kulai kulaiya munthirikkaஎல்லார் கண்களிலும் அசையாத கோலிகுண்டுகள் மினுங்கும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் முன்னோக்கி வளைந்து நின்று குறி பார்ப்பவன்... சில நொடிகளுக்கு முன் மண்ணில் வரைந்திருக்கும் பா வடிவ கட்டத்துக்குள் உருட்டி விட்ட இரண்டு குண்டுகளில்... எதை அடிக்க வேண்டும் என்று தீவிரமாக பார்ப்பான்.

எந்த குண்டை அடிக்க வேண்டும் என "எதரா வெதரா" என்று கேட்பான்.

பிற்காலத்தில் தான் அது either or whether என்று புரிந்தது. ஆங்கிலேயன் விட்டு போன மிச்சம் நம் மொழியில் ஆங்காங்கே சேர்ந்திருப்பது கண்கூடு. பேச்சு வழக்கில் எத்தனையோ ஆங்கில சொற்கள் தமிழாகி விட்டன. அதில் ஒன்று தான் இந்த எதர் வெதர்.

பச்சை குண்டுகளில் உறைந்த நீர் குமிழிகள் குபுக்கென்று விழித்துக் கொண்டிருக்க... உருட்டி விட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று... சேர்ந்தாப்பில் குண்டளவுக்கு தோண்டி வைத்த இரண்டு குழிகளில் ஒன்றில் விழுந்து விட்டால் ஆட்டத்தில் சேஃபர் சைடுதான் ஆடுபவனுக்கு.

எப்போதாவது அத்தி பூத்தாற்போல இரண்டு குண்டுகளும் இரண்டு குழியிலும் விழும் போது ஆட்டத்தின் போக்கே மாறி விடும். ஆனால் பெரும்பாலும் இரண்டு குழிகளிலும் ஒருசேர இரண்டு குண்டுகளும் விழாது. ஏதாவது ஒரு குழியில் விழுவதே மிக நுட்பம் வாய்ந்தவனுக்குதான் வாய்க்கும்.

குண்டுகளை கட்டத்துக்குள் வீசி விட்டு சக போட்டியாளனிடம் "எதரா வெதரா" (அதுவா இதுவா) என்று கையில் இன்னொரு குண்டோடு அடிக்க இருப்பவன் (விளையாடுபவன்) கேட்பான். எதிராளி கூர்ந்து பார்த்து விட்டு எதை விளையாடிக் கொண்டிருப்பவனால் அடிக்க முடியாது என்று நினைக்கிறானோ... தூரம்.. கோட்டின் ஓரம்... மேலே கீழே என்று ஏதோ ஒரு வகையில் அடிபடாமல் போக வாய்ப்பு அதிகமிருக்கும் ப்ராபபிலிட்டியை மண்டைக்குள் உருட்டிப் பார்த்து அந்த ஒன்றை கை காட்டுவான். அது எதராகவும் இருக்கலாம். வெதராகவும் இருக்கலாம்.

அடிக்க தயாராக இருப்பவன் குறி பார்த்து அவன் சொன்ன குண்டை கையிலிருக்கும் குண்டால் வீசி எறிந்து அடிக்க வேண்டும். அடித்தால் தான் அவன் வெற்றி பெற்றவனாக தொடர முடியும். அடி படவில்லை என்றால் எதிராளி கையில் குண்டுகள் சென்று விடும். இவன் ஓரமாய் நின்று... அவன் அதுவா இதுவா கேட்கையில் எதை அடிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டி இருக்கும். அதாவது ஆட்டம் கை மாறி விடும்.

கோலி குண்டுகளைக் கொண்டு இப்படி ஒரு விளையாட்டு. இன்னொன்று இருக்கிறது.

அவரவர் குண்டுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வரிசையாக வைத்து விட்டு ஒருவன் மட்டும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று விரலால் சுண்டி விட்டு அடிக்க வேண்டும்.

இடது கையின் ஆள்காட்டி விரலோ... நடுவிரலோ... அவரவர் வசதிப்படி வலது கை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு இழுத்துப் பிடித்து... விரல்களுக்கிடையே குண்டை வைத்து திருகி விசிற வேண்டும்.

கீழே குத்த வைத்து அமர்ந்து எம்பி இடது கை பெருவிரலை தரையில் ஊன்றியும் குண்டை விசிறலாம். அல்லது நின்றவாக்கிலேயே ஏதாவது ஒரு காலை முன்னோக்கி மடக்கி முட்டியில் பெருவிரலை நிற்க வைத்தும் குண்டை விசிறலாம்.

கணீர் கணீர் என்று குண்டுகள் மேல் குண்டுகள் படும் சப்தம் குதூகல சித்தம். கண்களின் கூர்மையும் புலன்களின் ஓர்மையும் கூடி இருந்தால் தான் ஆட்டம் கை கூடும். குதர்க்கமற்ற குண்டு விளையாட்டு ஜெண்டில்மேன் விளையாட்டு. சிதறாத எண்ணம் கொண்டவனே குண்டு விளையாட்டில் சிக்ஸர் அடிக்க முடியும்.

இன்னமும் பச்சை வர்ண சித்திரமாய் சிறுவர்களாகிய நாங்கள் விளையாடிய அந்த காலம் உருளாமல் நெஞ்சோரத்தில் குமிழ் விடுகிறது. சனி ஞாயிறுகளில் ராட்சச தனத்தில் விளையாடும் நாங்கள்... மற்ற நாட்களின் மாலை நேரங்களில் மென் சாரல் ஆகிடுவோம். குண்டுகள் மோதும் ஓசை க்ளங் க்ளங் என இன்னும் செவியில் கேட்கிறது. பச்சை குண்டுகளுக்கு இணையாக பழுப்பு சிவப்பு குண்டுகளும்... பிரசித்தம் தான்.

தோற்றவர் குத்த வைத்து அமர்ந்து இரண்டு கைகளையும் விரல்களை கவ்வியபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கோர்த்து இழுத்த புறங்கையை காட்ட வேண்டும். வெற்றி பெற்றவர் குண்டை சுண்டி விட்டு குறிபார்த்து புறங்கையை அடிக்க வேண்டும். இப்படி கோலி குண்டு விளையாட்டில் பல விதங்கள் இருக்கும்.

இன்றைய தலைமுறைக்கு கோலிக் குண்டு என்ற வஸ்துவை பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை. எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்ட அலைபேசியை மொத்தமாக குற்றம் சொல்லி விடவும் முடியாது. ஆனாலும் அலைபேசி... குழந்தைகளை வேகமாக வளர்த்தெடுக்கும் மிருகம் என்றால்... நம்பலாம் தானே.

இது டிஜிட்டல் யுத்த காலம். சூதானமாக இல்லாதோர் பப்ஜி வளையில் பாத்திரமாய் ஆவார்கள்.

*

விளையாடிக் கொண்டிருக்கும் போதே உச்சா வந்து விட்டாலோ... வீட்டிலிருந்து அம்மா குரல் கேட்டு விட்டாலோ... வேலை முடிந்து அப்பா வந்து விட்டாலோ... பாட்டி கடைக்குப் போக சொன்னாலோ... இந்த "டைம் அவுட்" என்றொரு சொல்லாடல் சின்னஞ்சிறு வயதில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. நினைவிருக்கிறதா.

சில நேரங்களில் தோற்றுப்போகும் சூழலில்.... இன்னபிற குறுக்கு வழி யோசனைகளுக்கு... முன்னால் வந்து நிற்கும் சொல்லும் இந்த டைம் அவுட் தான்.

இடது உள்ளங்கையில் மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு வலது ஆள்காட்டி விரலால் படக்கென்று தொட்டுக் காட்டும் அந்த சொல்லில் அந்த மொத்த விளையாட்டுக்குமான மந்திரம் இருக்கும்.

*
அதே போல.... அகலம் அகலமாய் கட்டம் போட்டு... (இந்த பக்கம் குறுக்காக மூன்று கட்டம். அந்த பக்கம் குறுக்காக மூன்று கட்டம். இடையே நெடுக்காக ஒரு நீண்ட கோடு) சிதறு கல்லை முதல் கட்டத்தில் போட்டு ஒரு காலில் நொண்டி அடித்து நொண்டி அடித்து... அந்தக் கல்லை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்.

அப்படியே நகர்த்தி நகர்த்தி முன்னால் மூன்று கட்டம் சென்று பக்கவாட்டில் நகர்த்தி அதே போல மூன்று கட்டம் திரும்பி வந்து... அதாவது இந்த வழியில் சென்று அந்த வழியில் வந்து விட வேண்டும். இடையே ஒற்றைக் காலில் தள்ளும் கல் இடையே இழுத்திருக்கும் கோட்டின் மீது பட்டு தங்கி விட கூடாது. அப்படி தங்கி விட்டால்... அவன் அவுட்.

அதே போல... மேற்சொன்ன கட்டங்களில்... கல்லுக்கு பதிலாக... கண்ணைக் கட்டியபடி அல்லது அண்ணாந்து வானத்தை பார்த்து இரண்டு கால்களையும் சரியாக பெட்டிக்குள் அதாவது பக்கவாட்டில் சுற்றிலும் இருக்கும் கோட்டின் மீது கால் படாமல் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை வைத்த பின்னும் "ரைட்டா ரைட்டா" என்று கேட்போம். ஆப்பனன்ட் சரியாக பெட்டிக்குள் கால் இருந்தால் "ரைட்டு.. ரைட்டு" என்பான். தப்பித் தவறி கோட்டின் மீது கால் பட்டு விட்டால் "தப்பு" என்று கத்துவான். அந்த கத்தலில் வெற்றிக் கூச்சல் வேகமாய் விதி மாற்றும்.

ஐயோவென அவுட்டாகி வெளியேற வேண்டியது தான் கோட்டில் கால் வைத்தவன். இந்த விளையாட்டில் ஆம்பள பசங்க... பொம்பள புள்ளைங்க என்ற பாகுபாடே இருக்காது. வயது வித்தியாசமும் இருக்காது. யார்... யார் கூட வேண்டுமானாலும் விளையாடுவோம். ஆண் பெண் பாகுப்பாடற்ற ஒற்றுமை மனோபாவம்... கண்ணை மூடிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தும் பக்குவம் என்று விளையாட்டு போக்குலேயே வாழ்வின் நுட்பம் புகுத்தப் பட்டது.

இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்றே இன்றைய பெரும்பாலைய குழந்தைகளுக்கு தெரியாது.

ஒளிந்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு... தொட்டு விளையாட்டு... கில்லி... பம்பரம்... பச்சைக்குதிரை தாவுதல்... நொண்டி விளையாட்டு... திருடன் போலீஸ் விளையாட்டு என்று எல்லாவற்றிலும் புத்தியை கூர் தீட்டிக் கொள்ளவும்... நுட்பத்தோடு ஒளிந்திருக்கும் விஷயங்களை தேடிக் கண்டு பிடிக்கவும்...

ஓடி ஆடி குதித்து விளையாடுகையில் உடலோடு உள்ளமும் பலமாகி... சமயோசித புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்ளுதலுக்கான பயிற்சியாகவும்... மொத்தத்தில் மேலாண்மை சார்ந்த அறிவை உட்புகுத்தும் நுட்பமாகவே மேற்சொன்ன விளையாட்டுகள் இருந்திருக்கின்றன.

சிறு வயதிலேயே இந்த உலகை எதிர்கொள்ள செய்யும் லாவகத்தை மிக மெல்லிய வழியில் குழந்தைகளிடம் புகுத்திக் கொண்டிருந்த காலம் பொற்காலம் என்றால்... நம்பலாம் தானே.

இன்றைய குழந்தைகளின் விளையாட்டு பெரும்பாலும் ஒற்றைப்பொத்தான் வழியே தான் நிகழ்கிறது. ஒற்றை பொத்தானில் தம்மோடு தாமே விளையாடிக் கொள்கிறார்கள்.

பரிதாபங்கள். மாறாக நாம் நிகழ்த்துக் கலைக்குள் நீண்டதொரு வாழ்க்கை முறையை விளையாட்டுப் போக்கிலேயே செய்ததை நினைவு கூறுகிறேன். மீட்டெடுக்கவும் வேண்டுகிறேன் என்கிறேன்.

- கவிஜி

Pin It