பிற்படுத்தப்பட்டோருக்கான கொள்கைக் குறிப்பேட்டில் பெரியார், அம்பேத்கர், நேருவின் பெயர்கள் இடம்பெறாமல் போனது ஏன்? இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் இந்த குறிப்பேட்டைப் படித்தாரா? அப்படி படித்திருந்தால் இது விடுபட்டது ஏன் என்று கேட்டாரா? எதிர்க்கட்சிகள் கேட்டதற்குப் பிறகு இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.

இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். மீண்டும் புத்தகங்கள் அச்சடிக்கப்படும் என்ற ஒரு காரணத்தை இப்போது கூறுகிறார். இவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறிக் கொண்டிருக்கும் கொள்கைத் தலைவர்களுக்கே இந்த நிலை.

நிர்வாகத்தில் ஏதோ திட்டமிட்ட சதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மோடி இடதுசாரிகளுக்கு குறி வைத்துக் கொண்டிருப்பது போல் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் சேராமல் தவிர்க்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார் ?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார்? இதற்குப் பின்னால் என்ன சதி நடக்கிறது?

குறிப்பாக தலைமைச் செயலாளர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததற்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாளர் தோழர் சண்முகம் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது அதிகார ஆணவமும் அவமதிப்புமாகவே கருத வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சமூக நீதித்துறையின் கொள்கை குறிப்பேட்டில் அருந்ததியர் என்ற பெயரே இடம்பெறவில்லை என்பதை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் வேலு அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் அமைச்சரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய 10 இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் 36 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இப்போது நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இதற்கான அரசாணை வெளியிடுவதை தொடர்ந்து தாமதப்படுத்துவது ஏன் ?

இதைவிட இப்போது மற்றொரு அரசாணை குறித்த அதிர்ச்சியான செய்தியும் வெளிவந்திருக்கிறது. அரசுத் தேர்வாணையத்தில் தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைக்காக இந்த ஆட்சி வெளியிட்ட ஆணையில் குளறுபடிகளைச் செய்துள்ளது. இது திமுக ஆட்சி ஆணையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.

முன்னுரிமை கோரும் தமிழ் வழி கல்விக்கான சான்றிதழை மாணவர்கள் ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஒரு வேளை குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பிறகு அதே மாணவர் குரூப்-1 தேர்வையோ அல்லது வேறு பிரிவு தேர்வையோ எழுத வேண்டும் என்று விரும்பினால் அப்போது இந்த தமிழ் வழி கல்வி ச்சான்றிதழை பயன்படுத்த முடியாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசாணை கூறுவதாக இப்போது செய்திகள் வந்திருக்கிறன. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாகப் பணியாற்றுவதற்கு உத்தரப்பிரதேச நிறுவனம் ஒன்றுடன் இந்த ஆட்சி ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. இதை எதிர்த்து சென்னையில் தமிழ் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன.

ஆக தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் வடநாட்டுக்காரர்கள் நடத்துனர்கள் ஆகப் போகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த ஆணைகள் எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றன ?

இந்த அனைத்து அரசாணைகளிலும் ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும் அனைத்தும் பாஜக சங்கிகளின் பார்வையோடு பிறப்பிக்கப்படுகின்றன. இதை மடைமாற்ற திமுகவோடு மோதல் போக்குகளை திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். தமிழ்நாடு எங்கே போகிறது?

‘தேவதைகள்’ பட்டம் வேண்டாம்

"தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டு விட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் " என்று பெயர் சூட்டுகிறார். தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.

முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?

தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா? அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?

எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா? பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

 - விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.