கார்ப்பரேட் பக்தர்களின்

கால்வலிக்கக் கூடாதென்று

பாதையை அகலப்படுத்துகிறார்களாம்

“ஃபண்டு” பரதேசிகள்!


முடிஞ்சா சுத்தட்டும்

இல்லையேல்

முடங்கிக் கிடக்கட்டும்!


மலைய சுத்தனுங்கிறதுக்காக

மலையையேவா சுருட்டுவாங்க....


வழியெல்லாம் ‘கரண்டு கம்பம்’

கால பரப்பிக்கிட்டு நிக்குது

வந்துட்டாங்கய்யா கையில

‘வாள’ எடுத்துக்கிட்டு!


ஏன்னா

மரம் ‘ஷாக்’ அடிக்காதில்ல...


பார்ரா....!

மக்கள் போராட்டத்துக்கு

மரியாதையே இல்ல!


விதுரன் சொல்லையும் மீறி

துயிலுரிக்கத் தொடங்கிவிட்டார்கள்

துச்சாதனர்கள்


ஆடை உரிக்கும்

அவமானம் தாங்கமுடியாமல்

‘அம்மா’வென அலறுகிறாள்

“அண்ணாமலை!”


‘வரம்’ கொடுத்தால்

மரங்களாய் வருவிக்கும் மாயம்

எந்தக் கண்ணனுக்கும்

இங்குத் தெரியாது!


மரம் வெட்டினால்

பணம் கிடைக்குமென்று மட்டும்

‘மினிஸ்டர் காட்டன்களுக்குத்’

மிகமிகத் தெரியும்!


ஆனால்...

மக்களுக்குத் தெரியும்

நீங்கள்

பஞ்சாயத்துத் தேர்தலுக்காகத்தான்

பள்ளம் வெட்டுகிறீர்களென்று!


பழம்பெருமை பேசும்

மலையையும்

பல்லுயிர்ப் பெருக்கும்

காட்டின் அந்தரங்கத்தையெல்லாம்

கடப்பாரையால் தோண்டுகிறார்கள்

கயவர்கள்!


நள்ளிரவில் நடக்கிறது

காடுகளின்மேல் வன்புணர்ச்சி!

காப்பாற்ற ஆளின்றி

கையுயர்த்திக் கதறுகிறாள்

‘திருவண்ணாமலை!’

Pin It