜீவாவை காந்தியத்தைவிட்டு விலக வைத்தது. வ.வே.சு ஐயரின் பரத்வாஜ ஆசிரமத்தில் மாணாக்கர்களுக்கு காந்தியத்தை கொண்டுபோய் சேர்க்க ஆசிரியராகச் சென்ற ஜீவா அங்கு உயர்வகுப்பு மாணவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் தனித்தனியே உணவு பரிமாறப்படுவதைப் பார்த்து ஆசிரமத்திலிருந்து விலகி சிராவயலில் காந்தி ஆசிரமத்தை தொடங்கினார். 1932ல் காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு முதல்முறையாக சிறைக்குச் சென்றார்.

பகத்சிங் தோழர்களை சந்தித்தபின்புதான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது ஜீவாவுக்கு. நாச்சியார்புரத்தில் உண்மை விளக்க நிலையம் என்ற ஆசிரமம் அமைத்து வர்க்கப் போரையும், சாதியத்துக்கு எதிரான போரையும் முன்று நின்று நடத்தினார்.

பகத்சிங் தனது தோழனுக்கு எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற கடிதத்தை மொழிபெயர்க்கும் பணியை பெரியார் ஜீவாவுக்கு வழங்கினார். அதை மொழி பெயர்த்ததுக்காக வெள்ளைய அரசாங்கம் ஜீவாவுக்கு விலங்கிட்டு அடித்து வீதிவீதியாக அழைத்துச் சென்றது.

புரட்சி என்பது மக்களை மந்தை ஆடுகளாக கருதும் அரசுக்கு எதிராக காட்டையே சாம்பலாக்க கனன்று எழும் சிறு தீப்பொறி என்று முழங்கியவர் ஜீவா. குனிந்து கொண்டே இருக்கும் வரைதான் குட்டுவான் எழுந்து நில் இந்த சிறு தீப்பொறி நாட்டையே பற்றி எரிய வைக்கக் கூடியதென்று ஒருநாள் அவனுக்கு புரியவை இதுதான் ஜீவாவின் சித்தாந்தம்.

தொழிலாளர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தர மேடை தோறும் முழங்கி பொதுக்கூட்ட மேடையிலேயே உயிர் விட்டவர் ஜீவானந்தம். 1952ல் சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் ஜீவா முதல்முறையாக தமிழ்நாடு என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தினார்.

ஒடுக்கப்பட்டோருடைய உரிமையை மீட்க ஊர்தோறும் கூட்டம் நடத்தி முழங்கிய ஜீவா தன் மகள் குமுதாவை அவள் பிறந்து 17 ஆண்டுகள் கழித்துதான் சந்திக்க முடிந்தது. பொது வாழ்க்கையில் ஜீவா பெற்றது குறைவு ஆனால் இழந்தது ஏராளம்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ்மண்ணுக்காகவும், தமிழ்மக்களுக்காகவும் தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தன்னலமற்றவர் ஜீவா. அக்காலகட்டத்தில் சாதிய அடக்குமுறைகளை பொதுமக்கள் மீது காட்டிய முதலாளிவர்க்கத்தின் மீது ஜீவாவைப்போல் யாருக்கும் கோபாவேசம் காணப்படவில்லை.

தனது கொள்கைக்கு ஒத்துப் போகாத இயக்கத்திலிருந்து விலகி சுயமரியாதை சமதர்ம இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செயக் கருதியிருக்கின்றாயடா என்ற பாரதியின் வரிகளில் காணப்படும் ரெளத்திரம் ஜீவாவிடம் இருந்தது. ஜீவா தேடியதற்கான விடை மார்க்சியத்தில் தான் கிடைத்தது. 1929ல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீவா தான் இறக்கும் வரை கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார்.

சாதியத்தை முற்றிலும் ஒழிப்பதே ஜீவாவின் கனவாக இருந்தது. ஜீவானந்தம் போராட்டங்களிலும், சிறையிலும், பொதுக்கூட்ட மேடைகளிலுமே தன் வாழ்நாளில் அதிக காலத்தை செலவளித்தார். இதனால் அவர்பட்ட அவமானம், அடிகள், எதிர்ப்புகள் ஏராளம். எதற்கும் அஞ்சாத சிங்கமாக வாழ்ந்தார் ஜீவானந்தம். அவர் காலத்தில் பல எழுச்சிமிக்க தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன.

அதனை முன்னின்று நடத்திக் காட்டியவர் ஜீவானந்தம். தமிழக அரசியல் வரலாற்றில் விலைபோகாத மனிதர் ஒருவர் உண்டென்றால் அவர் ஜீவானந்தம் தான். எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவனின் வார்த்தைகளை வேத வாக்காக நம்பியவர் ஜீவானந்தம். இந்தியா சுதந்திரமடைந்த பின் கம்யூனிஸ்ட்கள் 1948ல் கல்கத்தாவில் ஒன்றுகூடினர்.

புரட்சிகள் கொடுங்கோலாட்சியின் கொடுமையை குறைக்கவில்லை இன்னொரு கொடுங்கோலனிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துள்ளன என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். புரட்சியின் மூலம் புதிய பாரதத்தைக் கண்டடைவோம் என கோஷம் எழுப்பினார்கள்.

1948 – 50வரை கம்யூனிஸ்ட்கள் அரசின் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். கம்யூனிச வரலாற்றில் கருப்பு வருடங்கள் அவை. 1939 – 45 வரை தமிழ்நாட்டில் ஜீவா நடமாடமுடியாத சூழ்நிலை நிலவியது. அவருக்கு அரசாங்கம் வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. அப்படியும் அவருடைய போராட்டக் குணத்தை மழுங்கச் செய்ய முடியவில்லை. 1951ல் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.

அது முதற்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை உயிர்த்தெழ வைக்க வேண்டிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 1952ல் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

ராஜாஜி முதல்வராக இருந்தபோதே குலக்கல்வியை எதிர்த்தவர் ஜீவானந்தம். 1962ல் தேர்தலில் இதே வண்ணாரப்பேட்டை நின்று தோற்கிறார். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், மொழிக்காகவும் வாழ்ந்த ஜீவாவை தமிழக மக்கள் டெபாசிட் இழக்க செய்தார்கள். அந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 10049.

அதே தொகுதியில் சுயேட்சையாக நின்ற எந்த அரசியல் பின்புலமுமில்லாத லிங்கேசனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 8250. இது அனைத்தும் லிங்கேசனுக்கு கிடைத்த சாதிய ஓட்டுக்கள். எந்த சாதிய உணர்வை வேரறுக்க வேண்டுமென்ற ஜீவா தன் வாழ்நாள் வரை முழங்கினாரோ அந்த சாதிய உணர்வு நாடு சுதந்திரமடைந்த பின்பு அங்குசத்துக்கு அடங்காத மதம் பிடித்த யானையாகிவிட்டது.

தன் வாழ்க்கையை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் தியாகம் செய்த செய்த ஜீவாவால் ஒருமுறை மட்டுமே தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைய முடிந்தது. பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து கலகக் குரல் எழுப்புவானாயின் நீ ஒருவனே மரணத்தை வென்றவன். ஜீவா தனியொருவனாக நின்று மரணத்தை வென்று காட்டிவிட்டான். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் இருக்கும் வரை ஜீவாவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

- ப.மதியழகன்

Pin It

elu kundavarஇந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் இம்மண்ணில் நடைப் பெற்று வந்துள்ளன.. அந்த போராட்டங்களில் இந்திய அளவில் பழங்குடி இன மக்களின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது.

தேசத்தின் மீது உண்மை பற்று பழங்குடிகளுக்கு இருப்பதில் ஆச்சரியம் படுவதற்கு இல்லை... மண்னாசை பொன்னாசை இவர்களுக்கு இயல்பாகவே குறைவு என்பதே காரணம்.

ஆங்கிலயே ஆதிக்கத்தை எதிர்த்த சூயார்பழங்குடிகள் ஏழாண்டுகள் தொடர்ச்சியாகக் கிளர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர். வில் அம்புகளை வைத்து மட்டுமே பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியவர்கள் சந்தால் மற்றும் முண்டா பழங்குடிகள்.. ஆங்கிலேய ஆதிக்கம் வேகமாக வேரூன்ற முடியாதபடி தடுத்ததில் பழங்குடிகளுக்கு முக்கியமாகக் உண்டு..

அவர்களின் வணிக வாகனங்கள் மலைகளுக்கு இடைபட்ட கணவாய்ப் பகுதிகளைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டன. ஆம் வாகனங்கள் மறித்து சூறையாடியதோடு ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர்.

அதனுடைய நீட்ச்சியாக 1857 ல் ஆரம்பித்த சிப்பாய் கலகம் தொடங்கி இந்திய விடுதலை போராட்டம் 1919 - முதல் 1947 - வரை படிப்படியாக தேசம் முழுவதும் ஆங்கிலேய எதிர்ப்பு குரல் முழங்கியது..

அதில் காந்தியடிகள் அகிம்சை வழியில் அகில இந்திய அளவில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-8 தேதி அன்று மும்பையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் கடைசி அத்தியாயமாக எழுச்சி உடன் அமைந்தது..

‘நாம் இம்மண்ணிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவோம் இல்லையேல் செத்து மடிவோம்’ என்று முழக்கமிட்டு அடிமைத் தனத்தை அகற்றாது அதைப் பார்த்துக் கொண்டு வாழ முடியாது என்று கூறிய காந்தியடிகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு முழக்கமிட்ட சொல் ‘செய்து முடி அல்லது செத்துமடி..’ என்கிற மகத்தான சொல்..

இந்த சொல் தேசமெங்கும் சுதந்திர போராடத்தில் தன்னை அர்ப்பணித்து விடுதலைக்களத்தில் இருந்த வீரர்களை மிகவும் கவர்ந்தது. மற்றும் பலரை பங்கேற்க வைத்தது. இந்த இயக்கம் வளர்ந்து இந்திய விடுதலைப் போரில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது.

இப்போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய வெள்ளயர்களுக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியது. ஆகஸ்ட் புரட்சி (வெள்ளையனே வெளியேறு இயக்கம்)தீவிரம் அடைந்து தமிழகத்திலும் தீ போல் பரவியது.

கோவையில் விமான தளத்தை கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு அழித்தார்கள். இராணுவ முகாம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டு, அகற்றினார்கள், ஊரெங்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பாக போராட்டக்காரர்கள் குரல் மேலோங்கி இருந்தது.

குறிப்பாக மதுரை, திருச்சி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கிளர்ச்சிகள் தீவீரமடைந்தது. மண்ணின் பூர்வகுடிகள் மீது போடப்பட்ட பல கொடுஞ்சட்டங்களும் இம்மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்ததிற்கு ஒரு காரணம்.

இப்படி பல்வேறு கிளர்ச்சியின் ஒரு பகுதியாகதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் புரட்சி மிக தீவிரமடைந்தது. இந்த மாபெரும் இந்திய விடுதலைப் போராட்ட புரட்சியில் தமிழகத்தில் முதன்மையான பங்கை இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரங்கேறிய போராட்டம் பெற்றது. இது போராட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அப்போராட்டத்தில் நாட்டு விடுதலைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டகாரர்களாக தன்னையே அர்ப்பணித்தார்கள்.

அதில் குறிப்பாக தமிழினத்தின் தாய்குடியான குறிஞ்சி குறவர் பழங்குடியினத்தைச் சார்ந்த ஏழு குறவர்கள். இப்போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்று கிளர்ச்சி செய்தனர். இது திருவாடானை போராட்டத்திற்கு பெரும் வலுவூட்டியது.

கிளர்ச்சியில் ஈடுபட்ட ஏழுபழங்குடியினர்

1) பெரியாம்பிளை குறவனார்

2) சுந்தரகுறவனார்

3) இருளாண்டிகுறவனார்

4) ஆறுமுககுறவனார்

5) காளிமுத்துகுறவனார்

6) கொட்டயகுறவனார்

7) ரங்ககுறவனார்

ஆகிய எழுவரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போரடினார்கள்.

1942 யில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு பெறும் சேதம் ஏற்பற்படுத்தினார்கள். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த திருவாடனை காவல் நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிகாரர்கள் சிறைக் கதவுகளை உடைத்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டதிற்காக கைது செய்து அடைக்கப்பட்ட மற்ற போராட்டகாரர்களை விடுதலை செய்தார்கள்.

ஆங்கிலேயர்களின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய கிளர்ச்சிகாரர்களான அந்த எழுவர் உள்பட பங்கெடுத்த அனைத்து போராட்டகாரர்களையும் ஒடுக்குவதற்கு தங்களால் முடியாது என்று உணர்ந்த ஆங்கில அரசு இராணுவத்தினரை அழைத்தனர். ஆனால் இராணுவத்தினருக்கும் சுதந்திர போராட்ட வீரர்கள் கட்டுபடவில்லை.

ஆத்திரமடைந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுப்பட்டவர்களின் கிராமங்களில் அவர்கள் குடியிருந்த குடிசைகளை தீயிட்டு கொளுத்தினார்கள். போராட்டகாரர்களை கைது செய்யமுடியாத இராணுவம் போராட்டகாரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கழுதையின் மேல் ஏற்றி ஊர்வலம் வரச்செய்து அவமானப் படுத்தினார்கள்.

பெண்கள் / குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் கொடுமைப்படுத்தினார்கள் துன்புறுத்தினார்கள். இது எரிகிற நெருப்புக்குள் மீண்டும் எண்ணெய் ஊற்றுவது போல கிளர்ச்சியாளர்களின் மன நிலைக்கு இருந்ததே ஒழிய அடங்கிவிடவில்லை. மேலும் இந்நிகழ்வு போராட்டகாரர்களை ஆத்திரம் மூட்டியது. போராட்டங்கள் எரிமலை போல் எழுந்தது.

வெள்ளையர்களுக்கெதிரான போராட்டத்தில் தன் மீது ஆங்கிலேய துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை துளைத்தாலும் பரவாயில்லை என உறுதியேற்று வந்தே மாதரம் என்கிற முழக்கம் வானதிர முழங்கி மீண்டும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் திருவாடானையில் மீண்டும் போர் ஏற்பட்டது.

அடக்குமுறை செய்த ஆங்கிலேயர்களையும் ஆங்கிலேய உதவியாளர்களையும் எதிர்த்தார்கள் / தாக்கினார்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய காவல்நிலையங்கள் / சிறைச்சாலைகள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்நிலையில் இராணுவத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் பலர் சுட்டு கொல்லப்பட்டார்கள்.

பலர் கொடுமையான முறையில் தாக்கிக் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களை அலிபுரம் சிறை / மதுரைச்சிறை போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இப்போராட்டமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மாபெரும் போராட்டமாக இருந்துள்ளது. திருவாடானை கிளர்ச்சி இந்திய சுதந்திர விடுதலை போரில் திருப்புனை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதுமாக பேசப்பட்டது. போராட்டக்காரர்களின் தியாகம் அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியது.

1888 ல் பிறந்த ஆறுமுககுறவனார், இவர் தந்தையின் பெயர் குப்பையாண்டி குறவனார், இராமநாதபுரம் திருவாடனைப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டதால் அவசரச் சட்டம் 6-வது பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டும் இபிகோ 147 - வது பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (38)5 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு. மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வீர மரணம் அடைந்தார்.

திருவாடனை அதே புரட்சியில் பங்கு கொண்ட முனியாண்டி குறவனாரின் மகன் காளிமுத்து குறவனார் 1915 யில் பிறந்த இவர் துப்பாக்கி காயங்களுடன் இபிகோ 147 வது பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

கண்ணப்பகுறவனார் மகன் கொட்டயகுறவனார் 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர். சிறு வயதிலிருந்து சுதந்திர வேட்கையை உயிர்மூச்சாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது திருவாடனையில் நடந்த கிளர்ச்சியில் தீவிரம் காட்டிய கொட்டயகுறவனார் மீது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து 7 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மற்றும் அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தும்.

தூக்குதண்டனை பெற்றும் வீரமரணத்திற்க்கு விதையிட்டார். உதயன் குறவனாரின் மகன் ரங்ககுறவனார் கிளர்ச்சி செய்த காரணத்தால் இபிகோ147 -வதுபிரிவின் கீழ் கைது செய்து 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை துப்பாக்கி காயங்களோடு மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவிக்கப்பட்டு. தூக்கலிடப்பட்டார்.

குறிஞ்சி நில தொல் தமிழர்களான ஏழு குறவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்குவகித்து இந்திய விடுதலைக்கு போராடி குறிஞ்சி நில தமிழின தாய்குடி குறவர்கள் தங்கள் பங்களிப்பை செய்து தான் சார்ந்த மண்னையும் மக்களையும் தன் உயிரினும் மேலாக நேசித்துள்ளனர்.

அவர்களுடைய அர்ப்பணிப்பு தியாகத்தையும் நினைவுகூர்ந்து அவர்களை வணங்குவோம்.

- பொ.மு.இரணியன்

Pin It

பண்டைத் தமிழர்கள், புதிய கற்காலத்தில் வேட்டையாடுவதற்குக் கற்கருவிகளையே பயன்படுத்தினர். இக்காலத்தில் ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகத் தங்கி வாழவும், பயிர் செய்யவும் கற்றுக் கொண்டனர். நீரைக் குடிப்பதற்கும், பொருட்களைச் சமைப்பதற்கும் மட்பாண்டங்களைச் செய்யத் தொடங்கினர். போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாள, சக்கரத்தைக் கண்டுபிடித்தது இந்தக் காலத்தில்தான். குறிப்பாக, வாழ்க்கைப் பயன்பாட்டிற்காக மட்பாண்டங்கள் செய்யவும் சக்கரத்தைப் பயன்படுத்தினர்.

நாகரீகம் வளர்ந்தபிறகு, வரலாற்றுக் காலத்தில் கருப்பு நிறப் பானைகள், சிவப்புப் பானைகள், கருப்பும் சிவப்பும் கலந்த பானைகளை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்கினார்கள். மட்பாண்ட ஓடுகளைத் தரையில் இட்டால், உலோக ஓசை வரும் தொழில்நுட்பத்தில் மட்பாண்டங்களைத் தயார் செய்தார்கள். பொருட்களைச் சேமிக்கவும், உணவைச் சமைக்கவும், நீரினைப் பயன்படுத்தவும் தமிழர் வாழ்வில் மண்பாணடங்கள் சிறந்த பொருட்களாகக் கருதப்பட்டன.

மக்கள் பேசவும், தகவல் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்திய குறியீடுகளை மட்பாண்டங்களில் பொறித்தனர். மட்பாண்டங்கள் இன்னார், இன்னாருடையது என்பதை அறிந்து கொள்ள, தங்கள் பெயர்களை மட்பாண்டங்களில் பொறித்து வைத்தார்கள். பொருட்களின் மீது குறியீடு மற்றும் பெயர்களைப் பொறிக்கும் வழக்கம் வரலாற்றுக் காலம் தொடங்கி இன்றைய காலம் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் இதுபோன்ற குறியீடுகள் குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களிலும், மட்பாண்டங்களிலும் காணப்படுகின்றன. மட்பாண்டங்களில் விளிம்புகளுக்குக் கீழே தோள்பட்டைகளில் குறியீடுகள் காணப்படுகின்றன. சில மட்கலன்களில் நடுப்பகுதியில் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, மட்கலன்களில் சுடுவதற்குமுன் போடப்படும் குறியீடுகள்; மற்றொன்று, மட்கலன்களில் சுட்டப் பின்பு போடப்படும் குறியீடுகள் ஆகும். சுட்டபின் போடப்பட்ட குறியீடுகள் தமிழகத்தில் அதிகம் கிடைக்கின்றன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், அழகன்குளம், பொருந்தல், மாங்குடி, கீழடி ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மண்ணடுக்குகளில் முதலில் பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ் பிராமி) பொறித்த பானையோடுகளும், அதன்பின் ஆழமான பகுதியில் குறியீடுகள் பொறித்த பானையோடுகளும் கிடைத்தன. இக்குறியீடுகள் சிந்துவெளி எழுத்தை ஒத்தவையாக உள்ளன. தமிழகத்தில் நடந்த 169 அகழ்வாராய்ச்சிகளில் கொடுமணலில் மட்டுமே அதிகமான பண்டையெழுத்து (தமிழ் பிராமி) பொறித்த ஓடுகளும், குறியீடுகள் பொறித்த ஓடுகளும் கிடைக்கின்றன.

கொடுமணலில் அகழ்வாராய்ச்சி நடத்திய பேராசிரியர் முனைவர் கா. இராசன் அவர்கள், குறியீடுகளிலிருந்து பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ் பிராமி) தோன்றியது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

sindhu scriptsஇலங்கையில் அனைக்கோட்டை என்னுமிடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு முத்திரை ஒன்று கிடைத்தது. அந்த முத்திரையில் சிந்துவெளி எழுத்துகள் மூன்றும், அதற்குக் கீழே தமிழ் பிராமி எழுத்துகள் மூன்றும் பொறித்துக் காணப்பட்டன. இம்முத்திரையில் உள்ள எழுத்துகள் இரு வரிவடிவம் (Bi-lingual) கொண்டது எனப் பேராசிரியர் இந்திரபாலா கருதுகிறார்.

கீழ்வாளை என்னுமிடத்தில் மலைப்பகுதியில் கிடைத்த பாறை ஓவியத்தில் சிந்துவெளி எழுத்துகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக் குகைகளில் காணப்படும் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த குறியீடுகள் காணப்படுகின்றன. செம்பியன்கண்டியூரில் கிடைத்த புதிய கற்காலக் கருவியில் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் காணப்படுகின்றன.

கொடுமணல், அழகன்குளம், சானூர், மாங்குடி ஆகிய இடங்களில் கிடைக்கும் பானையோடுகளில் உள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளை ஒத்திருப்பதால், இங்குள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளே என்பது திண்ணம். ஆகவே, சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் எழுத்துகளைப் பயன்படுத்திய அதே காலகட்டத்தில் தமிழகத்திலும், பண்டைத் தமிழர்கள் மட்பாண்டங்களிலும் குறியீடுகள் பொறித்துள்ளனர். பண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளையும், சிந்துவெளி எழுத்துகளையும் இங்கு ஒப்பீடு செய்யலாம்.

ஊர்   மட்பாண்டக் குறியீடு  சிந்துவெளி எழுத்துகள்
 கொடுமணல்  kodumanal tamil letter 1  indus script 1
 கொடுமணல்  kodumanal tamil letter 2  indus script 2
 கொடுமணல்  kodumanal tamil letter 3  indus script 3
 கீழடி  keezhadi script  indus script 4
 கோட்டமங்கலம்  kottamangalam script  indus script 5
 அழகன்குளம்  azhakankulam script 1  indus script 6
 அழகன்குளம்  azhakankulam script 2  indus script 7
 திருநறுங்கொன்றை  thirunarunkonrai script  indus script 8
 கோட்டமங்கலம்  kottamangalam script 2  indus script 9
 பரிக்கல்நத்தம்  parikkalnatham script  indus script 10
 ஆதிச்சநல்லூர்  athichanallur script 1  indus script 11
 ஆதிச்சநல்லூர்  athichanallur script 2  indus script 12

மேற்கண்ட ஒப்பீட்டு ஆய்வால், பண்டைத் தமிழரின் மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளே என்பதை உறுதி செய்ய முடிகிறது. இச்சிந்துவெளி எழுத்துகள் வளர்ச்சியடைந்து, பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ்பிராமி)களாக உருப் பெற்றன என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

நன்றி : பேரா.க. இராசன்

- முனைவர் ப.வெங்கடேசன், வாலாசாப்பேட்டை

(சிந்தனையாளன் பொங்கல் மலர் 2019-ல் வெளியான கட்டுரை)

Pin It

muthusamy karaiyalarமுன்னுரை:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டையில் அரசியல் எழுச்சி ஏற்பட மூலகாரணமாக விளங்கிய செங்கோட்டை மிட்டாதாரரும், முதல் நகர்மன்றத் தலைவரும் வள்ளலுமான திரு. நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் சமூகப் பணிகளைக் குறித்து காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கரையாளர்கள்:

"கரையாளன்" எனும் சொல்லானது கிராமத்தில் அதிகச் செல்வங்களை வைத்திருக்கும் உரிமையாளரைக் குறிக்கும் என்று மிரோன் வின்சுலோ அகராதி விளக்கம் தருகின்றது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் பேரகராதியில் கரை எனும் சொல்லுக்கு நன்செய் நிலம் அல்லது விளைநிலம் என்ற பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது அதிக எண்ணிக்கையில் நிலங்களை வைத்து ஆளுகை செய்த யாதவ குலத்தின் ஒரு பிரிவினருக்கு "கரை ஆண்டவர்கள்" எனும் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கரை ஆண்டவர்கள் எனும் பட்டமானது பின்னாட்களில் மருவி "கரையாளர்" என்று மருவியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இத்தகைய இனப்பிரிவில் தான் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தோன்றினார்.

பிறப்பு:

நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் 1869-இல் நாராயணன் கசமுத்து சட்டநாதன் மற்றும் ஆவுடையம்மாள் தம்பதியருடைய ஏழு குழந்தைகளில் முதல் குழந்தையாக செங்கோட்டையில் பிறந்தார். சிறு வயது முதலே செல்வச் செழிப்போடு வளர்ந்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தன்னுடைய அடிப்படைக் கல்வியை செங்கோட்டையில் பயின்றார்.

தொழில்:

படிப்பை முடித்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தன்னுடைய தந்தையாரோடு இணைந்து தொழிலில் ஈடுபடலானார். தன்னுடைய பதினாறு வயதிற்குப் (1885) பின் ஒரு முறை தொழில் நிமித்தமாக தன் தந்தையாரோடு திருவனந்தபுரத்திலுள்ள தம்பனூர் சந்தைக்கு சென்றிருந்தார். அதுசமயம் அப்போதைய திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் மன்னரான ஸ்ரீ பத்மநாபதாச வாஞ்சிபால சர் ஆறாம் இராம வர்மா (மூலம் திருநாள்) அவர்கள் தன்னுடைய அரண்மனையிலிருந்து கடவுளை தரிசிப்பதற்காக பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தையும் மகனும், மகாராஜாவின் "சாரட்" வண்டி ஓட்டுநர் தங்களுக்கு பரிட்சயமானவர் என்பதை அறிந்துகொண்டனர். பின்னர் அந்த "சாரட்" வண்டி ஓட்டுனரின் வழியாக மகாராஜாவினுடைய அறிமுகத்தைப் பெற்றனர். மகாராஜாவினுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலமாக பல அரசு ஒப்பந்தங்களைப் பெற்றனர்.

திருவனந்தபுரம் சமஸ்தான திவானாக பணியாற்றிய ராஜா சர் தஞ்சாவூர் மாதவ ராவ் அவர்களின் முயற்சியால் முதன் முதலாக கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலை அமைக்கும் பணியானது 1871-இல் தொடங்கப்பட்டு 1877-இல் முடிவடைந்தது. இப்புதிய சாலையின் வருகையால் செங்கோட்டைக்கும் கொல்லத்திற்கும் இடையேயான போக்குவரத்தும் வணிகமும் அதிகரித்தது.

இந்த வாய்ப்பினை நாராயணன் கசமுத்து சட்டநாதன் அவர்களும் அவரைத் தொடர்ந்து நா.க.ச. முத்துசுவாமி அவர்களும் சரியாகப் பயன்படுத்தி தன்னுடைய வணிகத்தைப் பெருக்கினர். வியாபாரம் மற்றும் ஒப்பந்தங்கள் வழியாக ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நாகர்கோவில், ஆலப்புழை மற்றும் தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் உப்பளங்களை வாங்கினார்.

மன்னருடைய ஆதரவினால் தொழில் பெருகியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய உப்பளங்களுக்கு "ஸ்ரீ மூலம் திருநாள்" என்று மன்னருடைய பெயரையே சூட்டியிருந்தார். இதுதவிர தைக்காடு பகுதியில் ஆல்ஹகால் தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வந்தார்.

குடும்பம்:

நா.க.ச. முத்துசுவாமியின் உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர் மற்றும் சகோதரிகள் இரண்டு பேர். இச்சகோதரர்கள் ஐந்து பேரும் ஐந்து வீட்டுக் கரையாளர்கள் என்றும் அழைக்கப்படுவர்.

உடன்பிறந்த சகோதரர்கள்:

நா.க.ச. சுப்பிரமணியன்

நா.க.ச. வீரபத்திரன்

நா.க.ச. லெட்சுமணன்

நா.க.ச. கிருஷ்ணசாமி

உடன்பிறந்த சகோதரிகள்:

நா.க.ச. திருமலையம்மாள்

நா.க.ச. ராமுத்தாய் அம்மாள்

நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் தங்கம்மாள் எனும் பெண்ணை மணந்தார். இத்தம்பதியர்க்கு மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

ஆண் குழந்தைகள்:

 1. சட்டநாதன்
 2. சுப்பிரமணியன்

பெண் குழந்தைகள்:

 1. தாயம்மாள்
 2. பொன்னம்மாள்

பதவி மற்றும் பொறுப்புக்கள்:

செங்கோட்டை மிட்டாதாரர்:

கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் (கி.பி. 1790-முதல்) நடைமுறையில் இருந்த நிலவரி வசூல் முறைகள், டெக்கனியல் செட்டில்மென்ட் (decennial settlement), நிரந்தரத் தீர்வை (Permanent Settlement), ரயத்துவாரி (Ryotwari) மற்றும் மகால்வாரி (Mahalwari) என்று பல வகைப்படும். இவ்வகையான நிலவரி வசூல் முறைகளில் சற்று மாறுபட்டது மிராசு செட்டில்மென்ட். பெரும் நிலக்கிழாளர்களாக விளங்கிய மிராசுதாரர்கள் (அ) மிட்டாதாரர்கள் என்பவர்கள் பல கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வரிவசூல் செய்து அரசிடம் அளிப்பார்கள்.

இம்முறைப்படி செங்கோட்டை, அச்சம்புதூர், ஆய்க்குடி, கிளாங்காடு, பண்பொழி, சாம்பவர் வடகரை, கட்டளைக் குடியிருப்பு, புளியரை மற்றும் வல்லம் போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள "மிட்டா" (குத்தகை / ஏலம்) நிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து அப்பகுதிகளுக்கு மிட்டாதாரராக பணியாற்றினார் திரு. நா.க.ச. முத்துசுவாமி அவர்கள்.

செங்கோட்டை நகரசபைத் தலைவர்:

ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் திவானாகப் பணியாற்றிய பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் செங்கோட்டைக்கு நகர்மன்ற அந்தஸ்தானது 1912-இல் வழங்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நகரசபையின் முதல் நகர்மன்றத் தலைவராக (தன்னுடைய 43-ஆம் வயதில்) செங்கோட்டை மிட்டாதாரர் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் பொறுப்பேற்றார். இதன்பின் செங்கோட்டை நகர்மன்றத் தலைவராகத் தொடர்ந்து பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். இவருடைய காலத்திற்குப் பின்புதான் செங்கோட்டை வட்டாரத்தில் காங்கிரஸ் அரசியல் ரீதியாக வலிமையடைந்தது. இவருடைய குடும்பத்தினர் பலர் காங்கிரசில் தமிழ் மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தனர். இதனால் தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது.

சமூகப் பங்களிப்பு:

திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசியான ராணி கௌரி லக்ஷ்மி பாய் (ஆட்சி: 1810-1815) அவர்கள் 1813-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கில மருத்துவ முறையினை சமஸ்தானத்தில் அறிமுகப்படுத்தினார். டாக்டர் ப்ரோவன் என்பவரே ராணியால் (1813-இல்) பணியமர்த்தப்பட்ட முதல் ஆங்கில மருத்துவர் ஆவார். இவர் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே முதலில் மருத்துவம் செய்தார்.

பின்பு ஆங்கில மருத்துவ முறையானது ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலோ - இந்தியர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் கொல்லம் அருகிலுள்ள தங்கசேரி எனும் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ராணி கௌரி லக்ஷ்மி பாய் அவர்களின் ஆணைப்படி பொதுமக்களுக்கான முதல் நோய் தடுப்புத் துறை 1813-இல் டாக்டர் ப்ரோவனை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதுவே திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் பொதுமக்களுக்கான முதல் பொதுசுகாதார பணிக்கான முன்னெடுப்பாகும். இதனைத் தொடர்ந்து பட்டத்திற்கு வந்த கௌரி பார்வதி பாய் (1815–1829), ஸ்வாதி திருநாள் ராமவர்மா II (1813–1846), உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா II (1846–1860), ஆயில்யம் திருநாள் ராமவர்மா III (1860–1880) மற்றும் விஷாகம் திருநாள் ராமவர்மா IV (1880–1885) ஆகியோருடைய ஆட்சிக் காலத்தில் பொதுசுகாதாரத் துறை மேம்படுத்தப்பட்டது.

மன்னர் ஸ்ரீ மூலம் திருநாளுடைய ஆட்சிக்காலத்தில் (1885–1924) சமஸ்தானத்தில் நான்கு பொதுச்சுகாதார மாவட்டங்கள் (திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மற்றும் வைக்கம்) ஏற்படுத்தப்பட்டன. இதன்பின் ஆகஸ்ட் 1895-இல் இருந்து பொதுச் சுகாதாரத் துறை செயல்படத் தொடங்கியது.

1896-இல் பொதுச்சுகாதார மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு செங்கோட்டை தாலூகாவையும் இணைத்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்ட பொதுச்சுகாதார மாவட்டத்திற்கென தனியாக பொதுச்சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த நியமனமானது நா.க.ச. முத்துசுவாமி அவர்களின் கோரிக்கையின் படியே நடந்தது.

1920-ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சமஸ்தானதிற்கு உட்பட்ட பகுதிகளில் முதன்முதலாக மின்சார உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டது. சோதனை முயற்சியாக திருவனந்தபுரத்தில் 1928-இல் சிறிய அளவிலான அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு, 541 தெருவிளக்குகளுக்குகள் மற்றும் இரண்டு பயனாளர்களுக்கும் மின்சார சேவை அரசால் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1931-இல் கோட்டயத்திலும், 1933-இல் நாகர்கோவிலிலும் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செய்வதற்கான உரிமம் திருவாங்கூர் அரசால் வழங்கப்பட்டது. 1934-இல் கொல்லத்தில் டீசலில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையம் அரசால் நிறுவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு களமசேரி எனும் இடத்தில் அனல் மின்நிலையம் ஒன்று அரசால் தொடங்கப்பட்டது. நா.க.ச. முத்துசுவாமி அவர்களின் வேண்டுகோளின்படி செங்கோட்டையில் 1934-இல் அனல் மின் நிலையம் தொடங்குவதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு அதன்மூலம் செங்கோட்டைக்கு முதன்முதலாக மின்சார சேவை வழங்கப்பட்டது.

நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய தந்தையர் புரவலராக இருந்த செங்கோட்டை சட்டநாத கரையாளர் நடுநிலைப் பள்ளியை மேம்படுத்துவதற்காக நண்கொடைகள் பல வழங்கினார்.

செங்கோட்டையின் அரசியல், கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய மகன் மற்றும் அவர்களுடைய வாரிசுகளும் பெரும் பங்களிப்புச் செய்தனர். கரையாளர் குடும்பத்தினர் தேசத்திற்கும், செங்கோட்டைக்கும் ஆற்றிய சேவைகள் மற்றும் நற்பணிகள்:

 1. நா.க.ச. முத்துசுவாமியின் இளைய மகனான மு. சுப்பிரமணியன் (M.S.) அவர்கள் தமிழக மேலவை உறுப்பினராக (1956–1957) பணியாற்றினார். 1956-இல் நடைபெற்ற தமிழக எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு செங்கோட்டை தமிழகத்தோடு இணைய பாடுபட்டார். மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் படுக்கை தொகுதி (ward) அமைவதற்கு நன்கொடை வழங்கினார்.
 2. மு. சுப்பிரமணியன் (M.S.) அவர்களின் மகனான மு.சு. முத்துசுவாமி அவர்கள் 1952-இல் தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகக் காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், 1962-லிருந்து செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர்கள் வகித்த பதவியின் மூலம் செங்கோட்டைக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்தனர்.

அருங்குணமும் ஆன்மீக சிந்தையும்:

செல்வச் செழிப்பான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்வினையே மேற்கொண்டார். தமிழ் வைணவ நெறியை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். சகோதர வாஞ்சையோடு பழகுதல், கொடைத்தன்மை, இறைபக்தி மற்றும் ராஜபக்தி போன்ற அருங்குணங்கள் ஒருங்கே பெற்று விளங்கியவர் நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் என்று அவருடைய மருமகனான ஜே. சக்கரபாணி நம்பியார் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

மரணம்:

பெரும் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய அயராத உழைப்பாலும் முயற்சியாலும் மிட்டாதாரர், நகரசபைத் தலைவர் எனும் பொறுப்புகளை அடைந்த நா.க.ச. முத்துசுவாமி அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக தன்னுடைய 69-ஆம் வயதில் 19-03-1938 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

புகழாஞ்சலி:

நா.க.ச. முத்துசுவாமி அவர்களுடைய நண்பரான தென்திருவிதாங்கூர், பறக்கையைச் சேர்ந்த தமிழ் வித்துவான் தா. மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள் முத்துசுவாமி அவர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புகழ் மொழி மாலை எனும் சிறு பாடல் நூலினை இயற்றினார்.

மொத்தமாக 43 பக்கங்களை கொண்ட இந்நூலானது, பாடல் தலைவனுடைய குணநலன்களையும் வள்ளல் தன்மையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்நூலினை பதிப்பித்தவர் கரையாளருடைய இளைய மகனான மு. சுப்ரமணியன் ஆவார். இந்நூலானது 1938-ஆம் ஆண்டு நாகர்கோவில் டாஸ் அச்சாபீஸில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது.

நினைவுச் சின்னம்:

மு. சுப்ரமணியன் அவர்கள் மறைந்த தன் தந்தையாருடைய நினைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பூங்கா அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். இங்கு பூங்கா அமைவதற்காக அடிக்கல் நாட்டியவர் மு. சுப்ரமணியன் அவர்களின் சித்தப்பா மகனான திரு. சு. சட்டநாதன் ஆகும்.

பூங்காவிற்கான பணிகள் 1946-ஆம் ஆண்டு முடிவடைந்தது. "முத்துசுவாமி பூம்பொழில்" என்று அழைக்கப்படும் பூங்காவானது அப்போதைய திருவிதாங்கூர் திவானாக இருந்த சர். C.P. ராமசுவாமி அய்யர் அவர்களால் 15-03-1946 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

முடிவுரை:

செங்கோட்டையில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதிருந்த காலகட்டத்தில் முதன்முதலாக திருவிதாங்கூர் அரசரின் ஆதரவைப் பெற்று பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அப்பகுதியில் அரசியல் எழுச்சி ஏற்பட விதையாக செயல்பட்டவர் திரு. நா.க.ச. முத்துசுவாமி அவர்கள். மேலும் தன்னுடைய உழைப்பு, சேவை மனப்பான்மை மற்றும் இறைபக்தி போன்ற நற்குணங்களினால் தன்னையும் மேம்படுத்தி தான் வாழ்ந்த பகுதியையும் உயர்த்திய பாங்கினால் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரண புருஷராக விளங்குகிறார்.

குறிப்புகள்:

 1. Nagam Aiya. V. (1906). Travancore State Manual, Vol. III, op.cit, P.222.
 2. தா. மாணிக்கவாசகம் பிள்ளை (1938). நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் - புகழ் மொழி மாலை. பதிப்பகம்: டாஸ் அச்சாபீஸ், நகர்கோவில்.
 3. மு. சுப்ரமணியன் கரையாளர் (1956). சென்னை-செங்கோட்டை இணைப்பு விழா (சிறு புத்தகம்).
 4. டாக்டர் கே.கே.பிள்ளை (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் p. 483
 5. மிரோன் வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதி (2004). ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி. பக்கம்: 253.
 6. ச.சி. செல்லம் (2010). யாதவர் களஞ்சியம் (தொகுப்பு நூல்). பதிப்பாசிரியர்: மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. பக்கங்கள்: 122-130 & 476.
 7. N. சட்டநாதன் (2010). ஒரு சூத்திரனின் கதை. பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். காலச்சுவடு பதிப்பகம்.
 8. ஆ. சிவசுப்பிரமணியன் (2011). கட்டுரை: மக்கள் செலுத்திய மறைமுக வரி. கீற்று.
 9. திரு M. சுப்பிரமணியன் கரையாளர் மற்றும் திருமதி ராஜசரஸ்வதி (முன்னாள் நகர்மன்றத் தலைவி - செங்கோட்டை) தம்பதியரிடம் 30-04-2015-இல் கண்ட நேர்காணலின் வழியாக நான் சேகரித்த தகவல்கள்.
 10. Prakash B. A. (2018). Economic history of Kerala from 1800 to 1947 AD Part II: Travancore, Thiruvananthapuram Economic Studies Society, p. 28, 59, 60, 64, 67, 82.
 11. https://ta.quora.com/ஜமீன்தார்கள்-என்பவர்கள்-1
 12. http://www.tamilvu.org/ta/library-lA474-html-lA474cnt-152335
 13. https://www.hindutamil.in/news/spirituals/122110-.html

- த.ரமேஷ்

Pin It

நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம் (வேலூர்) திரும்பிக் கொண்டு இருந்தார்.

abdul hakeemநள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், ஏதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார்.

அந்தக் காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே "இராமசாமி முதலியார் தங்கும் விடுதி" என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது.

ஆனால் அங்கு சென்ற சித்தீக் ஹுசைன்'க்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. விடுதியின் வாசலில் "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டு இருப்பது கண்டு அதிர்ந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டம், உடல் நலக்குறைவு என மனத்துயரிலிருந்த அவருக்கு இந்த காட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

ஊர் திரும்பிய பின்பு கூட இந்த அவமானம் அவர் மனதில் மாறாத வடுவாகவே நிலைத்திருந்தது. பின் அவரது உடல் நிலை மோசமான போது, தனது 18 வயது மகனை அழைத்து "சென்னையில் முஸ்லீம்களுக்கான தங்கும் விடுதியைக் கட்ட வேண்டும்" என்ற தனது ஆசையை வசீயத்தாக (வாக்குறுதியாக) தனது மகனிடம் பெற்றுக் கொண்டார்.

தந்தையின் மனத்தீயை தன் மனதில் ஏந்திய அந்த இளைஞன், தனது வியாபாரத்தில் கடுமையாக உழைத்தார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த விடுதி தனது தந்தையை முஸ்லிம் என்பதற்காக அவமானப்படுத்தியதோ, அதே விடுதிக்கு அருகில், சிலரின் கடுமையான இடையூறுகளுக்குப் பின் 50,000 ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்கி,1921 ஆம் ஆண்டு 43 தங்கும் அறைகளுடன், இஸ்லாமியக் கட்டிடக் கலை அமைப்பில், தனது தந்தையின் நினைவில் "ஸித்திக் ஷராய்" என்ற பெயரில் விடுதியைத் திறந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிவாசல், தங்கும் முஸ்லிம் பயணிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு இலவசம், பின் மூன்று மாதங்களுக்குக் குறைந்த கட்டணம் எனப் பரிவோடு எழுந்து நின்றது - 'ஸித்திக் ஷராய்'.

இதன் மூலம் அந்த இளைஞனுக்கு இருந்தது வெறும் பலி வாங்கும் வெறி அல்ல; அதையும் தாண்டிய சுயமரியாதை உணர்வு என்பதை இந்தத் தமிழகம் உணர்ந்து கொண்டது. அந்த சிறப்புமிக்க இளைஞனின் பெயர் 'சி.அப்துல் ஹக்கீம் சாஹீப்'.

சி. அப்துல் ஹக்கீம் சாஹீப் அவர்கள் 1863'ல் ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையாகும். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சாஹீப் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினார்.

1965'ல் மேல் விஷாரத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அதை அப்போது திறந்து வைத்தவர் அன்றைய சென்னை மாகாண முதல்வர் பக்தவச்சலம்.

இது தவிர தமிழகத்தின் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமான நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.

சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் பள்ளி நடத்தி வந்த இந்துப் பெண் இவரிடம் உதவியை நாடி வந்த போது, அந்த பகுதியிலிருந்த தனது மகனின் வீட்டை காலி செய்யச் சொல்லி, அதை அவர்களுக்கு வழங்கினார். அங்கு அந்த பள்ளிக் கூடம் தொடர்ந்து நடக்க வழி செய்தார். அந்த பள்ளியே சி. அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லீம் பள்ளி என்ற பெயரில் பின் நாளில் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது இஸ்லாமியப் பணியிலும் சாஹிப் அவர்கள் வாரி வழங்கினார்.

வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்.

உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்.

வாணியம்பாடி முஸ்லிம் சங்க வருமானத்துக்குச் சென்னை பெரிய மேட்டில் ஆறு கிடங்குகள்.

மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்குக் கட்டிடம், மேலும் அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்.

ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு அங்காடி வாங்கி அப்துல் ஹகீம் அங்காடி என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்.

கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்.

பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப் பள்ளிக்கும் நிதி, அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி.

பல சிற்றூர்களிலும் பள்ளிகள்.

சேலத்தில் ஒரு பள்ளிவாசல்.

குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்.

மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்.

ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச் சம்பள உதவி என இவரது உதவி பட்டியல் மிக நீண்டது.

சாகிப் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியிலும் கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி முஸ்லிம் லீக்கிக்லும் முக்கிய பொறுப்புக்களில் உறுதியோடு செயல்பட்டார். இவரது அரசியல் வாழ்வில் 1936 இவர் தொடங்கிய "முஸ்லிம் முற்போக்கு கட்சி" இவர் மீது விமர்சனம் வரக் காரணமாகியது.

தமிழ் இலக்கியத்திலும் இவர் தடம் பதித்தார். காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்ற காலங்களில், அவர் சிறையிலிருந்து எழுதிய 'நேர்வழியின் விளக்கம்' மற்றும் 'நேர்வழி காட்டும் நூல்' ஆகிய இரு நூல்கள் தமிழில் சமூகத்தால் வெகுவாகப் பாராட்டப்பட்ட நூல்களாகும்.

1938 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னை வந்திருந்த சாகிப் அவர்கள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

"இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு உன்னத மனிதரை நாடு இழந்து விட்டது. கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் அயராது பாடுபட்ட ஒரு பெருமகனை நாடு இழந்துவிட்டது." என இந்து நாளிதழ் அவருக்கு இரங்கல் கட்டுரை வெளியிட்டது.(28.1.1938)

"தர்மம் குடை சாய்ந்தது" எனச் சுதேசமித்திரன் அவரது இறப்பையோட்டி தலையங்கம் தீட்டியது.

அதேபோல் இந்திய அரசின் அஞ்சல் துறை 2012 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை இவருக்காக வெளியிட்டது.

ஈகை குணம், மார்க்கப் பற்று, மத நல்லிணக்கம், மனிதநேயம், சுயமரியாதை ஆகியவற்றில் இன்றைய இளைஞர்களுக்குத் தூரத்து விண்மீனாக வழிகாட்டுபவர் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It