தேசிய அளவில், 2016-20 காலக்கட்டத்தில் நிகழ்ந்த கழிவுநீர்த் தொட்டி மரணங்களின் பட்டியலில், முதல் இடத்தில் மகாராஷ்டிரத்துடன் தமிழ்நாடும் இருப்பதாகத் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் செயல் கொடியது எனத் தீர்மானித்து அதைத் தடைசெய்யும் சட்டம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுக் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. கழிப்பறைகளில் மட்டுமன்றித் திறந்த சாக்கடைகள், குழிகள், ரயில் தண்டவாளங்கள் முதலான இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் தங்கள் கைகளால் சுத்தம் செய்தல், சுமந்து சென்று அகற்றுதல் போன்றவற்றுக்கும் 2013இல் தடை விதிக்கப்பட்டது. இவற்றைச் செய்ய நிர்ப்பந்திப்பவர்கள் பிணையில் வெளிவர முடியாத குற்றம் இழைத்ததாகக் கருதப்படுவார்கள் எனவும் இச்சட்டம் அறிவித்தது.
இத்தனைக்கும் பிறகும், பாதுகாப்புக் கருவிகள் இன்றித் தொழிலாளர்களைச் சாக்கடை சுத்தம் செய்யப் பணியமர்த்தும் போக்கு ஒழியவில்லை. மனிதக் கழிவுகள் தேங்கும் கழிவுநீர்த் தொட்டிகள் அல்லது நிலத்தடிக் கழிவுநீர்ச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது, அதிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களால். மூச்சுத் திணறல் ஏற்பட்டுத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் துயரம் தொடர்கதையாக நீடிக்கிறது.
நாடாளுமன்றத் தரவுகளின்படி நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் 2021 ஜனவரி 1 முதல் 2026 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 332 தூய்மைப் பணித் தொழிலாளர்கள் பணியின்போது மரணம் அடைந்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தரவுகளின்படி, 2018-2026 காலக்கட்டத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்ததில் தமிழ்நாடும் மகாராஷ்டிரமும் தலா 100 மரணங்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் 98. குஜராத்தில் 86. ஹரியானாவில் 85 கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிச் சுற்றுச்சூழல் அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரில் 70% பட்டியல் ஜாதியினர் பழங்குடியினர். 10% ஓபிசி பிரிவினராக உள்ளனர்.
மனிதர்களைக் கழிவுநீர்த் தொட்டிகளில் இறக்குவது பிணையில் வெளிவர முடியாத தண்டனைக்கு உரிய குற்றமாகச் சட்டம் வரையறுத்தாலும், களத்தில் அது எதிரொலிக்கவில்லை. ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக இதில் ஈடுபடுத்தப்படுவதால், உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குரிய மறுவாழ்வு நிதியும் முறையான இழப்பீடுகளும் பல சந்தர்ப்பங்களில் தாமதப்படுத்தப்படுவதும், ஒன்றிய-மாநில அரசுகள் ஒதுக்கும் நிதித் தொகை களத்தில் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக முழுமையாகச் சென்றடையாததும் தொடர் குற்றச்சாட்டுகளாக உள்ளன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கும் சில அடையாள அரசியல் நிகழ்வுகள் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுகின்றன. இத்தொழிலாளர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரப் பாதுகாப்பு வழங்குவதையோ, கழிவுநீர்த் தொட்டி மரணங்களை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதையோ அவை உறுதி செய்வதில்லை.டிஜிட்டல் வளர்ச்சி, தொழில்நுட்பப் புரட்சி எனப் பெருமிதம் கொள்ளும் காலத்திலும் மனிதர்களைக் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிவிடும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை.
- விடுதலை இராசேந்திரன்