ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (16)
“ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது சுமத்தியுள்ள விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம்
“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் நினைவூட்டலுக்காக சில “நாகரிக” சொற்றொடர்கள் கீழே:
“ஜஸ்டிஸ் கட்சியுடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.”
“சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.”
“1935 மார்ச் 10ஆம் நாள் `குடிஅரசு’ மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.”
“1942 வாக்கில் ப.ஜீவானந்தம் நம் ஆள்தான் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ….. …. …. வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப் பிடிக்க முயன்றது''. “இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சட்டசபை தேர்தல் வந்தது. என்னைப் போன்றவர்களுக்கும் கூட ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர் திராவிடர் கழகத்தார்.”
“இங்கிலாந்தில் லான்ஸ்பரி என்ற பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஆற்றிய உரைக்கு விடை கூறும் முறையில் ஈவெரா பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈவெரா படித்தார்.”
“ராஜாஜி இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்த கிழவிக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது. ஈவெரா சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தார். கட்டாய இந்தியை எதிர்த்து காங்கிரஸ் மந்திரி சபைக்கு ஓரளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடிந்தது''.
“முதலில் இந்தி எதிர்ப்பு வீர்ர்களை எடுத்துக் கொள்வோம். ……… …………. ……… ஈ.வெ.ரா எந்த சாக்கிலும் காங்கிரசைத் திட்டி திட்டியே சாவதென்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்து அந்த ‘புனித’ கைங்கரியத்திலே தனது ‘பொன்னான’ நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்… ……… …….. ……… ஏகாதிபத்தியத்தின் தாஸானுதாசர். ஏகாதிபத்திய எஜமானர்களின் மேஜைகளிலிருந்து விழும் ரொட்டித் துண்டுக்கு நாக்கில் ஜலம் ஊற அண்ணாந்து நிற்கும் அரசியல் பிற்போக்காளர்.”
தோழர் ஜீவாவின் புனைவுகளையும், பொருந்தா வாதங்களையும், உண்மையல்லாத வீரப்பிரதாபங்களையும் பற்றி இதுவரை விளக்கி வந்திருக்கிறோம்; இன்னும் எழுதுவதற்கும் திறனாய்வு செய்வதற்கும் ஏராளம் இருந்தாலும் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம்.
சீமானுடன் ஜீவாவை ஒப்பிட்டு பேசியதற்காக சினமுற்று சீறினார்கள். சீமான் மீது சுமத்தப்பட்ட தனிமனித ஒழுக்கம் குறித்த குற்றச்சாட்டுகள் ஜீவா மீதும் சுமத்தப்பட்டுள்ளன. நம்மால் எடுத்துக் கூற முடியும் என்றாலும் அந்தத் திறனாய்வு நமது நோக்கம் அல்ல!
இதுவரை வைக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கும், திறனாய்வுகளுக்கும் ஏதேனும் விளக்கமும், வழக்கமான சுடுமொழி பின்னூட்டமும் வருமேயானால் அதற்கும் விளக்கம் கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.
பெரியார் என்ற அந்த மாமனிதர் ஜீவாவின் அந்த நூலைப் படித்திருக்க மாட்டார் என்று நாம் யாரும் நம்ப மாட்டோம்; ஆனால் ஜீவாவின் இழிவான அவதூறுகளை புறந்தள்ளிவிட்டுதான் பெரியார் இயங்கி இருக்கிறார்; ஜீவாவோடு இறுதி நாட்கள்வரை பழகியும் வந்திருக்கிறார்; தேர்தலிலும் அவருக்கு ஆதரவளித்துள்ளார். ஆனாலும் ஒரு பயிற்சி வகுப்பில் தோழர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் சொகுசு பொதுமையர் ஒருவர் பூர்ஷ்வா பார்வை என்கிறார்; கிண்டல் சிரிப்பு என்கிறார்.
Zeal of the new convert (புதிதாக மதம் மாறியவர்களின் உற்சாக சேட்டைகள் அதிகமாகவே இருக்கும். அப்படி பல்வேறு ’புரட்சிகர’ அமைப்புகளில் இடம்பெற்று ’புரட்சிகளை’ முழுமையாக நடத்தி முடித்துவிட்டு, அண்மையில் தேர்தல் அரசியலுக்காக இந்திய பொதுவுடைமைக் கட்சிக்குள் வந்திருக்கும் ’ஒரு முழு புரட்சியாளர்’ இப்படி பதிவிட்டிருக்கிறார். என்னை உளவுத்துறைக்கும் ‘ரா’வுக்கும் இரகசிய உளவாளி என்று தனது காதில் வழியும் மூளையில் இருந்து கண்டுபிடித்து கூறியிருக்கிறார். ஜீவாவின் மீது விமர்சனம் வைத்தாலே அது உளவுத்துறையின் சதியாம்!.
அதேபோல் ஜீவாவுக்காக மற்றொருவர் சீறிப் பாய்ந்தார். அவர் இப்போது திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். குறைகூற முடியாத குணக்குன்று ஜீவாவை எப்படி விமர்சிக்கலாம்? என்று கொதித்து எழுந்த அவர் கொளத்தூர் மணி ’அற்ப மானுட பதர்’ ‘செக்கு எது? சிவலிங்கம் எது? என்று தெரியாயத பிராணி’ என்று தனது ’தத்துவமொழியில்’ கழிவைக் கொட்டியிருக்கிறார்.
கடந்த 16 வாரங்களாக ஜீவாவின் உண்மை முகத்தை கிழித்துக்காட்டி ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். சீமான் பெரியார் மீது சுமத்திவரும் இழிவுகளையும் அவதூறுகளையும் விட மிஞ்சி நிற்கிறது ஜீவாவின் எழுத்தும் பேச்சும். பெரியார் மீதான ஜீவாவின் இந்த கீழ்த்தரமான கருத்துக்களை நம்மை குற்றம் சாட்டுகிறவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? நாம் சுட்டிக்காட்டிய ஜீவாவின் பொய்மையை, நேர்மையின்மையை அவர்களால் மறுக்க முடியமா? இதற்கு ஏதேனும் விடைகூற முன்வந்தால் அதற்கும் விளக்கம் அளிப்பதற்கு நாம் தயராகவே இருக்கிறோம் என்ற உறுதியான அறிவிப்புடன் இந்த தொடரை நிறைவு செய்கிறோம்.
(நிறைவு)
- கொளத்தூர் மணி