பிய்த்தெறியப்பட்ட அங்கங்களின் தேடல்

ஒருவிடத்தில் மட்டுமன்று

தடவியறியும் துர்பாக்கியங்கள்

நிறையவுண்டு நீதவுலகில்

மென்மையூறிய உள்ளங்கைகளை

கொண்ட கரங்கள் தடிப்பேறியிருக்கும்

நகங்களின் வளர்ச்சி நாமமறியாதது

இடைவெளியின்றி கிடக்குமவைகள்

வயதுபேதமின்றி பொருந்திபோகின்றன

சிறுமியின் கண்களை சீக்கிரம்

திறந்துகொள்கின்றன வயோதிகவுலகில்

தொடர்தேறும் நிலைகளில்

விதானங்களை விரும்பாதெது

நெடுநேரப்பிரிவிற்குபின் குறைந்த

உறுப்புக்கள் உவகையளித்தன

என்னுடைய தலையை எதிரிலிருப்பவன்

தூக்கியோட விதந்தோதி மகிழ்ந்தேன்

தலைமைப்பணி நிர்வாகியின் விசாரணையில்

ஆட்காட்டிவிரலை நீட்டிச்சுட்ட

வழமையின் மைகளுக்கேங்கியதனை

வெட்டியெடுத்துக் கொண்டனர்.

 

புத்திசை

திசைகள்குறித்த மயக்கம் தினமுமெழுகிறது

தீராதந்த புதிர்களின் குதர்க்கம்

தீர்ந்துவிடுமுன்னே கேள்வியாய் முளைக்கிறது வீட்டுத்தென்னைமரம்

திசைக்கொன்றாய் கிளைகளை நீட்டிட்டு

திமிறின்றி நிற்குமது அசைகிறது

அடிக்கடியார்வ காற்றுக்கலவியால்

எதனுடனும் சேராமல்

ஒற்றையாய் நின்றாலும்

எப்போதும் நிற்கிறது

நானிருக்கும் திசைகளுக்கெதிராகவே

- கறுத்தடையான்

Pin It