ராகுல்காந்தி பெண்களை அடிமைப்படுத்தும் மனுசாஸ்திரம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பதிலளித்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ‘மனுசாஸ்திரம்’ புனிதமானது; இதை எதிர்த்துப் பேசுவதைக் கண்டிக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

புனேயில் நடைபெற்ற தனது நான்காவது ‘சாத்ரோன் கி பி கூஞ்ச்’ (மாணவர் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் “ஆணாதிக்க அமைப்பைத் தகர்த்தெறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

AISSMS மைதானத்தில் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில், மாணவிகளிடம் உரையாற்றிய அவர், “உரக்கப் பேசுங்கள்; பெருமையுடன் நில்லுங்கள்; சமூகத்தில் உங்களுக்கான இடத்திற்காகப் போராடுங்கள்” என்று கூறினார். மராத்தி மொழியில் பேசிய அவர், “புனே என்றாலே அன்பு” (Pune mhanje prem) என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், இளம் பெண்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. அவர்கள் தங்களது கவலைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் 70 கோடி பெண்கள், நாட்டின் 70 கோடி ஆண்களைவிட முக்கியமானவர்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து அங்கு உரையாற்றிய ராகுல் காந்தி, "பெண்கள் சிறுவயதில் தந்தையின் கீழும், திருமணத்திற்குப் பின்பு கணவனின் கீழும், கணவனின் மறைவுக்குப் பின்பு மகனின் கீழும் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் சிந்தனை வெட்கக்கேடானது. இந்த ஆணாதிக்கச் சிந்தனையே பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது" என்று சாடினார்.

“மனுஸ்மிருதியின் மறுவருகைக்கு பாஜக தலைமைதான் காரணம்” என்று குற்றம்சாட்டிய அவர், ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது இளம் பெண்கள் பயன்படுத்திய தகாத வார்த்தைகளைக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய காணொளி ஒன்றையும் ஒளிபரப்பினார். பிரதமர் அதனை “கலாச்சார அதிர்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

“ஜந்தர் மந்தரில் ஆண்களும் பெண்களும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். ஆனால், பிரதமர் பெண்கள் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மட்டுமே ‘கலாச்சார அதிர்ச்சி’ என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தெரிவிக்கப்பட்ட செய்தி என்னவென்றால், ஆண்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது பரவாயில்லை; பெண்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.” “ஆண்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்; ஆனால் பெண்கள் வீட்டுக்குள் ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்று கருதும் இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். அனைவரும் மதிக்கப்பட வேண்டும். உங்கள் இதயங்களில் இருக்கும் அச்சம் கூடிய விரைவில் அகற்றப்பட வேண்டும். நீங்கள்தான் இந்த நாட்டின் அடித்தளம்; நீங்கள்தான் அதன் எதிர்காலம்” என்று அவர் கூறினார்.

பெண்கள் வன்முறையின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். “இந்தியாவில் ஒவ்வொரு 100 பெண்களில் ஆறு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இது நேரடியான உடல் ரீதியான வன்முறை வாய்ப்புகளின் மீதான வன்முறையும் உள்ளது. பாதுகாப்பு குறித்த கவலைகளால் 50% பெண்கள் வேலைவாய்ப்புகளை நிராகரிக்கின்றனர். நிதி ரீதியான வன்முறையும் உள்ளது. ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.17,500 செலவிடப்படுகிறது. எனவே, நம் நாட்டுப் பெண்கள் மீது நேரடி வன்முறை, நிதி ரீதியான வன்முறை மற்றும் வாய்ப்புகளைப் பறிக்கும் வன்முறை என மூன்று வகையான கட்டுப்பாடுகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

இதற்குப் பதிலடியாக உத்தரப்பிரதேச ரேபரேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். "மனுஸ்மிருதி மற்றும் மனுவைப் பற்றி தவறாகப் பேசுவதற்குப் பதிலாக ராகுல் காந்தி அதர்வன வேதம், சதபத பிராமணம் மற்றும் மத்சய புராணத்தைப் படிக்க வேண்டும். அதில் மனுவின் பங்களிப்பும், இந்திய காலக்கணிப்பு முறையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என்றும் பகிரங்கமாக மனுஸ்மிருதியை ஆதரித்துப் பேசினார். இவர் குறிப்பிட்ட வேதங்களும் புராணங்களும் மனுஸ்மிருதியை விட கேவலமாக பெண்களை இழிவு செய்கின்றன.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.