செப்-29 அன்று குமாரபாளையத்தில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ‘பெரியாரின் போராட்டங்களும், மனித நேயமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி….

பெரியாரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெரியார் ஒருமுறை குன்றக்குடி ஆதீனத்திற்குச் செல்கிறார். அப்போது இளைய தம்பிரானாக இருந்த நடராஜ தேசிகர் வருகிறார். அவர் பெரியாருடைய நெற்றியில் திருநீறு பூசுகிறார். பெரியார் எதுவும் பேசாமல் இருந்துவிடுகிறார். பின்னர் உள்ளே சென்ற பிறகு முகத்தைக் கழுவிக்கொள்கிறார். அது வேறு செய்தி.

ஆனால், நீங்கள் ஏன் என்னுடைய நெற்றியில் திருநீறு பூசினீர்கள்?" என்று அவர் கோபப்படவில்லை. விடுங்கள். அது அவர்களுடைய சம்பிரதாயம். அவர்களுடைய வழக்கப்படி செய்திருக்கிறார்கள். அதனால் என்ன வந்துவிட்டது?' என்று கூறிவிட்டுச் செல்கிறார். இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கொண்டவர்தான் பெரியார், பக்தர்களிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார். பார்ப்பனர்களிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார். அதுதான் மனிதாபிமானம். மனிதர்களிடம் நேயத்தைக் காட்டுவது வேறு; கொள்கையில் உறுதியாக இருப்பது வேறு.

மறைமலையடிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட வேண்டும். இது வரலாற்றில் நடைபெற்ற ஒரு சிக்கலான நிகழ்ச்சி. வேறு செய்திக்குச் செல்வதற்கு முன்னால் இதைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. மறைமலையடிகள் ஒருமுறை சைவர்களுடைய விழா ஒன்றில் பேசுகிறார். அப்போது, கடவுளைப் பற்றிப் பேசும்போது மிகவும் கடுமையான சில கருத்துகளை அவர் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகிறது. அந்த நிகழ்ச்சிக்குச் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவரும் 'திராவிடன்' பத்திரிகையின் ஆசிரியருமான கண்ணப்பர் சென்றிருக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்களும் சென்றிருக்கிறார்கள்.

 அவர்கள் அந்தச் செய்தியைப் பெரியாரிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால், பெரியார் உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றவில்லை. 'இப்படி செய்தியைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டு, அதற்கான மறுமொழியை எழுதுவோம்' என்று கூறுகிறார். அடுத்த வாரமும் அதைப் பற்றி எழுதவில்லை. 'இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்த வாரம் எழுதுவோம்' என்று கூறுகிறார். இதற்கிடையில் மறைமலையடிகள் தன்னுடைய பேச்சு தொடர்பாக வருத்தம் தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தைக் கி.ஆ.பெ. விசுவநாதத்திடம் கொடுத்து அனுப்புகிறார்.

அப்போது கி.ஆ.பெ. விசுவநாதம் சுயமரியாதை இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்கிறார். 'குடிஅரசு' வாரத்திற்கு ஒருமுறைதான் வெளிவரும். ஆனால், 'திராவிடன்' நாளேடு தினமும் வெளிவந்து கொண்டிருந்தது. எனவே, உடனடியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தைத் 'திராவிடன்' நாளேட்டில் கொடுக்கிறார்கள். அந்த நாளேட்டில், 'மறைமலையடிகள் மன்னிப்புக் கடிதம் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு விடுகிறார்கள். இதைக் கண்ட பெரியாருக்குக் கடுமையான கோபம் ஏற்படுகிறது. உடனடியாகக் 'குடிஅரசு' இதழில் அதைப் பற்றி எழுதுகிறார். மறைமலையடிகள் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதைப் பெரியார் விளக்குகிறார். மறைமலையடிகளைத் தன்னிகரற்ற அறிஞர்களில் ஒருவராக நான் கருதுகிறேன். தமிழ் இனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அறிஞர்களில் அவரும் ஒருவர்' என்று கூறுகிறார்.

அத்துடன், ஒரு முக்கியமான செய்தியையும் வெளிப்படுத்துகிறார். மறைமலையடிகள் என்ன பேசினார் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் தனக்கு முதல் நாளிலேயே கிடைத்துவிட்டதாகப் பெரியார் தெரிவிக்கிறார். ஆனால், அந்தச் செய்தியை உடனடியாக வெளியிடாமல், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூறிக்கொண்டிருந்ததாக விளக்குகிறார். ஏன் அப்படிச் செய்தார்? மறைமலையடிகள் ஏதாவது விளக்கம் அளித்தால், அந்தப் பிரச்சினையை அத்துடன் விட்டுவிடலாம் என்பதற்காகத்தான். அவ்வளவு பெரிய அறிஞருடைய பெருமைக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகப் பெரியார் அப்படிச் செயல்பட்டார். ஆனால், மறைமலையடிகள் தாமாகவே வருத்தம் தெரிவித்து எழுதிய கடிதத்தை, மன்னிப்புக் கடிதம்' என்ற தலைப்பில் வெளியிட்டுவிட்டார்கள். இதற்காகப் பெரியார் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.

தன்னுடன் பணியாற்றுபவர்களைப் பெரியார் 'தொண்டர்கள்' என்று அழைப்பதில்லை. 'என்னுடன் பணியாற்றும் நண்பர்கள்', 'கூட்டுப் பணியாளர்கள்' என்றுதான் குறிப்பிடுவார். அப்படிப்பட்ட தன்னுடைய கூட்டுப் பணியாளர்கள் மறைமலையடிகளின் கடிதத்தை மன்னிப்புக் கடிதம்' என்ற தலைப்பில் வெளியிட்டதற்காக, மறைமலையடிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகப் பெரியார் எழுதுகிறார். எவ்வளவு பெரிய பெருந்தன்மை! மறைமலையடிகள் தன்னுடைய கருத்துக்கு மாறாகப் பேசியிருக்கிறார் என்பதற்காக அவரை இழிவுபடுத்த வேண்டும் என்று பெரியார் நினைக்கவில்லை. அதே நேரத்தில், அந்த அறிக்கையின் இறுதியில் மற்றொரு முக்கியமான கருத்தையும் எழுதுகிறார்.

தாட்சண்யம் கருதியோ, மரியாதை கருதியோ என்னுடைய கொள்கையில் ஓர் அங்குலம்கூட விட்டுவிலக மாட்டேன்' என்று தெரிவிக்கிறார். அதாவது, உங்களிடம் மரியாதை காட்டுகிறேன். உங்களுடைய பெருமையை மதிக்கிறேன். நடந்த தவறுக்காக வருத்தமும் தெரிவிக்கிறேன். ஆனால், அதற்காக என்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதுதான் பெரியாருடைய நிலைப்பாடு. இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்ட தலைவர்தான் பெரியார். மறைமலையடிகள் கடுமையாகப் பேசியிருக்கிறார் என்பதற்காக, நீங்கள் சைவர்கள்; நீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள்' என்று பெரியாரும் பதிலுக்குக் கடுமையாகப் பேசியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

பெரியார் மனிதர்களைப் பிரித்துப் பார்த்த விதமே வேறுபட்டது. அவர் மனிதர்களை இரண்டு பிரிவுகளாகத்தான் பார்த்தார். ஒன்று, உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள். மற்றொன்று, உரிமைகளைப் பறித்துக்கொண்டவர்கள். இந்த இரண்டு பிரிவினரையும்தான் அவர் எதிரெதிராக நிறுத்தினார். மனிதர்களைப் பல அடிப்படையிலும் பிரிக்கலாம். ஆனால், நம்முடைய நாட்டில் வர்ண அடிப்படையிலான பிரிவினை முக்கியமானதாக இருந்தது. வர்க்க வர்ணம் என்பது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது; விந்திய மலைக்குத் தெற்கே வர்ணங்கள் கிடையாது என்று பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கே பார்ப்பனர், சூத்திரர் என்ற இரண்டு பிரிவுகள்தான் இருக்கின்றன. மற்ற வர்ணப் பிரிவுகள் இங்கே இல்லை என்பதுதான் அந்த வாதம்.

சிலர் தங்களைச் சத்திரியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் வைசியர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால், சத்திரியர், வைசியர் என்ற வர்ணப் பிரிவுகள் விந்திய மலைக்குத் தெற்கே இல்லை என்பதுதான் அந்தக் கருத்து. அவை வடஇந்தியாவில் இருந்த பிரிவுகள். இருப்பினும், நம்முடைய மக்களில் சிலர் தங்களைச் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். வைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், பெரியார் இந்தச் சமூக அமைப்பை எப்படிப் பார்த்தார்? இந்த மக்களுக்குரிய உரிமைகளைப் பறித்துக்கொண்டு, இடையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் என்று பார்த்தார். அந்த ஆதிக்கம் ஆட்சி அதிகாரத்தில் மட்டுமல்லாமல், மக்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலையிடுகின்ற அளவுக்கு இருந்தது. நம்முடைய கடவுள் நம்பிக்கைகள் ஒரு காலத்தில் எப்படி இருந்தன என்பதைப் பற்றியும் பெரியார் சிந்தித்தார்.

மறைக்கப்பட்ட கீழடி

இப்போது கீழடி அகழாய்வு தொடர்பாகப் பல செய்திகள் வெளிவருகின்றன. கீழடி அகழாய்வில் மதம் தொடர்பான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அதை ஒப்புக்கொள்வதற்குக்கூடச் சிலர் தயாராக இல்லை, கீழடி ஆய்வுகள் தொடர்பான செய்திகள் வெளிவந்து சில ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கைகள் பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கின்றன. இருபத்தேழு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏன் அப்படி வைக்கப்பட்டிருக்கின்றன? தமிழர்களுக்கென்று தனித்துவமான நாகரிகம் இருந்தது என்பது தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்று கருத வேண்டியிருக்கிறது. வடநாட்டிலிருந்து வந்தவர்கள்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார்கள் என்ற எண்ணம் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்த நாட்டில் எல்லாமே எங்களுடையதுதான். எங்களுடைய சட்டங்கள்தான் உங்களுக்கும் பொருந்தும். எங்களுடைய பண்பாடுதான் உங்களுக்கும் பொருந்தும்' என்ற ஆதிக்க மனப்பான்மை இன்றைக்கும் தொடர்கிறது. இந்த நிலையில்தான் பெரியார் தன்னுடைய போராட்டங்களை நடத்தினார். பெரியாருடைய போராட்டங்கள் எப்படி இருந்தன என்பதை இப்போது பார்க்கலாம். போராட்டங்களின்போது அவர் நடந்து கொண்ட விதத்தில்கூடப் பல்வேறு பார்வைகள் இருந்திருக்கின்றன. அவர் எந்தப் போராட்டத்தையும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கான போராட்டமாக மட்டும் பார்க்கவில்லை. அதற்குப் பின்னால் இருக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களையும் சேர்த்துப் பார்த்தார்.

இப்போது நாம் மாநில உரிமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெரியார் காலப்போக்கில் தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்தார். 1938ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்திக்கொண்டிருந்தார். அதே நேரத்தில், மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். மாநில உரிமைகள் என்பது ஒரு சில பிரச்சினைகளோடு மட்டும் தொடர்புடையதல்ல. அது பொருளாதாரச் கரண்டலோடும் தொடர்புடையது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைச் சுரண்டுகிறார்கள் என்று தேசியவாதிகள் கூறினார்கள். இந்திய நாட்டின் செல்வங்களை ஆங்கிலேயர்கள் தங்களுடைய நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தியாவைச் சுரண்டுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். ஆங்கிலேயர்களுடைய கரண்டலை எதிர்த்துப் போராடினார்கள்.

ஆனால், பெரியார் மற்றொரு கேள்வியை எழுப்பினார். 'வடநாட்டுச் சுரண்டலைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்கிறதா? அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். ஆங்கிலேயர்கள் இந்தியாவைச் சுரண்டுவதைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், வடநாட்டினர் தென்னாட்டைச் சுரண்டுவதைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பதுதான் பெரியாருடைய கேள்வி. இந்தக் கேள்வியை முன்வைத்துத்தான் அவர் பல போராட்டங்களை நடத்தினார். ஆனால், பெரியாருடைய இந்தப் போராட்டங்களை நாம் போதுமான அளவுக்குக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். 1950ஆம் ஆண்டில் நமக்கு இடஒதுக்கீடு இருந்தது. அது ஒரு பெரிய வரலாறு, அதைப் பற்றி மக்களுக்கு முழுமையாகச் சொல்லியாக வேண்டும். இடஒதுக்கீடு என்பது என்ன? சமூகத்தில் இருக்கின்ற செல்வங்களையும் வாய்ப்புகளையும் அனைத்துச் சமூகத்தினரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் இடஒதுக்கீடு.

உழைப்பின் மூலமாக உற்பத்தியாகின்ற செல்வமாக இருந்தாலும் சரி, நாம் பெற வேண்டிய பிற வாய்ப்புகளாக இருந்தாலும் சரி, அவை அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். கல்வி வாய்ப்பாக இருக்கலாம். வேலைவாய்ப்பாக இருக்கலாம். வணிக வாய்ப்பாக இருக்கலாம். எல்லாவற்றிலும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும். அதுதான் சமத்துவம். ஆனால், நம்முடைய மக்களுக்குக் கல்வி வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை? அதற்கு என்ன காரணம் கூறினார்கள்?

'உங்களுடைய நாக்கில் சரஸ்வதி எழுதவில்லை. அதனால்தான் உங்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை' என்று கூறினார்கள், சரஸ்வதி நாக்கில் எழுதுவதற்குள் நாக்கை நீட்டாமல் உள்ளே இழுத்துக் கொண்டு விட்டீர்கள் என்று வேடிக்கையான காரணங்களையெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மையான வரலாறு என்ன?

(தொடரும்…)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.