தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இந்தளவுக்கு வளரவும், அரசியல் பொது தளத்தில் விவாதப் பொருளாகவும் , வெறும்வாய் மென்ற எதிரிகள் அவல் மெல்ல வாய்ப்பளிக்கப்பட்டது எப்படி?
இது ஏதேச்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க செய்யப்பட்ட ஏற்பாடா? என்பது குறித்து, கண்டிப்பாக ஆட்சித் தலைமை உண்மையைக் கண்டறிய வேண்டும்.
திமுக ஆட்சி மற்ற கட்சிகளின் ஆட்சிகளில் இருந்து எங்கே மாறுபட்டிருக்கிறது? என்று கேட்டால், அடிப்படையில் பார்ப்பனரல்லாத மக்களின் நலனில், முன்னேற்றத்தில்,அக்கறை கொண்ட ஆட்சியாக திமுகழக ஆட்சி எப்போதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பார்ப்பனர்கள் மிக எளிதாக விளங்கிக் கொண்டு திமுகவிற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை மிக நுட்பமாக, மிக மிக நேர்த்தியாகக் கட்டமைத்து விடுகின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் பார்ப்பனர் அல்லாதார் நலனுக்கான இயக்கங்கள் இதை உணரத் தவறி விடுகின்றன.
திமுக என்பது தமிழ் காக்கும் இயக்கம், தமிழர் நலன் காக்கும் இயக்கம், தமிழ்நாட்டின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம், பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டச் சமூகத்திற்கான இயக்கம். பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகங்களுக்கான இயக்கம். மதச்சிறுபான்மைச் சமூகங்களுக்கான இயக்கம். எல்லாச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டிருக்கிற பெண்களுக்கான இயக்கம் திமுகழகம். இப்படிப் பட்ட பன்முகத்தன்மை திராவிட இயக்கத்தின் நீட்சி.
இதற்காகத்தான் திமுகவைப் பார்ப்பனர்கள் தங்களது பரம்பரை எதிரியாக இன்றளவும் கருதிச் செயல்படுகிறார்கள் . பார்ப்பன மேலாண்மையைப் பாதுகாக்க பார்ப்பனர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை வரலாறுக் காலத்தில் இருந்து பார்த்து வருகிறோம். இப்போது தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு வருவோம்.
தூய்மைப் பணிகள் மட்டுமல்ல அநேக பணிகள் அநேக பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக சேவைத்துறைகள் பல தனியார் மயப்படுத்தப்பட்டு பல ஆண்டு காலம் ஆகிவிட்டது.
தனியார்மயம் என்கிற உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவக் கட்டமைப்பை அடித்து நொறுக்குகிற அளவிற்கு மக்கள் சக்தியைத் திரட்டும் வலிமை உலகளவில் எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு பொதுவுடமை , புரட்சிகர இயக்கத்திற்கும் கூட இல்லை என்பதும், அதற்கான சமூகச் சூழல் இல்லை என்பதும் இங்கே உரிமைக் குரல் எழுப்புகிற அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
அதற்காக நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டுக் கடந்து போய்விட வேண்டுமா? அநீதிகளுக்கு எதிராக இனி யாரும் குரல் எழுப்பவே முடியாதா? என்றால் நிச்சயமாக குரல் எழுப்பியாக வேண்டும்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடனடியாகக் கைவிட வேண்டும். அவர்கள் பணியாற்றுகிற காண்ட்டிராக்டர் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்கள் பெற்று வந்த ஊதியத்தில் கைவைப்பது கூடாது என்கிற கோரிக்கை தமிழ்நாடு அரசால் உடனடியாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதை முன்வைத்து ஒரு போராட்டக் களம் உருவாவதையும், மக்கள் மடைமாற்றப் படுவதையும் அரசு தடுத்திருக்க வேண்டும். அதற்கான துரித நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். என்பதுதான் நமது கவலை.
அதேநேரம், போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து அரசும் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது என்பதை அனைவரும் அறிவோம். பணிநீக்கம் இல்லை. ஊதியக்குறைப்பு இல்லை. இவை இரண்டும் தான் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் கோரிக்கை. மாண்புமிகு மேயர் அவர்கள் ஊடக செய்தியிலேயே இதை உறுதிப்படுத்துகிறார்.
ஆனாலும் போராட்டம் நீடிக்கிறது என்கிறபோது இங்கே வேறு ஏதோ ஒன்று திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு சிரமமில்லை. உழைக்கும் மக்கள் எதன் பொருட்டோ ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மக்களின் உரிமைக் குரலுக்குத் துணை நிற்கிறோம் என்கிற போர்வையில், தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற அடையாளத்தில் வந்து , எளிய மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிற திமுகவை அம்மக்களுக்கு எதிரானதாகக் காட்டுகிறார்கள். திமுகழக அரசை அசைத்துப் பார்க்கிற ரகசிய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சிலர் திட்டமிட்டே முனைகிறார்கள். எனில் , இதை எப்படி நாம் ஆதரிக்க முடியும்?
இன்னும் சொல்லப் போனால், சாமானிய மக்களை திமுக எதிர்ப்புப் போராட்டத்தின் முகமாகவும், அவர்களது கோரிக்கைகளைமிகைப்படுத்தித் தங்களது கேடயமாகவும் பயன்படுத்திக் கொண்டு நிற்பவர்கள் உண்மையில் சம்பந்தப்பட்ட மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இதுதான் பேச்சுவார்த்தை தோல்விக்கான தொடர் காரணங்கள்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசுக்கு எதிராக யாரெல்லாம் தொடைதட்டிக் கிளம்பியிருக்கிறார்கள்? அல்லது கிளப்பி விடப்பட்டிருக்கிறார்கள் ?
சனாதனத்தை நியாயப்படுத்தி உழைக்கும் மக்களை ஏளனப்படுத்துகிற அக்கிரஹாரத்து மாமிகள், தலித் விடுதலைப் போராளிகள் என்று கூறிக் கொண்டு ஜாதியைக் கூர்தீட்டுகிற பிரிவினை சக்திகள், ஜாதீயக் கண்ணோட்டத்தில் எப்போதும் திமுகவை தீண்டத்தகாத கட்சியாகக் கருதுபவர்கள், இவர்களோடு இனத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போகிற சங்பரிவாரின் கூலிக் கும்பல், தொழிலாளர் உரிமைக்கான போராட்டக் காரர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்கள், இனஉரிமைக் காவலர்களாக சொல்லிக் கொண்டு திமுகவை மட்டுமே தங்கள் எதிரியாகக் கருதுகிற போராளிகள், தாங்கள் தான் சரியான திராவிட இயக்கக் காப்பாளர்கள் என்று கூறிக் கொள்வோர் எனப்பலரும் கரம் கோர்த்து நிற்கிறார்கள்.
இவர்களே தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் களத்தை ஆக்கிரமித்து அந்த மக்களின் உண்மையான, தேவையான உரிமைக் குரலை ஏறக்குறைய பின்னுக்குத் தள்ளிவிட்டு திமுக எதிர்ப்பு என்கிற தங்கள் அஜன்டாவை அல்லது தங்களது சொந்தத் தேவையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.
அதுதான் இப்போது நடக்கிறது. மேற்கண்ட அத்தனை போராளிகளுக்கும் மையப்புள்ளி தூய்மைப் பணியாளர்களின் நலனோ, கோரிக்கையோ அல்ல. குறைந்தபட்சம் பொது ஜனநாயக உரிமைக் குரலோ, தொழிலாளர் நலனுக்கான முழக்கமோ கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் அனைவரது ஒட்டுமொத்த முழக்கமும்
" இதுதான் திராவிடமாடலா? "
" இதுதான் சமூகநீதியா? "
" இதுதானா விடியல் ஆட்சி ? "
" இந்தத் தடவை ஜெயிச்சுடுவியா?"
என்கிற வினாக்களை எழுப்பி,
திமுகவிற்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவது மட்டுமே.
இது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மூளையில் ஏற்றப்பட்டுள்ள கடமையுணர்ச்சி சிலருக்கோ இது வடிவமைக்கப்பட்ட வேலைத் திட்டம்.
திமுக ஆட்சி என்பது அப்படியொன்றும் முழு இறையாண்மை கொண்ட சுதந்திர ஆட்சி அல்ல. அது இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கிற குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்துக் கொண்டு , பார்ப்பன-பனியா கூட்டு மிரட்டலுக்கும், வெளிப்படையான அத்துமீறலுக்கும் நடுவில் தன்னால் இயன்றளவு தம் மக்களுக்கான திட்டங்களைத் தான்கொண்ட கொள்கைப்படி செயலாக்கிட வேண்டும் என்கிற உறுதி கொண்டு பணியாற்றி வருகிற ஆட்சி என்பதை உணராதவர்கள் அல்லது உணர மறுக்கிறவர்கள் தான் மேற்கண்ட போராட்டக் காரர்கள். புரட்சிகர கண்டன்ட் ரைட்டர்கள்.
இது வெறும் திமுக எதிர்ப்புக்கு மட்டுமே பயன்படுமே அல்லாது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கோ அவர்களின் வாழ்வியல் சிக்கலுக்கோ வழிகாணப் பயன்படாது என்பதைத் தெரிந்தே அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்.
இதுதான் எப்போதும் திமுக ஆட்சியின் அய்ந்தாம் ஆண்டில் பார்ப்பனர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சூழ்ச்சித் திட்டம். அதற்கு இப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி மிகச் சரியாகத் துணைபோகிறார்கள் இந்தப் புரட்சியாளர்கள்.
ஆனால் வழக்கம்போல் அல்ல, இந்தமுறை இந்த பார்ப்பன லாபி அடியோடு வெட்டி வீழ்த்தப்படும்.
ஆமாம், அக்கிரஹாரத்து ஆசாபாசங்களுக்குத் துணை போவதைக் காட்டிலும், அறிவாலயத்துக்கு ஆதரவாக நிற்பதில் மான இழப்பொன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் திமுகவை மக்கள் விரோதக் கட்சியாகக் காட்ட முனைந்து யோக்கிய சிகாமணி பட்டம் பெறுவதை விட திமுகவின் தேவையைச் சொல்லி உங்களைப் போன்றவர்களின் இழிவுகளை எதிர்கொள்வதில் வரலாற்றுப் பிழையொன்றும் நேராது என்பதை உரக்கச் சொல்வோம்!
- கா.சு.நாகராசன்