தில்லை தீட்சிதப் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை, மோசடிகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கிறது. கோயில் நிர்வாகத்தைத் தீட்சிதர்களிடம் இருந்து பறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர். சுரேஷ்குமார் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவிடம் கோயில் நிர்வாகத்தை நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
சிவபெருமான் பூமிக்கு நேரடியாக சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பூதேவர் பரம்பரை என்று அவர்கள் மார்தட்டிக் கொண்டார்கள். எனவே தங்களை அரசு நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றார்கள்.
2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கோயில் உரிமையைக் கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்த இந்தப் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை அதிர்ச்சியடைய வைக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். தீர்ப்பில் கீழ்க்கண்ட மோசடிகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
- புராதனக் கட்டமைப்பைக் குலைக்கும் வகையில் கோயில் வளாகத்தில் தேவையில்லாத சட்டவிரோதமான கட்டுமானங்களைக் கட்டியுள்ளனர்.
- கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- கடந்த 12 ஆண்டுகளாக கோயிலின் உண்மையான வருமானத்தைத் தீட்சிதர்கள் மூடி மறைத்துள்ளனர்.
- அன்னதானம் வழங்குவதற்காக பெறப்பட்ட நன்கொடைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
- கோயில் வளாகம் உணவு விற்பனை வளாகமாக (Food court) மாற்றப்பட்டு மதம் சாராத நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- கோயில் புராதானக் கட்டமைப்புகள் சீர்குலைந்து கிடக்கின்றன.
இப்போது அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு இந்த மோசடிகளையும் குறைகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்து அறநிலையத் துறை இந்தக் குழுவுக்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
நீதிபதிகள் தீர்ப்பில் பின்னிணைப்பாக இந்த மோசடிகள், ஊழல்களுக்கு ஆதாரங்களாகப் படங்களையும் கடிதங்களையும் வெளியிட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள். பொதுத் தீட்சிதர் கட்டுப்பாட்டில் இருந்த தில்லை நடராசன் கோயில் ஊழல் இப்படி மானங்கெட்டுச் சந்தி சிரிப்பதைக் கண் திறந்து பார்க்க வேண்டும்.
தில்லை திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதப் பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தனர். இந்தத் தடையையும் உயர்நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது. திருச்சிற்றம்பல மேடையில் அனைத்து ஜாதியினரும் ஏறிப் பாடவும் தேவாரம் பாடவும் அனுமதி கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்-28ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தில்லையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை இராசேந்திரன்