சிதம்பரம் கோயில் சைவ சமயக் குறவர் நால்வராலும் பாடல் பெற்ற தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ்மறை! அந்தப் பாடல்களை நியாயமாகத் தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு உணவாக்கினர்.

அந்தக் காலங்களில் எழுத்துகள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில்தான். ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல; சந்தையில் கிடைக்கக்கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங்களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப்பற்றாளர்களிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லை வாழ் தீட்சதப் பார்ப்பனர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை

தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன் அப்பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தான். எல்லாப் பாடல்களும் சிதம்பரம் கோயிலில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்த சோழ மன்னன் தில்லைவாழ் பார்ப்பனர்களிடம் தேவாரப் பாடல்களை விடுவிக்குமாறு கேட்டான். தில்லைவாழ் பார்ப்பனர்கள் மறுத்துவிட்டனர்.

சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் வந்து கேட்டால்தான் கொடுக்க முடியும் என்று ஆளும் மன்னனுக்கே போக்குக் காட்டினர். இந்தத் தந்திரங்களைப் புரிந்து கொண்டான் சோழ மன்னன். சம்பந்தர், அப்பர், சுந்தரர் போல் சிலைகள் செய்து, தில்லை வாழ் பார்ப்பனர்கள் முன் நிறுத்தி தேவாரப் பாடல்களைக் கேட்டான். ‘‘இவையெல்லாம் சிலை தானே” என்றார்கள் கோயில் பார்ப்பனர்கள். ராஜராஜசோழன் பதில் சொன்னான். “நடராசரும் சிலை தானே?” பிறகு எப்படி அவனை நடராஜன் என்கிறீர்கள்? என்று எதிர்க் கேள்வி கேட்ட ராஜராஜன் தேவாரப் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து பாடல்களை வெளிக்கொணர்ந்தான்.

அன்று ராஜராஜ சோழன் கரையான் உண்டது போக எஞ்சிய தேவாரப் பாடல்களை மீட்கவில்லை என்றால் கோயில்களில் பாடுவதற்குக்கூட தமிழ் இல்லாமல் போயிருக்கும்.

இங்கே தமிழ்த் திருமுறைகள் தீட்டு மொழி!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமுடிமூலை என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி என்ற ஓதுவார். இவருக்கு வயது 73. தில்லை நடராசர் கோயிலில் சிற்றம்பல மேடையில் திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணப் பாடல்களை அவர் பாட விரும்பினார். ‘பாடக்கூடாது’ என்று தீட்சிதர்கள் தடுத்தனர். தடுத்தது மட்டுமல்ல கொடூரமாகத் தாக்கினார்கள். ‘அன்பே சிவம்’ பேசியவர்கள் அடியாட்களாக மாறினார்கள்.

ஆறுமுகசாமிக்கு ஆதரவாகப் போராட்டம் வெடித்தது! தீட்சிதர்கள் ரொம்ப சாமர்த்தியசாலிகள். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கவில்லையாம். பாடுகின்ற இடம் சிற்றம்பல மேடையாக இருக்கக் கூடாதாம். அதாவது, சிற்றம்பல மேடை என்பது மூலவர் (நடராசர்) சந்நிதியாம். அங்கு வடமொழி வேதங்கள் ஒலிக்கலாமாம். பார்ப்பனர்கள் மட்டுமே அதைச் செய்வார்களாம். மூலவர் சந்நிதியில் திருவாசகம் ஒலித்தால் தீட்டுப்பட்டு விடுமாம்! சிற்றம்பல மேடையில் பாடுவதற்கு அறநிலையத்துறை ஆணையிட்டும் தீட்சிதர்கள் தடுத்து வந்தனர். இப்போது பார்ப்பனரல்லாதார் சிற்றம்பல மேடையில் ஏறும் உரிமை மீட்கப்பட்டுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.