பண்டைய தமிழகத்தில் ஓலைகள்தான் மூல ஆவணங்களாக இருந்தன. அதன் நகல்களாகத்தான் கல்வெட்டும் செப்பேடுகளும் இருந்தன என்பது குறித்து முதலில் இங்கு பேசப்பட்டுள்ளது. அதன்பின் ஆதித்த கரிகாலன் கொலை குறித்தத் தரவுகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

அ. ஓலைகள்தான் மூல ஆவணம்

தமிழ்நாட்டில் உள்ள செப்பேடுகளுக்கும் கல்வெட்டுகளுக்கும் மூல ஆவணமாக ஓலைகள்தான் இருந்தன. சங்ககாலத்திலிருந்தே அரசு நிர்வாகத்தின் ஆவணங்களாக ஓலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிற்காலச் சோழர், பாண்டியர், பல்லவர் காலத்தில் அரசின் நிர்வாகப் பணிகளில் அரசு ஆவணங்களாக ஓலைகள் மிக முக்கியப் பங்காற்றின. அந்த அரசு ஓலைகளை மூலமாகக் கொண்டே செப்பேடுகளும் கல்வெட்டுகளும் தனியாரால் உருவாக்கிக் கொள்ளப்பட்டன. இந்த அரசு ஓலைகள் அரசின் ஆவணக் களரிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன. மத்திய அரசின் ஆவணக்களரி போக நாட்டார் அவைகளும் ஆவணக் களரிகளைக் கொண்டிருந்தன. சில ஊர் அவைகளிலும் ஆவணக்களரிகள் இருந்தன.

சோழர் கால ஆவணங்களில் ஓலையை எழுதியவர் பெயர் இருக்கும். ஓலைகளில் நிலதானத்தை அல்லது பிறவற்றைச் செயல்படுத்திய நாட்டார் அவையினரின் கையெழுத்துகளும், சாட்சிகளின் கையெழுத்துகளும் இருக்கும். ஆவண ஓலை இறுதியான பின் அதில் முத்திரையிடப்படும். ஆவண ஓலைகள் பல வகைப்படும். கோனோலை என்பது அரசனால் சொல்லப்பட்டு அரசனின் அதிகாரியால் அப்படியே எழுதப்படும் ஓலை. இந்தக் கோனோலை ஆவணக் காப்பகத்தில் பட்டோலை என்ற பிரிவில் பாதுகாக்கப்பட்டதால் அது பட்டோலை எனப்படும். அங்குள்ள அதிகாரியின் ஒப்புதல் பெற்று திருமந்திர ஓலை என்ற அதிகாரியால் அது நகல் எடுக்கப்படும்பொழுது திருமந்திர ஓலை எனப்படும். அதில் ஒரு நகல் நாட்டாருக்கு அனுப்பப்படும்பொழுது அது திருமுகம் எனப்பட்டது.

mannar mannan book on adhitha karikalan murderநாட்டார் அமைப்பு:

பண்டைய தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் நாடும் அதன் நாட்டார் அமைப்பும் மிக முக்கியமானவை. சேர, சோழ பாண்டிய அரசுகள் ஒவ்வொன்றும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு நாடு என்பது பல ஊர்களையும், சிறு நகரங்களையும் கொண்ட ஒரு முக்கிய நிர்வாக அமைப்பு. ஒரு நாடு என்பதை இன்றைய வட்டம் (தாலுக்கா) எனலாம். ஊர்களுக்கு ஊரவை இருக்கும். பிராமண ஊரவை சபை எனப்படும். நகரங்களில் நகர அவை இருக்கும். இவை அனைத்தையும் நிர்வகிக்கும் மேல் அமைப்புதான் நாட்டார் அவை. மொத்த ஊர்களில் பார்ப்பன ஊர்கள் 20 விழுக்காடு மட்டுமே. அதன் சபைகளில் மட்டுமே பார்ப்பனர் இருப்பர். ஆனால் ஊரவை, நகர அவை, நாட்டார் அவை போன்றவற்றில் அவர்களின் பிரதிநிதிகள் இல்லை. பொதுவாக அரசு நாட்டார் அவையோடு மட்டுமே தொடர்பு கொள்ளும். அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு நாட்டார்களுக்கே உண்டு. நாட்டார் அமைப்பு என்பது ஊரவை, நகர அவை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டது.

ஆவணக் களரி:

ஒரு நிலதானத்தை நிறைவேற்ற, கோனோலையாகவோ, திருமந்திர ஓலையாகவோ, திருமுகமாகவோ உள்ள அரசனின் உத்தரவை உரிய அதிகாரிகள் குழு அந்நிலத்திற்குரிய நாட்டாரிடம் ஒப்படைப்பர். அதனை நாட்டார்கள் தாங்களே எதிரில் சென்று வரவேற்று அரசனின் ஓலையை தலைமீது வைத்து வாங்குவர். பின் நாட்டார்கள் அரசனின் உத்தரவில் உள்ளபடி தானத்தை நிறைவேற்ற, முதலில் தான நிலத்தை அளந்து அதன் எல்லைகளை உறுதி செய்வர். பின் தானம் நிறைவேற்றப்பட்ட முறையை விரிவாக எழுதி தங்கள் கையெழுத்துகளோடும், சாட்சிகளின் கையெழுத்துகளோடும் ஒரு புதிய ஓலையை உருவாக்குவர். அது நிலம் கைமாறியதை மக்களுக்கு அறிவிக்கும் ஓலை என்பதால் அறையோலை எனப்பட்டது. பின் அறையோலை அரசுக்கு அனுப்பப்படும். அறையோலையில் மாறுதல்கள் இருந்தால் அவை உரிய அனுமதியோடு கோனோலையில் மாற்றப்பட்டு உரிய கையெழுத்திடப்பட்டு அவை இரண்டும் ஆவணக்களரியில் சேமிக்கப்படும். நாட்டார் அவையின் ஆவணக்களரியிலும் அவை சேமிக்கப்படும்.

செப்பேடும் கல்வெட்டும் மூன்றாம் பிரதி:

அறையோலைதான் அரசின் முறையான ஆவணம். இந்த ஆவணம் பின் கல்வெட்டாகவும் செப்பேடாகவும் மாற்றப்படலாம். எபிகிராபிகா இண்டிகா தொகுதி-3, பக்கம் 345 இன்படி செப்பேடு என்பது ‘திரிபலீ தாம்ர சாசனம்’ எனப்படும். இதற்கு திரு நா. சுப்பிரமணியம், ‘உத்தரவு முதலில் ஓலையிலும், பின் கல்லிலும், அதன்பின் செம்பிலும் எழுதப்படுவதால் செப்பேடு என்பது மூன்றாவது பிரதி ஆகிறது’ என விளக்கம் தந்துள்ளார். ஆனால் கோனோலை அரச உத்தரவின் முதல் பிரதி, இரண்டாம் பிரதி என்பது நாட்டார் அவையின் அறையோலை, செப்பேடு அல்லது கல்வெட்டு என்பன அதன் மூன்றாம் பிரதி எனலாம். கல்வெட்டு அல்லது செப்பேடு என்பன தானம் பெற்றவர் எழுதிக் கொள்பவை. சோழர் காலத்தில் நிலதானம் பெற்ற பெரும்பாலோர் செப்பேடுகளையோ, கல்வெட்டுகளையோ வெட்டிக் கொள்ளவில்லை.

பார்ப்பனர்களும் செப்பேடுகளும்

பார்ப்பனர்கள் செப்பேடுகளை வெட்டி அதில் தங்கள் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் புகுத்தியுள்ளனர். செப்பேடு என்பதில் கோனோலை, வரைவோலை ஆகியவற்றில் இருப்பது போக நிலதானம் பெற்றவரின் அல்லது செப்பேட்டை எழுதியவரின் வழக்கங்களும் நம்பிக்கைகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பார்ப்பனர் நிலதானம் பெற்ற செப்பேடுகளில் அரசு ஆவணங்களில் உள்ளது போக காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றன எழுதப்பட்டிருக்கும். இவை பார்ப்பன நூல்களின் வழிகாட்டுதல்படியும், தானம் பெற்றவரின் அனுமதியை மட்டும் கொண்டு பார்ப்பனக்கவிஞர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும். ஆகவே செப்பேடு என்பது அரசு ஆவணத்தின் நகலாக மட்டும் இல்லாமல் தானம் பெற்றவரின் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் கொண்டிருக்கும் என்பதால் அதனை அரசு ஆவணத்தின் உண்மை நகலாகவும் கொள்ளமுடியாது. செப்பேடாக மாற்றிக் கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

சோழ பாண்டிய அரசின் ஆட்சிமொழி ‘தமிழ்’:

பார்ப்பனர் அல்லாத மற்றவர்களின் செப்பேடுகளில் புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றவை இருக்காது. சான்றாக சிறிய இலெய்டன் செப்பேடு, திருக்களர் செப்பேடுகள் போன்றனவற்றைச் சொல்லலாம். சோழ அரசின் ஆட்சிமொழி தமிழ் என்பதால் கோனோலை, அறையோலை போன்றன முழுமையாகத் தமிழில்தான் எழுதப்பட்டன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கோனோலை, அறையோலைப் பகுதிகள் தமிழில்தான் எழுதப்பட்டன. ஆனால் காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றவை பெரும்பாலும் சமற்கிருதத்தில் எழுதப்பட்டன. அவை அரசின் ஆவணங்களோ, அரசின் கருத்துகளோ அல்ல. எனினும் இதனை அறிந்தோ அறியாமையாலோ வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இந்த சமற்கிருதத்தில் தானம் பெற்றவரின் அனுமதியின் பேரில் எழுதப்பட்ட அவர்களது நம்பிகைகளையும் வழக்கங்களையும் சோழ அரசின் வரலாறாக அதன் கருத்தாகக் கொண்டு வரலாறு எழுதுவதுதான் இங்கு பெரும் பிரச்சினை.

பார்ப்பனியமயமான வரலாறு:

தமிழ்நாட்டின் வரலாறு பெரும்பாலும் இந்தச் செப்பேடுகளின் அரசு ஆவணமில்லாத சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றனவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் அவ்வரலாறு பார்ப்பனமயமாக்கப்பட்ட வரலாறாக உள்ளது என்பதைப் பலரும் அறியவில்லை. 1890-2009 வரையான 119 ஆண்டுகளில் மைப்படிகள் எடுக்கப்பட்ட ஒரு இலட்சம் கல்வெட்டுகளில் 65000 கல்வெட்டுகள் தமிழ்க்கல்வெட்டுகள். ஆனால் அவை நூலாக வெளிவரவில்லை. நீதிமன்றத் தீர்ப்புப்படி மைசூரிலிருந்து 2022ஆம் ஆண்டு இறுதிவரை 13000 கல்வெட்டுப்படிகள் தான் வந்துள்ளன. மீதி உள்ள கல்வெட்டுகளின் நிலை பற்றித் தெரியவில்லை. அது போன்றே ஓலைச்சுவடிகள் வரலாற்றுக்குப் பயன்படக் கூடியவை. அவற்றிலும் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன. கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படி எடுத்து நூலாக்கி ஆய்வு செய்யும்பொழுதான் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை அறிய இயலும்.

செப்பேடுகளின் சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றனவற்றைக் கொண்டு உண்மையான வரலாற்றைக் கண்டறிய இயலாது. அவை அரசின் ஆவணங்கள் அல்ல.

சான்றாதார நூல்: ஆதித்த கரிகாலன் கொலை, இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், மே-2023. பக்: 47-197, 529-557.

ஆ. ஆதித்த கரிகாலன் கொலை

உடையார்குடிக் கல்வெட்டு தனி நபர் தானக்கல்வெட்டு:

உடையார்குடிக் கல்வெட்டு என்பது இராசராச சோழன் வெட்டிய கல்வெட்டு அல்ல. அது பரதன் எனப்படும் வியாழ கசமல்லப் பல்லவரையன் என்ற தனியாரால் வெட்டப்பட்ட தனிநபர் தானக் கல்வெட்டு. இராசராசன் தனது 2ஆம் ஆட்சியாண்டில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற மூன்று துரோகிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் உடைமைகளை (அரசால் முன்பே கைப்பற்றப்பட்ட) விற்பனை செய்ய ஊர்ச்சபைக்கு ஆணையிடுகிறான். அதன்படி துரோகிகளின் தம்பியான மலையனூரான், அவன் மகன், அவன் தாயார் ஆகிய மூன்று பேர்களின் நிலத்தை மட்டும் ஊர்ச்சபையிடம் இருந்து விலைக்கு வாங்கிய பரதன் எனப்படும் வியாழ கசமல்லர், அந்த நிலத்தைக் கோவிலுக்குத் தானம் தருகிறார். அவர் தான் தானம் தந்ததை ஆவணப்படுத்த, இந்தக் கல்வெட்டை வெட்டுகிறார்.

பேரரசன் இராசராசனின் திருமுகம்

இக்கல்வெட்டில் சோழப் பேரரசன் இராசராசன், வீர நாராயண சதுர்வேதி மங்கள சபையோருக்கு உத்தரவிட்ட திருமுகம் அப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருமுகத்தின் நோக்கம் முன்பே பறித்து வைக்கப்பட்டிருந்த மூன்று துரோகிகள், அவர்களது உறவினர்கள் ஆகியவர்களின் உடைமைகளை விற்பனை செய்வதுதான். துரோகிகளுக்கு, தண்டனைகள் முன்பே தரப்பட்டு விட்டது என்பதால் மூன்று துரோகிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? எப்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டது? போன்ற தகவல்களை இராசராசன் தனது திருமுகத்தில் தரவில்லை. ஆகவே கொலை நடந்த கி.பி. 971ஆம் ஆண்டு அல்லது அதன் பிந்தைய ஓரிரு ஆண்டுகளுக்குள் துரோகிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டு விட்டது. அப்போதே அனைவருடைய உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை சபையாரின் பொறுப்பில் விடப்பட்டுவிட்டது. இராசராசன் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் (கி.பி. 987) பறிமுதல் செய்யப்பட்டிருந்த அவர்களின் உடைமைகளை விற்பனை செய்வதற்காக இருவரை நியமித்து, அவர்களின் மேற்பார்வையில் அந்த உடமைகளை சபையோர் விற்க, தனது திருமுகத்தில் ஆணையிட்டுள்ளான்.

கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான, சோமன்…., தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராசன், இவன் தம்பி பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரம்மாதிராசன், இவர்களின் உடன் பிறந்த மலையனூரான், இவர்களின் தம்பிமார்கள், இவர்கள் மூன்று பேரின் மகன்கள், அவர்களின் மனைவிமார்கள், தாயார், அவர்களுடைய தந்தையின் மூத்த சகோதரர்கள், அவர்களின் மகன்கள், இவர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள், இவர்களின் தாயோடு பிறந்த தாய்மாமன்கள், இவர்களின் உடன் பிறந்த பெண்களைத் திருமணம் செய்தவர்கள், இவர்கள் பெற்ற பெண்களைத் திருமணம் செய்தவர்கள் ஆகிய அனைவரின் உடைமைகளையும் சபையோர் விற்பனை செய்ய இராசராசன் தனது திருமுகத்தில் ஆணை தருகிறான்.

அந்தத் திருமுகம் இந்த உடைமைகளைப் பறிமுதல் செய்வது குறித்து எதுவும் பேசவில்லை. அவைகளை விற்பனை செய்வது குறித்தே பேசுகிறது என்பதால் இந்த உடைமைகள் முன்பே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. துரோகிகளுடையது மட்டுமில்லாமல், அவர்களின் உறவினர்கள் அனைவருடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் துரோகிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது எனலாம்.

வியாச கசமல்லர் தரும் தகவல்கள்:

இத்தனை உறவினர்களில் துரோகிகளின் தம்பியான மலையனூரான், அவனது மகன், அவனது தாய் ஆகிய மூன்று பேரின் நிலத்தை மட்டுமே வியாச கசமல்லர் வாங்குகிறார். அந்த நிலத்தின் அளவையும், எந்தக் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது என்பதையும், எதற்காகத் தானம் வழங்கப்பட்டது என்பதையும் இக்கல்வெட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டில் இராசராசனின் திருமுகமும், வியாச கசமல்லரின் மேற்கண்ட தகவல்களும் மட்டுமே உள்ளன. வேறு தகவல்கள் இல்லை.

ஆட்சியாண்டுகளும் உண்மை நிகழ்வுகளும்:

பிற்காலச் சோழர் ஆட்சியில் இராசகேசரி, பரகேசரி என பட்டம்பெற்ற இரு அரசர்கள் ஒரே சமயத்திலும் அல்லது தனியாகவும் ஆண்டனர். ஆய்வாளர் சக்திசிரி, வானியல் குறிப்புகளையும் இன்ன பிறவற்றையும் அடிப்படையாக கொண்டு அரசர்களின் ஆட்சியாண்டுகளைக் கணக்கிட்டுள்ளார். இந்த ஆட்சியாண்டுகள் எல்லாவகையிலும் பொருந்திப் போகின்றன.

 பெயர் ஆட்சிக்காலம் (கி.பி) ஆண்டுகள்

1.இராசகேசரி சுந்தர சோழன் 962-979 18

2.பரகேசரி ஆதித்த கரிகாலன் 966-971 5

3.பரகேசரி உத்தம சோழன் 972-987 16

4.இராசகேசரி இராசராசன் 985-1014 29

5.பரகேசரி இராசேந்திரன் 1012-1044 33

இதன்படி கி.பி. 971இல் ஆதித்த கரிகாலன் இறந்த பிறகும் சுந்தர சோழன் கி.பி. 979 வரை, 8 முதல் 9 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். ஆகவே அவர் காலத்திலேயே கொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஆகவே மகன் கொலை செய்யப்பட்ட துக்கத்தால் அவர் இறந்தார் எனக் கூற முடியாது. அதுபோன்றே உத்தம சோழன் அல்லது இராசராச சோழன் போன்றவர்களின் மீது பழி சுமத்துவது, பொறுப்பற்ற செயல்.

சோழர் ஆட்சியில் மிக அதிக அளவில் குற்றங்கள் செய்தவர்களாகவும் மிக அதிக அளவில் தண்டனை பெற்றவர்களாகவும் பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள் என தொல்லியல்துறை வெளியிட்ட ‘திருமால்புரம்’ என்ற ஆய்வு நூலும் ‘அருண்மொழி ஆய்வுத் தொகுதி’ என்ற நூலில் உள்ள இல. தியாகராசன் அவர்களின் கட்டுரையும் உறுதி செய்கின்றன.

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் சோழ அரசில் உயர் அதிகாரிகளாக இருந்த, பிரம்மாதிராசன் என்ற பார்ப்பனப் பட்டப் பெயரைப் பெற்ற பார்ப்பனர்கள். சோழ அரசின் அதிகாரிகளாக இருந்து கொண்டே ஆதித்த கரிகாலனைக் கொலை செய்து ஏன் அவர்கள் துரோகிகளாக ஆனார்கள் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. இவர்கள் சத்திரியர்களை அழித்த பரசுராமன் என்ற புராணக் கதைமாந்தன் வழி வந்தவர்களாகக் கருதும் நம்பூதிரிகள் என்பதால் சத்திரியனான ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. அதுபோன்றே ஆதித்த கரிகாலன் காஞ்சியை ஆண்டபோது, அங்கு இருந்த பார்ப்பனர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையால் கரிகாலன் கொல்லப்பட்டான் என்பதும் முழு உண்மையல்ல.

ஆனால் இராசராசன் காந்தளூர்ச்சாலையைத் தாக்கியதிற்கும், கரிகாலனின் படுகொலைக்கும் தொடர்புண்டு.

சான்று நூல்: ஆதித்த கரிகாலன் கொலை, இரா.மன்னர் மன்னன், பயிற்றுப் பதிப்பகம், மே-2023, பக்: 375-460, 383-391, 447-448, 468-471, 520-528.

இ. படுகொலைக்கான உண்மைக் காரணம்

கி.பி. 250 க்கு முன்வரை கேரளா தமிழகத்தின் சேர வேந்தர்கள் ஆண்ட பகுதியாக இருந்தது. கி.பி. 250இல் நடந்த களப்பிரர் படையெடுப்பும் அவர்கள் ஆட்சியும் தமிழகத்திற்கும் இன்றைய கேரளாவிற்கும் பேரழிவைக் கொண்டு வந்தது. கி.பி. 550 வாக்கில் பாண்டிய, பல்லவ அரசுகள் தமிழகத்தில் உருவாகின. கேரளாவில் சிறு குறு அரசுகள் தங்களுக்குள் போராடிக் கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் அங்கு குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் கி.பி. 8 - 10 ஆம் நூற்றாண்டுக்குள் கேரள சமூகத்தில் நிலபுலங்களும், பெருஞ் செல்வமும் கொண்ட ஆதிக்கச் சக்தியாக உருவாகி, கேரளாவில் சம்பந்தம் முறை. மறுமக்கள் தாயமுறை போன்ற பல முறைகேடான திருமண முறைகளை, சாதியத்தை, தீண்டாமையைக் கொண்டு வந்து கேரள மக்களை, தங்களது அடிமைகளாக மாற்றியமைத்து உழைப்புச் சுரண்டல் முதல் பாலியல் சுரண்டல்வரை நடைமுறைப்படுத்தி அதன் பலன்களை முழுமையாக அனுபவித்து, செல்வச்செழிப்போடும் சுகபோகமாகவும் வாழ்ந்து வந்தார்கள் (1)

கேரளாவில் தாங்கள் பெருவெற்றி பெற்றதால், அதுபோன்ற ஒரு வெற்றியை, தமிழகம் முழுவதும் கொண்டு வருவது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அதனால் சோழ, பாண்டிய அரசுகளில் செல்வாக்கு மிக்க அதிகாரிகளாக ஆவது, அதன்மூலம் சோழ பாண்டியர்களுக்கு இடையே பகைமையை உருவாக்கி, தாங்கள் பலமும், செல்வாக்கும் பெறுவது, தங்களது வைதீக பார்ப்பனியத்தையும், கேரளாவைப் போன்ற சாதியத்தையும் இங்கு கொண்டு வருவது போன்ற திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால் சோழர் ஆட்சி மிகவும் வலிமையானதாக ஆகிக் கொண்டிருந்தது. ஆதித்த கரிகாலன் அதற்கு மேலும் வலிமை சேர்ப்பவனாக இருந்ததோடு, கேரளா முதல் தென்னிந்தியா முழுவதையும் சோழர் ஆட்சியின் கீழ் கரிகாலன் கொண்டு வருவான் என்ற பயம் உருவாகியது. பாண்டியர்களுக்கு எதிரான சேவூர்ப் போரில் அவன் காட்டிய வீரம் கேரள பார்ப்பனர்களை அச்சத்திற்குள்ளாக்கியது (2). அதனால்தான் ஆதித்த கரிகாலன் இறந்த பின், ஆதித்த கரிகாலன் என்ற சூரியன் மறைந்தான் என்கிறார் நீலகண்ட சாத்திரி (3). ஆகவே ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரமும், கூர்மையான அறிவும், அசாத்திய திறமையும், சிறந்த ஆளுமையும் கொண்டவனாக இருந்தான். அதுபோன்றே தனது எதிரிகளை அழித்தொழிப்பதிலும் உறுதியானவனாக இருந்தான். இதுபோன்ற மிகச்சிறந்த அரசனுக்குரிய பண்பு நலன்கள் அவனிடம் இருந்ததால்தான் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளில், படங்களில் பார்ப்பனர்கள் அவனைக் கேவலமாக சித்தரித்து வருகிறார்கள்

காஞ்சியை அவன் ஆண்டபோது பார்ப்பனர்களையும் பொது மக்களில் ஒருவராகவே அவன் நடத்தினான். தவறுகளுக்கு உரிய தண்டனைகளை வழங்கினான். இவை அவன்மேல் பகைமையை உருவாக்கியது. காஞ்சியை ஆண்டதால், கேரளாவில் பார்ப்பனர்களுக்குப் போர்ப்பயிற்சிகளை வழங்கும் காந்தளூர்ச்சாலை போன்ற கடிகைகள் குறித்து அறிந்தவனாகவும், காஞ்சியில் அதுபோன்று மறைமுகமாகச் செயல்பட்ட கடிகைகளைக் கண்காணித்து ஒடுக்கியவனாகவும் அவன் இருந்தான். வீர பாண்டியனுக்கு ஆதரவாக இருந்த கேரளா மீது படையெடுத்து, அதனைச் சோழர் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதும், காந்தளூர்ச்சாலை போன்ற பார்ப்பனர்களுக்கு வேதக்கல்வியோடு போர்ப்பயிற்சிகளையும் வழங்கி வந்த கடிகைகளை (4) அழித்தொழித்து நம்பூதிரி பார்ப்பனர்களை அடக்கி ஒடுக்குவதும் அவன் திட்டமாக இருந்தது. இதனை அறிந்த நம்பூதிரிகள், கேரளாவையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள அவனைப் படுகொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்தார்கள். ஏனென்றால் கேரளா அவர்களது சமூகத்தின் சுகபோக வாழ்வுக்கு மிகத் தேவையானதாக இருந்தது. ஆகவே சோழ அரசின் உயர் அதிகாரிகளாக இருந்த நம்பூதிரி பார்ப்பனர்களின் மூலமே, திட்டம் தீட்டி, சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றார்கள்.

தங்கள் நோக்கத்தில் அவர்கள் ஓரளவே வெற்றி பெற்றார்கள். இராசராசன் தனது தமையனைக் கொன்றவர்கள் நம்பூதிரி பார்ப்பனர்கள் என்பதையும், சோழ நாட்டிலிருந்து துரத்தப்பட்ட அவர்களது உறவினர்கள் கேரளாவில் தஞ்சமடைந்ததையும், முக்கியமாகக் காந்தளூர்ச்சாலையை, தமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிற, போர் செய்கிற ஒரு போர்ப்பாசறையாக அவர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்தவனாக அவன் இருந்தான். அதனால்தான் அவன் தனது முதல் படையெடுப்பை பாண்டிய நாடு வழியாக நடத்திச் சென்று காந்தளூர்ச் சாலையில் இருந்த அனைத்துப் பார்ப்பனர்களையும் கொன்றழித்தான். கேரளாவில் இருந்த இதுபோன்ற பிற கடிகைகளையும் அழித்தொழித்தான்.

காந்தளூர்ச்சாலையை அழித்ததை அவன் மிக முக்கியமானதாகவும், பெருமைக்குரியதாகவும் கருதியதால்தான் தனது மெய்க்கீர்த்திகளில் அதனை அவன் முதன்மையாகக் குறிப்பிட்டான். பார்ப்பனர்கள் இவற்றை மறைக்க, பல்வேறு முயற்சிகளை வரலாறு முழுவதும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் வெற்றி பெறவில்லை.

பார்வை:

1.சாதியின் தோற்றம், கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், சூலை – 2023, பக் 245-291.

2. சோழர்கள், நீலகண்ட சாஸ்திரி, NCBH, புத்தகம்-1 பக்: 207, 208.

3. “ “ “ பக்: 213.

4. சாதியின் தோற்றம், கணியன்பாலன், தொல்கபிலர் பதிப்பகம், சூலை – 2023, பக்: 248, 249.

- கணியன் பாலன்

Pin It