ஜம்மு - காசுமீர் மாநிலத்திற்கு ஓரிரு சிறப்புரிமைகள் அளிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 370ஐ நீக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதின் மூலம் காசுமீர் விடுதலைப் போராளிகளுக்குப் புத்தூக்கம் அளித்துள்ளார் புதிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களோ, மாநில அமைச்சரவையோ காசுமீர் சிக்கல்களுக்குத் தீர்வு தராது, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமே ஜம்மு – காசுமீருக்கு விடுதலை தரும் என்பது விடுதலைப் போராளிகள் அமைப்புகளின் நிலைபாடு. ஆயுதப் போர் நடத்தாத மக்கள் திரள் அமைப்பான விடுதலைக் கூட்டமைப்பும் (ஹுரியத்) தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைக்கான தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஜம்மு – காசுமீர் மக்களுக்கு ஹுரியத் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதனால் காசுமீரில் மிகக் குறைவான வாக்குகளே பதிவாயின.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 370 இணைக்கப்பட்ட பின்னணி என்ன?

1947இல் பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு விடுதலை தருவதற்குமுன் ஜம்மு – காசுமீர் தனி நாடாக இருந்தது. அந்நாட்டின் அரசர் அரிசிங். அவர் டோக்ரா இனத்தை சேர்ந்த இந்து! ஆனால் மக்களோ மிகப் பெரும்பான்மையாக இசுலாமியர்கள்.

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் மத அடிப்படையில் உருவாகப் போகிறது; பிரித்தானிய ஆட்சியாளர்கள் சொந்த நாடு திரும்பப் போகிறார்கள் என்ற நிலையில், சின்னஞ்சிறு ஜம்மு – காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டன.

ஜம்மு – காசுமீர் மக்கள் இந்தியாவுடன் இணையவும் விரும்பவில்லை; பாகிஸ்தானுடன் இணையவும் விரும்பவில்லை. தனி நாடாகத் தொடரவே விரும்பினர்.

ஆனால் மன்னர் அரிசிங் தனியாட்சி விரும்பிய போதிலும் இந்தியப் படையெடுப்பையோ அல்லது பாகிஸ்தான் படையெடுப்பையோ தன்னால் எதிர்த்து நிற்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். ஏற்கெனவே, அரண்மனை சுகவாழ்வை மட்டும் துய்த்துக் கொண்டு மக்களுக்கு எந்த நன்மையும் உரிமையும் வழங்காமல் இராணுவத்தின் துணையுடன் ஆட்சி புரிந்தார். அத்துடன் அவர் ஒளிவு மறைவற்ற இந்துத்துவா ஆட்சி நடத்தினார்.

நிலச்சீர்திருத்தம், சனநாயக உரிமைகள், இசுலாமிய உரிமைகள் போன்ற கோரிக்கைகளுக்காக மக்கள் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போராட்டம் நடத்திய கட்சிகளில் சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முகாமையானது.

1947 அக்டோபர் 26 அன்று இந்திய அரசுத் துறைச் செயலாளரும் மலையாளியுமான வி.பி.மேனன் அரசர் அரிசிங்கை அவரது ஜம்மு அரண்மனையில் சந்தித்து ஜம்மு – காசுமீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கி விட்டார். இந்த உடன்படிக்கையின் பெயர் Instrument of Accession (இன்ஸ்ட்ருமெண்ட் ஆப் அக்சஷன்).

இந்தச் செய்தி தெரிந்தவுடன் பாகிஸ்தானிலிருந்து ஒரு படை வந்து ஜம்மு – காசுமீரின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொண்டது. 1947 அக்டோபர் 27 அன்று இந்தியப் படைகள் விமானங்கள் மூலம் ஸ்ரீ நகரில் தரை இறங்கின. அன்று அனுப்பப்பட்ட படைப்பிரிவுகள் மேலும் மேலும் அதிகரித்து இன்று இந்திய இராணுவத்தின் முதன்மை வேலை காசுமீரைத் தக்கவைத்துக் கொள்வது என்ற நிலைக்கு உள்ளாகி விட்டது. பாகிஸ்தான் படைகள் பிடித்த ஒரு பகுதி ஆசாத் காசுமீர் என்ற பெயரில் அந்நாட்டின் ஒரு மாநிலமாக உள்ளது. ஜம்மு – காசுமீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

காசுமீர் சிக்கலை ஐ.நா. மன்றத்தில் பாகிஸ்தான் எழுப்பியது. 1948 ஏப்ரல் 22 அன்று ஐ.நா. மன்றம் நிறைவேற்றிய தீர்மானம் இருபகுதி காசுமீரிலும் சுதந்திரமான கருத்து வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மைக் காசுமீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப - இந்தியாவில் இருப்பதா – பாகிஸ்தானில் இருப்பதா – தனி நாடாக இருப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது. அன்று கருத்து வாக்கெடுப்புக்கு உடன்பட்ட இந்தியா பிறகு பின்வாங்கி விட்டது. கருத்து வாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது.

ஹுரியத் மக்கள் திரள் அமைப்பு ஐ.நா. தீர்மானத்தின்படி கருத்து வாக்கெடுப்பு நடத்தத்தான் போராடி வருகின்றது. மக்கள் விருப்பத்தை – சனநாயகத்தை மதிக்கின்ற அரசாக இந்திய அரசு இருந்தால் கருத்து வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்ட ஸ்காட்லாந்து கருத்து வாக்கெடுப்பு கோருகிறது. அதை இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டது. 1947இல் இணைக்கப்பட்ட காசுமீரில் கருத்து வாக்கெடுப்பு நடத்த இந்தியா மறுப்பது ஆக்கிரமிப்பு அன்றி வேறென்ன?

இராணுவ முற்றுகையில் நடத்தப்படும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் – கருத்து வாக்கெடுப்பு ஆகா. ஏனெனில் அவை இந்திய அரசுக்கு கட்டுப்பட்ட “அடிமை” மக்களுக்கான காலனியத் தேர்தல்களே!

ஆங்கிலேய ஆட்சியில்கூட இந்தியாவில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. அவற்றில் வாக்களித்ததால் ஆங்கிலேய ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் இந்தியாவுக்கு விடுதலை வேண்டியதில்லை என்று காங்கிரசு கருதியதா? இல்லையே! காசுமீருக்குத் தேவை கருத்து வாக்கெடுப்பு. காசுமீருக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட பல தேசிய இனத் தாயகங்களில் நடத்த வேண்டியது கருத்து வாக்கெடுப்புதான்.

ஆனால் ஊனப்பட்டுபோன உறுப்பு 370ஐயும் நீக்குவது எத்துணை கொடிய ஏகாதிபத்திய மனப்பான்மை! எத்துணை வக்கிரமான இந்துத்துவா வெறி!

அந்த 370 அப்படி என்ன விரிவான தன்னுரிமை வழங்கிவிட்டது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பட்டியல்கள் மூன்று வகைகளாக உள்ளன. 1. இந்திய அரசின் அதிகாரப் பட்டியல், 2. மாநில அரசின் அதிகாரப் பட்டியல், 3. இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவாக உள்ள அதிகாரப் பட்டியல்.

இவற்றில் இந்திய அரசுக்குரிய அதிகாரப் பட்டியலில் உள்ள கூறுகளை இந்திய அரசு ஜம்மு – காசுமீரில் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. காசுமீர் சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவையில்லை. மாநில அதிகாரத்தை காசுமீர் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை காசுமீரில் இந்திய அரசு செயல்படுத்த விரும்பினால், காசுமீர் சட்டப்பேரவையின் ஒப்புதல் வேண்டும்.

மற்ற மாநிலங்களில் பொதுப்பட்டியலில் உள்ள ஒன்றின் மீது இந்திய அரசு சட்டம் இயற்றினால் அக்கூறு பற்றிய மாநில அரசின் அதிகாரம் செயல்பட முடியாது.

பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரம் பற்றிய சிறப்புரிமை தான் 370இன் கீழ் காசுமீருக்கு கிடைக்கிறது. வேறு சிறப்புரிமை ஏதுமில்லை.

இந்த சிறப்புரிமையை நீக்கவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அரசமைப்புச் சட்டத்திருத்தம் மட்டும் போதாது. காசுமிரில் அமைக்கப்படும் அரசமைப்பு அவை (Constituant Assembly) அத்திருத்தத்தை ஏற்கவேண்டும். அதன் பிறகுதான் அது நடைமுறைக்கு வரும்.

மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே போடப்பட்ட இணைப்பு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள உரிமைகளை காசுமீரிகளுக்கு வழங்க இந்திய அரசு கட்டுப்பட்டுள்ளது . அதை இப்போது தன்னிச்சையாக இந்தியா மீற முடியாது.

தமிழக கச்சத்தீவை சிங்கள அரசுக்கு நாடாளுமனறத்தில்கூட சட்டம் இயற்றாமல் இந்திய அரசு கொடுத்து ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தம் புனிதமானது அதை மீற முடியாது என்கிறது இந்திய அரசு. இதனால் இதுவரை 600 மீனவர்களுக்கு மேல் தமிழகம் பலிக்கொடுத்து விட்டது ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்ட 370 சிறப்புரிமையை போகிறப் போக்கில் நீக்க முயல்கிறது பா.ச.க. அரசு.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட காசுமீர் உரிமையை பறிக்க முயலும் பா.ச.க. அரசின் கீழ், அவ்வாறான பாதுகாப்பு எதுவுமில்லாத தமிழ்நாடு போன்ற தேசிய இன மாநிலங்களின் எதிர்காலம் என்னவாகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தலைமை அமைச்சருக்குச் சமமாக மாநில முதல்வர்களைக் கருதி கூட்டு முயற்சியில் அவர்களுடன் கலந்து முடிவு எடுத்து மாநிலங்களின் முன்னேற்றதிற்குப் பாடுபடுவேன் என்று நரேந்திர மோடி பேசியது ஒரு கபட நாடகம் என்றல்லவா தெரிகிறது.

”காசுமீருக்கு உரிய 370 மீது கை வைக்காதே” என்று நாம் முழங்க வேண்டும். அத்துடன் இந்திய பீரங்கியால் இணைக்கப்பட்ட காசுமீரிலும், இங்கிலாந்து பீரங்கியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு போன்ற தேசிய இனத் தாயகங்களிலும் கருத்து வாக்கெடுப்பு நடத்து என்றும் நாம் முழங்க வேண்டும்.

Pin It