சென்னை மாகாண முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்த போது பெரியார் ஏற்க மறுத்தார். நீதிக்கட்சியின் உள்ளேயே பெரியார் பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தற்கிடையே பெரியார் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் குறித்து பெரியார் ஈரோட்டில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
உள்ளூரில் என்னை மதிக்கும் அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவந்தான். அதைப் பொறுத்துத்தானே கழக வேலையும் இங்கு இருக்கும்? இன்று கூட இக்கூட்டத்தில் அரசியல் நிலையைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். எனக்கு முன்னால் பேசிய நண்பர்களும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், நான் அரசியலைப் பற்றி இந்த ஊரில் பேச இஷ்டப்படவில்லை. காரணம், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவ்வூரில் மிகமிகச் சொற்பம்!
இந்த ஊரில் பெரும்பாலும் எல்லாம் வியாபாரிகள்: அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அதுவும் கள்ள மார்க்கெட் வியாபாரிகள் தினமும் ஆண்டவனிடம் பேசுவதையே பெரும்பணியாகக் கொண்டுவிட்டனர். இவர்களுக்கு அரசியலைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அரசியல் என்றால் என்ன என்றாவது தெரிய முடியுமா? ஒரு சிலருக்காவது அவ்வித ஆற்றல் இருக்கிறதென்றால், இப்பேர்ப்பட்ட வியாபாரிகளிடம் வேலை செய்து வயிறு வளர்க்க வேண்டிய காரணத்தினால், அவர்களும் அதிகமாகப் பொதுக் காரியங்களில் ஈடுபட முடிவதில்லை. எனவேதான். இவ்வூரில் திராவிடர்கழக வேலை அவ்வளவு ஆமை வேகத்திலிருப்பதும், என்னைப் பற்றி மதிப்பில்லை என்று கூறுவதற்கும் காரணமாகும்.
ஆகவே. அரசியலைப் பற்றியே தெரியாத, பேசினாலும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பெரும்பான்மையுள்ள இக்கூட்டத்திலே, நான் அதைப்பற்றிப் பேசாமல், மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற சமுதாயத்தைப் பற்றிப் பேசலாமென்று எண்ணுகிறேன். நான் பல ஊர்களில் சுற்றிப் பிரச்சாரம் செய்து வருகிறேன் என்றால், எல்லா இடங்களிலும் ஒரே பேச்சுப் பேசுவது கிடையாது,சற்றுப் பக்குவ மடைந்த, கழகக் கொள்கையில் மிகவும் ஆர்வமுடைய, அல்லது பொது அறிவு படைத்தவர்கள் மிகுதியாக உள்ள ஊர்களில் அரசியலைச் சற்றுக் குறிப்பிடுவது வழக்கம். ஈரோடு போன்ற ஊர்களானால் அதற்கேற்ற பேச்சாகத்தான் பேசுவேன்.
இன்னும் கூறவேண்டுமானால் அரசியலைப் பற்றித்தான் இன்று என்ன வாழ்கிறது! அரசியலை எவ்வளவு இழிதன்மைக்குக் கொண்டுவர வேண்டுமோ அந்தநிலைக்குக் காங்கிரஸ் கொண்டு வந்துவிட்டது. நாங்கள் அரசியலில் போட்டிபோடப் போவதில்லை என்று எத்தனை தரம்தான் கூறினாலும், நமது காங்கிரஸ்காரர்களுக்குப் புரிவதில்லை. இன்று நேற்றல்ல நான் இவ்வாறு சொல்வது. நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு என்றுதலைவனாய் வந்தேனோ, அன்று முதலே மந்திரி பதவி வகிப்பதற்கு எதிர்ப்பாயிருந்து வந்திருக்கிறேன்.
ஆனால், நீங்கள் கேட்கலாம்; என்னய்யா, நீங்களே உங்களைப் பற்றிப் பெருமையாய்ப் புகழ்ந்துகொள்கிறீர்களே; உங்களுக்குப் பதவி கொடுக்க யார் அழைத்தார்கள்; வேண்டினார்கள்? என்பதாக. தோழர்களே! கனம் இராசகோபாலாச்சாரியார் அவர்கள் தமது மந்திரிசபையை இராஜிநாமா செய்துவிட்டு வீடுபோய்ச் சேருவதற்கு முன்னமேயே, கவர்னர், ஜஸ்டிஸ் கட்சியினரை மந்திரிசபை ஏற்படுத்தும்படி வற்புறுத்தி அழைத்ததை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அப்பொழுது உதகையிலே இருந்த கவர்னர், நமது காலஞ்சென்ற பன்னீர்செல்வம் அவர்களைக் கூப்பிட்டு, உங்கள் கட்சித் தலைவருக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரியுமா?' என்று கேட்டாராம். அதற்குச் செல்வம் அவர்கள் கவர்னரை நோக்கி,ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள்?" என்று வினவ 'அடுத்த மந்திரிசபை உங்கள் கட்சியார்தான் நிறுவ வேண்டியிருக்கும்; அப்போது கட்சித் தலைவர் தானே பிரதமராயிருக்க வேண்டும்! அதற்காகத்தான் கேட்டேன்' என்றாராம்.
'அவருக்கு ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ, முதலாவதாக அவர் பதவியை ஒப்புக்கொள்ளுகிறாரா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்' என்று செல்வம் அவர்கள் கூறினாராம். நீங்கள் சட்ட வரம்புக்கு உட்பட்டு இயக்கத்தை நடத்துபவர்கள் தானே; பதவி வகிப்பதில் என்ன தவறு இருக்கிறது?' என்று கேட்டாராம் கவர்னர் எப்படியிருந்தாலும், பதவியேற்கும் விஷயம் மட்டும் கட்சித் தலைவரைக் சுலக்காமல் கூற முடியாது என்று அவர் கூறினாராம். பிறகு, என்னிடம், கவர்னர் கூறியதைச் செல்வம் கூறிவிட்டார் என்பதையறிந்து கட்சிப் பிரமுகர்களும் எனக்குக் கூறியதுடன் பதவியையும் ஒப்புக் கொள்ளமென்று ஜாடையாகக் குறிப்பிட்டனர். நான் பதவியேற்றுக் கொள்வதென்பது முடியாது என்று அவர்களிடம் கூறியதோடல்லாமல், அடுத்து சென்னையில் இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள் அரண்மனையில் 1939 கட்சியின் நிர்வாகக் கமிட்டியையும் கூட்டி, மந்திரி பதவி ஏற்பது கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.ஆனாலும் அக்கூட்டத்தில் தீர்மானம் சுலபமாக நிறைவேறென்று நினைக்கிறீர்களா? அன்று நிர்வாகக் கமிட்டியிலிருந்த பெரிய பெரிய சீமான்கள், ஜமீன்தார்கள் எல்லாம் எதிர்த்தார்கள்.
எனது கருத்திற்கு ஆதரவாக ஒரு சில சாதாரணத் தோழர்கள் தாம் இருந்தார்கள். ஓட்டுக்கு விட்டிருந்தால் பதவியேற்புக்கு ஆதரவாகப் பெருவாரியாக ஓட்டுக் கிடைத்திருக்கும். எனினும், கட்சித் தலைவன் என்கின்ற முறையில் நானே தீர்மானத்தைப் பிரேரேபித்தேன் . இதைக் கண்டதும் அவர்கள் விழிக்கலானார்கள். நமது பன்னீர்செல்வத்தை எழுந்து பேசுமாறு, பதவி ஆதரிப்பாளர்கள் செய்தனர். நான் பன்னீர்செல்வம் அவர்களையும், இனி பேசுவதற்கு இடமில்லை; தயவுசெய்து உட்காருங்கள் என்று கூறி விட்டேன். பிறகு எனக்கு வேண்டியவரான அதாவது அவர் சொல்லைத் தட்டமாட்டேன் என்ற பாத்தியதையுடைய நண்பர் சவுந்தரபாண்டியன் அவர்களை விட்டுப் பேசச் சொன்னார்கள். அவரும் எழுத்து ஏதோ பேச் வாயெடுத்தார்.' தாங்களும் ஒன்றும் பேச வேண்டிய அவசியமில்லை என்றேன். அதற்குப் பாண்டியன்,' இப்படி நீங்கள் கூறக்கூடாது; தயவுசெய்து என் வார்த்தையைக் கேளுங்கள்' என்றார்.
நான். 'தங்களிடமும் அவ்விதம் கூறும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது பற்றி வருந்துகிறேன். தயவுசெய்து உட்காருங்கள்' என்றேன். அவரும் உட்கார்ந்துவிட்டார். இவர்களிரண்டு பேருடைய முயற்சியும் தோல்வியுறவே, பதவி ஆதரிப்பாளர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும், விழிப்பதுமாயிருந்தார்கள். உடனே ஓட்டுக்கு விட்டேன். ஏதோ என் சொந்த தாட்சண்யத்துக்காகச் சிலர் கையைப் பாதி உயர்த்துவதும், பாதி கீழே விடுவதுமாய் இருந்தார்கள் என்றாலும், நான் துணியை மேலே உதறிப் போட்டுக் கொண்டு பேசியதைக் கண்ட அவர்கள் கடைசியிலே தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தார்கள். உடனே ஒன்றும் பேசாமல் புறப்பட்டு விட்டேன். ஏன் அப்படி வந்து விட்டேன் என்றால், பதவி ஏற்பை எவ்விதத்திலும் ஒப்புக்கொள்ளச் செய்துவிடலாம் என்று மிக முன்னெச்சரிக்கையான காரியங்களை நடத்தி ஏமாந்த தோழர்களின் முகத்தைப் பார்க்க எனக்கே பரிதாபமாயிருந்தது. தோழர்களே! இப்படி மந்திரிசபையை ஏற்க மறுத்தது மட்டுமல்ல, பின்னர், சட்டசபைத்தேர்தலுக்கு நிற்பதும் கூடாதென்று சேலம் மாநாட்டிலே தீர்மானித்துள்ளோம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் நாங்கள் அரசியல் வேலையில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதுடன், காங்கிரஸ் காரருக்கு அரசியல் விரோதியாகவும் இல்லை என்பதை விளக்கவேயாகும்.
(குடிஅரசு 14.05.1949)