இன்றைக்குத் தோழர்கள் ஒரு தலைப்பைக் கொடுத்து எனக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறார்கள். வெறுமனே பெரியார் பிறந்தநாள் என்றால் நாம் பேசிக்கொண்டே போய்விடலாம். ஆனால், இப்போது ‘பெரியாரின் போராட்டங்களும் மனிதநேயமும்’ என்ற தலைப்போடு இணைத்து அறிவித்திருக்கிறார்கள்.பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17 என்பது நமக்குத் தெரியும். அவருடைய 148ஆவது பிறந்தநாள் என்றும் அறிவித்திருக்கிறோம். ஆனால், விநாயகரின் பிறந்தநாள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அது எத்தனையாவது பிறந்தநாள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், அதற்குக் காவல்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறது.
வேடிக்கையாக எங்கள் தோழர் செல்வேந்திரன் அவர்கள் ஒன்று கூறுவார். அரசு அலுவலகங்களில் விநாயகரை முதலில் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள். அதுவும் காவல் நிலையத்திற்கு முன்னால் விநாயகர் இல்லாமல் இருக்க மாட்டார். சட்டம் கூடாது என்று சொன்னாலும் வைத்துவிடுவார்கள். ஏனென்றால்,
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்;
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
அதாவது, நான் உனக்கு நான்கு பொருள்களைக் கொடுக்கிறேன். நீ எனக்கு மூன்றைச் செய்தால் போதும். அதை நினைவூட்டுவதற்காகத்தான் காவல் நிலையத்தில் பிள்ளையாரை வைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறுவார். காவல்துறையினர் யாரால், எதனால் அந்தப் பதவிக்கு வந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. தாங்களே படித்து, தங்களுடைய திறமையால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி நடந்தது என்பதை நாம் வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றிலிருந்து கருதிப் பார்க்க வேண்டும்.
இங்கே இருக்கிற ஒருவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் கிடைத்திருக்கலாம். ஆனால், தங்களுக்கென்று எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், கிராமங்களில் வேளாண்மையிலும் பிற தொழில்களிலும் உழன்று கொண்டிருக்கிற மக்களை எண்ணித்தான் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
இடஒதுக்கீடு என்பது சாதாரணமான ஒன்றல்ல. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஓர் இடம் கிடைக்கிறது என்றால், எங்கோ ஒரு கிராமத்தில் தலைக்கு எண்ணெய்கூடப் பூசாமல், வெயிலில் சட்டைகூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருடைய தலையையும் எண்ணித்தான் அந்த இடம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் உங்களுக்கு இடம் கிடைக்கிறது. அதன் மூலமாகத்தான் பதவிகளுக்கு வருகிறார்கள். அந்தப் பதவிகளுக்குத் தேவையான கல்வியையும் பெறுகிறார்கள்.
ஆனால், அதையெல்லாம் அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? காவல்துறையில் இருப்பவர்களில் பாதிப் பேர் இந்துத்துவவாதிகளாக மாறிவிட்டார்கள்; பலர் ஜாதியவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரியார் இயக்கத்தைப் பார்த்தால் பிடிக்காதுதான்! மதவாதிகளுக்குப் பிடிக்காது; ஜாதிவாதிகளுக்கு அதைவிடப் பிடிக்காது. ஏனென்றால், ஜாதி இல்லை என்று சொல்லுகிறவன் அவர்களுக்குப் பிடிக்காதவன். ‘நான் எவ்வளவு பெரிய ஜாதி! கோயிலுக்குப் போனால் என்னுடைய ஜாதியின் பெருமை தெரியும்!’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பெரியாரைப் பொறுத்தவரை, அவருடைய கொள்கையைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேள்வி கேட்கிறார்கள். ‘நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையாகப் பார்ப்பன எதிர்ப்பைப் பேசுகிறீர்கள்?’ என்று ஓர் ஆங்கில ஏட்டைச் சேர்ந்தவர் கேட்கிறார். ‘Why Are you so anti-Brahmin?’ என்று கேட்கிறார். அதற்குப் பெரியார், ‘நான் வேறொன்றுமில்லை. நான் Pro-Human’ என்று பதிலளிக்கிறார். அதாவது, ‘நான் மனிதகுலத்தின் ஆதரவாளன். மனிதகுலத்திற்கு ஆதரவாளனாக இருப்பதால்தான் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டியிருக்கிறது’ என்பதுதான் அவர் கூறிய கருத்து. தன்னுடைய கொள்கையைச் சுருக்கமாகப் பெரியாரே ஒரு தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். ‘எனக்கு மனிதாபிமானம் வளர்ச்சித் திசையில் அபிமானம்தான் முக்கியம்’ என்று கூறுகிறார்.
மனிதாபிமானம் மட்டும் இருந்தால் போதாது; வளர்ச்சியை நோக்கிய மனிதாபிமானம் வேண்டும். அதாவது, மனிதநேயத்தையும் காலத்திற்கேற்ப மனித சமூகம் அடைய வேண்டிய வளர்ச்சியையும் இணைத்துத்தான் பெரியார் சிந்தித்தார். அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது வெளிப்பட்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. பெரியார் என்றால் கடுமையான மனிதர் என்று மட்டும்தான் பலருக்குத் தெரியும். ஏனென்றால், நம்முடைய எதிரிகள் அவரை அப்படித்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரையும் தங்களுக்கு விருப்பமான வகையில்தான் எதிரிகள் அறிமுகப்படுத்துகிறார்கள்.
அம்பேத்கரை அவமதிப்பவர்கள்
அம்பேத்கரை எடுத்துக் கொள்வோம். ‘அவர் சேரி மக்களுக்கான தலைவர்’ என்று மட்டும்தான் அறிமுகப்படுத்துவார்கள். அம்பேத்கர் என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித அருவருப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் ஆற்றிய பணிகள் அவர்களுக்குத் தெரியாது. அம்பேத்கர் வைஸ்ராய் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். அது இன்றைய ஒன்றிய அரசின் அமைச்சர் பதவிக்கு இணையான பொறுப்பு. அவருக்குத் தொழிலாளர் துறை வழங்கப்பட்டது. கட்டுமானம் உள்ளிட்ட சில துறைகளும் அவருடைய பொறுப்பில் இருந்தன. பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தவர் அம்பேத்கர்.
நீங்கள் எண்ணிப் பாருங்கள். அவர் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த காலத்தில் எத்தனை பட்டியலினப் பெண்கள் அரசுப் பதவிகளில் இருந்தார்கள்? எத்தனை பிற்படுத்தப்பட்ட பெண்கள் பதவிகளில் இருந்தார்கள்? பெரும்பாலும் பார்ப்பனப் பெண்கள்தான் பதவிகளில் இருந்தார்கள். அப்போது மகப்பேற்றுக்காக விடுப்பு எடுக்க வேண்டுமென்றால், பணியிலிருந்து விலகித்தான் செல்ல வேண்டியிருந்தது. குழந்தை பிறப்பும் வளர்ப்பும் முடிந்த பிறகு மீண்டும் பணிக்கு வந்தால், புதிதாகப் பணியில் சேர்வதைப் போன்ற நிலைதான் இருந்தது.
ஆனால், மகப்பேறு விடுப்புக் காலத்தையும் தொடர்ச்சியான பணிக்காலமாகக் கணக்கிட வேண்டும்; அந்தக் காலத்திற்குச் சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையைக் கொண்டுவந்தவர் அம்பேத்கர். தங்களுடைய சமூகத்தின் இழிநிலைக்குக் காரணமாக இருப்பவர்களாகக் கருதப்பட்ட பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், அவர்களைப் பெண்களாகவே கருதி அவர்களுடைய உரிமைக்காகச் செயல்பட்டார். வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்றவற்றிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். எட்டு மணி நேர வேலை என்பது அப்போது இந்தியாவில் நடைமுறையில் இல்லை. அதற்கான போராட்டம் புதுச்சேரியில் நடந்தது. ஆனால், எட்டு மணி நேர வேலைக்கான சட்ட ஏற்பாட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார். இதையெல்லாம் அவர்கள் கருதிப் பார்ப்பதில்லை.
ஒரு தலைவரைப் பற்றி மக்களிடம் எதைச் சொன்னால் அருவருப்பு ஏற்படுமோ, எதைச் சொன்னால் எதிர்ப்புணர்வு உருவாகுமோ, அதை மட்டுமே எடுத்துக்கூறி எதிரிகள் அறிமுகப்படுத்துகிறார்கள். பெரியாரையும் அப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார்கள். ‘பெரியாரா? அவர் கடவுள் மறுப்பாளர். சாமி இல்லை என்று சொன்னவர்!’ என்கிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஏதோ கடவுளுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களைப் போலவும், அன்றாடம் கடவுளிடமிருந்து பலன்களைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களைப் போலவும் நடந்துகொள்கிறார்கள்.
பெரியாரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். ஆனால், அவர் தன்னுடைய மாநாடுகளில் இரண்டு, மூன்று முறை முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். 1931ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ஒருமுறை, 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டபோது ஒருமுறை, அண்ணாவுக்குப் பெட்டிச் சாவியைக் கொடுப்பதாக அறிவித்த சிறப்பு மாநாட்டில் ஒருமுறை என மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் எதைப் பற்றியவை? அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மத விடுமுறைகளைப் பற்றியவை. பெரியார் அரசு ஊழியர்களைப் பற்றி மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களையும் கருத்தில் கொண்டார்.
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு விடுமுறை வழங்குகிறார்கள். ஆவணி அவிட்டத்திற்கு விடுமுறை வழங்குகிறார்கள். பூணூல் மாற்றுவதற்காக விடுமுறை வழங்குகிறார்கள். எத்தனை பேர் பூணூல் அணிந்திருக்கிறார்கள்? இப்போது நம்முடைய ஆட்களில்கூடப் பலர் பூணூல் அணிந்துகொண்டு, ‘எங்களுடைய பூணூல் மிகவும் சக்தி வாய்ந்தது’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். நான் அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வேன். நம்முடைய பூணூலால் எந்தப் பயனும் கிடையாது. சாவி தொலைந்துவிடாமல் இருப்பதற்காக அதில் தொங்கவிட்டுக் கொள்ளலாம். குளிக்கும்போது முதுகைத் தேய்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு பயன்பாடுகள்தான் நம்முடைய பூணூலுக்கு இருக்கின்றன.
ஆனால், பார்ப்பனருடைய பூணூல் அப்படிப்பட்டதல்ல. அது அவருக்குத் தகுதியையும் அருகதையையும் வழங்குவதாகக் கருதப்படுகிறது. பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள்? மூன்று விழுக்காடு. அதில் ஆண்கள் எத்தனை பேர்? ஒன்றரை விழுக்காடு. அவர்களிலும் பூணூல் அணியும் வயதுடையவர்கள் முக்கால் விழுக்காடுதான் இருப்பார்கள். அந்த முக்கால் விழுக்காட்டினர் பூணூல் மாற்றிக் கொள்வதற்காக மீதமுள்ள 99.25 விழுக்காட்டு மக்களுக்கும் ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெரியார் கேட்டார்.
விவரம் தெரியாத பாமர மக்கள் எங்கோ தொலைதூரக் கிராமத்திலிருந்து அரசு அலுவலகத்திற்கு நடந்தே வருவார்கள். அவர்களுக்குப் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி பற்றியெல்லாம் தெரியாது. தங்களுடைய வேலையை முடித்துக் கொள்வதற்காக வருவார்கள். ஆனால், அரசு அலுவலகம் விடுமுறை என்பதால் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். ஏன் அப்படிப்பட்ட விடுமுறைகளை வழங்க வேண்டும் என்று பெரியார் கேட்டார்.
கோகுலாஷ்டமிக்கு விடுமுறை வழங்குகிறீர்கள். சரி, அதை வைத்துக்கொள்வோம். எங்களுடைய ஊரில் கருப்புசாமிக்குப் பொங்கல் வைக்கிறோம். கிடா வெட்டுகிறோம், எருமை வெட்டுகிறோம் ஏதோ ஒரு வகையில் எங்களுடைய வழிபாட்டை நடத்துகிறோம். மாரியம்மனுக்குத் திருவிழா எடுக்கிறோம். அதற்கெல்லாம் பார்ப்பனர்களையும் சேர்த்து விடுமுறை அளிப்பார்களா? அவர்களுக்கு அந்த விடுமுறை எதற்குத் தேவை? எனவே, பெரியார் ஒரு கருத்தை முன்வைத்தார். அரசு விடுமுறை நாட்களிலிருந்து மதம் சம்பந்தப்பட்ட விடுமுறைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பத்து நாட்களைச் சிறுவிடுப்பாகச் சேர்த்துக் கொடுத்துவிடுங்கள் என்றார். ஒவ்வொருவரும் தங்களுடைய மத நம்பிக்கைக்கும் தேவைக்கும் ஏற்ப விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும் என்பதுதான் அவருடைய கருத்து.
நாங்கள் எங்களுடைய காளியம்மன் கோயிலுக்குப் போவோம். வேறு ஏதாவது கோயிலுக்குப் போவோம். எங்களுடைய தேவைகளுக்காக விடுமுறை எடுத்துக்கொள்வோம். அவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டால், அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் என்று பெரியார் கூறினார்.
பார்ப்பனர் பூணூல் மாற்றுவதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டால், மற்றவர்கள் வேலை செய்யலாம். நம்முடையவர்கள் மாரியம்மன் கோயிலுக்கோ வேறு கோயிலுக்கோ போகும்போது அவர்கள் வேலை செய்யலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைக்கேற்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் பெரியாரின் கருத்து. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பெரியார் கூறிய மற்றொரு காரணமும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.
ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நாள் புனித நாளாக இருக்கலாம். இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான நாளாக இருக்கலாம். சில இந்துக்களுக்குச் சனிக்கிழமை முக்கியமான நாளாக இருக்கலாம். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முக்கியமான நாளாக இருக்கிறது. யூதர்களுக்கும் அவர்களுடைய மத வழக்கப்படி ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, ஞாயிற்றுக்கிழமையை மட்டும் ஏன் பொதுவான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்?
அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளை விடுமுறை நாட்களாக அறிவித்துவிடுங்கள் என்றார். அந்தத் தேதிகள் எந்தக் கிழமையில் வந்தாலும் பரவாயில்லை. அந்த நாட்கள் வார விடுமுறை நாட்களாக இருக்கட்டும். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? இது ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பதற்காக அவர் இதைக் கூறவில்லை. ஒவ்வொருவருடைய உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினார். ஒருவர் நாத்திகராக இருக்கலாம். மற்றொருவர் ஆத்திகராக இருக்கலாம். ஒவ்வொருவருடைய நம்பிக்கைக்கும் உணர்வுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். இதுதான் பெரியாருடைய மனிதநேயம்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் எவ்வளவு பெரிய சண்டை இருந்தது என்பது நமக்குத் தெரியும். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். அந்தத் திரைப்படம் வெளிவந்தபோதும் பலர் அந்த நாவலைப் படித்திருப்பார்கள்.அந்த நாவலில் கல்கி ஒரு நிகழ்வை எழுதியிருப்பார். ஒரு சைவன் நடந்து சென்று கொண்டிருப்பான். அப்போது பெருமாள் கோயிலிலிருந்து ஒரு கல் பெயர்ந்து விழுந்து, அவனுடைய மூக்கில் அடிபட்டு, மூக்கு உடைந்து இரத்தம் வரும். ஆனால், அந்தச் சைவன் அதற்காக வருத்தப்பட மாட்டான். பெருமாள் கோயிலிலிருந்து கல் பெயர்ந்து விழுந்ததை நினைத்து மகிழ்ச்சியடைவான். பெருமாள் கோயிலை இடிக்கின்ற காக்கையே, நீ வாழ்க என்று கூறும் அளவுக்குச் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பகைமை இருந்ததாகக் கல்கி அந்தக் கதையில் எழுதியிருப்பார். இப்போதும் அதைப் பார்க்கலாம். ஒரே நாமத்தைப் போட்டுக் கொள்பவர்களுக்குள்ளேயே எவ்வளவு சண்டை நடக்கிறது! வடகலை நாமம், தென்கலை நாமம் தொடர்பாக அந்தக் காலத்திலிருந்தே வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காஞ்சிபுரம் கோயிலில் எந்த நாமத்தைப் போடுவது என்பது தொடர்பாக ஒரு வழக்கு நடைபெற்றது.அந்த வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதிக்கு இந்த நாமங்களைப் பற்றி என்ன தெரியும்? அவர், "It is a dispute between U mark and Y mark" என்று கூறினார்.அதாவது, 'U' வடிவத்தில் நாமம் போட்டால் அது வடகலை நாமம். 'Y' வடிவத்தில், கீழே ஒரு கோட்டுடன் போட்டால் அது தென்கலை நாமம். 'இதென்ன U வடிவத்திற்கும் Y வடிவத்திற்கும் இடையிலான சண்டையா? இதற்காகவா இவ்வளவு பெரிய பிரச்சினை?' என்று அந்த நீதிபதி கேட்டார்.
இன்றைக்கும் ஆண்டுதோறும் இந்தச் சண்டைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் அவற்றைக் காட்டுகிறார்கள். இரண்டு வகையான நாமங்களைப் போட்டுக் கொண்டிருப்பவர்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுகின்ற வார்த்தைகளைப் பார்த்தால், தெருவில் சண்டையிடுபவர்கள்கூட அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசமாட்டார்கள். அந்த அளவுக்குக் கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அவர்களுடைய மத விழாக்களுக்காக எங்களுக்கு எதற்கு விடுமுறை?
(செப்-29 அன்று குமாரபாளையத்தில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ‘பெரியாரின் போராட்டங்களும், மனித நேயமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை….)
தொடரும்…